search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிருங்கேரி"

    சிருங்கேரியில் கோவில் கொண்டிருக்கும் சாரதா தேவியின் பெருமைகளை புகழ்ந்து ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் பாடப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளால் இது இயற்றப்பட்டது.
    (ஸ்ரீவித்யாரண்யர் அருளியது)

    சிருங்கேரியில் கோவில் கொண்டிருக்கும் சாரதா தேவியின் பெருமைகளை புகழ்ந்து ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் பாடப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளால் இது இயற்றப்பட்டது. இதைப்படித்தால் சகல வித்தைகளும் வரும். மங்களங்களும் உண்டாகும். அந்த அஷ்டகத்தின் தமிழாக்கம் வருமாறு:-

    ஸ்ரீசிருங்கேரியில் வசிப்பவளே! சுகர் முதலிய மகரிஷிகளால் சேவிக்கப்படுகிற பாத கமலங்களை உடையவளே! தனது அங்கங்களின் காந்தியால் திரஸ்கரிக்கப்பட்ட சந்திரனையும் இந்திரவாகனமான ஐராவதத்தை யும் உடையவளே, வாக்கு சக்தியை அளிப்பவளே, ஸ்ரீபரமசிவன், ஸ்ரீலட்சுமீபதி முதலிய சிறந்த தேவர்களின் சமூகங்களால் சந்தோஷமாய் பூஜிக்கப்படுகிற பிரம்ம தேவனின் மனைவியான சாரதே, வித்தையையும், சுத்தமான புத்தியையும் எனக்கு சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.
    கலியுகத்தின் ஆரம்பத்தில் சிறந்த தேவகணங்களால் பிரார்த்திக்கப்பட்டவரான ஸ்ரீபரமசிவன் வேதத்தில் கூறிய பாகங்களை உலகில் நன்கு நடைபெறச் செய்வதற்காக சன்னியாசி ரூபியான ஆதி சங்கரராக சிருங்கேரியில் வந்து உங்களை பிரதிஷ்டை செய்து பலவித ஸ்தோத்திரங்களால் துதித்து நமஸ்கரித்து சாரதாதேவியே! வித்தையையும் சுத்தமான முக்தியையும் எனக்கு சீக்கிரம் கொடுக்க வேண்டும்.

    பல ஜென்மங்களில் செய்த பாபக் கூட்டங்களை நாசம் செய்து, மேலும் சீக்கிரமாய் புண்ணியங்களின் குவியலைச் சேர்த்து வைத்து, வேதம் குரு இவர்களின் சொற்களில் ஆதரவையும் ஆஸ்தீக புத்தியையும், தேவதைகள், ஆசாரியன், வேதம் கற்ற பெரியோர்கள் இவர்களிடத்திலும், தங்களுடையதான மந்திரங்களின் சமூகத்திலும் நிரம்ப ஸ்திரமான பக்தியையும், வித்தையையும், சுத்தமான புத்தியையும், பிரம்மதேவனின் மனைவியான சாரதே! எனக்கு சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.

    வித்யா முத்திரை (ஞான முத்திரை), ஜெபமாலை, அமிர்தம் நிரம்பிய குடம் இவைகளால் விளங்குகின்ற ஹஸ்த பத்மங்களின் கூட்டத்தை உடையவளே! பக்தர்களுக்கு வித்தையைக் கொடுப்பதில் மிகுந்த சாமர்த்தியம் உள்ளவளே! என்னுள்ளே இருக்கின்றதும், என்னுடன் கூடப் பிறந்த சந்துருக்களுமான காமம், கோபம் முதலியவைகளை சீக்கிரம் வேரோடு அழித்து பிரம்ம தேவனின் மனைவியான சாரதே! எனக்கு வித்தையையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.

    தங்கள் வர்ணாச்சரம் தர்மத்திற்கு உரிய கர் மானுஷ்டானத்தில் நிலைத்த மனதையும், அந்த அனுஷ்டானங்களை செய்வதற்கு தேகத்தில் நல்ல வலுவையும், நீண்ட ஆயுளையும், மூன்று உலகங்களாலும் அறியக்கூடிய புகழையும் பாபச் செயலிலிருந்து திரும்புதலையும், சாதுக்களின் சங்கத்தையும், நல்ல கதைகளைக் கேட்பதையும், எப்பொழுதும் எனக்கு கொடுப்பதோடு கருணைக் கடலான பிரம்மதேவனின் மனைவியான சாரதே! எனக்கு வித்தையையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.

    தாயே! தங்களுடைய பாத கமலத்தை முறைப்படி புஷ்பங்களால் பக்தியுடன் ஒரு சமயமும் பூஜிக்கவில்லை. மந்த புத்தி யுள்ளவனும், சுறுசுறுப் பற்றவனுமான நான் உங்களது குணங்களை சிறந்த சுலோகங்களால் பாடுவதற்கு சக்தியற்றவன். தங்களை சேவிக் காதவனான என்னிடத்தில் ஊமைக் குழந்தையினிடத்தில் தாய்போல் அளவற்ற கருணையைச் செய்து, பிரம்ம தேவனின் மனைவியான சாரதே! வித்தையையும் சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் எனக்கு கொடுக்க வேண்டும்.

    சாந்தி முதலிய மங்களத்தைச் செய்யும் சம்பதுக்களை எனக்கு அளிக்க வேண்டும். நித்திய, அநித்ய வஸ்து விவேகத்தையும், வைராக்கியத்தையும் (விஷயங்களில் ஆசையின்மையும்) மோட்சத்தில் ஆசையையும், லட்சுமியாலும், பார்வதியாலும் சேவிக்கத்தகுந்த நீ பிரயாசையின்றி கொடுக்க வேண்டும். வித்யாரண்யர் முதலிய சிறந்த யோகிகளின் கரகமலங்களால் பூஜிக்கப்பட்ட சரண கமலங்களை உடைய பிரம்ம பத்தினியான சாரதே! வித்தையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரம் எனக்கு அளிக்க வேண்டும்.

    சத் சித் என்ற சொரூபமாக இருக்கும் எனக்கு வேதார்த்தத்தை மனனம் செய்து நிதித்யாசனம் செய்வது (அதாவது அந்தப் பொருளை மனதில் நிறுத்திப் பார்ப்பது) இவைகளையெல்லாம் சீக்கிரம் சம்பாதித்து கொடுத்து அதனால் இந்த மனதை நிர்விகல்ப சமாதியில் எப்பொழுதும் ருசியுள்ளதாகவும் செய்து, துங்கா நதிக்கரையின் சமீபத்தில் விளங்குகின்ற சிறந்த கோவிலில் ஸ்ரீசக்கரத்தின் நடுவில் விளங்குகின்ற பிரம்ம தேவனின் பத்தினியான சாரதா தேவியே, வித்யையும் சுத்தமான புத்தியை சீக்கிரம் எனக்கு அளிக்க வேண்டும்.
    சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் பற்றிய 50 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    1. இந்தியாவின் சமய வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றிருப்பது சாரதா பீடமாகும்.

