search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி: பணி நிரந்தரம் கேட்டு கோர்ட்டில் வழக்கு
    X

    2 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி: பணி நிரந்தரம் கேட்டு கோர்ட்டில் வழக்கு

    17 வருடங்களாக தினமும் 2 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி பணி நிரந்தரம் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
    சென்னை:

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கால்நடை பராமரிப்பு துறை இணை மையத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிபவர் எம்.ரவிக்குமார். இங்கு இவர் பகுதிநேர ஊழியராக இருக்கிறார்.

    கடந்த 2000-ம் ஆண்டில் அதாவது 17 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். ஆனால் இவருக்கு தினமும் 2 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள உதவியாளர்கள் பணிக்கான ஆள் எடுக்கும் பணி நடைபெற்றது. அதற்காக கடந்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் நேர்முக தேர்வு நடத்தினார். அதில் எம்.ரவிக்குமாரின் பெயர் இடம்பெறவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனக்கு நிரந்தர உதவியாளர் பணி வழங்க கோரி இயக்குனரிடம் மனு கொடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    எனவே, அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த 17 ஆண்டுகளாக பகுதி நேர துப்புரவு பணியாளராக பணிபுரியும் நான் 2 ஆண்டுகளில் நிரந்தர தொழிலாளி ஆவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் நடக்கவில்லை.

    தற்போது காலியாக உள்ள உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வில் எனது பெயர் இடம் பெறவில்லை. தற்காலிக அல்லது பகுதி நேர ஊழியராக பணிபுரிபவர்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என்ற விதி அரசு உத்தரவில் உள்ளது. அதன்படி என்னை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’’ என கூறியுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வில் அரசின் உத்தரவை கடைபிடிக்கும் படி கால்நடை பராமரிப்பு துறை இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×