என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- நாட்டில் நடக்கும் மிக முக்கிய பிரச்னை சாதி, மத மோதல்கள் தான்.
- போதைப்பொருள் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது. அது, ஒரு தலைமுறையையே சீரழித்து விடும்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தின் துவக்க விழா திருச்சி, தென்னூரில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் அதிகரிப்பு குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும். அதை ஒழிக்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதனால், ஓரளவிற்கு பலனும் கிடைத்துள்ளது. போதைப்பொருள் மிகப்பெரிய நெட்வொர்க். அதை ஒழிக்க மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியாவிற்குள் போதைப்பொருள் மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். அதற்கு, அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்டவர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்கள் தான்.
அந்த நெட்வொர்க் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பொருளை ஒழிக்க தமிழ்நாட்டின் துறைகள் மத்திய அரசின் துறைகளோடும் பிற மாநில அரசு துறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பது சமூகத்தின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கலைத்துறையை சார்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை தர வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது. அது, ஒரு தலைமுறையையே சீரழித்து விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறான பாதைக்குச் செல்லும் போது வேடிக்கை பார்க்கக் கூடாது.
அவர்களை தீவிரமாக கண்காணித்து பொறுப்போடு வளர்க்க வேண்டும். மனம் விட்டு பேச வேண்டும். நாட்டில் நடக்கும் மிக முக்கிய பிரச்னை சாதி, மத மோதல்கள் தான். மத்திய அமைச்சர் பதவியில் இருப்பவர்களே வெறுப்பு பேச்சுக்களை பேசி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், அமைதியையும் சீர்குலைக்கும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் என எல்லோரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்த காலம் போய் ஒருவருக்கொருவர் எதிரியாக இருக்கக்கூடிய வேலையை பிளவுவாத சக்திகள் செய்து வருகிறார்கள்.
அன்பு செய்ய சொல்லி தர வேண்டிய ஆன்மிகத்தை, சிலர் வம்பு செய்ய பயன்படுத்தி வருகிறார்கள். மது போதையும் அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்க நாம் ஒன்று சேர வேண்டும். என்று தெரிவித்தார்.
- துணை ஜனாதிபதியாக சி.பி.ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா.
- தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் பிரமாண்ட வரவேற்பு.
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போனது. இந்தநிலையில் முதல் முறையாக இன்று அவர் சென்னை வந்தார்.
அவருக்கு தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
மாலை 5 மணி அளவில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஹண்டே தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார்.
இந்நிலையில், சென்னையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
- தான் விஷம் குடித்துவிட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
- மரணத்திற்கு காரணமான தனபால் என்பவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொட்டாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 53), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா (50). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மண்ணாடிப்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன், தனபால் ஆகிய 2 பேரும் கொட்டாரப்பட்டிக்கு சென்று, வேலுமணியிடம் ரூ.50 ஆயிரம் கடனை இன்னும் திருப்பி கொடுக்கவில்லை என கேட்டுள்ளனர்.
அதற்கு வேலுமணி, பணம் கட்டியுள்ளேன். கட்டியதற்கு ஆதாரமும் காண்பிக்கிறேன் என்று சொல்லி உள்ளார். அப்போது பணம் வாங்கி 7 மாதம் ஆகிறது. கேட்டால் திருப்பி தர மாட்டியா? என்று கூறி தடியால் அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது கழுத்தில் துண்டை போட்டு, வீட்டில் இருந்து தெருவில் தரதரவென இழுத்துச்சென்றனர்.
பின்னர் அங்கிருந்த கோயில் அருகில் அவரை விட்டுச் சென்றனர். இதையடுத்து வேலுமணியை, அவரது மனைவி அம்பிகா வீட்டுக்கு அழைத்து வந்தார். தெருவில் தன்னை இழுத்துச் சென்றதால் வேலுமணி மனவேதனையடைந்தார். அவரை அம்பிகா சமாதானம் செய்தார். இந்நிலையில் அன்று மாலையில் மோட்டார் சைக்கிளில் அனுமன்தீர்த்தம் பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வேலுமணி, தான் விஷம் குடித்துவிட்டதாக மனைவியிடம் கூறினார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அம்பிகா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வேலுமணியை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலுமணி உயிரிழந்தார்.
இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வேலுமணி மரணத்திற்கு காரணமான தனபால் (63) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிழ்வாணனை தேடி வருகின்றனர்.
- ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.
- விரைவில் அவருக்கான கட்சிப் பொறுப்பு குறித்து அறிவிக்கப்படும்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளன. குறிப்பாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதாக திமுக தரப்பு கூறிவரும் நிலையில், அதிமுகவுடன் யார் யார் கூட்டணி? அமமுக, ஓபிஎஸ் தரப்பு, ஆகியோர் அதிமுகவில் இணைவார்களா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் விஜய்யின் தவெகவில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தவெகவுடன் கூட்டணி வைக்க ஏழு கட்சிகள் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே வேற்று கட்சியினரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். கடந்த மாதம் செங்கோட்டையன் இணைந்தநிலையில், இன்னும் சில முக்கிய அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஜேசிடி பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தார். விரைவில் அவருக்கான கட்சிப் பொறுப்பு குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேசிடி பிரபாகர் ஜெயலலிதா தலைமையிலான 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றப்பின் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். அந்த வகையில் ஜேசிடி பிரபாகரும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து நீங்கி தவெகவில் இணைந்துள்ளார்.
- சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
- வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
கே.மேட்டுப்பட்டியில் சரவணகுமாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் ஷகில் உசேன், ஷபிகுல் அலி ஆகியோர் வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளனர்.
- எம்ஜிஆர் 1981-ஆம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார்.
- பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நோக்கு, போக்கு, செயல் பகுதிகள் உள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மறைந்தும் மறையாமலும், கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருபவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள். கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு, தீய சக்தி தி.மு.க-வினருக்கு புரட்சித் தலைவர் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு இன்றுவரை மறையவில்லை என்பது, தற்போதும் திமுக-வினரது செயல்கள் மூலம் வெளிப்பட்டு வருகிறது.
புரட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்த போது, 1981-ஆம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார். அந்த பல்கலைக்கழகம் இன்றுவரை பல தமிழ் அறிஞர்களை உருவாக்கி பெரும்பேறு பெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நோக்கு, போக்கு, செயல் பகுதிகள் உள்ளன.
1981-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாளில் இந்த பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது என்று உள்ளதே தவிர, அதைத் தோற்றுவித்த புரட்சித் தலைவர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
மேலும், அந்த இணையதளத்தில் உள்ள போட்டோ கேலரியில் இருந்த புரட்சித் தலைவரின் படமும் நீக்கப்பட்டுள்ளதாம். தமிழை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்தி வந்த முன்னாள் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் பெயரை வெட்கம் இல்லாமல் 2
கழிவறை முதல் காவாங்கரை வரை வைக்கும் அவரது மகன் ஸ்டாலின், புரட்சித் தலைவர் பெயரை, அவர் துவக்கிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியிருப்பது, ஸ்டாலினுடைய மமதையின் உச்சத்தைக் காட்டுகிறது.
'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்திவிடலாம்' என்று நினைப்பதுபோல், தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் இருந்து புரட்சித் தலைவரது படத்தை நீக்கிவிட்டால், புரட்சித் தலைவரின் புகழை அழித்துவிடலாம் என்று நினைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
வாழ்நாள் எல்லாம் தமிழக மக்களின் நலனுக்காகவே உழைத்து, தான் பாடுபட்டு சேர்த்த செல்வங்களையெல்லாம் மக்களுக்கே விட்டுச் சென்ற புரட்சித் தலைவருக்கு, மக்களே கோவில் கட்டி வழிபடுகிறார்கள்.
அரசியலைப் பயன்படுத்தி, ஊழல் செய்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த கருணாநிதி குடும்பத்தின் வஞ்சக நெஞ்சமும், நரித்தனமும் ஏற்கத்தக்கதல்ல. புரட்சித் தலைவரின் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்பது நிதர்சனம்.
இதுபோன்ற வன்மத்தை கைவிட்டுவிட்டு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் புரட்சித் தலைவர் படத்தை உடனடியாக பதிவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். திரு. கருணாநிதியின் மொத்த குடும்பத்தையே வாழவைத்த இதய தெய்வம் புரட்சித் தலைவரின் புகழை அழிக்க நினைக்கும் திரு. ஸ்டாலினுக்கு, தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.
- தமிழகம் வலிமை பெறும், வளர்ச்சி பெறும்.
தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" யாத்திரை நிறைவு விழாவில், தமிழகத்தில் தி.மு.க.வை விரட்டியடித்து வளர்ச்சி பாதையில் தமிழகத்தை உருவாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் சபதத்தை நிறைவேற்ற புதுக்கோட்டை வர இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும்.
2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தமிழகம் வலிமை பெறும், வளர்ச்சி பெறும்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக மக்களின் நம்பிக்கை பெற்ற தலைவர்களாக, தமிழகத்தை காப்பாற்ற ஒரே சிந்தனையுடன் போராடி வரும் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் இரு வரும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக ஒன்றிணைத்து, தி.மு.க. ஆட்சியை சுட்டு வீழ்த்தும் சுதர்சன சக்கர வியூக தலைவராக அமித்ஷா புதுக்கோட்டையில் புதிய சரித்திரம் படைக்க இருக்கிறார்.
தமிழகத்தின் வளர்ச்சியிலும் தமிழரின் மகிழ்ச்சியிலும் தமிழ் மொழியின் பெருமையிலும் மறுமலர்ச்சியை உருவாக்கி, வீழ்ச்சி அடைந்த மாட்சிமை பொருந்திய தமிழகமாக மாற்றி மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றி மூலம் அமித்ஷா தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு பரிசாக அளிக்க இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதைத் தடுப்பதற்கான வழி, தொடர்புகொள்வதுதான்.
- நீங்கள் சிறப்பாகவும், தெளிவாகவும் தொடர்புகொண்டால் மற்றவர்கள் அதை மதித்து ஏற்றுக்கொள்வார்கள்.
சென்னை ஐஐடி மாணவர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடினார். அப்போது "உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதைத் தடுப்பதற்கான வழி, தொடர்புகொள்வதுதான்.
நீங்கள் சிறப்பாகவும், தெளிவாகவும், நேர்மையாகவும் தொடர்புகொண்டால், மற்ற நாடுகளும் மற்ற மக்களும் அதை மதித்து ஏற்றுக்கொள்வார்கள்" என்றார்.
மேலும், "உலகம் முழுவதும் உள்ள பல மக்கள் தங்கள் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபு குறித்துப் பெருமை கொள்கிறார்கள். நாம் பெருமை கொள்ளாமல் இருப்பதற்கு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை. நவீன காலத்தின் முக்கிய தேசங்களாக நிலைத்து நிற்கும் பழங்கால நாகரிகங்கள் உண்மையில் மிகச் சிலவே உள்ளன. அவற்றில் நாமும் ஒன்று" என்றார்.
- திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
- சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபடவும், மலையின் மேல் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நேற்று புத்தாண்டையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
இந்தநிலையில் நேற்றிரவு திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் சபரிமலை சீசனையொட்டி பக்தர்கள், பொதுமக்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் இன்று திருமூர்த்தி மலைக்கு வந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து கோவிலில் தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
- மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம்.
- வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன்.
திருச்சி:
சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-
பொங்கிவரும் பொன்னி ஆற்றங்கரையில், மலைக்கோட்டை நகரமாம் திருச்சி உறையூரில் 1938-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நடைபயணத்தை தொடங்கி வைக்க பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தரம் பாரதியார், மணவை திருமலைச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்பித்தனர். அதேபோன்ற எனது இந்த நடைபயணத்தையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
1982-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நான்மாடக்கூடல் சங்கம் வளர்த்த மதுரை மாநகரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, திருச்செந்தூரில் வைரவேல் காணாமல் போனதாக பிரச்சனை எழுந்த போதும், தூக்கிலே தொங்குகிறார் சுப்ரமணிய பிள்ளை என்றபோது அது தற்கொலை அல்ல படுகொலை என்று நீதி கேட்டு கலைஞர் அன்று மதுரையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டார்.
108 திருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரையில் ஆபரணங்கள் திருடுபோய்விட்டதாக மக்கள் கவலைப்பட்டபோது, கலைஞர் நேரில் வந்து தென்திருப்பேரை ஆலயத்திற்குள் வந்து மக்களை சந்தித்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து என்னை அழைத்து நடைபயணமாக வந்து மனு கொடுக்க சொன்னார். நானும் 1986-ம் ஆண்டில் அந்த பகுதி மக்களுடன் நடைபயணமாக வந்து திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் வரை முதல் நடைபயணம் மேற்கொண்டேன்.
