search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிருங்கேரியும் ஆதிசங்கரரும்
    X

    சிருங்கேரியும் ஆதிசங்கரரும்

    ஸ்ரீ சாரதா பீடத்தின் நிர்வாகத்தை தமது முக்கிய சீடரும் சாட்சாத் நான்முக பிரம்ம தேவனின் அவதாரமாகவே கருதப்பட்டவருமான ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியாரிடம் ஸ்ரீ சங்கரர் ஒப்படைத்தார்.
    ஸ்ரீசாரதாம்பிகையின் தாமரை போன்ற திருக்கைகளில் சிறியகிளி விளங்குகிறது. தன்னை வணங்கும் பக்தர் சமூகத்திற்கு சுவாராஜ்யமென்னும் முக்தியைக் கொடுத்து ஆனந்தமடையச் செய்கிறாள். புன்சிரிப்புடன் கூடிய முகலாவண்யம் சந்திர பிம்பத்தைவிட மிகச் சிறந்ததாக இருக்கிறது. சாரதாம்பிகே, என்னைத் தூயமனமுள்ளவனாகச் செய்யவேணும்.

    -ஸ்ரீசாரதாம்பா ஸ்தோத்திர மாலிகா

    இறைவன், இறைவழிபாடு போன்றவை கூறும் வேதத்தின் பகுதி ஞானகாண்டம் எனப்படும். வேள்வி முதலிய கர்மாக்கள் குறித்துப் பேசும் வேதத்தின் பகுதியை கர்மகாண்டம் என்பர். மண்டனமிச்ரர், குமரிலபட்டர், ஜைமினி ஆகிய மூவரும் வேதத்தின் கர்மகாண்டத்தை மட்டும் பின்பற்றியவர்கள். விவசாயம் செய்தால் விளைச்சல் நமக்குப் பலனாகக் கிடைக்கிறது. அதுபோல், வேதங்கள் விதித்த கர்மங்களைச் செய்தால் அதற்குரிய பலன் தானே கிடைக்கும். இடையில் இறைவன் என்பவன் எதற்கு? என்பது அவர்களின் வாதம். மேற்கண்ட மூவரும் வலியுறுத்திய கொள்கையை, ‘பூர்வமீமாம்ஸ மதம்’ என்று அழைத்தனர்.

    மீமாம்ஸகர்கள் வீணில் வாதம் செய்து மக்களைக் குழப்பினார்கள். அந்தக் குழப்பத்தை நீக்கி, தெளிவை ஏற்படுத்த ஆதிசங்கரர் மண்டனமிச்ரருடன் வாதாடச் சென்றார்.  மாகிஷ்மதி என்ற நகரத்தில் பெரிய மாளிகையில் மண்டனமிச்ரர் வசித்து வந்தார். அவர் பிரமனின் அம்சமாகத் தோன்றியவர். அவருடைய மனைவி சரஸவாணி சரஸ்வதியின் அம்சமாகத் தோன்றியவர். மண்டனமிச்ரரின் இல்லத்தில் எப்போதும் பண்டிதர்கள் நிறைந்திருப்பார்கள். சரஸவாணி அறிவுக்கடலாகத் திகழ்ந்தவர். சரஸவாணி தமது இல்லத்திற்கு வருவோர் அனைவரையும் அன்புடன் வரவேற்று உணவளித்து உபசரிப்பார். இரண்டாவது சரஸ்வதி என்ற பொருளில் அவரை, ‘உபயபாரதி’ என்று போற்றினார்கள்.

    உபயபாரதியைக் காண மலைவாசிப் பெண்கள் சிலர் வந்தனர். அவர்களை உபயபாரதி அன்புடன் உபசரித்து மகிழ்ந்தாள். அப்பெண்கள் திரும்பிச் செல்லும் பொழுது, கவிதைகளைப் பாடிக் கொண்டு செல்வார்கள். மொத்தத்தில் மண்டனமிச்ரரின் இல்லம் இருவர் நடத்தும் பல்கலைக்கழகமாக விளங்கியது.
    மாகிஷ்மதி நகரத்தை அடைந்த ஆதிசங்கரர், மண்டனரின் இருப்பிடம் குறித்து, தெருவில் சென்று கொண்டிருந்த பெண்களிடம் கேட்டார். அவர்கள், ‘‘சுவாமி! அதோ, அந்தத் தெருவில் இருக்கும் பெரிய மாளிகைதான் மண்டனமிச்ரரின் வீடு. வீட்டு வாசலில் ஒரு கிளிக்கூண்டு தொங்கிக் கொண்டிக்கும். அந்தக் கூண்டில் இருக்கும் கிளிகள் வேதாந்தம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்!’’ என்று கூறினர்.