    2. துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்து போய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு கூறுகிறது.

    3. ஆதிசங்கரர் தொகுத்த அத்வைத வேதாந்தம் இன்றும் உயிர்ப்புடன் திகழும் உருவமாக சாரதா பீடம் இருக்கிறது.

    4. சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது. மங்களூர், ஷிமோகாவில் இருந்தும் சிருங்கேரிக்குச் சென்று வரலாம்.

    5. ஸ்ரீ சாரதாதேவி மடத்திலேயே குறைந்த வாடகையில், அங்கு செல்லும் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்கின்றன.

    6. கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் அன்னை சாரதா தேவிக்கு உற்சவர் சிலை உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னை சாரதா தேவியின் உற்சவ சிலை ஊர்வலமாக, வெள்ளி ரதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.

    7. சிருங்கேரி செல்பவர்கள், இங்கிருந்து 22 கி.மீ. தொலைவிலும், கிக்கா என்ற இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஸ்ரீமனே நீர் வீர்ச்சியை கண்டு களித்து வரலாம். இந்த நீர் வீழ்ச்சி, கர்நாடக மாநிலத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள மிக அழகிய நீர் வீழ்ச்சியாகும்.

    8. யாத்திரையின் கடைசியில் காஞ்சியை அடைந்த ஸ்ரீசங்கரர் தன்னிடம் வைத்துக் கொண்ட யோகலிங்கத்தை அங்கே வைத்து “காமகோடி” பீடத்தை ஸ்தாபித்ததாக சொல்வார்கள். மற்ற லிங்கங்களான மோட்சலிங்கம், ஸ்ரீசிதம்பரத்திலும், முக்தி லிங்கம் ஸ்ரீபத்ரிநாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்ட சேத்திரத்திலும் போக லிங்கம் ஸ்ரீசாரதா பீடத்திலும் ஸ்தாபிக்கப்பட்டன.

    9. சாரதை கோவில் நுழைவு வாயிலில் இருந்தே தரிசனம் செய்யும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. சாரதை கல்விக்கு அதிபதி என்பதால் அங்கு வந்து அட்சராப்பியாசம் செய்து கொண்டு போகின்றனர்.

    10. சதா நேரமும், அங்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடந்து கொண்டே இருக்கிறது. இடைவிடாத பூஜை, நாம் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நைவேத்தியப் பிரசாதத்துடன் சகஸ்ரநாம அர்ச்சனைக்கு பணம் கட்டினால் பிரசாதம் என்று பெரிய அளவில் தேங்காய் பர்பி தருகிறார்கள்.

    11. குரு பரம்பரையை வெளிப்படுத்தும் விதமாகவே எட்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் சிருங்கேரி மட குருமார்கள் தமது பட்டப் பெயரில் ‘பாரதி தீர்த்த’ எனும் பட்டத்தை சூட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது.

    12. சிருங்கேரி மடத்தில் உலகிலேயே மிகப்பெரிய வீணை உள்ளது. இந்த வீணைக்கு சார்வபவும வீணை என்று பெயர். தமிழ்நாட்டில் தயாரான இந்த வீணை கடந்த 2003-ம் ஆண்டு சிருங்கேரி மடத்துக்கு வழங்கப்பட்டது. 10 அடி நீளம், 76 செ.மீ. அகலம், 74 செ.மீ. உயரமுடைய இந்த வீணை சுமார் 70 கிலோ எடை கொண்டது.

    13. நாட்டிய சாஸ்திரத்தில் வரக்கூடிய ஒன்பது விதமான ரசங்களில் ஒரு ரசத்துக்குப் பேர் சிருங்காரம். சிருங்காரம் என்றால் அழகு என்று அர்த்தம் வரும். சிங்காரி அம்பாளை செல்லமா நாம சொல்லும் வார்த்தை கூட இந்த சிருங்காரத்தில் இருந்து வந்த ரீங்காரம்தான் சிருங்கம் + கிரி = சிருங்கேரி.

    14. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா’ சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.

    15. அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம் பாவுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஸ்ரீ சங்கர பகவத்பாதரால் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14-ம் நூற்றாண்டில் சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.

    16. சிவனால் சங்கராச்சாரியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்றும் இங்கு உள்ளது.

    17. யசூர் வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.

    18. கோவில் கட்டிடம் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் காரணத்தால், தென் இந்திய இந்து கலாச்சார கட்டிடக்கலைப்படி இப்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது.

    19. அஷ்டலட்சுமி ஓவியம் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட எட்டு கதவுகளும் இங்கு உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் யாவும் தமிழ்நாட்டு சிற்பக் கலையினை பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.

    20. நவராத்திரி மற்றும் சித்ரா சுக்ல பூர்ணிமா சிறப்பு பூஜை இரண்டும் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    21. உள்ளூர் மக்கள் தீபோத்சவம், கார்த்திகா பூர்ணிமா, லலிதா பஞ்சமி, சாரதா ரதோத்சவம் போன்ற வற்றை இந்த புனித தலத்தில் கொண்டாடுகின்றனர்.

    22. ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தினுள் ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகிய மூன்று சன்னதிகளும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.

    23. நடை திறக்கும் நேரம் :- தினமும் காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

    24. அருகிலுள்ள விமான நிலையம்- மங்களூர் 7 கி.மீ., அருகில் உள்ள ரெயில் நிலையம்- சிருங்கேரி 55 கி.மீ.

    25. ஆலயத்தில் வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் இருக்கின்றன. நவராத்திரி முதலிய விசேஷ நாட்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்க ரதப் பவனி உண்டு. பக்தர்கள் பணம் கட்டினால் வெள்ளிக்கிழமைகளில் தங்கரத, வெள்ளி ரத சேவை கிடைக்கும்.



    26. சிருங்கேரியில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது சங்கர ஜெயந்தி. ஏப்ரல், மே மாதங்களில் வைகாச சுக்ல பஞ்சமியன்று கொண்டாடப்படுகின்றது.

    27. வியாஸ பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ணாஷ்டமி, விநாயக சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாப விரதம், உமா மகேஸ்வர விரதம், சாதாம்பாள் அபிஷேக, ரத சப்தமி ஆகியவை குறிப்பிடும்படியான திருவிழாக்கள்.

    28. மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் சந்திர மவுலீசுவரருக்கு சுவாமிஜி பூஜை செய்வார்.

    29. ரிஷ்யசிருங்க பர்வதம் ஒரு பச்சைப் பசேல் வனப் பிரதேசம். மருத்துவ குணமுள்ள மூலிகைச் செடிகள். கடுமைமான கோடையில் கூட, ஜிலு ஜிலுவென்று அருமையான சீதோஷ்ண நிலை, மனதிலும் உடலிலும் எப்போதும் ஒரு நிம்மதி நிலவ வைக்கும் சூழல் உள்ளது.

