search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
    X

    அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி

    அரசியலுக்கு வர பொருத்தமானர் விஷால் என்று நடிகர் கார்த்தி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
    நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘காக்கி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடந்தது.

    அப்போது கார்த்தி அளித்த பேட்டி வருமாறு:-

    ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் முற்றிலும் உண்மையான போலீசை பார்க்கலாம். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    சாதாரணமாக போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு கேஸ் பைலை படிக்கும்போது எப்படி நடந்து கொள்வாரோ, அது போலவே நானும் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் வருவதுபோல சத்தமாக பேசுவதை தவிர்த்து நிஜமாக போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்து இருக்கிறேன்.

    இது 1995 முதல் 2005 வரை நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. அதை ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையின் மூலம் கூறியுள்ளோம்.


    தீரனின் வாழ்க்கையை மாற்றிய ஒரு வழக்கு தான் இந்த படத்தின் கதை. உண்மையான ஒருபோலீஸ் அதிகாரியின் தோற்றம் எப்படி இருக்குமோ அதுபோல் தான் என்னுடைய தோற்றமும் இருக்கும். ராஜஸ்தானிலும் படப்பிடிப்பு நடத்தினோம்.

    சமூகத்தில் நடைபெறும் பிரச்சினைகளை காணும் போது எனக்கு கோபம் வரத்தான் செய்கிறது. சமீபத்தில் கந்துவட்டி பிரச்சினையால் பெண் தனது குழந்தையோடு தீக்குளித்த சம்பவத்தை பார்த்த போது கோபம் வந்தது.

    இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று தோன்றும். நான் போலீசாரை மிகவும் நேசிக்கிறேன். மற்றவர்களுக்கு 8 மணி நேரம் வேலை என்று இருக்கிறது. ஆனால் போலீஸ் அதிகாரிகள் 22 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது.

    நாம் பார்க்கும் ஒருசில வி‌ஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு மொத்த போலீசையும் மதிப்பிடுவது தவறு. மற்ற மாநில போலீசை விட, தமிழ் நாட்டு போலீசுக்கு தனி மரியாதை உண்டு. அதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.

    இவ்வாறு கார்த்தி கூறினார்.

    பின்னர் அரசியல் பற்றி கேட்ட கேள்விகளுக்கு கார்த்தி அளித்த பதில் வருமாறு:-

    நான் அரசியலுக்கு வருவேனா என்று கேட்கிறீர்கள். எனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனவே அரசியலுக்கு வர நேரம் இல்லை. விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே அரசியலுக்கு வர பொருத்தமானவர்.

    கமல்ஹாசன் திறமையானவர். அவர் நல்ல அரசியல்வாதியாக வரலாம். கமல் எந்த ஒரு வி‌ஷயத்தை பேசினாலோ, செய்தாலோ அவர் அதுபற்றி சரியாக ஆராய்ச்சி செய்துவிட்டுதான் முடிவு எடுப்பார்.

    ஒன்றை செய்வதற்கு முடிவு எடுத்து அதில் இறங்கிவிட்டால் அதில் இருந்து பின் வாங்கமாட்டார். அவர் அரசியலுக்கு வந்தால் மக்கள் அவரை எளிதில் அணுகமுடியும். சந்திக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×