search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை ஆறு"

    • வைகை ஆற்றின் குறுக்கே ரூ.30.60 கோடியில் மதகு அணை கட்டப்படுகிறது.
    • விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கட்டிக் குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக, வைகை ஆற்றின் குறுக்கே ரூ30.60 கோடி மதிப்பீட்டில் மதகு அணை கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    இந்த அணைக்கட்டு மூலம் ஏற்கனவே கட்டிக் குளம் முகப்பில் உள்ள தலைமதகு வழியாக கட்டிக் குளம் கண்மாய்க்கும், வைகை ஆற்றின் வலது புறத்தில் புதிதாக தலைமதகு கட்டி மிளகனூர், முத்தனேந்தல் மற்றும் இதர கண்மாய்களுக்கு வலது பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் பகிர்ந்தளிக்க முடியும்.

    மேலும் இந்த அணைக்கட்டின் மூலம் வைகை ஆற்றின் மிக குறைந்த அளவு நீர் வரத்து இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கவும், இதன் மூலம் உபரிநீரை தேக்கவும் இயலும். வைகை ஆற்றில் இருந்து உபரி வெள்ள நீரை மிளகனூர் கண்மாய் வழியாக சின்னக் கண்ண னூர், எஸ்.கரிசல்குளம் ஆகிய கண்மாய்களுக்கும், நாட்டார் கால்வாய் வழியாக ராஜகம்பீரம், அன்னவாசல் கண்மாய்கள் உள்பட 16 கண்மாய்களுக்கும் வெள்ள நீரை இந்த அணைக்கட்டு மூலம் வழங்க இயலும். இதனால் சுற்றியுள்ள 4269.00 ஏக்கர் பாசன நிலங்களும் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (சிவகங்கை) பாரதிதாசன், உதவி செயற்பொறி யாளர்கள் மோகன்குமார், முத்துப்பாண்டி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரை வைகை ஆற்றில் சீரமைப்பு பணிகள் நடைபெறும்.
    • இந்த தகவலை நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் மன்றக்கூட்டம் தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    10-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி கடந்த ஒரு ஆண்டாக நகராட்சி நிர்வாகம் தனது வார்டில் வளர்ச்சி பணிகளை செய்யாமல் புறக்கணிப்பதாக புகார் கூறும் வாசகங்கள் கொண்ட பதாகையை ஏந்தி வாயில் கருப்புதுணி கட்டி வந்து கூட்டரங்கில் தரையில் அமர்ந்து மவுனமாக இருந்தார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கவுன்சி லர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. பெரும்பா லான கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் குடிநீர், கழிவுநீர், வடிகால் சாலை, தெருவிளக்கு அமைத்தல், பராமரித்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியு றுத்தினர். கவுன்சிலர் சண்முகப்பிரியா பேசுகையில், ஆனந்த வல்லி சோமநாதர் சுவாமி கோவிலை சுற்றி தேரோடும் வீதிகளில் அதிகரித்து வரும் இறைச்சி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    மேலும் வீதிகளில் பழுதடையும் தெருவிளக்குகளை சரி செய்ய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தலைவர் மாரியப்பன் கென்னடி பேசியதாவது:-

    மானாமதுரை நகராட்சியில் கடந்த ஓராண்டில் ரூ.7கோடி மதிப்பில் பொதுமக்களுக்கான வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் வீதிகளை சுத்தம் செய்வதில் ஏற்பட்டிருந்த தொய்வு தற்போது படிப்படியாக குறைந்து துப்புரவு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    வரும் காலங்களில் துப்புரவுப்பணி இன்னும் சிறப்பாக நடைபெறும். அனைத்து வீதிகளிலும் புதிய தெருவிளக்குகள் அமைத்து பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    மானாமதுரையில் விரைவில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. இதற்காக ரூ.5லட்சம் மதிப்பீட்டில் திருவிழாவிற்காக பொதுமக்கள் கூடும் நகர் பகுதி, வைகை ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வியாபாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நகராட்சியில் தொழில் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. எந்த வார்டும் புறக்கணிக்கவில்லை. தர்ணாவில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க. உறுப்பினரின் வார்டில் திட்டப்பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்று தண்ணீர் வந்தடைந்ததை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
    • கடந்த 3-ந்தேதி கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் வானம் பார்த்த பகுதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் போதிய பருவமழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கவும் விரகனூர் அணையில் இருந்து கடந்த 3-ந்தேதி கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை அபிராமம் பெரிய கண்மாயை வைகை ஆற்று தண்ணீர் வந்தடைந்தது.

