search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்கலம்"

    • சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    • சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. பெரிய அளவிலான உலோக பாகம் போன்று இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அபாயகரமான பொருளில் இருந்து விலகி இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறும்போது, மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம்.

    மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அந்த பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

    இந்த மர்ம பொருள் 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. ராக்கெட் பாகம் போன்று உள்ளது.

    • இரண்டு ராக்கெட்டுகளை பயன்படுத்தி நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டம்
    • இதற்கு முன் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி மாதிரிகளை சேகரித்துள்ளது

    2030 வருடத்திற்குள் சந்திரனுக்கு இரண்டு ராக்கெட்டுகளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கும் லேண்டர் (Lander) வாகனத்தை சுமந்து செல்லும். மற்றொன்று விண்வெளி வீரர்களை கொண்டு செல்லும் விண்கலத்தை ஏந்திச் செல்லும்.

    விண்வெளி வீரர்களையும், லேண்டரையும் ஒன்றாக அனுப்பும் அளவுக்கு ஒரு சக்திவாய்ந்த கனரக ராக்கெட்டை உருவாக்குவதில் சீனாவிற்கு நீண்டகாலமாக தொழில்நுட்ப தடை இருந்து வந்தது. இந்த இரட்டை ராக்கெட் திட்டம் மூலம் அது தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டு ராக்கெட்டுகளும் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்து அதன் விண்கலங்கள் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், விண்வெளி வீரர்கள் லேண்டரில் பயணித்து சந்திரனின் மேற்பரப்பில் இறங்குவார்கள். பின்பு சந்திரனில் தங்கள் அறிவியல் ஆராய்ச்சி பணிகளை முடித்துக்கொண்டு, மாதிரிகளை சேகரித்த பிறகு, சுற்றுப்பாதையில் உள்ள விண்கலத்திற்கு விண்வெளி வீரர்கள் லேண்டர் மூலம் திரும்புவார்கள். அதில் பயணித்து அவர்கள் பூமிக்கு வருவார்கள்.

    சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் போட்டி சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் சந்திரனில் உள்ளதாக கருதப்படும் கனிம வளங்களை குறி வைக்கின்றன.

    சந்திரனில் மனிதர்களுக்கான வாழ்விடங்களை நிறுவுவதன் மூலம், செவ்வாய் போன்ற பிற கிரகங்களுக்கு எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் பயணங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

    இதுபோன்ற விண்வெளி பயணங்களில், அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விட சீனா இன்னும் பின்தங்கியே உள்ளது.

    சந்திரனில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்பும் சீனாவின் லட்சிய நோக்கங்களை பூர்த்தி செய்ய, அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள், "சூப்பர் ஹெவி லாங் மார்ச் 10" எனப்படும் ராக்கெட், விண்வெளி வீரர்களுக்கான ஒரு புதிய வடிவமைப்புடைய விண்கலம், சந்திரனில் பயணிக்கும் லேண்டர் மற்றும் விண்வெளி வீரர்களின் குழுவோடு சந்திரனில் நடமாடும் ரோவர் ஆகியவற்றை உருவாக்கி வருகின்றனர்.

    2020-ல் சீனா மேற்கொண்ட ஆளில்லா விண்வெளி பயணத்தின் மூலம் சந்திரனில் இருந்து மாதிரிகளை கொண்டு வந்தது. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு பிறகு சந்திரனிலிருந்து மாதிரிகளை கொண்டு வந்த 3-வது நாடாக சீனா ஆனது குறிப்பிடத்தக்கது.

    • விண்கலத்தை ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • சந்திராயான்- 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன.

    சென்னை:

    இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர் சந்திரயான்-2 விண்கலம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது.

    எனினும், தொழில்நுட்ப கோளாறால் திட்டமிட்டபடி 'லேண்டர் கலன்' தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான 'ஆர்பிட்டர்' நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. தற்போது ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து, ஆய்வு செய்து வருகிறது.

    இதற்கிடையே, சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வருகிற 13-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப் பட உள்ளது. இதற்காக, சந்திரயான்-3 விண்கலம் கடந்த மே இறுதியில் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விண்கலத்தை ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறுதிக் கட்ட சோதனைகள் நிறைவடைந்த பின்னர், ஏவு தளத்துக்கு ராக்கெட் கொண்டு செல்லப்படும்.

    கடந்த முறை ஏற்பட்ட தோல்வியை அடிப்படையாக கொண்டு லேண்டர் மற்றும் ரோவர் கலன்களில் அதிநவீன வசதிகளுடன், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறியதாவது:-

    சந்திராயான்- 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன. சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக தரையிறங்கும் போது உடைந்து விடாமல் இருக்கும் வகையில் அதன் கால்கலை வலுவாக வடிவமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தரையிறங்கும் போது விபத்தை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சந்திரயான் -2 தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டு உள்ளன. வினாடிக்கு 2 அல்லது 3 மீட்டர் வேகத்தில் தரையிறங்கினால் கூட அது விபத்துக்குள்ளாகாது. மேலும் பல தடங்கல்கள் ஏற்படுவதை கையாள லேண்டரில் அதிக எரி பொருள்களை சேர்த்துள்ளோம். அதில் இருந்து மீண்டு வருவதற்கான திறன்களும் சேர்க்கப்பட்டு உள்ளது. மற்றொரு அம்சமாக லேசர் டாப்ளர் வேக மீட்டர் எனப்படும் சென்சார் ஒன்றையும் சேர்த்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் ஹக்குடோ விண்ணில் ஏவப்பட்டது.
    • விண்கலம் நிலவில் தரையிறங்கும் வீடியோ யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்படுகிறது.

    ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஐஸ்பேஸ் நிறுவனம் தனது விண்கலத்தை நிலவில் தரையிறங்க செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஐஸ்பேஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில் நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையை பெற்றுவிடும்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் ஹக்குடோ விண்ணில் ஏவப்பட்டது. கடந்த மாதம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்த ஹக்குடோ விண்கலம் தற்போது 100 கிலோமீட்டர் உயரத்தில் நிலவை சுற்றி வருகிறது.

    இன்றிரவு 10.10 மணிக்கு ஹக்குடோ விண்கலம் நிலவில் தரையிறங்க இருக்கிறது. விண்கலம் நிலவில் தரையிறங்கும் வீடியோ ஐஸ்பேஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் நேரலை செய்யப்பட இருக்கிறது. ஹக்குடோ விண்கலம் 2.3 மீட்டர் உயரமும், 2.6 மீட்டர்கள் அகலமாகவும் உள்ளது. இதில் உள்ள எரிபொருள் உள்பட விண்கலத்தின் மொத்த எடை 1000 கிலோ ஆகும். 

    • அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டம்
    • இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்

    நாகர்கோவில்:

    இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகரு மான சிவன் இன்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இஸ்ரோவில் வரும் சனிக்கிழமை பி.எஸ்.எல்.வி. சி4 என்ற 54-வது பி.எஸ்.எல்வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிக ரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு அடுத்த கட்டமாக எஸ்.எஸ்.எல்.வி. செயற்கை கோள் செலுத்தப்பட இருக்கிறது.ஆதித்யா எல்.ஒன். மற்றும் ககன்யான் செயற்கைக்கோள் போன்றவைகள் செலுத்தப்பட இருக்கின்றன.

    நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு பல்வேறு கட்ட சோதனை ராக்கெட்டுகள் செலுத்தப்பட வேண்டி இருக்கிறது. எனவே அந்த சோதனைகள் நடைபெறும். ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு 2 முக்கிய காரணங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. ககன்யான் ராக்கெட்டில் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவனிக்க வேண்டும்.அதற்கு தகுந்த வகையில் ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும். விண்ணில் அவர்கள் இருக்கும் போது அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதாவது பூமியில் இருப்பது போன்ற நிலையை அங்கு உருவாக்க வேண்டும்.

    இதுதொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதைப் போன்று மனிதர்கள் விண்ணில் செல்லும் போது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அவர்கள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக பூமியில் வந்து இறங்கும் வகையில் சோதனைகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. இதைத் தொடர்ந்து ரோபோவை விண்ணிற்கு அனுப்பும் சோதனை நடைபெறும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு அது பாதுகாப்பான பயணமா என்பது உறுதி செய்யப்படும்.

    பின்னர் ககன்யானில் மனிதனை அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது ககன்யான் விண்கலம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனைகள் நடை பெற்று வருகிறது. அந்த சோதனைகள் அனைத்தும் இதுவரையிலும் வெற்றி பெற்றுள்ளன.

    சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.ஒன். விண்கலம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இது விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது சாதாரண ஆர்பிட் போல் அல்லாமல் லிபரேஷன் பாயிண்ட் ஒன்று வைத்து அங்கு செயற்கைகோளை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது சூரியனை ஆய்வு செய்யும்.

    குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில ஆர்ஜிதப் பணிகள் முடிவடைந்து விட்டன. கட்டுமான பணிகள் அங்கு தொடங்கப்பட வேண்டி உள்ளது. அதற்கு முன்னதாக அங்கு மண் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். செயற்கைக்கோள் செலுத்தும் போது அதன் நிலையை அந்த பகுதி தாங்குமா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். #Curiosity #NASA
    நியூயார்க்:

    பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 

    அமெரிக்கா கடந்த 2011-ம் ஆண்டு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பி உள்ளது. 

    350 மில்லியன் மைல் (560 மில்லியன் கி.மீ) பயணம் மேற்கொண்டு செவ்வாயில் ஆகஸ்ட் 6, 2012 அன்று வெற்றிகரமாக செவ்வாயில்  தரையிறங்கிய கியூரியாசிட்டி, மொத்த பணியில் 23 சதவிகிதத்தை முடித்துள்ளது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாமல் கியூரியாசிட்டி இயக்கத்தை நிறுத்தியுள்ளது. 

    இதனை, சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளதாகவும், விண்கலத்தின் சூரிய சக்தியை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. 
    ×