    30. இங்குள்ள அத்வைத ஆராய்ச்சி நிலையத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள், வேதம், உபநிடதம், சாஸ்திரம், தர்க்கம் முதலான மேன்மையான சமஸ்கிருத நூல்கள் கொண்ட நூலகம் இருக்கிறது. இங்கு வேத பாடசாலை மாணவர்களும் அயல்நாட்டினரும் அமைதியாக அமர்ந்து நூல்களை ஆராய்ந்து குறிப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    31. குரு நிவாஸ் என்ற பிரம்மாண்ட அழகிய கட்டிடத்தில் ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதீ தீர்த்த மகா சுவாமிஜி காலை 11 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.

    32. சிருங்கேரிக் கோவில்களையும் மடத்தையும் நிர்வகிக்கும் சாரதா பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் அருமையான தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைவான வாடகையில் கிடைக் கின்றன. வரும் யாத்ரீகர்கள் யார் வேண்டு மானாலும் வரிசையில் நின்று தங்கள் ஊர், பெயரைப் பதிவு செய்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம்.

    33. வெள்ளிக்கிழமை தோறும் விசேஷமாக ஸ்ரீசக்கர பூஜை நடத் தப்படுகிறது. அது அற்புதமான தெய்வீக அனுபவமாக இருக்கும்

    34. வித்யா சங்கரர் கோவிலின் அமைப்பு திராவிட, ஹொய்சாள கலைப்பாணிகளின் கலவையாக உள்ளது.

    35. கோவில் மண்டபத்திலேயே கூட்டம் கூட்டமாக குழந்தைகளை கைபிடித்து அரிசியில் எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கிறார்கள். அன்னை சரஸ்வதியின் சன்னதியில், அறிவுக் கண் திறக்கும் இந்த பாரம்பரிய சடங்கை அனைத்து பக்தர்களும் எளிய முறையில் நடத்திக் கொள்ள வசதி செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

    36. துங்க பத்ரா நதிப் படித்துறை நீண்ட படிகளுடன் அழகாக இருக்கிறது. அங்கு உட்கார்ந்து கொண்டு நதியில் பெரிய பெரிய மீன்கள் துள்ளி விளையாடுவதையும் கரை அருகில் வந்து மக்கள் வீசும் பொரியை விழுங்குவதையும் நாள் முழுக்க அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

    37. படித்துறையில் மீன் கூட்டங்கள் வருவதனால் நீராட முடியாது. பாலத்திற்கு மறுபுறம் நதி வளைந்தோடும் இடத்தில் குளிக்கலாம்.

    38. சிருங்கேரியில் மூவாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய நேர்த்தியான, சுத்தமான, காற்றோட்டமுள்ள உணவுக் கூடம் இருக்கிறது. சுடச்சுட சாதம், பூசணிக்காய், கத்தரிக்காய் என கலந்து கட்டிய சாம்பார், ரசம், ஒரு பாயசம், இனிப்பு, மோர் என்று எளிய உணவுதான்.

    39. சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்க கோபுர கலச கும்பாபிஷேகம் நடைபெற்றது. கர்ப்பகிரகத்தின் விமானத்தில் அமைந்த தங்க கலசங்களுக்கு, பாரதி தீர்த்த சன்னிதானம் மற்றும் சன்னிதானம் விதுசேகர பாரதி அபிஷேகம் செய்தனர்.

    40. சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம பாரதி சுமார் 1900-ல் நெல்லை மாவட்டம் கோடகநல்லூருக்கு விஜயம் செய்த சமயம் இந்த ஊரை “தட்சண சிருங்கோ” என்று வர்ணித் தார். இங்கு உள்ள சங்கரமடம் முதன் முதலில் கட்டப்பட்ட கிளைகளில் ஒன்றும், மிகவும் பழமையானதும் ஆகும்.

    41. சிருங்கேரியில் தங்கம், வெள்ளி தேர்கள் உள்ளன.

    42. பெருமாள் வராக உருகக் கொண்டு கடலுக்குள் புகுந்து தன் இரு கொம்புகளால் பூலோகத்தை மீட்டு தூக்கி நிறுத்திய போது அவரது இரு கொம்புகளும்-சிருங்கம் பதிந்த புண்ணிய பூமி அதனால் சிருங்கேரி எனப்பெயர் பெற்றது.

    43. துங்கா நதியினால் புனிதமானதாகிய சிருங்ககிரி பல மகான்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வேத சாஸ்திரங்களைக் குறைவறக்கற்ற எண்ணற்றோர், சிருங்க கிரியில் சங்கரரின் அருகாமையில் இருந்து சாஸ்திர ஞானம் பெற்றார்கள்.

    44. ஸ்ரீசுரேஸ்வரர், ஸ்ரீபத்மபாதர், ஸ்ரீ கஸ்தாமலகர், ஸ்ரீதோடகர் ஆகிய நான்கு சீடர்களுடன் பன்னிரண்டு ஆண்டுகள் ஸ்ரீசங்கரர், சிருங்கேரியில் வாசம் புரிந்தார்.

    45. சிருங்ககிரி காசி தலத்திற்கு நிகரானது.

    46. கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்பது தொன்மை யான பழமொழியாகும்.

    47. சிருங்கேரி மடத்துக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒருதடவையாவது சிருங்கேரிக்கு சென்று வழிபடுவதை அவர்கள் முதன்மை கடமையாக வைத்துள்ளனர்.

    48. சிருங்கேரி சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதியான பாரதி தீர்த்த சுவாமிகளின் பூர்வாச்சிரமப் பெயர் சீதாராம ஆஞ்சநேயலு. இவருடைய தாய்மொழி தெலுங்கு. ஆனால் கன்னடம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய எல்லா மொழிகளிலும் பேசுவார்.

    49. தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், மேல்மங்கலம், பெரியகுளம், கோவை, கல்லிடைகுறிச்சி, பத்தமடை, வத்தலகுண்டு, நாகர்கோவில், கரூர் ஆகிய 11 ஊர்களில் சிருங்கேரி சாரதா மடத்துக்கு கிளைகள் உள்ளன.

    50. சாரதாதேவியின் கிருபையால் தர்மநெறி ஆன்ம நெறி பாரதம் முழுவதும் புத்துயிர் பெற்று உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதே சிருங்கேரி சாரதா பீடத்தின் லட்சியமாகும்.

    கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் காண்போர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அபாரமானதோர் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள தெய்வீகத் திருத்தலமே சிருங்கேரி.
    கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் காண்போர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அபாரமானதோர் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள தெய்வீகத் திருத்தலமே சிருங்கேரி. 1200 வருடங்களுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் பாரத திருநாட்டின் நான்கு பகுதிகளில் தோற்றுவிக்கப்பட்ட பீடங்களுள் தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் முதன்மையானதாகும்.

    ஸ்ரீசங்கரரையே முதல் குருவாக கொண்டு தொடங்கிய ஸ்ரீசாரதா பீடத்தின் குருபரம்பரை அவருக்குப் பிறகும் இணையற்ற ஜீவன்முக்தர்களால் அலங்கரிக்கப்பட்டு வாழையடி வாழையாக இன்றளவும் தொடர்ந்து வருகிறது.


