search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிபி சைலேந்திர பாபு"

    • அரசு பள்ளி சிறுமி ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் ஆபத்தை பற்றி பாட்டாக பாடி எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறார்.
    • பாடலை கேட்ட போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த குழந்தையைபோல் யாரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்று வெகுவாக பாராட்டி உள்ளார்.

    சென்னை:

    அரசு பள்ளி சிறுமி ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் ஆபத்தை பற்றி பாட்டாக பாடி எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறார். அவர் பாடிய பாடல் வருமாறு:-

    பைக்கில ஏறி நீ பண்ணுற ஜாலி

    நீ தவறி விழுந்துட்டா ஆளே காலி

    பத்திரமா போவனும்டா நீயும் வீட்டுக்கு

    பாதை மாறி நீயும் போயிடாத சுடுகாட்டுக்கு

    ரோட்டுலத்தான் சின்ன பசங்க குறுக்க போகும்டா

    பைக்க ஓட்டுற நீ தான் நாலு பக்கமும் பாத்து போகனும்டா

    எட்டு வயசு பையன்கூட பைக்கை ஓட்டுறான்

    அவனை பெத்தவனும் ஓட்டுறத பார்த்து ரசிக்கிறான்

    பைக்கை ஓட்டத்தான் பையன் அடம்புடிக்கிறான்

    பாதி வயசுலையே சுடுகாட்டுல இடம்புடிக்கிறான்

    ஓரம் ஒதுங்கி வழிய விடனும் 108க்கு

    தலையில ஹெல்மெட்டை நீ போடனும் உன் பாதுகாப்புக்கு

    போக்குவரத்து விதிகளைதான் மதிச்சு போகனும்

    ரோட்டுல ட்ராவல் செய்யும் போலீசுக்கும் உதவி செய்யணும்

    போன உசுருதான் மீண்டும் திரும்ப வராது

    ஒருத்தன அநியாயமா கொன்ன பாவம் உன்ன விடாது

    பச்சை, மஞ்ச, சிவப்பு விளக்கு மேல எரியுது

    நீ நின்னு போக வெள்ளகோடு கீழே தெரியுது

    சாலை விதிய மீறி நாம போகக்கூடாது

    தண்ணிய அடிச்சுட்டுத் தான் வண்டிய நீ ஓட்டக்கூடாது

    செஞ்சத் தப்புத்தான் நான் குத்திக்காட்டல

    ரோட்டுல பாத்தததான் பாடுறன்ப்பா இந்த பாட்டுல

    சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த பாடல் எல்லோரையும் கவர்ந்துள்ளது.

    இந்த பாடலை கேட்ட போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த குழந்தையைபோல் யாரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்று வெகுவாக பாராட்டி உள்ளார்.

    • தீபாவளி பண்டிகை 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • மோட்டார் சைக்கிளில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது.

    சென்னை :

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும்.

    * சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

    * சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது.

    * எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. மோட்டார் சைக்கிள், கார்கள் போன்ற வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட எரிபொருள் கிடங்குகள் அருகே பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    * பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்க கூடாது.

    * குடிசைகள், ஓலைக்கூரைகள் உள்ள இடங்களில் வாணவெடிகளையோ, எந்தவித பட்டாசு வகைகளையோ கொளுத்தக்கூடாது.

    * பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தீ தடுப்பு உபகரணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

    * ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், கோர்ட்டுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் (ஒலி எழுப்ப தடை செய்யப்பட்ட இடங்கள்) பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.

    * பட்டாசு விற்கும் கடைகள் அருகே புகைப்பிடிப்பதோ, புகைத்த சிகரெட் துண்டுகளை வீசி எறிவதோ கூடாது.

    * பட்டாசுகளை வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.

    * கால்நடைகள் அருகே பட்டாசு வெடித்தால் அவைகள் மிரண்டு சாலையில் செல்வோரை தாக்கி விபத்துகளை ஏற்படுத்தலாம். எனவே கால்நடைகள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்க கூடாது.

