search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாதிரை நட்சத்திரம்"

    • 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும்.

    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் உயர்வானது. திருவாதிரை நட்சத்திரத்தை யொட்டி, நடராஜப் பெருமானுக்கு மிகச்சிறந்த விழா, 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு `திருவாதிரை திருவிழா' என்று பெயர். இத்திருவிழாவை ஒட்டி பல சிவாலயங்களில் உள்ள நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகாஅபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் காண பக்தர்கள் குவிவார்கள்.

    ஆருத்ரா தரிசனத்தை தரிசிப்பவர்களுக்கு எல்லா பாவங்களும் நீங்கி பெரும் புண்ணியம் சேரும். வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் சிவபெருமானின் திருநடனத்தைக் காண விரும்பி அவரை துதிக்க, அவர் தன்னுடைய திருநடனத்தை, இந்த ஆதிரை நாளில் நிகழ்த்திக் காட்டியதாக புராண வரலாறு. நடராஜ மூர்த்திக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதில் முக்கியமான அபிஷேகம் ஆருத்ரா அபிஷேகம் ஆகும். உத்தரகோசமங்கை எனும் தலத்தில் மகா அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இதுதவிர மற்ற திருநடனம் ஆடிய பஞ்ச சபைகளிலும் இந்த சிறப்பு உண்டு.

    திருஆலங்காடு, மதுரை, நெல்லை, குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள சிவாலயங்களிலும் அபிஷேகப் பெருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின்போது திருவாதிரைக் களி படைப்பார்கள். பெருமானுக்கு விசேஷமான திருவாதிரைக் களியும், பல்வேறு காய்கறிகளை போட்டு கூட்டினை செய்வார்கள். களி என்பது ஆனந்தம் என்ற பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மாவானது ஆனந்தமாக இருக்கும்.

    அந்த களியைத் தரும் பிரசாதம் திருவாதிரை நாளில் நிவேதனம் செய்யப்படும் திருவாதிரைக் களி ஆகும். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து, சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல மாங்கல்ய பலம் பெருகும். பாவங்கள் நீங்கும். அறிவும் ஆற்றலும் கூடும்.

    • திருவாதிரை மற்றும் ஆருத்ரா விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
    • நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும்.

    ராமநாதபுரம்:

    கடவுளுக்கு உகந்த மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மற்றும் ஆருத்ரா விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக நடராஜரை இந்த நாளில் வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மரகத நடராஜர் சன்னதி தனியாக அமைந்திருக்கிறது. அங்குள்ள பச்சை மரகதக்கல்லால் ஆன 6 அடி உயரம் கொண்ட மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும்.

    நடராஜப்பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. மற்ற கோவில்களில் நடராஜரின் கற்சிலைகள், பஞ்சலோக சிலைகளையே காணமுடியும். இங்கு பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை இருக்கிறது.

    மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்ற முதுமொழிக்கு ஏற்ப மரகத நடராஜர் சிலை ஆண்டின் அனைத்து நாட்களிலும் சந்தனம் பூசி பாதுகாக்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்திற்காக மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு மரகத நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று ஒரு நாள் மட்டும் அந்த சன்னதி விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அப்போது முதல் தினமும் சுவாமி-அம்பாள், நடராஜரும் மக்களுக்கு விஷேசமாய் அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் களைதல் வைபவம் இன்று நடை பெற்றது. இதற்காக மரகத நடராஜர் சன்னதி இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது நடராஜர் மீது பூசப்பட்ட சந்தனங்கள களையப்பட்டு ஜொலிக்கும் மரகதக்கல்லில் சுய உருவமாக நடராஜர் காட்சியளித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பெருக்குடன் நடராஜரை வழிபட்டனர்.

    பின்னர் பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இள நீர் உள்பட 32 வகையான பொருட்களால் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நடராஜரை வரிசையாக சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று நள்ளிரவில் மீண்டும் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்.

    நாளை அதிகாலையில் சூரிய உதயமாகும் நேரத்தில் நடராஜருக்கு மீண்டும் சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடைபெறும். நாளை மாலை வரை மட்டுமே மரகத நடராஜர் சன்னதியில் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு நடராஜர் சன்னதி மூடப்படுகிறது.

    இந்த கோவிலின் சிறப்பே இங்கு அருள்பாலிக்கும் மரகதக்கல் நடராஜர் மீது பூசிய சந்தனத்தை சூடான நீரில் கரைத்து அருந்தினால் எந்த நோயாக இருந்தாலும் குணமாகும் என்பது ஐதீகம். மருத்துவ குணம் நிறைந்த இந்த சந்தனத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    இந்த விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (26-ந்தேதி) உள்ளூர் விடுமுறை அறி வித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பல்வேறு ஊர்களில் இருந்து உத்தரகோச மங்கைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

    ஒரே ஆண்டில் நடைபெறும் இரண்டாவது ஆருத்ரா தரிசன விழா இதுவாகும். அதாவது இந்த ஆண்டின் (2023) ஜனவரி மாதம் 5-ந்தேதி ஒரு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×