    தற்போது இந்த பீத்தின் 36-வது ஜகத்குரு சங்கராசார்யராக ஸ்ரீபாரதீ தீர்த்த மகாசுவாமிகள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்கள். அளவிடமுடியா ஆன்மீக சாதனைகளைப் படைத்தவரும், கருணைக்கடலும் உலகம் போற்றும் பண்டிதருமான ஆசார்ய சுவாமிகளை நாடி அவரது ஆசிகளை பெற்றுச் செல்வதற்காகவும் மற்றும் சாரதா பீடத்து திவ்விய ஆலயங்களில் தெய்வ தரிசனம் செய்து அளவற்ற ஆனந்தத்தை அடைவதற்காகவும் நாடெங்கிலும் இருந்து நாள்தோறும் எண்ணற்ற ஆஸ்திக பெருமக்கள் சிருங்கேரிக்கு செல்கின்றனர்.

    இத்தலத்தைக் கண்டதும் உள்ளத்தைப் பறிகொடுக்காதவர் எவருமிலர் என்றே கூறலாம். இயற்கை பேரெழிலும் தெய்வீகச் சூழலும் நிரம்பப்பெற்ற இத்தலம், தன்னிடத்தே இறையுணர்வுடன் வருவோருக்கு இக பர சுகங்களை மட்டுமல்லாது பிறவிப்பிணியை நீக்கிட உதவும் ஆத்ம ஞானத்தையும் தரவல்லது.

    இத்தலம் ராமாயணக்காலத்திற்கும் முற்பட்டதாகும். அக்கால கட்டத்தில் விபாண்டகர் எனும் பெரும் தவ வலிமை பூண்ட முனிவர் இப்பிரதேசத்தில் வசித்து வந்தார். அவர் ஒரு நாள் கானகத்தின் வழியாக சென்று கொண்டிருக்கும்போது அங்கே ஓர் அழகிய ஆண் குழந்தை கேட்பாரின்றி கிடப்பதை கண்டார்.

    அதன்மேல் பரிவு கொண்ட அவர் அக்குழந்தையை தன்னுடன் எடுத்து வந்து விட்டார். தெய்வீக ஒளியுடன் விளங்கிய அக்குழந்தையின் தலையில் ஒரு சிறிய கொம்பு போன்ற வளர்ச்சி இருப்பதை கண்ட விபாண்டகர் அக்குழந்தைக்கு ‘ரிஷ்ய சிருங்கர்’ எனப்பெயர் சூட்டி வளர்த்து வரலானார். விபாண்டகரின் நேரடி கண்காணிப்பில் வேத சாஸ்திர கல்வியைக் கற்று தவ வன்மையுடன் வளர்ந்து வந்த ரிஷ்ய சிருங்கர் பெண்களை கண்டதேயில்லை.

    பழங்கள் மற்றும் கிழங்கு வகைகள் போன்ற இயற்கை உணவினை தவிர வேறு உணவுகள் எதையும் அறிந்தாருமில்லை. அவரது பிரம்மசரிய நெறி மிக மிக உயர்ந்து இணையற்று விளங்கியது. அக்காலக் கட்டத்திலேயே அப்பிரதேசத்திற்கு சற்றுத் தொலைவில் இருந்த நாட்டினை ரோமபாதர் எனும் அரசர் ஆண்டு வந்தார். தமது நாட்டில் நீண்ட காலமாகவே மழை பொழியாமல் எங்கும் பெருவறட்சி நிலவுவதை கண்டு மிகவும் கவலை கொண்ட அந்த அரசர் அதுபற்றி தமது மதியூக மந்திரிகளிடம் ஆலோசனை செய்தார்.

    அவர்கள் அவருக்கு ரிஷ்ய சிருங்கரைப் பற்றி எடுத்துரைத்து, இணையற்ற பிரம்மசாரியான அவரது பாதம் அந்நாட்டில் படுமேயானால் உடனடியாக மழை பொழியும் எனக் கூறினர். ரிஷ்ய சிருங்கர் பெண்களை இதுவரை பார்த்திராததால், திறமை கொண்ட பெண்கள் சிலரை அனுப்பி வைத்து அவரது கவனத்தை ஈர்த்து விபாண்டகருக்கு தெரியாவண்ணம் அவரை இந்நாட்டிற்கு அழைத்து வந்து விடலாம் என்றும் ரோமபாதருக்கு அம்மந்திரிகள் ஆலோசனை கூறினர்.

    விபாண்டகரின் கோபத்தை கிளறி பெரும் சாபத்தைப் பெறக்கூடிய அபாயம் இருந்தபோதிலும், நாட்டின் நன்மையை முன்னிருத்தி ரோமபாதரும் அதற்குச் சம்மதித்தார். அரசரின் ஆணைப்படி, அழகும் திறமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பெண்கள் சிலர் விபாண்டகர் இல்லாத சமயம் அவரது ஆசிரமத்திற்கு சென்று ரிஷ்ய சிருங்கரைச் சந்தித்தனர். அவர்களை கண்ட அந்த தெய்வீக பிரம்மச்சாரி அவர்களை வேதத்தில் கூறப்படும் மேலுலகவாசிகள் என்றே எண்ணி விட்டார்.

    அவர்களிடம் தனக்கு இனம் புரியாததொரு ஈர்ப்பு ஏற்படுவதை உணர்ந்த அவர் அவர்களது அழைப்பையேற்று, தனது தந்தைக்கு தெரியப்படுத்தும் எண்ணமுமின்றி அவர்களுடன் கிளம்பி விட்டார். அவர்களது நாட்டில் ரிஷ்ய சிருங்கரின் பாதம் பட்டதுதான் தாமதம், பெருமழை பெய்யத் தொடங்கி விட்டது.
    மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அரசரும் தமது மகளையே ரிஷ்ய சிருங்கருக்கு மணமுடித்தும் வைத்து விட்டார்.

    இதற்கிடையில் தமது புத்திரரை வஞ்சித்து தமக்குத் தெரியாமல் அவரை அழைத்துச் சென்று விட்ட அரசர் ரோமபாதரின் செயலை தமது ஞானக்கண்ணால் அறிந்து கொண்ட விபாண்டகர், பெரும் சினம் கொண்டவராக ரோமபாதரின் நாட்டை அடைந்தார். ஆயினும் அரசரின் பணிவார்ந்த சொற்களாலும் உபசரிப்பாலும் சினம் தணிந்த விபாண்டகர் நடந்த அனைத்தும் ஈசனின் திருவுளம் என்பதைப் புரிந்து கொண்டவராய் மணமக்களை நெஞ்சார வாழ்த்தி விட்டு கானகத்திற்கே திரும்பி விட்டார்.

    கானகத்தில் இருக்கும் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து நீண்ட தவத்தில் ஈடுபட்ட விபாண்டகர் தமது உடலை நீத்து பெரும் ஒளி வடிவில் அக்குன்றிலிருக்கும் சிவலிங்கத்தினுள்ளே ஐக்கியமானார். (சிருங்கேரியில் இன்றும் இக்குன்று உள்ளது. அம்மஹாமுனிவர் ஐக்கியமான லிங்கம் உள்ள ஆலயமே ஸ்ரீமலஹானிகரேசுவரர் ஆலயம் என்ற பெயருடன் விளங்கி வருகிறது).

