search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பித்ருக்கள் வழிபாடு"

    • தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள்.
    • சிரார்த்தம் செய்யும் முன்பாக மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

    2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

    3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

    5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

    6. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக் கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீர் தரப்பட வில்லை என்றால் அவர்கள் ஏமாற்ற மடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    7. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிரார்த்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.

    9. பெற்றோர்களின் வருட சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருட சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

    10. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.

    11. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிக முக்கியம்.

    12. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அவற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    13. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அது தான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

    14. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

    15. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திரு வண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

    16. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    • ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    அமாவாசையன்று எந்த கிரகமும் சூன்யம் அடையாது என்பதால், அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துன்பங்களில் இருந்து விடுபட இறந்த முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பதுடன், ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலச் சூழல் காரணமாக திதி கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    சாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலத்தில் முன்னோர்களான பித்ருக்கள் தங்களது உறவுகளைப் பார்ப்பதற்காக இந்த பூலோகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை.

    அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பது போலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் மகாளய அமாவாசை ஆகும். அன்றும் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ரு லோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அன்று அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    தை அமாவாசை, இந்த வருடம் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும் காலபுருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகர ராசியில், கர்ம காரகன் சனியின் வீட்டில் சந்திரனு டன் சூரியன் சேரும் நாள் மிகவும் விசேஷமான தை அமாவாசையாகும். அதிலும் உத்திராண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் கூடுதல் சிறப்பாகும்.

    தற்போதைய கோட்சாரத்தில் மகர ராசியில் கர்மகாரகன் சனி பகவான் ஆட்சிபலம் பெற்று, தர்மாதிபதி குருவுடன் இணைந்து, தர்ம கர்மாதிபதி யோகத்தை உலகிற்கு குருவும் சனியும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் சூரியனும், சந்திரனும் இணையும் போது உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்தில் உரு வாகும் தை அமாவாசை மிகமிக சிறப்பான- உன்னதமான பலன்களை வழங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

    சூரியோதயத்திற்கு முன்பாக கடற்கரை, மகாநதிகள், ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.

    ×