search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிபி சைலேந்திர பாபு"

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும் அவர் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
    • குற்றம் செய்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல என்ற வரிகள் அறிந்து மனமாற்றம் அடைந்தேன்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மீது போக்சோ, வீடு புகுந்து திருட்டு, கார் திருட்டு, உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உள்ள செல்போன் டவரில் திடீரென அவர் ஏறினார்.

    பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்திக்க வேண்டும் இதற்காக செல்போன் டவரில் ஏறியதாகவும் கூறி அவர் கூச்சலிட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த நாமக்கல் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை ½ மணி நேர போராட்டத்திற்கு பின்பு கீழே இறக்கி கொண்டு வந்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அப்போது அவர் கையில் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கு உற்றார், உறவினர் யாரும் கிடையாது. டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும் அவர் மீது மிகுந்த பற்று கொண்டவன்.

    2-10-2017 அன்று அவர் சேலம் மத்திய சிறைக்கு வந்தார். அப்போது நான் ஒரு கார் திருட்டு வழக்கில் சிறையில் இருந்தேன்.

    அன்று அவர் எங்கள் முன் பேசிய வார்த்தைகளும் செயலும் என் உள்ளத்தில் அனைவரின் அன்பின் பிரதிபலிப்பை கண்டேன். குற்றம் செய்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல என்ற வரிகள் அறிந்து மனமாற்றம் அடைந்தேன்.

    நான் திருந்துவதற்கு காரணம் நீங்கள் தான். மாணவர்கள் முயற்சி பண்ணுங்க என நீங்க சொன்னீங்க. இப்பொழுது என்னுடைய முயற்சி உங்களை பார்ப்பது மட்டுமே.

    உங்கள் பேச்சைக் கேட்டு நான் தற்போது திருந்தி விட்டேன். நான் இதற்கு முன்பு பலமுறை தங்களை பார்க்க வேண்டும் என முயற்சி செய்தேன்.

    வருடப்பிறப்பு அன்று நீங்கள் கோவிலுக்கு சென்ற போது உங்களை தூரத்திலிருந்து பார்த்தேன்.ஆனாலும் தொடர்ந்து உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. இதனால் தான் தொடர்ந்து முயற்சியை கொண்டுள்ளேன்.

    இந்த கடிதத்தை யார் பார்த்தாலும் அவரிடம் தெரியப்படுத்துங்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தமிழக டி.ஜி.பி.-ஐ பார்க்க வேண்டும் என பிரபல கொள்ளையன் செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்ததால் நமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • கடுமையான பயிற்சி மற்றும் மன உறுதியால் மட்டுமே இதுபோன்ற சாகசங்களை செய்ய முடியும்.
    • தி.மு.க. அரசு எப்போதும் மகளிர் காவலர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்களின் 50-வது பொன்விழா ஆண்டினை தமிழ்நாடு காவல் துறை கொண்டாடி வருகிறது.

    அந்த வகையில் மகளிர் காவலர்கள் மட்டும் பங்கு பெறும் சென்னை பழவேற்காடு கோடியக்கரை சென்று திரும்பும் சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவினை பாய் மரப்படகு மூலம் கடக்கும் கடல் பயணம் இன்று முதல் வருகிற 18-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த கடல் பயணத்திற்கு 25 பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்தப்படும் இதன் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் இன்று தொடங்கியது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி கொடி அசைத்து பாய்மரப் படகு பயணத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் சேகர்பாபு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, அது தொடர்பான நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாகவே பாய்மர படகு பயண சாகச நிகழ்ச்சியை கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    உலகிலேயே முதல் முறையாக இதுபோன்ற சாகச நிகழ்ச்சியை பெண் காவலர்கள் மேற்கொள்வதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான பயிற்சி மற்றும் மன உறுதியால் மட்டுமே இதுபோன்ற சாகசங்களை செய்ய முடியும்.

    இந்த பயணத்தை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    தி.மு.க. அரசு எப்போதும் மகளிர் காவலர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. தமிழகத்தில் இன்று 9 ஆயிரத்து 542 பெண்கள் பணியில் உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சியில்தான் பெண்கள் காவல்துறை உயர் பொறுப்பில் பணி அமர்த்தப்பட்டனர்.

    பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டால்தான் குரூப்-1 தேர்வில் அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்று டி.எஸ்.பி. ஆகும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

    மகளிர் காவலர்கள் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 9 சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    மகளிர் நலன் கருதி 'ரோல்கால்' என்கிற வருகையை காலை 7 மணியில் இருந்து 8 ஆக மாற்றி அறிவித்தார். சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதி அமைக்கப்படும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டார். அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனியாக ஓய்வு அறை கட்டப்படும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். மகளிர் காவலர்களின் குழந்தைகளின் நலன் கருதி காப்பகம் அமைக்கப்படும், கலைஞர் காவல் பணி விருது, கோப்பை ஆண்டுதோறும் வழங்கப்படும், பெண் காவலர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்ப விடுப்பு, பணி மாறுதல் வழங்கப்படும், துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இவை அனைத்தும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது.
    • இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    சென்னை :

    இந்தி இயக்குனர் சுதீப்டோ சென் இயக்கத்தில் இன்று வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்ட 'டீசர்' சமீபத்தில் வெளியானது. இதில் கேரளாவை சேர்ந்த பெண்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தால் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அம்மாநிலத்தில் வலுத்தது.

    தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் வெளியானால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசை மாநில உளவுத்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து இந்த படத்துக்கு தடைகேட்டு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று தள்ளுபடி ஆனது. இதற்கிடையே இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது.

    இந்த படம் வெளியாகும் தியேட்டர்களின் முன்பு போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * இந்த திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் போதியளவில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

    * இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    * பதற்றமான பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வன்முறை ஏற்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * இந்த படத்துக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்

    * சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பரவுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் பெண் போலீசார் 34 ஆயிரத்து 329 பேர் உள்ளனர்.
    • ரவுடிகளே, பெண் போலீசாரை பார்த்து பயந்து ஓடி செல்கின்ற நிலை உள்ளது.

    மதுரை :

    மதுரை விமான நிலையம் அருகே வலையபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில், தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முகாமில், தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு, இளைஞர்களை உற்சாகப்படுத்தி பேசினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் போலீசார் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரே கவலை, அவர்களது குழந்தைகளுக்கு தகுந்த வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான். அதில் பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதி பெரிய ஆளாக வருகின்றனர். சிலர் வேலைக்காக தனியார் நிறுவனத்தை நம்பியுள்ளனர். இதற்காக தனியார் வேலை வாய்ப்பு முகாம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதில், சுமார் ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது. அதில் 800 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு வேலை வாய்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடக்கிறது.

    தமிழகத்தில் பெண் போலீசார் 34 ஆயிரத்து 329 பேர் உள்ளனர். அவர்கள், பெரிய, பெரிய ரவுடிகளை எல்லாம் பிடித்து வருகின்றனர். தற்போது ரவுடிகளே, பெண் போலீசாரை பார்த்து பயந்து ஓடி செல்கின்ற நிலை உள்ளது. தவறான எண்ணம் கொண்ட குற்றவாளிகள், பெண் போலீசாரை தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி பெண் போலீசாருக்கு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேலை செய்யும் இடத்தில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் பற்றி புகார்கள் வருகிறது. காவல்துறையினரும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெண் போலீஸ் நிலையங்கள் இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எங்கேயும் இல்லை. பெண் போலீஸ் நிலையங்களில், சென்ற ஆண்டு 75 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு, மகளிர் போலீஸ் நிலையங்கள் குறைகளை தீர்க்கக்கூடிய இடமாக இருப்பதால், பெண்கள் தற்போது தைரியமாக புகார் அளிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    • கடலூர் மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு டி.சவுந்தரராஜன் பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
    • சென்னை பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனர் எஸ்.ராமசாமி அம்பத்தூர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

    சென்னை :

    தமிழகத்தில் 10 உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    சென்னை பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனர் எஸ்.ராமசாமி அம்பத்தூர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராகவும், பூக்கடை போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் எஸ்.சம்பத் பாலன் அண்ணாநகர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராகவும், பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனர் கே.சரவணன் கடலூர் மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    கடலூர் மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு டி.சவுந்தரராஜன் பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.முருகராஜ் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், அப்பதவியில் இருந்த எம்.சீனிவாசன் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராகவும் பொறுப்பேற்க உள்ளனர்.

    சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் ஏ.கணேஷ்குமார் திருவள்ளூர் போலீஸ் பயிற்சி பள்ளியின் துணை முதல்வராகவும், ஆவடியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பட்டாலியன் பிரிவு உதவி கமாண்டன்ட் எம்.சீனிவாசன் பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், வீராபுரம் தமிழ்நாடு போலீஸ் பட்டாலியன் பிரிவு உதவி கமாண்டன்ட் எம்.புருஷோத்தமன் பூக்கடை போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராகவும், ஆவடியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பட்டாலியன் பிரிவு உதவி கமாண்டண்ட் ஜெ.பிரதாப் பிரேம் குமார் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்பதுதான் முதல்-அமைச்சரின் திட்டம்.
    • பல பகுதிகளில் போதைப்பொருட்களே இல்லை என்று கூறும் நிலை வந்துள்ளது.

    தென்காசி :

    தென்காசியில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்காசி, கன்னியாகுமரி, தேனி, கோவை ஆகிய கேரள மாநில எல்லைகள் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். கூடுதலாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு அவசியம் கருதி மேலும் கூடுதல் பாதுகாப்பு தேவை என்று கருதினால் உடனடியாக போலீசார் அனுப்பிவைக்கப்படுவார்கள்.

    போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்பதுதான் முதல்-அமைச்சரின் திட்டம். அந்த வகையில் கஞ்சா வேட்டை 1, 2, 3 என்று நடத்தப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுமார் 20 ஆயிரம் பேரை கைது செய்துள்ளோம். இவர்களில் 2 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளோம். சுமார் 750 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போலீசாரின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக போதைப்பொருட்களின் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் பல பகுதிகளில் போதைப்பொருட்களே இல்லை என்று கூறும் நிலை வந்துள்ளது. போதைப்பொருள் இல்லாத பகுதி என பல போலீஸ் நிலையங்கள் அறிவித்து உள்ளன. அடுத்தகட்டமாக போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டங்கள் என அறிவிக்க உள்ளனர். போதைக்கு அடிமையான பலர் போதைப்பொருட்கள் கிடைக்காததால் அதற்கு பதிலாக மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தலாம் என்று தகவல் வருகிறது. காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவ துறை ஆகியவை இணைந்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.

    • இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் காவலர்களின் பங்கு அளப்பரியது. அதில் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது.
    • காவலர்களுக்கு உடல் நலம், மிக மிக முக்கியம்.

    திருச்சி:

    தமிழ்நாடு மாநில காவல் துறை மண்டலங்களுக்கு இடையேயான 62-வது தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள் திருச்சியில் இன்று தொடங்கியது. இதனை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜாதி சண்டை கிடையாது. மத கலவரங்கள் இல்லை. கள்ளச்சாராயம், துப்பாக்கி சூடு கலவரங்கள் இல்லை. மொத்தத்தில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இத்தனை பெருமைக்கும் முக்கியமானவர்கள் தமிழகத்தில் பணியாற்றும் 1.34 லட்சம் காவலர்கள் தான்.

    பல்வேறு கட்டங்களில் உதவி ஆய்வாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 444 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மார்ச் 1-ந்தேதி பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் கூடிய விரைவில் அடுத்த பேட்ச் உதவி இன்ஸ்பெக்டர்கள் சுமார் 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் காவலர்களின் பங்கு அளப்பரியது. அதில் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது. 1956, 1960-ம் ஆண்டுகளில் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் ஆக்கி போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. அதில் இரண்டு வீரர்கள் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த காவலர்கள் என்பது சிறப்புமிக்கது.