    ரோமபாதரின் நாட்டில் இருந்த ரிஷ்ய சிருங்கரின் மகிமைகளை அறிந்த அண்டைநாட்டு அரசரான தசரத மகாராஜா அவரைத் தமது அயோத்தி நாட்டிற்கு வருகை புரிந்து தமக்கு சத்புத்திரர்கள் பிறக்கும் வகையில் யாகம் ஒன்றை நடத்தி அளித்து ஆசீர்வதிக்கும்படி வேண்டி கேட்டுக் கொண்டார். அதற்கிணங்கி, ரிஷ்ய சிருங்களும் அப்படியே செய்து கொடுத்தார். அதன் விளைவாக ஸ்ரீராமபிரான் முதலான தெய்வீக புத்திரர்கள் தசரதருக்கு கிடைக்கப் பெற்றார்கள்.

    சிறிது காலம் சென்றபின் ரிஷ்ய சிங்கருக்கு தனது அருந்தவப் பயனாலும் இறையுளத்தாலும் விரைவிலேயே இல்வாழ்க்கையில் ஈடுபாடு விலகியதால், அவர் தமது குடும்பத்தார் மற்றும் நாட்டு மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு கானகம் திரும்பி தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார். தமது புவியுலக வாழ்நாளின் இறுதியில் தாம் தியானம் செய்த இடத்திலிருந்த சிவலிங்கத்திலேயே ஒன்றி மறைந்தார்.

    ஸ்ரீரிஷ்ய சிருங்கர் வாழ்ந்த பிரதேசமே ரிஷ்ய சிங்ககிரி என அழைக்கப்பட்டது. பின்னர் சிருங்ககிரி எனவும், தற்போது சிருங்கேரி எனவும் மருவித் திகழ்கிறது.

    என் கண்கள் உன்னைத் தரிசிப்பதிலும் கைகள் உன்னை பூஜை செய்வதிலும் காதுகள் உன் பிரபாவத்தைக் கேட்பதிலும் வாக்கு உன்னை ஸ்தோத்திரம் செய்வதிலும் தலை உன் பாதத்தை வணங்கியதாகவும் எப்போதும் இருக்க வேண்டும். என் மனது உன் தியானத்தில் ஈடுபடட்டும்

    -சாரதா புஜங்க ஸ்தோத்திரம்.

    ஸ்ரீ சாரதா பீடத்தின் நிர்வாகத்தை தமது முக்கிய சீடரும் சாட்சாத் நான்முக பிரம்ம தேவனின் அவதாரமாகவே கருதப்பட்டவருமான ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியாரிடம் ஸ்ரீ சங்கரர் ஒப்படைத்தார்.
    ஸ்ரீசாரதாம்பிகையின் தாமரை போன்ற திருக்கைகளில் சிறியகிளி விளங்குகிறது. தன்னை வணங்கும் பக்தர் சமூகத்திற்கு சுவாராஜ்யமென்னும் முக்தியைக் கொடுத்து ஆனந்தமடையச் செய்கிறாள். புன்சிரிப்புடன் கூடிய முகலாவண்யம் சந்திர பிம்பத்தைவிட மிகச் சிறந்ததாக இருக்கிறது. சாரதாம்பிகே, என்னைத் தூயமனமுள்ளவனாகச் செய்யவேணும்.

    -ஸ்ரீசாரதாம்பா ஸ்தோத்திர மாலிகா

    இறைவன், இறைவழிபாடு போன்றவை கூறும் வேதத்தின் பகுதி ஞானகாண்டம் எனப்படும். வேள்வி முதலிய கர்மாக்கள் குறித்துப் பேசும் வேதத்தின் பகுதியை கர்மகாண்டம் என்பர். மண்டனமிச்ரர், குமரிலபட்டர், ஜைமினி ஆகிய மூவரும் வேதத்தின் கர்மகாண்டத்தை மட்டும் பின்பற்றியவர்கள். விவசாயம் செய்தால் விளைச்சல் நமக்குப் பலனாகக் கிடைக்கிறது. அதுபோல், வேதங்கள் விதித்த கர்மங்களைச் செய்தால் அதற்குரிய பலன் தானே கிடைக்கும். இடையில் இறைவன் என்பவன் எதற்கு? என்பது அவர்களின் வாதம். மேற்கண்ட மூவரும் வலியுறுத்திய கொள்கையை, ‘பூர்வமீமாம்ஸ மதம்’ என்று அழைத்தனர்.

    மீமாம்ஸகர்கள் வீணில் வாதம் செய்து மக்களைக் குழப்பினார்கள். அந்தக் குழப்பத்தை நீக்கி, தெளிவை ஏற்படுத்த ஆதிசங்கரர் மண்டனமிச்ரருடன் வாதாடச் சென்றார்.  மாகிஷ்மதி என்ற நகரத்தில் பெரிய மாளிகையில் மண்டனமிச்ரர் வசித்து வந்தார். அவர் பிரமனின் அம்சமாகத் தோன்றியவர். அவருடைய மனைவி சரஸவாணி சரஸ்வதியின் அம்சமாகத் தோன்றியவர். மண்டனமிச்ரரின் இல்லத்தில் எப்போதும் பண்டிதர்கள் நிறைந்திருப்பார்கள். சரஸவாணி அறிவுக்கடலாகத் திகழ்ந்தவர். சரஸவாணி தமது இல்லத்திற்கு வருவோர் அனைவரையும் அன்புடன் வரவேற்று உணவளித்து உபசரிப்பார். இரண்டாவது சரஸ்வதி என்ற பொருளில் அவரை, ‘உபயபாரதி’ என்று போற்றினார்கள்.

    உபயபாரதியைக் காண மலைவாசிப் பெண்கள் சிலர் வந்தனர். அவர்களை உபயபாரதி அன்புடன் உபசரித்து மகிழ்ந்தாள். அப்பெண்கள் திரும்பிச் செல்லும் பொழுது, கவிதைகளைப் பாடிக் கொண்டு செல்வார்கள். மொத்தத்தில் மண்டனமிச்ரரின் இல்லம் இருவர் நடத்தும் பல்கலைக்கழகமாக விளங்கியது.
    மாகிஷ்மதி நகரத்தை அடைந்த ஆதிசங்கரர், மண்டனரின் இருப்பிடம் குறித்து, தெருவில் சென்று கொண்டிருந்த பெண்களிடம் கேட்டார். அவர்கள், ‘‘சுவாமி! அதோ, அந்தத் தெருவில் இருக்கும் பெரிய மாளிகைதான் மண்டனமிச்ரரின் வீடு. வீட்டு வாசலில் ஒரு கிளிக்கூண்டு தொங்கிக் கொண்டிக்கும். அந்தக் கூண்டில் இருக்கும் கிளிகள் வேதாந்தம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்!’’ என்று கூறினர்.