    இதையடுத்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், சமூக ஆர்வலர் அருணாசலம் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர். இதுகுறித்து விவசாய சங்க செயலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:-

    அபிராமம் பகுதி வானம் பார்த்த பூமி ஆதலால் விவசாயம் பாதிப்படைந்து நெற் பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் வைகை ஆறு மூலம் கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க கோரி தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையினருக்கும் மனு ெகாடுத்தும், பல கட்ட போராட்டங்களையும் நடத்தினோம்.

    அப்போதே தண்ணீர் திறந்து இருந்தால் நெல் விவசாயம் பாதிப்படைந்து இருக்காது. தற்போது எங்களது கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் அபிராமம் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    நெல் விவசாயம் பாதிக்கப்பட்டாலும் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும் என்றார்.

    • வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மதுரை:

    தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துளளது.

    இந்த நிலையில் நேற்று மாலை வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது. 70 அடிக்கு தண்ணீர் உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு விநாடிக்கு 700 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 358 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை கல் பாலம் தரைபாலம் மூடப்பட்டுள்ளது. மேலும் யானைக்கல் தரைப்பாலத்திற்கு செல்ல பொதுமக்ககளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை வைகை ஆறு செல்லும் பகுதியில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன.

    வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்ககூடாது. தரைப்பாலங்களை கடக்க முயற்சி செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த பேரிடரை சமாளிக்கும் வகையில் மீட்பு குழு உள்ளிட்ட 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க இடவசதி செய்து கொடுத்தல், அவர்களுக்கு உணவு அளித்தல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் மழையால் பாதிக்கப்படும் மக்கள் புகலிட மையம் உருவாக்கி தயார் நிலையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆண்டிபட்டி- 63.40

    மேட்டுப்பட்டி-24.80

    கள்ளிக்குடி-18.20

    பேரையூர்-6.20

    சிட்டாம்பட்டி-3.60

    • மதுரை வைகை ஆற்றில் சுமார் 4000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • மதுரை வைகை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் காரணமாக தரை பாலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

    மதுரை:

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியை தாண்டி உள்ளது அணைக்கு வினாடிக்கு 2313 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1866 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    மதுரை வைகை ஆற்றில் சுமார் 4000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இதற்காக திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக நிவாரண முகாம்களும் தயார் செய்யப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை உடனடியாக மீட்க பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை வைகை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் காரணமாக தரை பாலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது மேம்பாலங்களில் நின்றபடி வைகை ஆற்றில் பாயும் வெள்ளத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கிறார்கள்.

    ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றுக்குள் செல்லும் பாதைகள் அனைத்தும் இரும்பு தடுப்புகளால் மூடப்பட்டுள்ளது. கால்நடைகளும் அந்தப் பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலங்கள் மூடப்பட்டுள்ளதால் ஆற்றின் மேம்பாலங்களில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன.

    கோரிப்பாளையம், சிம்மக்கல், நெல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மதுரை வைகை ஆற்றின் கரையோர பகுதிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மதுரை வைகை ஆற்றில் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • மதுரை மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் கண்மாய், சரவண பொய்கை ஆகிய பகுதிகளிலும் நடந்தது.