    1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியம் என்ற காவலர் இந்திய அணியின் சார்பாக 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கு கொண்டார். சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாகநாதன் என்னும் காவலர் இந்திய அணி சார்பில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரிலே ரேசில் கலந்து கொண்டார் என்பது பெருமைக்குரியதாக தமிழ்நாடு காவல்துறை கருதுகிறது.

    2020-ம் ஆண்டு நடந்த மாநிலங்களுக்கு இடையேயான காவல்துறை போட்டியில் தமிழக காவல்துறை 5 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப்பதக்கம், 5 வெண்கலப் பதக்கம் என 14 பதக்கங்களை பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை பெற்றது. விளையாட்டு நம் அனைவருக்கும் அவசியமாக இருக்கிறது.

    காவலர்களுக்கு உடல் நலம், மிக மிக முக்கியம். விளையாட்டு வீரர்கள் மற்ற காவலர்களுக்கு இன்றைக்கு ஒரு ரோல் மாடல்களாக உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும், சுறுசுறுப்புக்கும், நேர்மைக்கும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள் என்பதை மனதில் கொண்டு நீங்கள் சிறப்பாக விளையாடவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 2022-ம் ஆண்டு சவால் நிறைந்ததாகவும், வெற்றிகரமாகவும் இருந்தது.
    • 13,491 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை :

    டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் 2022-ம் ஆண்டு சவால் நிறைந்ததாகவும், வெற்றிகரமாகவும் இருந்தது. கடந்த ஆண்டு முழுவதும் எந்தவொரு சாதி அல்லது வகுப்புவாத மோதல், காவல்துறை துப்பாக்கிச்சூடு உள்பட பெரிய குற்றச்சம்பவங்களும் நிகழாமல் பாதுகாக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், மதுரை சித்திரை விழா, விநாயகர் சதுர்த்தி, திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா ஆகியவை அமைதியாக நடைபெற்று முடிந்தன. மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் உள்பட 2 ஆயிரம் வெளிநாட்டினருக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கினோம். போட்டி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

    ஆபரேஷன் ரவுடி வேட்டையில் 3,949 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கடுமையான நடவடிக்கையினால் மாநிலத்தில் திட்டமிட்ட குற்றங்களை செய்யும் குழுக்களின் தீயத்திட்டங்கள் பெரிய அளவில் தடுக்கப்பட்டு உள்ளன.

    ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டதன் காரணமாக 9,906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 13,491 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 24 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4,141 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 22.09.2022 அன்று டி.ஜி.பி. அலுவலகம் வந்து போலீசாரிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதன்படி 1,500 பேரின் குறைகள் உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் தீர்க்கப்பட்டு உள்ளன. இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அனைத்து போலீசாருக்கும் இரவு ரோந்துப்படி வழங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது இதுவே முதல் முறை.

    பணியின்போது உயிரிழந்த 1,132 போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் மற்றும் போலீஸ் நிலைய வரவேற்பாளர் பணிகள் வழங்கப்பட்டன. காவல் பணியில் உள்ள பொது பணி நிலைமைகள், காவலர் குடியிருப்பு, காவலர் நலன்கள் உள்ளிட்டவை குறித்து ஆராய நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சாதனைகள் அனைத்தும் தமிழக காவல்துறையின் ஒவ்வொரு அதிகாரியாலும் மற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமையின்பால் கொண்ட பற்றின் காரணமாகவே சாத்தியமானது. காவல்துறை பணியில் வரும் காலங்கள் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

    நமது பாரம்பரியம் மற்றும் காவல் பணியில் தொழில் சார்ந்த உயர் தரத்தை பராமரிக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழ்நாடு காவல்துறையின் கொடி உயர்ந்து பறந்திட உறுதி ஏற்போம்.

    இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர்.
    • போலீஸ் வேலையில் உடல் உழைப்பு அதிகம்.

    சென்னை :

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான 'டிரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்' உடற்கூறியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில், நரம்பியல் துறை சார்பில் போலீசாருக்கு முதுகு வலி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்க புதிய பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரியின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மேடையில் கூறியதாவது:-

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி 1,000 படுக்கை வசதிகளுடன், 5 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவையை வழங்குகிறது. நேர்மையான அரசு ஊழியர்களுக்கான புகலிடம் அரசு ஆஸ்பத்திரி. ஏனென்றால் சமீபத்தில் மூத்த போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் உடல் நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

    டாக்டர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பொதுமக்கள் நலமுடன் வாழ முடியும். உண்மையான சேவை மனப்பான்மை கொண்டுள்ள டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள்.

