search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டமன்றத்தை உடனே கூட்ட சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்: கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
    X

    சட்டமன்றத்தை உடனே கூட்ட சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்: கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி ஒப்புதல் அளிக்கும் வகையில், சட்டமன்றத்தை உடனே கூட்ட சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கவர்னருக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    சென்னை:

    தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    15-வது தமிழக சட்டப் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் அரசியலமைப்பு சட்டத்தின் சட்டப் பிரிவுகளுக்கு எதிராகவும், தமிழக சட்டமன்ற விதிமுறைகளை மீறியும் ஜனநாயகமற்ற முறையில் தமிழக அரசால் இறுதி செய்து வைக்கப்பட்டுள்ளதை தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

    2017-2018ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 16-.3.-2017 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் 24-3-2017 அன்று நிறைவடைந்தது. இதில், தமிழக சட்டப்பேரவை விதி 183(1) படி, வருடாந்திர நிதிநிலை அறிக்கையானது இரு பகுதிகளாக அமைந்துள்ளன.

    1. பொது விவாதம், 2. மானியங்களுக்கான வாக்கெடுப்பு. 185(3) விதி மானியங்கள் மீதான வாக்கெடுப்பு அவையில் நடைபெறுவதை உறுதி செய்திருக்கிறது. மானியங்கள் மீதான வாக்கெடுப்புக்கான முக்கிய காரணம் அரசியல் சட்டப் பிரிவு 204ன் படி நிதி ஒதுக்க சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் பெறுவதற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனை நிறைவேற்றும் பொருட்டு, தமிழக சட்டமன்றத்தின் அலுவல் ஆலோசனைக் குழுவானது பொது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை முதலில் 5 நாட்களுக்கு நடத்துவது எனவும், பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் முடிவுற்றப் பிறகு மானியக் கோரிக்கைகளுக்கான ஒப்புதலை பெற சட்டமன்றக் கூட்டத் தொடரை மீண்டும் கூட்டுவது என முடிவு செய்தது.

    இந்த முடிவானது சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, சட்டமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டது. அதற்கேற்ப, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நிறைவுப் பெற்று சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

    ஆனால், இதுவரை இல்லாத வகையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, 10.04.2017 அன்று நடைபெற இருந்த டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ததோடு, தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வந்தது.

    ஆனாலும் சட்டமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழக சட்டப்பேரவை தலைவர் சட்டமன்றத்தை மீண்டும் கூட்டவில்லை. மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த சட்டமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று 19.4-.2017 அன்று நான் பேரவைத் தலைவரிடம் மனு அளித்தேன்.

    அதுமட்டுமின்றி, இதே கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சரிடமும் அவர்களிடமும் மனு அளித்துள்ளேன். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு, வறட்சி, விவசாயிகள் தற்கொலை, குடிநீர் பஞ்சம், ‘நீட்’ தேர்வு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் போன்ற பல முக்கிய பிரச்சினைகள் நிலுவையில் உள்ள நிலையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டப்படவில்லை.

    ஆனால் மாநில அரசோ சட்டமன்றக் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு பதிலாக ஆளுநருக்கு சட்டமன்றக் கூட்டத் தொடரை இறுதி செய்ய பரிந்துரை செய்து அதன்படி 11.5.2017 தேதியிட்ட ஆணை வெளியிடப்பட்டிருப்பது தமிழக சட்டமன்ற விதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளது.

    மேலும், அரசின் இந்த முடிவானது அலுவல் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின்படி பேரவை எடுத்த முடிவிற்கு எதிரானதகாவும், தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் புனிதத் தன்மையை கெடுக்கும் விதத்திலும் உள்ளது.

    அலுவல் ஆலோசனைக் குழுவின் முடிவினை பேரவையில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு அது பேரவையின் உத்தரவாக மாறும் என்று தமிழக சட்டமன்ற விதி 235 தெளிவாக கூறுவதை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
    விதி 237-ன்படி மேற் கூறிய உத்தரவில் சட்டப்பேரவையின் அவை முன்னவர் முன்வைக்கும் மாற்றத்தை சட்டமன்றம் ஏற்றுக் கொண்டால் தவிர எவ்வித மாற்றமும் செய்ய இயலாது என்று தெரிவிக்கிறது.

    எனவே, அலுவல் ஆலோசனைக் குழுவினால் முடிவெடுக்கப்பட்டு பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவினை மாநில அமைச்சரவை உட்பட எந்தவொரு அதிகார மையத்தாலும் மீறவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது.

    தற்போது சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு துறைகள் முன் வைத்த மானிய கோரிக்கைகளுக்கு பேரவையின் ஒப்புதல் பெறாமல் உள்ளது. அரசாங்கத்தால் பல்வேறு திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நிதிநிலை அறிக்கையானது முழுமை பெறாமல் உள்ளது.

    இவற்றை ஆளும் கட்சி உணரவில்லையா அல்லது ஆளும் கட்சி தமிழக சட்டப்பேரவையின் மாண்பை சிறுமைப்படுத்துகிறதா என்பதை எங்களால் புரிந்துக்கொள்ள இயலவில்லை.

    எனவே, துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி ஒப்புதல் அளிக்கவும், மானியங்கள் மற்றும் ஒதுக்கீடு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் படைத்த சட்டப் பேரவையின் ஒப்புதல் இல்லாமல் அரசின் பணம் பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்படும் விநோதமான சூழ்நிலையை தவிர்க்கவும் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரை உடனடியாக கூட்டுமாறு முதல்-அமைச்சர் மற்றும் பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டுமென்று ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×