    மதுரை

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் கொள்ளளவு 71 அடி ஆகும். இதில் 70 அடிவரை தண்ணீர் நிரம்பி உள்ளது.

    வைகை அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் வைகை ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், உபகரணங்களுடன் இன்று காலை மதுரைக்கு வந்தனர். அவர்கள் அரசினர் மீனாட்சி கல்லூரி அருகில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் ஒத்திகை நடத்தினர்.அவர்களுடன் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அதிகாரிகளும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பேரிடர் தயார் நிலை, வெள்ளத்தை எதிர்கொள்ளுதல், பாதிக்கப்பட்டோருக்கு ரத்தப்போக்கை கட்டுப்படுத்துதல், தசைக்கட்டு காயங்கள், அடிப்படை உயிர் காக்கும் மருத்துவ சேவை, நோயாளிகளை தூக்குதல் -நகர்த்துதல், கயிறு மூலம் மீட்பு நடவடிக்கை, அவசர கால தயார் நிலை, ஆற்று வெள்ளத்தில் சிக்கியோருக்கு முதல் உதவி சிகிச்சை கொடுப்பது, மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது ஆகியவை செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப் பட்டது.

    மதுரை மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் கண்மாய், சரவண பொய்கை ஆகிய பகுதிகளிலும் பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது.

    • மானாமதுரை வைகை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் சுவாமி, அம்பாள் உற்சவர் தனிபல்லக்கில் கொண்டு வரப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றுகரையில் பிரசித்தி பெற்ற ஆனந்த வல்லி சோமநாதஸ்வாமி கோவில் உள்ளது.

    மற்றொரு கரையில் வீர அழகர் கோவில் உள்ளது. 2 கோவில்களில் ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது.நேற்று ஆடிவிழாவில் முக்கிய விழாவான ஆடித்தபசுகாட்சி நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின்பு ஆடிவிழாவில் கோவில் முன்பு உள்ள வைகைஆற்றில் தண்ணீர் சென்றதால் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சுவாமி, அம்பாள் உற்சவர் தனிபல்லக்கில் கொண்டு வரப்பட்டது. மஞ்சள், பால், வைகை தீர்த்தமிட்டு அபிஷேகம், தீர்த்தவாரி, தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    இதேபோல் வீர அழகர்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு சுந்தரபுரம் கடை வீதி வியாபாரிகள் சார்பில் நடந்த விழாவில் சுந்தரராஜபெருமாள் பூபல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    • சோழவந்தான் வைகை ஆற்றில் அழுகிய நிலையில் பட்டதாரி வாலிபர் உடல் மீட்கப்பட்டது.
    • இது கொலையா? தற்கொலையா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது30). இவரது சிறு வயதிலேயே தாயார் இறந்த நிலையில் இதே ஊரில் உள்ள சித்தி அமுதா வீட்டில் வளர்ந்து வந்தார்.

    எம்.பி.ஏ. படித்து முடித்துள்ள ஆனந்த் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். சிலநாட்களுக்கு முன்பு காணாமல்போன ஆனந்த் குறித்து அவரது உறவினர் தமிழரசன் காடுபட்டி போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன பட்டதாரி வாலிபர் ஆனந்தை தேடிவந்தனர். நேற்று காலை சோழவந்தான் அருகே உள்ளவைகையாற்று தடுப்பணையில் சிலர் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

    அப்போது ஆற்று நாணலில் சிக்கி ஆண் பிணம் மிதப்பதாக காடுபட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவஇடத்திற்கு போலீசார் சென்று சோழவந்தான் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் உடலை கைப்பற்றினர்.

    முழுக்கை சட்டை மற்றும் கைலியுடன் அழகிய நிலையில் ஆற்றில் மிதந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த உடல் மன்னாடிமங்கலத்தை சேர்ந்த காணாமல் போன பட்டதாரி வாலிபர் ஆனந்த் என்பது தெரியவந்தது.

    ஆனந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது கொலையா? தற்கொலையா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×