search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொனால்டு டிரம்ப்"

    • 2020 தேர்தல் முடிவை மாற்றியமைக்க சதி செய்ததாக குற்றச்சாட்டு
    • 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையில விடுவிக்கப்பட்டுள்ளார்

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். தேர்தல் முடிவை மாற்றியமைக்க சதி செய்ததாக இவர் மீது ஜார்ஜியாக உள்ளிட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டது.

    இதில் ஜார்ஜியா நீதிமன்றத்திலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் டிரம்ப், வழக்கு தொடர்பான விசயங்களால் இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் சரணடைந்து ஜாமீன் பெற்று வருகிறார்.

    அந்த வகையில் அமெரிக்க நேரப்படி 24-ந்தேதி இரவு, 7 மணியளவில் ஜார்ஜியா வழக்கு தொடர்பாக அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த நிலையில், சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர்.

    சுமார் 20 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. அதன்பின் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின், விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.

    இந்த வழக்கில் 25-ந்தேதிக்குள் டிரம்ப் சரணடைய வாய்ப்புள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். அதேவேளையில், நான் சரணடையப் போகிறேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த தீர்ப்பை அடுத்து எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய தருணம் இது- ஒபாமா
    • இதன்மூலம் இனி அமெரிக்கர்கள் பிற நாட்டினருடன் போட்டியிட முடியும்- டிரம்ப்

    அமெரிக்காவில் ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பு, இரண்டு முன்னாள் அமெரிக்க அதிபர்களை எதிரெதிர் நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது.

    கருப்பின மற்றும் லத்தீன் இனத்தின மாணவ- மாணவிகளின் கல்லூரி சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக உறுதியான நடவடிக்கை கொள்கைகள் (affirmative action efforts) என்ற பெயரில் மாணவர் சேர்க்கையின்போது அவர்கள் இனத்தை அறிந்து கொள்ள வழி செய்யும் வகையில் விண்ணப்பபடிவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

    இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டு உச்சநீதிமன்றம் இனி மாணவ- மாணவியருக்கான விண்ணப்ப படிவத்தில் அனுமதி முறைகளுக்காக அவர்களின் இனம் என்ன என்பதை தெரிந்து கொள்ள கேள்விகள் கேட்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

    இந்த தீர்ப்புக்கு முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமாவும், டொனால்ட் டிரம்பும் எதிரெதிர் நிலைகளை எடுத்துள்ளனர்.

    இந்த தீர்ப்புக்கு மாறான கருத்துடன் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியிருப்பதாவது:-

    கடைபிடிக்கப்பட்டு வந்த வழிமுறை நாங்களும் இந்த மண்ணை சார்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க எனது மனைவி மிச்செல் உட்பட பல தலைமுறை மாணவர்களை அனுமதித்தது. அனைத்து மாணவர்களுக்கும் இனம் பாராமல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற இதுபோன்ற கொள்கைகள் அவசியம்.

    அமெரிக்காவின் பெரும்பாலான முக்கிய நிறுவனங்களில் இருந்து திட்டமிட்டு விலக்கப்பட்டவர்களுக்கு, நாங்களும் தகுதியுடையவர்கள் என்பதை காட்டுவதற்கான வாய்ப்பை அளித்து வந்தது. இந்த தீர்ப்பை அடுத்து எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய தருணம் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால், இந்த தீர்ப்பை வரவேற்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது "ட்ரூத்" (Truth) சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

    இதன் மூலம் இனி அமெரிக்கர்கள் பிற நாட்டினருடன் போட்டியிட முடியும். எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல தீர்ப்பு இது. நம்முடைய மிகப்பெரிய மனங்கள் போற்றப்பட வேண்டும். அதைத்தான் இந்த அற்புதமான நாள் கொண்டு வந்திருக்கிறது. அனைத்தும் இனி தகுதியின் அடிப்படைலேயே நிர்ணயம் செய்யப்படும் என்கின்ற நிலைக்கு நாம் திரும்புகிறோம். இது இப்படித்தான் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

    இந்த தீர்ப்பு குறித்து கடுமையான எதிர்ப்பினை பதிவிட்டிருக்கும் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "பல தசாப்தகால முன்னுதாரணங்களிலிருந்து விலகிச் செல்கிறது" என்று கூறியிருக்கிறார்.

    • வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் டொனால்டு டிரம்ப் ஆஜரானார்.
    • இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலகட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் டொனால்டு டிரம்ப் ஆஜரானார். இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
    • டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

    புளோரிடா:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.