    * விதிமுறைகளை மீறி அல்லது உரிமம் இன்றி பட்டாசு விற்றால், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தால், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள் மற்றும் கடைவீதிகளில் தகுந்த குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளை விழிப்போடு பாதுகாக்க வேண்டும்.

    * பட்டாசு பொருட்கள் பஸ், மோட்டார் சைக்கிள், ரெயில் போன்றவற்றில் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

    * நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும். அதிவேகமாக செல்வதை தவிர்த்து விபத்தின்றி பயணம் செய்ய வேண்டும்.

    * மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    * பட்டாசு மூலம் அல்லது வேறு ஏதேனும் விபத்து நேர்ந்தால் போலீஸ்துறை, தீயணைப்பு மட்டும் மீட்பு பணிகள் துறை அவசர உதவி எண்-100, 112 மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து குற்றங்கள் இல்லாத, விபத்தில்லாத தீபாவளியை உறுதி செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் இந்த தீபாவளியை கொண்டாட அனைத்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
    • தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடைகளிலும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளிகள் வாங்க கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது.

    பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கடைகளில் விற்பனை சூடுபிடித்து உள்ளது.

    சென்னையில் முக்கிய வர்த்தக மையமாக திகழும் தி.நகரில் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதேபோல், புரசைவாக்கம், பாடி, குரோம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் தீபாவளி விற்பனை களைகட்டி உள்ளது.

    கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடைகளிலும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

    இந்த நிலையில் தீபாவளி விற்பனைக்காக இந்த வாரம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் திறந்து இருக்கும் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் எந்தவித தொந்தரவும், செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு போலீசுக்கு பிறப்பித்து உள்ள உத்தரவில், தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக இரவு நேரங்களில் திறந்து இருக்கும் கடைகளின் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம்' என்று கூறப்பட்டு உள்ளது.

    • சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு யாரும் போகவேண்டாம்.
    • வெளிநாட்டு வேலைக்குப் போக விருப்பம் உள்ளவர்கள் 044-28447701 என்ற தொலைபேசி எண்ணில் பேசலாம்.

    சென்னை :

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிய படிப்புக்கு ஏற்ற நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வந்தன. அதை நம்பி தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏஜெண்டுகள் வாயிலாக சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுள்ளனர். அவர்களை பின்னர் மியான்மர் நாட்டுக்கு அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். அந்த 18 பேரும் தமிழக அரசு உதவியுடன் மீண்டும் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.

    அதேபோல கம்போடியா நாட்டுக்கும் சிலர் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டனர். அவர்களும் தமிழக அரசு மூலம் மீட்கப்பட்டுள்ளனர். தமிழக இளைஞர்களை குறிவைத்து இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக வேலை பார்த்த ஷாநவாஸ், முபாரக்அலி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு யாரும் போகவேண்டாம்.

    வெளிநாட்டு வேலைக்குப் போக விருப்பம் உள்ளவர்கள், குறிப்பிட்ட நிறுவனத்தை அணுகினால் அதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்துகொள்ள 044-28447701 என்ற தொலைபேசி எண்ணில் பேசலாம். உரிய விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் 100 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளன.
    • 822 மகளிர் போலீஸ் நிலையங்களில் தற்கொலை தடுப்பு தொடர்பான பயிற்சிகளை இன்ஸ்பெக்டர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தமிழக போலீஸ் டி,ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று தஞ்சை வந்தார். தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே தெற்கு போலீஸ் நிலையம் அருகே கண்காணிப்பு கேமரா நவீன கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.

    பின்னர் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் 100 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளன.

    மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 822 மகளிர் போலீஸ் நிலையங்களில் தற்கொலை தடுப்பு தொடர்பான பயிற்சிகளை இன்ஸ்பெக்டர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிறார்கள்.

    மேலும் 1,480 போலீஸ் நிலையங்களில் ஒரு காவல் அதிகாரியை குழந்தைகள் நல அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்கொலையை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர்.
    • பணம் மட்டுமின்றி உங்கள் மானமும் போய்விடும்.

