search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் மழை எதிரொலி- மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
    X

    மதுரை வைகை ஆற்று கரையோரம் வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைகளில் தேங்கி உள்ள வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்து செல்லும் காட்சி.

    தொடர் மழை எதிரொலி- மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    • வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மதுரை:

    தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துளளது.

    இந்த நிலையில் நேற்று மாலை வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது. 70 அடிக்கு தண்ணீர் உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு விநாடிக்கு 700 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 358 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை கல் பாலம் தரைபாலம் மூடப்பட்டுள்ளது. மேலும் யானைக்கல் தரைப்பாலத்திற்கு செல்ல பொதுமக்ககளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை வைகை ஆறு செல்லும் பகுதியில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன.

    வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்ககூடாது. தரைப்பாலங்களை கடக்க முயற்சி செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த பேரிடரை சமாளிக்கும் வகையில் மீட்பு குழு உள்ளிட்ட 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க இடவசதி செய்து கொடுத்தல், அவர்களுக்கு உணவு அளித்தல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் மழையால் பாதிக்கப்படும் மக்கள் புகலிட மையம் உருவாக்கி தயார் நிலையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆண்டிபட்டி- 63.40

    மேட்டுப்பட்டி-24.80

    கள்ளிக்குடி-18.20

    பேரையூர்-6.20

    சிட்டாம்பட்டி-3.60

    Next Story
    ×