    2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த கால கட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

    கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், "அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் அஜராகும்படி டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் டிரம்ப் ஆஜராவார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் கோர்ட்டில் ஆஜராவதற்கு நேற்று இரவு புளோரிடாவுக்கு டிரம்ப் வந்தார். தனி விமானத்தில் அங்கு வந்த அவர் இன்று மியாமி கோர்ட்டில் ஆஜராக உள்ளார்.

    அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வாக்குமூலம் கொடுக்க உள்ளார். வழக்கு விசாரணையின் போது டிரம்ப் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே ஆபாச நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிரம்ப், கோர்ட்டில் ஆஜராவதால் அவரது ஆதரவாளர்கள் மியாமியில் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் டிரம்ப் கூறும்போது, "என் மீதான குற்றப்பத்திரிகை, அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்தாது" என்றார்.

    • அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
    • வருகிற 13-ந் தேதி மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

    கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால் தனது பதவி காலத்தில் கையாண்ட ஆவணங்களை ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்காமல் அவற்றை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதற்கிடையே ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் டிரம்ப் மீது 7 கிரிமினல் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் மியாமி கோர்ட்டில் நேற்று பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் டிரம்ப் வீட்டில் இருந்து அதி முக்கியம் வாய்ந்த ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் அணு சக்தி திட்டங்கள், அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு, ஆயுத திறன்கள், ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியக் கூறுகள் வெளி நாட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக ரகசிய ஆவணங்கள் இருந்ததாக பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் அரசு ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் பாதுகாப்பற்ற முறையில் வைத்து கையாண்டதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இவ்வழக்கு தொடர்பாக வருகிற 13-ந் தேதி மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பிரிவில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

    • டிரம்ப் மீது வரிசையாக பல விசாரணை நடத்த, இந்த குற்றச்சாட்டுகள் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
    • புளோரிடாவில் உள்ள டிரம்பின் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில்  அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதிபர் பதவியில் தோல்வியடைந்த டிரம்ப், வெள்ளை மாளிகையை காலி செய்து சென்றபோது, முக்கிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டிரம்பின் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கில் டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசாங்க ரகசிய ஆவணங்களை கையாளுவதில் தவறிழைத்ததாக தன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக தளம் மூலமாக தெரிவித்திருக்கிறார்.

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஏற்கனெவே ஒரு முறை அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்காக போட்டியிடவிருக்கிறார். இதற்காக மும்முரமாக தம்மை டிரம்ப் தயார் செய்து வரும் வேளையில், அவர் மீது வரிசையாக பல விசாரணை நடத்த, இந்த குற்றச்சாட்டுகள் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

    குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட செய்தி அதிகாரபூர்வமாக அமெரிக்க நீதித்துறையால் உறுதி செய்யப்படவில்லையென்றாலும், டிரம்பின் வழக்கறிஞர்களிடம், அவர் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க நீதித்துறையின் குற்றவியல் விசாரணைக்கான நீண்ட நெடிய வரலாற்றில், ஒரு முன்னாள் அதிபராக பதவி வகித்தவரும், இரண்டாம் முறை குடியரசு கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராகவும் கருதப்படுபவருமான ஒருவர் மீது நீண்ட கால சிறை தண்டனைக்கு வழிவகுக்கக்கூடிய குற்ற விசாரணை நடைபெறப்போவது இதுதான் முதன்முறை.

    தன் மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், செவ்வாய்க்கிழமை தாம் நீதிமன்றம் செல்ல வேண்டியிருப்பதாக கூறினார். பிறகு 20 நிமிடங்களிலேயே, 2024 அதிபர் தேர்தலுக்கான தமது பிரச்சாரத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், "நான் ஒரு அப்பாவி" என்றும், அரசியல் காரணங்களுக்காக வேட்டையாடப்படுவதாகவும் கூறினார்.

    இப்பொழுது பதிவாகியுள்ள வழக்குடன் டிரம்ப் மீது ஏற்கனெவே நியூயார்க், வாஷிங்டன், மற்றும் அட்லாண்டா ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ள குற்றச்சாட்டுகளும் சேர்ந்துகொள்வதால், அவர் ஒரு மிகப்பெரிய நீதி விசாரணையை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    டிரம்ப், பாம் பீச் எனப்படும் இடத்தில் உள்ள தனது மிகப்பெரிய "மார்-அ-லாகோ" வீட்டில், அரசாங்க ரகசியங்களாக கருதப்பட வேண்டிய ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாகவும், அவற்றை மீட்பதற்கான முயற்சிகளையும் தடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு இதுதொடர்பாக சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித் விசாரித்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் டிரம்ப் தனது வீட்டில் 300க்கும் மேற்பட்ட ஆவணங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், அவற்றில் 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. கைப்பற்றியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

    • அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
    • டிரம்ப் போட்டியிட திட்டமிட்டு உள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தான் பதவி விலகும் போது தன்னுடன் பல ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் எடுத்துச்சென்ற சுமார் 200 ஆவணங்களை திருப்பி ஒப்படைக்குமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் டிரம்ப் அதனை திருப்பி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அவர் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த குற்றச்சாட்டுகள் விவரம் குறித்து இது வரை தெளிவாக தெரியவில்லை. இருந்த போதிலும் ஒரு முன்னாள் அதிபர் மீது இப்படி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் இது தொடர்பாக மியாமி கோர்ட்டில் வருகிற செவ்வாய்க்கிழமை ஆஜராகும் படி சம்மன் வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறும் போது நான் குற்றமற்றவன்.ஒரு முன்னாள் அதிபர் அதுவும் வரலாறு காணாத அளவுக்கு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என எண்ணவில்லை்.

    அமெரிக்க வரலாற்றில் இது ஒரு கறுப்பு தினமாகும். நாம் அனைவரும் ஒன்று இணைந்து அமெரிக்காவை ஒரு ஓழுங்கான நாடாக மாற்ற உழைப்போம் என குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் டிரம்ப் போட்டியிட திட்டமிட்டு உள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வக்கீல் மைக்கேல் கோஹன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    • மைக்கேல் கோஹன் தன்னை பற்றி பொய்களை பரப்புவதாகவும், நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்ட போது ஆபாச நடிகை ஸ்டார்மி, தனக்கும் டிரம்ப்புக்கும் தொடர்பு இருந்தது என்று கூறினார். இதை டிரம்ப் மறுத்தாலும் அவருக்கு தேர்தல் பிரசாரத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

    இதனால் ஸ்டார்மியை பேச விடாமல் தடுக்க அவருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தொகையை டிரம்ப் தனது வக்கீல் மைக்கேல் கோஹன் மூலம் நடிகைக்கு கொடுத்ததாகவும், பின்னர் அந்த தொகையை தேர்தல் பிரசார நிதியில் இருந்து எடுத்து வக்கீலுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வக்கீல் மைக்கேல் கோஹன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் டிரம்ப் சமீபத்தில் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது தன் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

    இந்த நிலையில் தனது முன்னாள் வக்கீல் மைக்கேல் கோஹன் மீது டிரம்ப் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். புளோரிடாவில் உள்ள அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அதில் மைக்கேல் கோஹன் தன்னை பற்றி பொய்களை பரப்புவதாகவும், நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கோஹனின் இது போன்ற தொடர்ச்சியான மற்றும் முறையற்ற நடத்தை உச்சத்தை எட்டியுள்ளது.

    இதனால் சட்டப்பூர்வ தீர்வை தேடுவதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி 500 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.4 ஆயிரம் கோடி) நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோர்ட்டில் சரணடைந்த டிரம்ப் அமெரிக்க சட்டவிதிகளின் படி முதலில் கைது செய்யப்பட்டார்.
    • டிரம்ப் உயர் பதவியை வகித்ததை கருத்தில் கொண்டு கை விலங்கு பூட்டப்படவில்லை.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

    தனக்கும் டிரம்புக்கும் இடையே இருந்த ரகசிய உறவு பற்றி அவர் தெரிவித்தார். இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் நடிகை ஸ்டார்மியின் இந்த தகவலால் தேர்தலில் டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டது.

    இதையடுத்து இவ்விவகாரத்தை பற்றி ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு தனது வக்கீல் மைக்கேல் கோஹன் மூலம் ரூ.1.07 கோடி டிரம்ப் கொடுத்தார். அந்த பணம் தேர்தலில் பிரசார நிதியில் இருந்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து நியூயார்க் மன்ஹாட்டன் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணை தொடங்கியது. கோர்ட்டில் ஆஜராக புளோரிடாவில் இருந்து விமானம் மூலம் நியூயார்க்குக்கு டிரம்ப் வந்தார்.

    பின்னர் கோர்ட்டில் சரணடைந்த டிரம்ப் அமெரிக்க சட்டவிதிகளின் படி முதலில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் உயர் பதவியை வகித்ததை கருத்தில் கொண்டு கை விலங்கு பூட்டப்படவில்லை. அவரது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

    பின்னர் விசாரணை தொடங்கியது. டிரம்ப் தனது வக்கீல்களுடன் நீதிபதி முன்பு அமர்ந்திருந்தார். நீதிபதியின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயே டிரம்ப் பதில் அளித்தார். அவர் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்த போது அதை திட்டவட்டமாக மறுத்தார்.

    தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று பதில் அளித்தார். சுமார் 57 நிமிடங்கள் கோர்ட்டில் இருந்த டிரம்ப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியேறிய அவர் புளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு சென்றார். அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது, 'இந்த வழக்கு நாட்டுக்கு பெரும் அவமானம். அமெரிக்காவில் இதுபோன்று நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

    நான் நிரபராதி. நம் நாடு நரகத்துக்கு போகிறது. நான் செய்த ஒரே குற்றம் நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக அச்சமின்றி பாதுகாத்ததுதான்.

    அமெரிக்க நீதி அமைப்பு தற்போது சட்டமற்றதாக இருக்கிறது. வருகிற 2024-ம் ஆண்டு அதிபராக தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்கவே இந்த போலி வழக்கு போடப்பட்டது. அதை உடனடியாக கைவிட வேண்டும்' என்றார்.

    அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆஜரானதையொட்டி நியூயார்க்கில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

    டிரம்ப்பிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் பேசாமல் இருக்க 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • பிரசார நிதியில் இருந்து சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தபோது, டிரம்ப் குறித்து பிரபல ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தகவல் ஒன்றை தெரிவித்தார்.

    தன்னுடன் டிரம்ப் நெருங்கிய உறவில் இருந்தார் என்று தெரிவித்தார். ஆனால், இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.

    தேர்தலின்போது இந்த தகவல் வெளியானதால் அதுபற்றி ஸ்டோர்மி டேனியல்ஸ் பேசாமல் இருக்க 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பணம், பிரசார நிதியில் இருந்து சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் தான் வருகிற 21ம் தேதி கைது செய்யப்பட உள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.

    மன்ஹாட்டன் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் இருந்து கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கொள் காட்டி, தனது ட்ருத் சமூக வலைதளத்தில் கூறும்போது, "முன்னணி குடியரசு கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்படுவார். போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் டிரம்ப் இன்று கைது செய்யப்பட அதிகளவில் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் கணக்கு 2 ஆண்டாக முடக்கப்பட்டிருந்தது.
    • முடக்கப்பட்ட டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டு வந்தார். 2021-ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றார்.

    தனது தோல்வியை ஏற்க மறுத்த டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். இதை அவர் தனது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பினார். அவரது பேச்சையடுத்து ஜனவரி 6-ம் தேதி டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன.

    இந்நிலையில், 2 ஆண்டாக முடக்கப்பட்ட டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

    சமூக வலைதள பக்கங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் டொனால்டு டிரம்ப் தனது பேஸ்புக், யூடியூப் பக்கங்களில் 'நான் திரும்ப வந்துவிட்டேன்' என பதிவிட்டு வீடியோ ஒன்றை இணைத்துள்ளார்.

    வரும் 2024-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒரு சிறந்த நட்புறவைக் கொண்டுள்ளதாக டிரம்ப் பேச்சு
    • வெளிநாட்டுப் போர்களின் ஆதரவாளர்களால் அமெரிக்க வாக்காளர்கள் சோர்வடைந்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அயோவா மாநிலம் டேவன்போர்ட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டு பேசியதாவது:-

    உலகத்திற்கு இப்போது இருப்பதைவிட ஆபத்தான காலம் இருந்ததில்லை. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷியாவை சீனாவின் கரங்களுக்குள் தள்ளியிருக்கிறார். இன்று உங்கள் முன் நிற்கும் நான் மட்டுமே, மூன்றாம் உலகப் போரைத் தடுப்பதற்கு உறுதியளிக்கும் ஒரே வேட்பாளர். ஏனென்றால் நீங்கள் மூன்றாம் உலகப் போரை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

    நான் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒரு சிறந்த நட்புறவைக் கொண்டுள்ளேன். ரஷிய அதிபர் எனது கோரிக்கையை கேட்பார். மேலும் தீர்வு காண்பதற்கு எனக்கு ஒரு நாளைக்கு மேல் ஆகாது.

    இரு கட்சிகளிலும் வேரூன்றிய அரசியல் வம்சங்கள், விரும்பத்தகாத சிறப்பு நலன்கள், சீனாவை விரும்பும் அரசியல்வாதிகள் மற்றும் முடிவற்ற வெளிநாட்டுப் போர்களின் ஆதரவாளர்களால் அமெரிக்க வாக்காளர்கள் வெறுப்படைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×