என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சரின் நாளைய அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான பரிசாக இருக்கும் - ஜாக்டோ ஜியோ
- நாங்கள் எங்களது 10 அம்ச கோரிக்கையை ஏற்கனவே பலமுறை அரசிடம் வலியுறுத்தி வந்தோம்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நம்புகிறோம்.
சென்னை தலைமை செயலகத்தில் போட்டா-ஜியோ சங்கத்தினருடன் இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஜாக்டோ-ஜியோ சங்கத்தினருடன் காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த போட்டா ஜியோ மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் கூறியதாவது:-
நாங்கள் எங்களது 10 அம்ச கோரிக்கையை ஏற்கனவே பலமுறை அரசிடம் வலியுறுத்தி வந்தோம். இப்போது 2 கட்ட போராட்ட நடவடிக்கையை திட்டமிட்டு இருந்தோம். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழுவினர் எங்களை அழைத்து பேசினார்கள். இதன் அடுத்த கட்டமாக இன்று அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம்தென்னரசு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படுவதாகவும், முதலமைச்சரின் கவனத்துக்கு இதை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பழைய ஓய்வூதியம் தொடர்பாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நம்புகிறோம். முதலமைச்சரின் நாளைய அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான பரிசாக இருக்கும் என்று தெரிவித்தனர்.






