என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "daily wage worker"

    • தான் விஷம் குடித்துவிட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
    • மரணத்திற்கு காரணமான தனபால் என்பவர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொட்டாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 53), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா (50). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மண்ணாடிப்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன், தனபால் ஆகிய 2 பேரும் கொட்டாரப்பட்டிக்கு சென்று, வேலுமணியிடம் ரூ.50 ஆயிரம் கடனை இன்னும் திருப்பி கொடுக்கவில்லை என கேட்டுள்ளனர்.

    அதற்கு வேலுமணி, பணம் கட்டியுள்ளேன். கட்டியதற்கு ஆதாரமும் காண்பிக்கிறேன் என்று சொல்லி உள்ளார். அப்போது பணம் வாங்கி 7 மாதம் ஆகிறது. கேட்டால் திருப்பி தர மாட்டியா? என்று கூறி தடியால் அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது கழுத்தில் துண்டை போட்டு, வீட்டில் இருந்து தெருவில் தரதரவென இழுத்துச்சென்றனர்.

    பின்னர் அங்கிருந்த கோயில் அருகில் அவரை விட்டுச் சென்றனர். இதையடுத்து வேலுமணியை, அவரது மனைவி அம்பிகா வீட்டுக்கு அழைத்து வந்தார். தெருவில் தன்னை இழுத்துச் சென்றதால் வேலுமணி மனவேதனையடைந்தார். அவரை அம்பிகா சமாதானம் செய்தார். இந்நிலையில் அன்று மாலையில் மோட்டார் சைக்கிளில் அனுமன்தீர்த்தம் பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வேலுமணி, தான் விஷம் குடித்துவிட்டதாக மனைவியிடம் கூறினார்.

    இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அம்பிகா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வேலுமணியை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலுமணி உயிரிழந்தார்.

    இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வேலுமணி மரணத்திற்கு காரணமான தனபால் (63) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிழ்வாணனை தேடி வருகின்றனர். 

    ×