    மண்டனர் இல்லத்தில் அவருடனும், உபயபாரதி சரஸவாணியுடனும் அறிஞர்கள் பலரும் வேதாந்த சர்ச்சை செய்வார்கள். அதனைக் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்ட கிளிகளும் வேதாந்தம் பேசத் தொடங்கி விட்டன. அப்பெண்கள், மண்டனமிச்ரர் மாளிகை குறித்துக் கூறிய சொற்களும் இலக்கியச் சுவையுடன் இருந்ததைக் கேட்ட சங்கரர் வியந்தார்.

    சங்கரர் மண்டனமிச்ரரின் இல்லத்தை அடைந்தார். பெண்கள் கூறியபடி, கூண்டுக்கிளிகள் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்தன. அப்போது வீட்டுக் கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. வெளியில் இருந்த சிலர் மண்டனமிச்ரர் தமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் (திதி-நினைவுநாள்) செய்து கொண்டு இருப்பதாகக் கூறினர்.

    சங்கரருக்கு உடனே மண்டனரைக் காண வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. ‘‘சிரார்த்தம் நிறைவுபெறும் வரை, எவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம்’’ என்று கண்டிப்பாகக் கூறியிருந்தார் மண்டனர். சங்கரர் மண்டனரை உடனே காண விரும்பினார். ஆனால் ‘‘எதற்காக இங்கு வந்தீர்?’’ என்று மண்டனமிச்ரர் கோபத்துடன் வினவினார். ‘‘நான் வாத பிச்சைக்காக வந்தேன்’’ என்று பதிலளித்தார் சங்கரர். ஜைமினியும் வியாசரும் சிரார்த்திற்குரிய வேதியர்களாக வந்திருந்தனர். அவர்கள், ‘‘முன்னோர் நினைவு நாளில் கோபம் கொள்ளுதல் தகாது என்று மண்டனருக்கு எடுத்துக் கூறினார்கள்.

    அத்துடன் சங்கரரை வரவேற்று மகாவிஷ்ணு இலையில் அமர்த்தி உபசரிக்கும்படியும் கூறினார்கள். சிரார்த்தநாளில் திருமாலே வந்து ஓர் இலையில் அமர்ந்து சாப்பிடுவதாகப் பாவனை செய்து ஓர் இலையில் பதார்த்தங்களைப் படைத்து வைப்பது மரபு. அந்த இலையில்தான் ஆதிசங்கரரை அமர்த்தி உபசரிக்கப் பணித்தனர். மண்டனரும் சங்கரரை நமஸ்கரித்து, ‘‘பிச்சைக்கு எழுந்தருள வேண்டும்’’ என்று வேண்டினார். சிரார்த்த தினத்திற்கு அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாம் என்று ஜைமினியும் வியாசரும் கூறினார்கள்.

    இருவரும் அதற்கு உடன்பட்டனர். மண்டன மிச்ரர்-சங்கரர் வாதிடும் அரங்கத்திற்கு யாரை நடுவராக நியமிப்பது? மண்டனமிச்ரரின் மனைவி சரஸவாணி நடுவராகப் பணியாற்றத் தகுந்தவர் என்று வியாசரும் ஜைமினியும் கூறினர். நேர்மையாளராகிய மண்டன மிச்ரர் முதலில் அதற்கு உடன்படவில்லை. ஆதிசங்கரர் சரஸவாணி நடுவராக இருப்பதை, ஆட்சேபிக்கவில்லை. சமகாலத்தில் தலைசிறந்த கல்வியாளராக விளங்கிய சரஸவாணியே நடுவராகப் பணியாற்றத் தகுந்தவர் என்றும் சங்கரர் கூறினார்.

    இருபெரும் மேதைகள் வாதம் செய்கிறார்கள் என்ற செய்தி எங்கும் பரவியது. ஏராளமானோர் வாத அரங்கத்தில் வந்து கூடினர். சங்கரரும் மண்டனமிச்ரரும் ஒருவரையருவர் வணங்கி, எதிரெதிரே, அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். சரஸவாணி உயர்ந்த மேடையில் அமர்ந்தார். அவருக்குத் தர்மசங்கடம். ஒரு பக்கத்தில் மகான் ஆதிசங்கரர் மறுபக்கத்தில் சமகால மேதையும் தன்னுடைய கணவருமாகிய மண்டனமிச்ரர்.

    வாதிடும் இருவரையும் கழுத்தில் ஒரு மாலையை அணிந்து வாதத்தைத் தொடங்கச் சென்னாள் சரஸவாணி. எவருடைய மாலை முதலில் வாடுகிறதோ, அவரே வாதத்தில் தோற்றவர் ஆவார் என்று கூறினாள் சரஸவாணி. அதுபோல், மண்டனமிச்ரரும் சங்கரரும் தங்களுக்குள் ஒரு நிபந்தனை விதித்துக் கொண்டனர்.

    அதன்படி, வாதத்தில் ஆதிசங்கரர் தோற்றால், இல்லறம் மேற்கொண்டு மீமாம்ஸகர் ஆக வேண்டும். மண்டனமிச்ரர் தோற்றால், அவர் துறவியாகி அத்வைத சித்தாந்தத்தை ஏற்க வேண்டும். இந்த நிபந்தனையுடன் வாதப்போர் தொடங்கியது. அது இருபத்தோரு நாள்கள் தொடர்ந்து நடந்தது.

    இறுதியில் மண்டனமிச்ரரின் மாலை வாடியது. சரஸவாணி கலைமகளின் அம்சம் அல்லவா? தீர்ப்பை நேரிடையாகக் கூறாமல், புத்தி சாதுரியத்துடன் கணவரையும் சங்கரரையும் வணங்கி, ‘‘பிச்சைக்கு வாருங்கள்’’ என்று அழைத்தாள். இல்லறத்தாரை, ‘‘விருந்துக்கு வாருங்கள்’’என்றோ, ‘‘திருவமுதுக்கு வாருங்கள்’’ என்றோ அழைக்க வேண்டும். துறவிகளை, ‘‘பிச்சைக்கு வாருங்கள்’’ என்று அழைக்க வேண்டும்.

    சரஸவாணியின் அழைப்பின் உட்குறிப்பை உணர்ந்த மண்டனமிச்ரர் தான் தோற்றதை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார். உடனே துறவியாகிவிட்டார். அன்றுமுதல், மண்டனமிச்ரர், ‘சுரேச்வராச்சார்யர்’ என்னும் திருநாமம் பெற்றார். மண்டனர் துறவி மேற்கொண்டு, அத்வைதியாகி, சங்கரரின் சீடராக அவரைப் பின் தொடர்ந்து சென்றார். சரஸவாணி, தன் மூலமூர்த்தியாகிய மகாசரஸ்வதியுடன் இணைய சத்தியலோகத்திற்குப் புறப்பட முற்பட்டாள். சங்கரர் சரஸ்வதியின் அம்சமான சரஸவாணியின் சாந்நித்தியம் பூவுலகில் நிலைத்திருக்க விரும்பினார்.

