என் மலர்
நீங்கள் தேடியது "Arudra darshan ceremony"
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- அரசமர மேடையில் 3 முறை வலம் வரும் பட்டி சுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
பேரூர்,
பேரூர் பட்டீசுவரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா இன்று காலை வெகு சிறப்பாக நடந்தது.
ஆருத்ரா தரிசன விழா இன்று அதிகாலை 3 மணிக்கு பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, காலசந்தி பூஜை நடத்தப்பட்டு, நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், சடையநாதர் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது.
4 மணிக்கு மேல் பால், பன்னீர், தயிர், சந்தனம், திருமஞ்சனப்பொடி, இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ர கலச தீர்த்தாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு புது அங்கவஸ்திரம் சாத்துபடி செய்யப்பட்டு, கோபூஜை முடிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. அப்போது, வேத மந்திரமும், திருவம்பாவை முதலான உபசாரங்களும் நடந்தது.
இதையடுத்து, சாமி உள்வீதி பிரகாரத்தில் வலம் வந்து ராஜகோபுரம் வழியாக, வெளிவந்து, அரசமர மேடையில் 3 முறை வலம் வரும் பட்டி சுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து, கோவிலின் முக்கிய ரத வீதிகளின் வழியே, மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ரோட்டின் இருபுறங்களிலும் நின்றிருந்த ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசித்தனர்.
மேலும், கோவிலின் மேற்கு ரத வீதியின் வழியே வரும்போது, மேற்கு கோபுர வாசல் முன்பாக மாணிக்கவாசகருக்கு நடராஜ பெருமான் அருள் காட்சி கொடுக்கும் பொருட்டு, மாலை எடுத்து சாத்தப்பட்டது.
உடனே சிவகாமி அம்பாள், நடராஜரை வலம் வந்து, மேற்கு கோபுர வாசல் வழியே கோவிலுக்குள் எழுந்தருளினர். அப்போது ராஜகோபுர வாசலின் உள்புறம் நடை சாத்தப்பட்டது. இதையடுத்து, நடராஜர் வெளிவீதி வழியே வலம் வந்து ராஜகோபுர முன் வாசலில் எழுந்தருளினார்.
அப்போது சுந்தரசாமி, பல்லக்கில் எழுந்தருளச் செய்து, ராஜ கோபுர வாசல் திறக்கப்பட்டு, சிவகாமி அம்பாள் மற்றும் நடராஜப் பெருமானுக்கும், 3 முறை திருஊடல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கோவில் ஓதுவா மூர்த்தி ஊடல் பாடல்களைப் பாடினார். தொடர்ந்து, நடராஜப் பெருமானிடம் இருந்து, ஒதுவா மூர்த்தியிடம் மாலை கொடுக்கப்பட்டு, சிவகாமி அம்பாளுக்கு சாத்துபடி செய்யப்பட்டது. உடனே சிவகாமி அம்பாள் ராஜகோபுரம் வழியே வந்து, நடராஜ பெருமானை வலம் வந்து, இருவரும் சமேதரராக கோவிலில் உள்ள கனகசபை மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்திருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.
- மாணிக்கவாசகர் திருவீதி உலாவும், திருவெம்பாவை உற்சவமும் நடக்கிறது.
பேரூர்
மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீசுவரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.
ஆருத்ரா தரிசன விழா நாளை மறுநாள் (6-ந் தேதி) நடக்கிறது. இந்த விழாவானது, கடந்த 28-ந் தேதி காலை கனகசபை மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு காப்பு அணிவித்தலுடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து காலை, மாலை மாணிக்கவாசகர் திருவீதி உலாவும், திருவெம்பாவை உற்சவமும் நடக்கிறது.
நாளை மறுநாள் (6-ந் தேதி) ஆருத்ரா தரிசன விழா, அதிகாலை 3.00 மணிக்கு பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்குகிறது.
பின்னர், காலசந்தி பூஜை நடத்தப்பட்டு, நடராஜர், சிவகாமியம்மன், மாணிக்கவாசகர், சடையநாதர் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், 4 மணிக்கு மேல் பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகை விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ர கலச தீர்த்தாபிஷேகம் நடக்கிறது. இறுதியாக, 6 மணிக்கு மேல் நடராஜரும், சிவகாமி அம்பாளும் சமேதரராக எழுந்தருளி, கனகசபை மண்டபத்தில் பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளிக்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.