    எனக்கும் டாக்டராக வேண்டும் என ஆசை இருந்தது. அதற்காக 4 ஆண்டுகள் முயற்சித்தேன் ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் டாக்டராக வேண்டும் என நினைக்கிறார்கள் இது ஆரோக்கியமான விஷயமாகும்.

    பொதுவாகவே போலீஸ் வேலையில் உடல் உழைப்பு அதிகம். அதனால் அவர்களுக்கு முதுகு, உடல் வலி அதிகம் ஏற்படும். சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு மாதம்தோறும் 3-வது திங்கட்கிழமைகளில், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக தொடங்கப்படும் முதுகு வலி சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. இதனை அனைத்து போலீசாரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
    • கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    சென்னை :

    போக்சோ வழக்குகள் தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டின் சிறுவர் நீதிக்குழு மற்றும் 'போக்சோ' குழுவினர் 'போக்சோ' சட்டத்தை (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்) ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் அந்த குழுவினர் 'போக்சோ' வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    * திருமண உறவு, காதல் உறவு போன்ற 'போக்சோ' வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரிகள், எதிர்மனுதாரரை விசாரணை செய்யலாம்.

    * குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

    * குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிலை அதிகாரிகளின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.

    * முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த அறிவுரைகளை போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

    • ஆள் கடத்தல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
    • நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும்.

    சென்னை :

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற சாலை சந்திப்புகளிலும், புறவழிச்சாலை சுங்கச்சாவடிகளிலும் பெண்களையும், குழந்தைகளையும் வைத்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை சில கும்பல்கள் இந்த தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். இதை தடுத்து நிறுத்தும் வகையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 9 போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரர்கள், 16 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

    இவர்களை இந்த தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்துக்கும், குழந்தைகள் காப்பகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 150 பேர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ஏழை பெண்களையும், குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் மற்றும் வெகு தூரங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் ஆள் கடத்தல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பழிக்கு பழிவாங்கும் கொலைகளை தடுக்க முடியும்.
    • ரவுடிகளின் சமூக விரோத செயலையும் கண்காணித்து தடுத்து நிறுத்தலாம்.

    சென்னை :

    ரவுடிகளின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் டிராக் கேடி என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த புதிய செயலியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று முறைப்படி அறிமுகப்படுத்தி வெளியிட்டார்.

    தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா தலைமையிலான குழுவினர் இந்த செயலியை உருவாக்கி உள்ளனர். புதிய செயலியை வெளியிட்ட நிகழ்ச்சியிலும், இவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த புதிய செயலியில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் எண்ணிக்கை, அவர்களின் நன்னடத்தை பிரிவின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டு உள்ளனர் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் குற்றவாளிகளின் விவரமும் இதில் அடங்கும். இவர்கள் செய்த குற்ற விவரம் இருக்கும். நன்னடத்தை பிணையில் இருப்பவர்கள் அதை மீறும் பட்சத்தில் அது தொடர்பான எச்சரிக்கை தகவலும் இதில் வெளியாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்கள் மற்றும் 9 கமிஷனரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் இதர குற்றவாளிகளின் பட்டியல் புதிய செயலி மூலம் டிஜிட்டல் மயமானது. இதன் மூலம் ரவுடிகளின் செயல்பாட்டை போலீசார் கண்காணிக்க முடியும்.

    பழிக்கு பழிவாங்கும் கொலைகளை தடுக்க முடியும். ரவுடிகளின் சமூக விரோத செயலையும் கண்காணித்து தடுத்து நிறுத்தலாம்.

    மொத்தத்தில் ரவுடிகளின் விவரங்கள் அதிகாரிகளின் விரல் நுனியில் இருக்கும் வகையில் இந்த செயலி பேருதவியாக இருக்கும்.

    ×