    சென்னை :

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி புதிய வகை 'ஆன்லைன்' மோசடி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அவர் நேற்று விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியிருப்பதாவது:-

    ஆன்லைனில் புதிய வகை மோசடி வந்துள்ளது. நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பெரிய அதிகாரி, கலெக்டர், டி.ஜி.பி. போன்றவர்கள் செல்போனில் பேசுவது போன்று பேசி, நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன். அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுகிறது. ஒரு கூப்பன் விலை ரூ.10 ஆயிரம். 10 கூப்பன் வாங்கி அனுப்புங்கள். நான் அப்புறம் பணம் கொடுத்து விடுகிறேன்.' என்று கூறுவார்கள்.

    நீங்கள் பரிசு கூப்பன் வாங்க தெரியாது என்று சொன்னால், அந்த லிங்கை அனுப்பி வைப்பார்கள். நீங்கள் ரூ.1 லட்சத்துக்கு 10 கூப்பன் வாங்கி அனுப்பினால், அடுத்து உங்களுக்கு இந்த கூப்பன் போதாது. இன்னும் 20 பரிசு கூப்பன் கூடுதலாக வேண்டும் என்று குறுந்தகவல் வரும். இப்படி 50 கூப்பன் என்று சொன்னால் ரூ.5 லட்சம் ஆகும். இதெல்லாம் முடிந்த பின்னர், எங்கள் அதிகாரி இப்படி கேட்க மாட்டார். நான் ஏமாந்துவிட்டேன் என்பது உங்களுக்கு தெரியும்.

    இதுபோன்ற மோசடி நடைபெற்றால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். காவலன் உதவி செயலியை உங்களுடைய செல்போனில் பதவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். இதில் ஆன்லைன் மோசடி என்பதை தொட்டாலே, 1930 என்ற எண்ணுக்கு அழைப்பு போய் விடும். இதன் மூலம் உங்களுடைய பணத்தை காப்பாற்றி கொள்ளலாம்.

    தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு 'பாஸ் ஸ்கேம்' என்று பெயர் ஆகும். உங்களுக்கு வரும் அழைப்பை பார்த்தால் உங்கள் அதிகாரி பெயர், புகைப்படம், எண் போன்றே இருக்கும். ஆனால் அது அவர்கள் கிடையாது. எனவே மோசடி பேர்வழி தான் நம்மை தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். எனவே இது போன்ற மோசடியில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் விழுந்து உங்கள் பணத்தை இழந்துவிடாதீர்கள். பணம் மட்டுமின்றி உங்கள் மானமும் போய்விடும்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு சீருடையில் இல்லாமல் கடற்கரையில் வலம் வந்துகொண்டிருந்தார்.
    • பொதுமக்கள் போலீஸ் டி.ஜி.பி.க்கு பாராட்டு தெரிவித்தனர்.

    சென்னை :

    சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் மாலை நேரங்களில் காற்று வாங்க பொதுமக்கள் அதிகம் பேர் வருவார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

    போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாலை 6 மணி அளவில் சீருடையில் இல்லாமல் மக்களுடன் மக்களாக கடற்கரையில் வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் முகேஷ் (வயது 10) என்ற சிறுவன் கடலில் மூழ்கிவிட்டான். உடனே அவனது உறவினர்களும், அங்கு நின்றவர்களும் கூச்சல் போட்டனர்.

    ஒரு சிலர் கடலுக்குள் குதித்து சிறுவன் முகேஷை மீட்டு வெளியே கொண்டுவந்தனர். ஆனால் அந்த சிறுவன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தான். கூட்டம் கூடி நிற்பதை பார்த்து வேகமாக அங்கு வந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சிறுவனின் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். சிறுவன் லேசாக கண்ணைத் திறந்தான்.

    அப்போது அங்கு நின்ற சிலர், சிறுவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க முயன்றனர். உடனே டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இந்த நேரத்தில் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கூறியதுடன், அந்த தண்ணீரை வாங்கி சிறுவனின் தலையில் ஊற்றினார்.

