search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை மாவட்டத்தில் 511 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
    X

    பாளை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

    நெல்லை மாவட்டத்தில் 511 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

    • நெல்லை, வள்ளியூர், அம்பை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டன.
    • வாகன ஓட்டுனர்களின் லைசென்ஸ், அவர்களின் வயது விபரம் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

    பள்ளிகள் திறக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட நெல்லை, வள்ளியூர், அம்பை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டன.

    மாவட்டம் முழுவதும் 135 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பஸ்கள், வேன்கள் என 511 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணி பாளை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்தது. வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர், நெல்லை சப்-கலெக்டர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    பள்ளி வாகனங்களில் இருக்க வேண்டியவை என நீதிமன்றம் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டுள்ளது. அவை பள்ளி வாகனங்களில் இருக்கிறதா என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரவீன்ராஜ், செண்பகவள்ளி, கனகவள்ளி மற்றும் வருவாய், தீயணைப்பு, காவல்துறை ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    குறிப்பாக வாகனங்களில் குறிப்பிட்ட இடத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளனவா, அவசர காலத்தில் வெளியேற வசதிகள் உள்ளதா, தீயணைப்பு கருவிகள் மற்றும் பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி இருக்கிறதா என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் வாகன ஓட்டுனர்களின் லைசென்ஸ், அவர்களின் வயது விபரம் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இதுதவிர தீ தடுப்பு பயிற்சி குறித்து வாகன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தலைமையிலான வீரர்கள் தீ தடுப்பு முறைகள் குறித்து ஒத்திகை நடத்தி விளக்கினர்.

    Next Story
    ×