search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை வைகை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்- கரையோரங்களில் கண்காணிப்பு தீவிரம்
    X

    மதுரை வைகை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்- கரையோரங்களில் கண்காணிப்பு தீவிரம்

    • மதுரை வைகை ஆற்றில் சுமார் 4000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • மதுரை வைகை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் காரணமாக தரை பாலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

    மதுரை:

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியை தாண்டி உள்ளது அணைக்கு வினாடிக்கு 2313 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1866 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    மதுரை வைகை ஆற்றில் சுமார் 4000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இதற்காக திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக நிவாரண முகாம்களும் தயார் செய்யப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை உடனடியாக மீட்க பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை வைகை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் காரணமாக தரை பாலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது மேம்பாலங்களில் நின்றபடி வைகை ஆற்றில் பாயும் வெள்ளத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கிறார்கள்.

    ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றுக்குள் செல்லும் பாதைகள் அனைத்தும் இரும்பு தடுப்புகளால் மூடப்பட்டுள்ளது. கால்நடைகளும் அந்தப் பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலங்கள் மூடப்பட்டுள்ளதால் ஆற்றின் மேம்பாலங்களில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன.

    கோரிப்பாளையம், சிம்மக்கல், நெல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மதுரை வைகை ஆற்றின் கரையோர பகுதிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×