    மண்டனர் இல்லத்தில் அவருடனும், உபயபாரதி சரஸவாணியுடனும் அறிஞர்கள் பலரும் வேதாந்த சர்ச்சை செய்வார்கள். அதனைக் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்ட கிளிகளும் வேதாந்தம் பேசத் தொடங்கி விட்டன. அப்பெண்கள், மண்டனமிச்ரர் மாளிகை குறித்துக் கூறிய சொற்களும் இலக்கியச் சுவையுடன் இருந்ததைக் கேட்ட சங்கரர் வியந்தார்.

    சங்கரர் மண்டனமிச்ரரின் இல்லத்தை அடைந்தார். பெண்கள் கூறியபடி, கூண்டுக்கிளிகள் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்தன. அப்போது வீட்டுக் கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. வெளியில் இருந்த சிலர் மண்டனமிச்ரர் தமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் (திதி-நினைவுநாள்) செய்து கொண்டு இருப்பதாகக் கூறினர்.

    சங்கரருக்கு உடனே மண்டனரைக் காண வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. ‘‘சிரார்த்தம் நிறைவுபெறும் வரை, எவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம்’’ என்று கண்டிப்பாகக் கூறியிருந்தார் மண்டனர். சங்கரர் மண்டனரை உடனே காண விரும்பினார். ஆனால் ‘‘எதற்காக இங்கு வந்தீர்?’’ என்று மண்டனமிச்ரர் கோபத்துடன் வினவினார். ‘‘நான் வாத பிச்சைக்காக வந்தேன்’’ என்று பதிலளித்தார் சங்கரர். ஜைமினியும் வியாசரும் சிரார்த்திற்குரிய வேதியர்களாக வந்திருந்தனர். அவர்கள், ‘‘முன்னோர் நினைவு நாளில் கோபம் கொள்ளுதல் தகாது என்று மண்டனருக்கு எடுத்துக் கூறினார்கள்.

    அத்துடன் சங்கரரை வரவேற்று மகாவிஷ்ணு இலையில் அமர்த்தி உபசரிக்கும்படியும் கூறினார்கள். சிரார்த்தநாளில் திருமாலே வந்து ஓர் இலையில் அமர்ந்து சாப்பிடுவதாகப் பாவனை செய்து ஓர் இலையில் பதார்த்தங்களைப் படைத்து வைப்பது மரபு. அந்த இலையில்தான் ஆதிசங்கரரை அமர்த்தி உபசரிக்கப் பணித்தனர். மண்டனரும் சங்கரரை நமஸ்கரித்து, ‘‘பிச்சைக்கு எழுந்தருள வேண்டும்’’ என்று வேண்டினார். சிரார்த்த தினத்திற்கு அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாம் என்று ஜைமினியும் வியாசரும் கூறினார்கள்.

    இருவரும் அதற்கு உடன்பட்டனர். மண்டன மிச்ரர்-சங்கரர் வாதிடும் அரங்கத்திற்கு யாரை நடுவராக நியமிப்பது? மண்டனமிச்ரரின் மனைவி சரஸவாணி நடுவராகப் பணியாற்றத் தகுந்தவர் என்று வியாசரும் ஜைமினியும் கூறினர். நேர்மையாளராகிய மண்டன மிச்ரர் முதலில் அதற்கு உடன்படவில்லை. ஆதிசங்கரர் சரஸவாணி நடுவராக இருப்பதை, ஆட்சேபிக்கவில்லை. சமகாலத்தில் தலைசிறந்த கல்வியாளராக விளங்கிய சரஸவாணியே நடுவராகப் பணியாற்றத் தகுந்தவர் என்றும் சங்கரர் கூறினார்.

    இருபெரும் மேதைகள் வாதம் செய்கிறார்கள் என்ற செய்தி எங்கும் பரவியது. ஏராளமானோர் வாத அரங்கத்தில் வந்து கூடினர். சங்கரரும் மண்டனமிச்ரரும் ஒருவரையருவர் வணங்கி, எதிரெதிரே, அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். சரஸவாணி உயர்ந்த மேடையில் அமர்ந்தார். அவருக்குத் தர்மசங்கடம். ஒரு பக்கத்தில் மகான் ஆதிசங்கரர் மறுபக்கத்தில் சமகால மேதையும் தன்னுடைய கணவருமாகிய மண்டனமிச்ரர்.

    வாதிடும் இருவரையும் கழுத்தில் ஒரு மாலையை அணிந்து வாதத்தைத் தொடங்கச் சென்னாள் சரஸவாணி. எவருடைய மாலை முதலில் வாடுகிறதோ, அவரே வாதத்தில் தோற்றவர் ஆவார் என்று கூறினாள் சரஸவாணி. அதுபோல், மண்டனமிச்ரரும் சங்கரரும் தங்களுக்குள் ஒரு நிபந்தனை விதித்துக் கொண்டனர்.

    அதன்படி, வாதத்தில் ஆதிசங்கரர் தோற்றால், இல்லறம் மேற்கொண்டு மீமாம்ஸகர் ஆக வேண்டும். மண்டனமிச்ரர் தோற்றால், அவர் துறவியாகி அத்வைத சித்தாந்தத்தை ஏற்க வேண்டும். இந்த நிபந்தனையுடன் வாதப்போர் தொடங்கியது. அது இருபத்தோரு நாள்கள் தொடர்ந்து நடந்தது.

