search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீரமுது உற்சவம்"

    • ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில் ‘தண்ணீரமுது’ உற்சவம் நடந்தது.
    • நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாராயணம் செய்தனர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில் 'தண்ணீரமுது' உற்சவம் நடந்தது. ஆகாசகங்கை தீர்த்தத்தால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25 நாள் `ஆத்யாயன உற்சவம்' கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி தொடங்கியது.

    அதையொட்டி தினமும் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்துக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கொண்டு வந்து ஜீயர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை பாராயணம் செய்தனர்.

    உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம், 'தண்ணீரமுது' உற்சவம் நடந்தது. இந்தத் தண்ணீரமுது உற்சவம் நடப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ராமானுஜரின் தாய் மாமனான பெரிய திருமலைநம்பி ஆவார்.

    இவர், திருப்பதி ஏழுமலையானுக்கு செய்த சேவையின் நினைவாக ஆண்டுதோறும் ஆத்யாயன உற்சவம் நிறைவுநாளில், `தண்ணீரமுது' உற்சவம் நடத்தப்படுகிறது.

    முன்னதாக நேற்று முன்தினம் மாலை கோவிலில் நடந்த சஹஸ்ர தீபலங்காரச் சேவைக்குப் பின், உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து வாகன மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

    பெரிய திருமலைநம்பி வம்சத்தினர் கோவில் பிரகாரத்தில் ஒரு குடத்தில் பிடித்த 'ஆகாச கங்கை' தீர்த்தத்தை தலையின் மேல் வைத்து மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க வாகன மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர்.

    அங்கிருந்து பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள், ஆச்சாரியார்கள், பிரபந்த பண்டிதர்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட தீர்த்த குடத்தை கோவிலுக்குக் கொண்டு சென்றனர்.

    வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க கோவில் அர்ச்சகர்கள் மூலவர் ஏழுமலையானுக்கு குடத்தில் கொண்டு வரப்பட்ட ஆகாச கங்கை புனிதத்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர். உற்சவத்தில் பங்கேற்றவர்கள் பெரிய திருமலைநம்பி எழுதிய 'திருமொழி பாசுரங்களை' பாராயணம் செய்தனர். உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆத்யாயன உற்சவம் முடிந்ததும் மறுநாளான நேற்று உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் தெற்கு மாட வீதியில் உள்ள பெரிய திருமலைநம்பி சன்னதிக்கு எழுந்தருளினர்.

    ×