    உடனே ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். சற்று நேரத்தில், கடற்கரை மணலிலும் பயணிக்கும் சிறியரக வாகனம் அங்கு வந்தது. உடனே அந்த சிறுவனை தானே கையில் தூக்கி, வாகனத்தில் சைலேந்திரபாபு ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக கூறினார்.

    அப்போதுதான் பலருக்கு அவர் போலீஸ் டி.ஜி.பி. என்பதே தெரிந்தது. சிறுவனின் உறவினர்களும், பொதுமக்களும் போலீஸ் டி.ஜி.பி.க்கு பாராட்டு தெரிவித்தனர்.

    • போலீசாருக்கு மட்டும் நேற்று ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்தார்.
    • தகவல் கொடுக்கும் பொதுமக்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ரூ.20 கோடி நகைகளுடன் தப்பிய கொள்ளையர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

    அதேநேரம் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வங்கி ஊழியர் முருகனை பிடிக்க வசதியாக அவனது போட்டோ தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் போலீஸ் டி.ஜி.பி. அவசர தகவல் அனுப்பி இருக்கிறார். போலீஸ் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தும் படியும், வாகன சோதனை, சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடபட்டுள்ளது.

    குறிப்பாக வடமாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் சந்தேகப்படும்படியாக நடமாட்டம் இருந்தால் பிடித்து விசாரிக்க வேண்டும்.

    கொள்ளையர்களை பிடித்துக்கொடுக்கும் போலீசாருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

    சைபர் கிரைம் போலீசார் வங்கி ஊழியர் முருகன் அவரது நண்பர்கள், உறவினர்கள் செல்போன் எண்ணை ரகசியமாக கண்காணிக்கிறார்கள்.

    நேற்று போலீசாருக்கு மட்டும் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்தார்.

    தகவல் கொடுக்கும் பொதுமக்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • போதை பொருள் கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து செயல்படும் காவல்துறையில் உள்ள நபர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • கடந்த ஓராண்டில் 20 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். 3 காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக அனைத்து போலீஸ் அதிகாரிகளும் தீவிரமாக களம் இறங்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆந்திரா-ஒடிசா மாநிலங்களில்இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதற்காக எல்லைப் பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனைகளை நடத்தி வருகிறோம். இதனால் ஆந்திராவில் இருந்து கஞ்சா வியாபாரிகள் தமிழகத்துக்கு நுழைவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் கஞ்சா கிடைக்காமல் போதைக்கு அடிமையாகும் நபர்கள், மருந்து கடைகளில் கிடைக்கும் சில மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சுகாதாரத்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் பள்ளி கல்வித்துறையினரோடு இணைந்து காவல் துறையினர் செயல்பட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை முழுமையாக தடுத்து நிறுத்தும் வகையில் மாவட்ட அளவில் டி.எஸ்.பி. அந்தஸ்தில் தனி அதிகாரியை நியமனம் செய்ய முடிவெடுத்து அதற்கான அறிவிப்பு முதல்-அமைச்சரால் வெளியிடப்பட்டு உள்ளது.

    இது வரவேற்கதக்க விஷயமாகும். இந்த அதிகாரியின் கீழ் போதை பொருட் தடுப்பு பிரிவு மற்றும் மது விலக்கு அமலாக்கத்துறை காவலர்கள் இணைந்து செயல்படுவார்கள். இதன் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் போதை பொருள் தடுப்பு பணியில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த நல்ல திட்டம் மூலம் தமிழகத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக நிச்சயம் மாற்ற முடியும்

    புதிதாக நியமிக்கப்பட உள்ள இந்த அதிகாரி மாநில அளவில் செயல்படும் அமலாக்கத்துறை கூடுதல் டி.ஜி.பி.யின் கீழ் பணியாற்றுபவராக இருப்பார். அதே நேரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் இணைந்து செயல்படுவார்.

    இதன் மூலம் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து போதை பொருள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருப்பது போன்று போதை பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார்.

    போதை பொருள் கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து செயல்படும் காவல்துறையில் உள்ள நபர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கடந்த ஓராண்டில் 20 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். 3 காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது போன்ற நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும் என்றும் உயர் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    ×