search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை மதிப்பீட்டாளர்"

    • ஈஸ்வரனுக்கும், அவரது தம்பியான கணேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • குடும்பத்தகராறில் அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுத்தறிவு வாசக சாலை தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 45).

    இவர் கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி சந்தனமாரி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    இவரது தாயார் அருள் மணி ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் தனது இளைய மகன் கணேசன் (40) என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். விடுமுறை தினங்களில் ஈஸ்வரன் தனது தாயாரை பார்ப்பதற்காக தளவாய்புரத்தில் இருந்து வந்து செல்வார்.

    இதற்கிடையே ஈஸ்வரனுக்கும், அவரது தம்பியான கணேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பலமுறை அவரது தாய் மற்றும் உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் விரோதம் தீர்ந்தபாடில்லை.

    இந்நிலையில் நேற்று ராஜபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மயூரநாத சுவாமி கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஈஸ்வரன் தனது மனைவி சந்தனமாரி மற்றும் குழந்தைகளுடன் ராஜபாளையம் வந்திருந்தார்.

    தேரோட்டத்திற்கு சென்றுவிட்டு இரவில் ஈஸ்வரன் தனது தாய் வீட்டிற்கும், அவரது மனைவி சந்தனமாரி ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் உள்ள சகோதரி கருப்பாயியின் வீட்டிற்கும் சென்று இருந்தனர். அப்போது தாயை பார்க்க சென்ற ஈஸ்வரனுக்கும், அவரது தம்பிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், தனது அண்ணன் என்றும் பாராமல் ஈஸ்வரனை தொரட்டி என்று அழைக்கப்படும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் முதுகில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் கணேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஈஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஈஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கணவர் உடலை பார்த்து அவரது மனைவி சந்தனமாரி கதறி அழுதார்.

    பின்னர் இதுகுறித்து அவர் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கணேசனை தீவிரமாக தேடி வருகிறார். குடும்பத்தகராறில் அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கியில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கணக்கு வைத்துள்ளனர்.
    • வங்கியில் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டுறவு சங்கங்களின் கள அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம்.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பள்ளிவாசல் தெருவில் மூக்குப்பீறி கூட்டுறவு நகர குரும்பூர் கிளை உள்ளது. இதில் நாலுமாவடி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பிரபாகரன் வங்கி தலைவராக உள்ளார். சேதுக்கு வாய்த்தானை சேர்ந்த ஜெயசிங் கிறிஸ்டோபர் மேலாளராகவும், குரும்பூர் அருளானந்தபுரத்தை சேர்ந்த ராஜசேகர் நகை மதிப்பீட்டாளராகவும் உள்ளனர். இந்த வங்கியில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கணக்கு வைத்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த வங்கியில் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டுறவு சங்கங்களின் கள அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரிகள் வங்கி கணக்குகளை தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நகைகளை ஆய்வு செய்தபோது 869 பேர் நகைக்கடன் பெற்றுள்ளது தெரியவந்தது. இந்த நகைகளை சோதனை செய்த போது, 869 நகை பைகளில் 36 பைகளில் 388 பவுன் போலி நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் போலி நகைகளை கொண்டு ரூ.1 கோடியே 6 லட்சம் கடன் பெற்றது தெரியவந்தது. இது தணிக்கை செய்த அதிகாரிகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனைத் தொடர்ந்து இந்த மோசடி குறித்து கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் லதா, துணை பதிவாளர் சந்திரா, சார்பதிவாளர் பொன்செல்வி ஆகியோர் கடந்த 2 நாட்களாக தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது நகை மதிப்பீட்டாளர் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 36 பேரில் வங்கி கணக்குகளில் சுமார் 388 பவுன் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ. 1.06 கோடி மோசடியாக கடன் பெற்றிருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக வங்கி தலைவர் பிரபாகரன், மேலாளர் ஜெயசிங் கிறிஸ்டோபர், காசாளர், நகை மதிப்பீட்டாளர் ராஜசேகர் ஆகியோரிடம் தொடர்ந்து 2-வது நாளாக விசாரணை நடத்தினர். விசாரணையில், நகை மதிப்பீட்டாளர் போலி நகைகளை கொண்டு மோசடியாக பணம் பெற்றதை ஒத்துக் கொண்டார். மேலும் இந்த பணம் முழுவதையும் உடனடியாக வங்கியில் செலுத்தி விடுகிறேன் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக நகை மதிப்பீட்டாளர் ராஜசேகர் நேற்று ரூ.50 லட்சத்தை வங்கியில் ரொக்கமாக செலுத்தினார். ரூ.49 லட்சத்துக்கு காசோலை கொடுத்துள்ளார். பாக்கி 7 லட்சத்துக்கு வங்கி ஊழியர்களின் பி.எப். பணம் பிடித்தம் செய்யப்பட உள்ளது.