அதனை தொடர்ந்து 1994-ல் குமரியில் இருந்து சென்னை வரை ஆயிரத்து 600 கிலோ மீட்டர் அன்றைய ஊழல் ஆட்சியான அ.தி.மு.க.வை எதிர்த்து நடைபயணம், வரிசையாக நதிகள் இணைப்புக்காக 2002-ம் ஆண்டு மாவட்டங்கள் தோறும் சென்று நடைபயணம், நல்லிணக்கம் தழைக்க நடைபயணம், முல்லை பெரியாரை காக்க 3 முறை நடைபயணம், 2018-ம் ஆண்டு மதுரையில் இருந்து இடுக்கி, பென்னிகுயிக் அணைகளை காக்க நடைபயணம் என பல்வேறு நடைப்பயணங்கள் மேற்கொண்டுள்ளேன்.
அதில் பலவற்றில் எனக்கு இன்றைய முதலமைச்சர் உறுதுணையாக இருந்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளீர், பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் எனபதற்கு ஏற்ப, இந்த தமிழகத்தில் மத பூசல்களுக்கு இடமில்லை என்பதை நிலை நாட்ட, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம்.
இந்த பயணத்தில் மக்களை சந்திக்கும் போதெல்லாம் இந்த பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று கோரிக்கை வைப்பேன். வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன். வெல்க திராவிடம், வெல்க திராவிடம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பச்சிளம் பிள்ளையை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்?
- எவ்வளவு கொடுத்தாலும் குழந்தையின் இழப்புக்கு ஈடாகாது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாமக்கல் மாநகராட்சியின் 4-வது வார்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட, தண்ணீர் தேங்கிய 5 அடிக் குழியில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் ரோகித் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
சிறுவன் ரோகித்தின் உயிரிழப்புக்கு முழு காரணம் திமுக அரசின் அலட்சியம் மட்டுமே!
கமிஷன் வாங்குவதில், டெண்டர் கொள்ளை அடிப்பதில் இருக்கும் கவனம் எல்லாம், பணிகளை பாதுகாப்பாக செய்வதில் இந்த விடியா அரசுக்கு இருக்கிறதா?
இது போன்ற உயிரிழப்பு நேர்வது இதென்ன முதல் முறையா? தவறு என்பது ஒருமுறை நிகழ்வது தான். மீண்டும் மீண்டும் நடப்பது என்பது, நிர்வாகச் சீர்கேட்டால் நடந்த கொலை என்று சொன்னால் கூட அது மிகையாகாது.
பச்சிளம் பிள்ளையை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்? "தெரியாம நடந்து போச்சு மா... SORRY" என்று சொல்வாரா? இன்னும் எத்தனை முறை இதையே நாம் கேட்க வேண்டும்?
உயிரிழந்த சிறுவன் ரோகித்தின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிவாரணம் நிச்சயம் போதுமானது அல்ல. எவ்வளவு கொடுத்தாலும் குழந்தையின் இழப்புக்கு ஈடாகாது எனினும், இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது, முழுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாங்கள் எங்களது 10 அம்ச கோரிக்கையை ஏற்கனவே பலமுறை அரசிடம் வலியுறுத்தி வந்தோம்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நம்புகிறோம்.
சென்னை தலைமை செயலகத்தில் போட்டா-ஜியோ சங்கத்தினருடன் இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஜாக்டோ-ஜியோ சங்கத்தினருடன் காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த போட்டா ஜியோ மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் கூறியதாவது:-
நாங்கள் எங்களது 10 அம்ச கோரிக்கையை ஏற்கனவே பலமுறை அரசிடம் வலியுறுத்தி வந்தோம். இப்போது 2 கட்ட போராட்ட நடவடிக்கையை திட்டமிட்டு இருந்தோம். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழுவினர் எங்களை அழைத்து பேசினார்கள். இதன் அடுத்த கட்டமாக இன்று அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம்தென்னரசு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படுவதாகவும், முதலமைச்சரின் கவனத்துக்கு இதை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பழைய ஓய்வூதியம் தொடர்பாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நம்புகிறோம். முதலமைச்சரின் நாளைய அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான பரிசாக இருக்கும் என்று தெரிவித்தனர்.