    வனதுர்கா மந்திரத்தால் தேவதைகளை வசமாக்க இயலும். சங்கரர் அந்த வனதுர்கா மந்திரத்தால் சரஸவாணியை வசமாக்கித் தன்னுடன் அழைத்து வந்தார். உபயபாரதி, மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவளாக, வான வழியில் சங்கரரைத் தொடர்ந்து சென்றாள். சுரேஸ்வராச்சாரியர் உள்ளிட்ட சீடர்கள் பின்தொடர, சங்கரர் காடு மலைகளைக் கடந்து கர்நாடக மாநிலத்தை அடைந்தார்.

    தெளிந்த நீர்ப்பெருக்குடன் ஓடிய துங்கா நதியைக் கண்டனர். இயற்கை வளத்துடன் எழில் கொஞ்சிய அந்த ஆற்றின் கரையில் ஓர் அற்புதக் காட்சியைக் கண்டனர். பூரண கர்ப்பமாக இருந்த ஒரு தவளை பிரசவ வேதனை பட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தவளைக்கு நல்லபாம்பு ஒன்று படமெடுத்து, நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. பகைமை உணர்வு இல்லாத இடமே தெய்வசக்திகள் நிலைத்து இருக்கத் தகுந்த புண்ணிய பூமியாகும்.

    வானவெளியில் வந்து கொண்டிருந்த உபயபாரதி அந்த இடத்தில் கீழே இறங்கி, துங்கா நதிக்கரையில் நடந்தாள். அவளுடைய மாணிக்கச் சிலம்புகள் ஒலித்தன. தேவி, கீழே நடக்கிறாள் என்று அறிந்தார் சங்கரர். மணற் பகுதியில் நடந்து வந்த உபயபாரதியின் சிலம்புகளில் மணல் புகுந்தது. அதனால், சிலம்புகள் ஒலிக்கவில்லை. பின்னால் திரும்பிப் பார்த்தார் சங்கரர். உபயபாரதி அங்கு நிற்பதை உணர்ந்தார். சற்றே கண்மூடித் தியானித்தார். அப்போது அவருக்கு, சரஸ்வதி தன் தரிசனத்தைக் காட்டியருளினாள்.

    சரஸ்வதி, வாணி, வாக்தேவி, கலைமகள் அளித்த தரிசனத்தில் பரவசம் அடைந்தார் சங்கரர். போற்றினார். அங்கு இருந்த ஒரு பாறையில் தேவி சரஸ்வதியை ஸ்ரீசாரதையாக யந்த்ரத்தில் ஆவாகனம் செய்தார். தேவியும் உள்ளம் உவந்தவளாக அங்கு நிலைத்து இருந்து பக்தர்களுக்கு அருள் புரியத் தொடங்கினாள்.

    மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பல பகுதிகள் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையவை. பம்பை, சபரிமலை ஆகியவை இன்றும் மிகவும் பிரபலமாக விளங்குகின்றன. அதுபோல், ‘ரிஷ்யசிருங்ககிரி’ என்ற இடமே தற்காலத்தில் சிருங்கேரி என வழங்கி வருகிறது. சிருங்கேரிக்கு அருகில் விபாண்டகர் ஆச்ரமம் என்ற இடம் உள்ளது. ரிஷ்யசிருங்கர் விபாண்டக முனிவரின் குமாரர் ஆவார். ரிஷ்யசிருங்கரைத் தசரதன் அயோத்திக்கு அழைத்துச் சென்று, புத்ரகாமேஷ்டி யாகத்தை நடத்தினான். அவருடைய பெயரால் அழைக்கப்பட்ட தலம் சிருங்கேரி.

    வராகம் (பன்றி) போன்ற உருவமுள்ள ஒரு மலை உள்ளது. அதனை வராகமலை என்பர். அந்த மலையிலுள்ள ஒரு பாறையின் அடியிலிருந்து துங்கா, பத்ரா என்ற இரண்டு ஆறுகளும் உற்பத்தியாகின்றன. வராக அவதாரமெடுத்த திருமாலின் இரண்டு தெத்திப்பற்களே இரண்டு நதிகளாக ஓடுகின்றன என்பது ஐதீகம்.

    துங்காநதியை நாராயணனாகவும், பத்ராநதியைச் சங்கரனாகவும் கருதுகின்றனர். இரண்டும் ஒன்றாகக் கலந்த பிறகு உருவாகும் துங்கபத்ராநதி சங்கரநாராயண உருவம் அடைவதாக ஐதீகம். சம்பிரதாயமாக இந்த பீடத்தை தட்சிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் என்று அழைப்பர். (தட்சிணாம்னாய என்றால் தெற்கு திசையில் உள்ள என்று பொருள்).

    ஸ்ரீ சாரதா பீடத்திற்கு பிரதான வேதமாக யஜூர் வேதத்தை அறிவித்தார் ஸ்ரீ சங்கரர். கைலாசத்தில் இருந்தே தருவிக்கப் பெற்ற ஸ்ரீ சந்திரமவுலீஸ்வர ஸ்படிக லிங்கத்தையும், ஸ்ரீ ரத்தினகர்ப் கணபதி விக்கிரகத்தையும் மற்றும் மகாமேரு யந்த்ரத்தையும் பீடத்தின் நித்ய பூஜைக்கென ஸ்ரீ சங்கரர் அளித்தார். (இந்த அபூர்வ தெய்வீக விக்கிரகங்கள் 1200 வருடங்களுக்கும் மேலாக இன்றும் பீடத்தின் பூஜையில் இருந்து வருகின்றன.)

    ஸ்ரீ சாரதா பீடத்தின் நிர்வாகத்தை தமது முக்கிய சீடரும் சாட்சாத் நான்முக பிரம்ம தேவனின் அவதாரமாகவே கருதப்பட்டவருமான ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியாரிடம் ஸ்ரீ சங்கரர் ஒப்படைத்தார். ஸ்ரீ சுரேஸ்வரருக்குப் பின்பும் ஸ்ரீ சாரதா பீடம் நிலைத்தோங்கும் என்றும் வருங்காலத்தில் இந்த பீடத்தின் ஆசார்யர்களாக திகழ்பவர்கள் அனைவரும் நம்முடைய அம்சம் பொருந்தியவர்களாகவே இருப்பார்கள் என்றும் ஸ்ரீ சங்கரர் ஆசீர்வதித்தார்.

    அம்மகானது அருள்மொழிகளுக்கேற்ப வாழையடி வாழையாக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஜகத்குரு பரம்பரை தொடர்ந்து வருகிறது. ஸ்ரீ சுரேஸ்வரரைத் தொடர்ந்து இந்த மகா பீடத்தின் ஜகத்குருநாதராக பொறுப்பேற்று வரும் அனைவருமே பெரும் பண்டிதர்களாகவும் கருணாமூர்த்திகளாகவும் ஞான முனிவர்களாகவும் விளங்கி வருகின்றனர்.

