search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்ப்பை புல்"

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை பிரம்மோற்சவ விழா தொடக்கம்
    • நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடிமரத்தில் கட்டுவற்காக புனித தர்ப்பை புல், பாய், கயிறு ஆகியவை திருமலைக்கு கொண்டு வரப்பட்டன. அவை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) வருடாந்திர (சாலகட்லா) பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின்போது, தங்கக் கொடிமரத்துக்கு பயன்படுத்தப்படும் புனித தர்ப்பை புல், பாய் மற்றும் கயிறு ஆகியவை திருமலைக்கு வந்தன. திருப்பதி தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து துணை வனத்துறை அதிகாரி சீனிவாசுலு, அந்தத் துறை பணியாளர்கள் புனித தர்ப்ப புல், பாய், கயிறு ஆகியவற்றை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வந்து, கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர்.

    கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் சேஷ வாகனத்தின் மீது புனித தர்ப்பை புல், தர்ப்பை பாய், கயிறு ஆகியவை வைக்கப்பட்டன. நாளை நடக்கும் கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்தப் புனித பொருட்கள் பயன்படுத்தப்படும்.

    பிரம்மோற்சவ விழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கருட கொடியேற்றம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 'துவஜாரோஹணம்' என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி கோவிலின் தங்கக் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டு, பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

    ருத்விக்குகள் கொடிமரத்தை சுற்றி வேத மந்திரங்களுடன் தர்ப்ப பாயை போர்த்துவர். கொடிமரம் வரை தர்ப்பை கயிறு கட்டப்படும். தர்ப்பை கயிறு, பாய் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தான வனத்துறையினர் 10 நாட்கள் இரவும் பகலுமாக மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் புனித பொருட்களை தயாரித்துள்ளனர். தர்ப்பையில் சிவ தர்ப்பை, விஷ்ணு தர்ப்பை என 2 வகைகள் உள்ளன. அதில் ஏழுமலையான் கோவிலில் 'விஷ்ணு தர்ப்பை' பயன்படுத்தப்படுகிறது.

    இந்த விஷ்ணு தர்ப்பை புல் திருப்பதி மாவட்டம் ஏர்ப்பேடு மண்டலம் செல்லூர் கிராமத்தில் வளர்க்கப்படுகிறது. அதை, தேவஸ்தான வனத்துறையினர் அறுவடை செய்து, திருமலைக்கு கொண்டு வந்து ஒரு வாரம் மிதமான வெயிலில் உலர்த்தி காய வைத்து, நன்றாகச் சுத்தம் செய்து பாய், கயிறு தயார் செய்தார்கள். வனத்துறை ஊழியர்கள் 22 அடி நீளம், 7½ அடி அகலத்தில் தயாரித்த தர்ப்பை பாய் மற்றும் 200 அடிக்கு மேல் நீளமுள்ள கயிறு திருமலைக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தர்ப்பை புல், கயிறு, பாய் ஊர்வலத்தில் கோவில் துணை அதிகாரி லோகநாதம், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.

    ×