    ராஜசேகர் காசோலையாக கொடுத்த தொகை வங்கி கணக்கில் திங்கள் கிழமை செலுத்தியவுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கு உடந்தையாக இருந்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மோசடி சம்பவம் வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி தமிழ்நாடு விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராமையா கூறியதாவது:-

    விவசாயிகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கூட்டுறவு வங்கியை நம்பியே நகை அடமானமும் முதலீடும் செய்து வந்தோம். ஆனால் கூட்டுறவு சட்டங்களின் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை வங்கியில் மோசடி செய்து வருகின்றனர். கூட்டுறவு சங்க அதிகாரிகளில் பெரும்பாலான அதிகாரிகள் சரியான முறையில் தணிக்கை செய்யாததால் தான் இந்த மோசடியில் ஊழியர்கள் ஈடுபட முக்கிய காரணமாக இருக்கிறது.

    குரும்பூர் வங்கியில் ஒரு வருடத்திற்கும் மேலாகியும் விவசாயிகளின் நகைகளை திரும்ப வழங்கவில்லை.

    இந்த வங்கி தற்போது செயல்பாடுகளில் இருந்தாலும் யாரும் நகையை அடமானம் வைக்கவும், டெபாசிட் செய்யவும் முன் வராமல் கடந்த ஒரு வருடமாக வெறிச்சோடி கிடைக்கிறது. பொதுமக்கள் யாரும் நகையை அடமானம் வைக்க முன் வராததால் வங்கியில் அப்ரைசர் கூட பணியில் இல்லை. 2 பணியாளர்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர். இதனால் பரபரப்பாக செயல்பட்ட குரும்பூர் கூட்டுறவு வங்கி திறந்திருந்தும் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றது. தற்போது அடுத்த கூட்டுறவு வங்கியும் மோசடி புகாரில் சிக்கி உள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் எங்கே செல்வது என தெரியாமல் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு கிராம வங்கி நகை மதிப்பீட்டாளர் சங்க கூட்டம் சேலத்தில் நடந்தது.
    • கூட்டத்தில் போலி நகை களை அடகு வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு கிராம வங்கி நகை மதிப்பீட்டாளர் சங்க கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலை வர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். சட்ட ஆலோ சகர் மாலைக்கண்ணு முன்னிலை வகித்தார். இதில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் போலி நகை களை அடகு வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகை மதிப்பீட்டா ளர்களை நிரந்தர பணியா ளர்களாக மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை களை வலி யுறுத்தி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    • நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • இந்த தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23 -ம் கல்வியாண்டில் பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றிய விவரம், தங்கத்தினை உரசியும், உரசாமலும் தரம் அறியும் முறை, வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறைச் சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏதுவாக சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியினை முடித்தவர்கள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு மற்றும் ஆபரணக் கடை மற்றும் நகை வணிகம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.

    இந்த பயிற்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் பயிலும் வகையில் இந்த பயிற்சியானது சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

    பயிற்சியின் கால அளவு 100 மணி நேரம் (10 வாரம்) பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரத்து 543 ஆகும். பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள கிட் பாக்ஸ் (நகை மதிப்பீட்டு பெட்டி) இலவசமாக வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு முதல்வர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், சிவசக்தி திருமண மண்டபம். எஸ்.ஆர்.நாயுடு நகர், பி.ஆர்.சி. டிப்பே எதிர்புறம், சாத்தூர் என்ற முகவரியிலோ அல்லது 04562-260293, 88071 59088 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×