search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி வாகனங்கள்"

    • வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • இதில் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 80-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் கண்டறியப்பட்டன.

    பொன்னேரி:

    கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.

    பள்ளி வாகனங்கள் சரியான பராமரிப்பில் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதா? என்று போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகம் ஒன்றில் கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள 34 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான சுமார் 400 வாகனங்கள் ஒரே இடத்தில் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் வட்டாரப் போக்குவரத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    பள்ளி வாகனங்களில் விதிமுறைகளின்படி கண்காணிப்பு கேமரா, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ் கருவி, மற்றும் அவசர கதவு, தீயணைப்பான், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை உள்ளனவா என்று சரிபார்க்கப்பட்டது.

    அப்போது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் கருவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 80-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் கண்டறியப்பட்டன.

    நேற்று ஆய்வு செய்த 126 வாகனங்களில் முறையாக பராமரிக்கப்படாத 35 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

    இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி கூறியதாவது:-

    விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் 5 ஆண்டுகள் அனுபவம் இல்லாத டிரைவர்களை பணியமர்த்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். பள்ளி நிர்வாகத்தினர் மாணவ-மாணவிகளை அழைத்து வரும் வாகனங்களை முறையாக பாரமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன், மாவட்ட கல்வி அலுவலர் மோகனா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர் பேட்டை, திருவாலங்காடு, திருத்தணி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது. முதற்கட்டமாக தனியார் பள்ளிகளில் உள்ள பஸ்கள், வேன்கள் என மொத்தம் 78 வாகனங்கள் நேற்று சோதனை செய்யப்பட்டன.

    திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் லீலாவதி ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ. சத்யா, மாட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நெல்லை, வள்ளியூர், அம்பை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டன.
    • வாகன ஓட்டுனர்களின் லைசென்ஸ், அவர்களின் வயது விபரம் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

    பள்ளிகள் திறக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட நெல்லை, வள்ளியூர், அம்பை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டன.

    மாவட்டம் முழுவதும் 135 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பஸ்கள், வேன்கள் என 511 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணி பாளை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்தது. வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர், நெல்லை சப்-கலெக்டர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    பள்ளி வாகனங்களில் இருக்க வேண்டியவை என நீதிமன்றம் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டுள்ளது. அவை பள்ளி வாகனங்களில் இருக்கிறதா என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரவீன்ராஜ், செண்பகவள்ளி, கனகவள்ளி மற்றும் வருவாய், தீயணைப்பு, காவல்துறை ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    குறிப்பாக வாகனங்களில் குறிப்பிட்ட இடத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளனவா, அவசர காலத்தில் வெளியேற வசதிகள் உள்ளதா, தீயணைப்பு கருவிகள் மற்றும் பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி இருக்கிறதா என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் வாகன ஓட்டுனர்களின் லைசென்ஸ், அவர்களின் வயது விபரம் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இதுதவிர தீ தடுப்பு பயிற்சி குறித்து வாகன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தலைமையிலான வீரர்கள் தீ தடுப்பு முறைகள் குறித்து ஒத்திகை நடத்தி விளக்கினர்.

    • ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • அரசின் விதிமுறைகளின் படி வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா? என நேரில் ஆய்வு செய்தார்.
    • தகுதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கினார்.

    கோபி:

    தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆண்டு தோறும் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வரும் 13-ந் தேதி தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட சத்தியமங்கலம், பவானி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான வாகன சோதனை ஒத்தக்குதிரை அருகே தனியார் கல்லூரி யில் நடைபெற்றது.

    கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பிரியதர்ஷினி கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளின் படி வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா? என நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து தகுதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கினார்.

    இந்த ஆய்வில் கோபிசெட்டிபாளையம், சத்தி மற்றும் பவானி பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன.

    ×