search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வல்லாங்குளம்"

    • உளுந்தால் ஆன பலகாரங்களை அம்மனுக்குப் படைக்கின்றனர்.
    • நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தால் ஆன பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம்முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதுவரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, தோசை முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.

    இந்த கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானது தான். திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நடத்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு விளையும் என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார்.

    இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும், அவள் கருவில் வளரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார். ஒரு நாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப்போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பெச்சாயி அம்மன். மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தாள். அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள். அரசியை தன்மடியில் கிடத்தி அவளுக்கு பிரசவம் பார்த்து குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள். தனது தவறை உணர்ந்த மகாராஜா, பெச்சாயி அம்மனிடம் பாவபரிகாரம் குறித்து வேண்டினார். கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள் என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன் படியே செய்தார் மகாராஜா.

    அவரால் உருவாக்கப்பட்ட குளம் தான் வல்லங்குளம் எனப்பட்டது. காலம் உருண்டோடியது. ஏறத்தாழ 500-700 ஆண்டு களுக்குப் பிறகு அந்த குளத்தில் இருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர்.

    ×