    ஸ்ரீ ஆதிசங்கரரின் அருள் அம்சங்களாகவே விளங்கி வரும் இவர்களை ஸ்ரீ சங்கராசார்யா என்றே பக்தர்கள் அழைத்து பூஜித்து வருகின்றனர். இந்த இணையற்ற பரம்பரையில் 36-வது ஜகத்குருநாதராக தற்போது ஸ்ரீ பாரதி தீர்த்த சங்கராசார்ய மகா சுவாமிகள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றார்கள்.
    கணபதியை ஆராதனை தெய்வமாகக் கொண்டுள்ள பக்தர்களுக்கு சிருங்கேரியில் அருட்பரவசம் நிறைந்த விருந்தே காத்திருக்கிறது. சிருங்கேரியின் பஞ்சமகாகணபதிகள் (5 கணபதிகள்) மிகப்பிரசித்தி பெற்றவர்கள்.
    கணபதியை ஆராதனை தெய்வமாகக் கொண்டுள்ள பக்தர்களுக்கு சிருங்கேரியில் அருட்பரவசம் நிறைந்த விருந்தே காத்திருக்கிறது என்று கூறினும் அது மிகையாகாது. சிருங்கேரியின் பஞ்சமகாகணபதிகள் (5 கணபதிகள்) மிகப்பிரசித்தி பெற்றவர்கள்.

    1200 வருடங்களுக்கும் மேலாக ஜகத்குருக்களின் பூஜையில் இருந்து வரும் ஸ்படிகத்திலான ஸ்ரீ ரத்னகர்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தினுள் வீற்றிருக்கும் ஸ்ரீ சக்தி கணபதி, ஸ்ரீ வித்யாசங்கரர் ஆலயத்தினுள் வீற்றிருக்கும் ஸ்ரீ வித்யா கணபதி, மடத்துள் நுழைந்தவுடன் முதலாவதாக, ஒருநிலைப்படியில் இருந்து அருள் பொழியும் ஸ்ரீ தோரண கணபதி மற்றும் ஸ்ரீ மலகானிகரேசுவரர் ஆலயத்தினுள் ஒரு தூணில் 400 வருடங்களுக்கு முன் 24-ம் ஜகத்குருவால் மஞ்சள் கிழங்கினைக் கொண்டு வரையப்பட்டு நாளடைவில் ஒரு முழு சிற்பமாகவே புடைத்தெழுந்த ஸ்ரீ ஸ்தம்ப கணபதி ஆகிய ஐந்து கணபதிகளும் பக்தர்களால் தினமும் வழிபடப்படும் கடவுளர்களாக விளங்கி வருகின்றனர்.

    ஸ்ரீ சக்தி கணபதிக்கு செய்யப்படும் பிரதோஷ பூஜை பக்தர்களை மெய்மறக்கச் செய்யும் ஒன்றாகும்.
    சிருங்கேரிக்கு முதன் முறையாக வருகை தரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் சிருங்கேரியின் பல்வேறு ஆலயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
    இறைநாட்டமுள்ள அன்பர்களுக்கு சிருங்கேரியின் அற்புத ஆலயங்கள் அமுதுண்டாற் போன்றதொரு அனுபவத்தை தரவல்லவை. ரம்மியமானதொரு இயற்கைச் சூழலில் வேத கோஷங்கள் காதுகளைக் குளிர்விக்க தூய்மையின் சிகரங்களாய் விளங்கும் அனைத்து ஆலயங்களுக்கும் சென்று இறை தரிசனம் செய்தால் உண்டாகும் பரவசநிலையை வார்த்தைகளில் வடிக்க இயலாது. அனுபவிப்பதால் மட்டுமே உணரமுடியும்.

    சிருங்கேரிக்கு முதன் முறையாக வருகை தரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் சிருங்கேரியின் பல்வேறு ஆலயங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
    (அ) மடத்து வளாகத்தினுள் துங்காநதியின் தென்கரையில் அமைந்துள்ள ஆலயங்கள்:
    1. தோரண கணபதி சன்னிதி
    2. ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஆலயம்
    3. ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம்
    4. ஸ்ரீ சக்தி கணபதி சன்னிதி (ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தில் உள்ளது)
    5. ஸ்ரீ கோதண்டராமசாமி சன்னிதி (ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தின் வாயிலில் உள்ளது)
    6. ஸ்ரீ மலையாள பிரம்மா சன்னிதி (ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தின் வாயிலில் உள்ளது)
    7.ஸ்ரீ சுரேஸ்வராசார்யார் சன்னிதி
    8. ஸ்ரீ வாகீஸ்வரி வித்யாரண்யா சன்னிதி
    9. ஸ்ரீ ஜனார்தனசுவாமி ஆலயம்
    10. ஸ்ரீ கருடபகவான் சன்னிதி (ஸ்ரீ ஜனார்தனசுவாமி ஆலய வாயிலில் உள்ளது)
    11. ஸ்ரீ ஆஞ்சனேயசுவாமி சன்னிதி (ஸ்ரீ ஜனார்தன சுவாமி ஆலய வாயிலில் உள்ளது)
    12. ஸ்ரீ விருத்த நரசிம்மபாரதீ சுவாமிகளின் சமாதி ஆலயம் (ஸ்ரீ ஜனார்தனசுவாமி ஆலயத்தின் பின்புறம் உள்ளது)
    13. ஸ்ரீ வித்யாசங்கரதீர்த்தர் ஆலயம் (ஆலயத்தின் உள்ளே ஸ்ரீ சக்தி கணபதி, ஸ்ரீ துர்கை, ஸ்ரீ கர்த்தவீர்யாஜுனர் சன்னிதிகள் உள்ளன)
    14. ஸ்ரீ சுப்ரமண்யசுவாமி ஆலயம்
    15.துங்காநதிதீரம் (நதியையே இறைவடிவாக வழிபடும் இடம்)
    (ஆ) மடத்து வளாகத்தினுள் துங்காநதியின் வடகரையில் அமைந்துள்ள ஆலயங்கள்
    16. ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்மபாரதீ மகாசுவாமி களின் சமாதி ஆலயம்
    17. ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரபாரதீ மகாசுவாமிகளின் சமாதி ஆலயம்
    18. ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகளின் சமாதி ஆலயம்
    19.ஸ்ரீ சந்திரமவுலீசுவரர் ஆலயம் (குருநிவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது)
    20. ஸ்ரீ காலபைரவர் ஆலயம்
    21. ஸ்ரீ வேத வியாசர் ஆலயம்
    (இ) மடத்து வளாகத்திற்கு வெளியே உள்ள ஆலயங்கள்
    22. ஸ்ரீ மலகானிகரேசுவரர் ஆலயம் (குன்றின் மேல் உள்ளது)
    23. ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயம்
    24. ஸ்ரீ கெரே ஆஞ்சநேயர் ஆலயம்
    25. ஸ்ரீ வனதுர்காம்பாள் ஆலயம்
    26. ஸ்ரீ நரசிம்மர் ஆலயம்
    27. ஸ்ரீ சூர்யநாராயணர் ஆலயம்
    ×