    இறுதியில் மண்டனமிச்ரரின் மாலை வாடியது. சரஸவாணி கலைமகளின் அம்சம் அல்லவா? தீர்ப்பை நேரிடையாகக் கூறாமல், புத்தி சாதுரியத்துடன் கணவரையும் சங்கரரையும் வணங்கி, ‘‘பிச்சைக்கு வாருங்கள்’’ என்று அழைத்தாள். இல்லறத்தாரை, ‘‘விருந்துக்கு வாருங்கள்’’என்றோ, ‘‘திருவமுதுக்கு வாருங்கள்’’ என்றோ அழைக்க வேண்டும். துறவிகளை, ‘‘பிச்சைக்கு வாருங்கள்’’ என்று அழைக்க வேண்டும்.

    சரஸவாணியின் அழைப்பின் உட்குறிப்பை உணர்ந்த மண்டனமிச்ரர் தான் தோற்றதை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார். உடனே துறவியாகிவிட்டார். அன்றுமுதல், மண்டனமிச்ரர், ‘சுரேச்வராச்சார்யர்’ என்னும் திருநாமம் பெற்றார். மண்டனர் துறவி மேற்கொண்டு, அத்வைதியாகி, சங்கரரின் சீடராக அவரைப் பின் தொடர்ந்து சென்றார். சரஸவாணி, தன் மூலமூர்த்தியாகிய மகாசரஸ்வதியுடன் இணைய சத்தியலோகத்திற்குப் புறப்பட முற்பட்டாள். சங்கரர் சரஸ்வதியின் அம்சமான சரஸவாணியின் சாந்நித்தியம் பூவுலகில் நிலைத்திருக்க விரும்பினார்.

    வனதுர்கா மந்திரத்தால் தேவதைகளை வசமாக்க இயலும். சங்கரர் அந்த வனதுர்கா மந்திரத்தால் சரஸவாணியை வசமாக்கித் தன்னுடன் அழைத்து வந்தார். உபயபாரதி, மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவளாக, வான வழியில் சங்கரரைத் தொடர்ந்து சென்றாள். சுரேஸ்வராச்சாரியர் உள்ளிட்ட சீடர்கள் பின்தொடர, சங்கரர் காடு மலைகளைக் கடந்து கர்நாடக மாநிலத்தை அடைந்தார்.

    தெளிந்த நீர்ப்பெருக்குடன் ஓடிய துங்கா நதியைக் கண்டனர். இயற்கை வளத்துடன் எழில் கொஞ்சிய அந்த ஆற்றின் கரையில் ஓர் அற்புதக் காட்சியைக் கண்டனர். பூரண கர்ப்பமாக இருந்த ஒரு தவளை பிரசவ வேதனை பட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தவளைக்கு நல்லபாம்பு ஒன்று படமெடுத்து, நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. பகைமை உணர்வு இல்லாத இடமே தெய்வசக்திகள் நிலைத்து இருக்கத் தகுந்த புண்ணிய பூமியாகும்.

    வானவெளியில் வந்து கொண்டிருந்த உபயபாரதி அந்த இடத்தில் கீழே இறங்கி, துங்கா நதிக்கரையில் நடந்தாள். அவளுடைய மாணிக்கச் சிலம்புகள் ஒலித்தன. தேவி, கீழே நடக்கிறாள் என்று அறிந்தார் சங்கரர். மணற் பகுதியில் நடந்து வந்த உபயபாரதியின் சிலம்புகளில் மணல் புகுந்தது. அதனால், சிலம்புகள் ஒலிக்கவில்லை. பின்னால் திரும்பிப் பார்த்தார் சங்கரர். உபயபாரதி அங்கு நிற்பதை உணர்ந்தார். சற்றே கண்மூடித் தியானித்தார். அப்போது அவருக்கு, சரஸ்வதி தன் தரிசனத்தைக் காட்டியருளினாள்.

    சரஸ்வதி, வாணி, வாக்தேவி, கலைமகள் அளித்த தரிசனத்தில் பரவசம் அடைந்தார் சங்கரர். போற்றினார். அங்கு இருந்த ஒரு பாறையில் தேவி சரஸ்வதியை ஸ்ரீசாரதையாக யந்த்ரத்தில் ஆவாகனம் செய்தார். தேவியும் உள்ளம் உவந்தவளாக அங்கு நிலைத்து இருந்து பக்தர்களுக்கு அருள் புரியத் தொடங்கினாள்.

    மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பல பகுதிகள் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையவை. பம்பை, சபரிமலை ஆகியவை இன்றும் மிகவும் பிரபலமாக விளங்குகின்றன. அதுபோல், ‘ரிஷ்யசிருங்ககிரி’ என்ற இடமே தற்காலத்தில் சிருங்கேரி என வழங்கி வருகிறது. சிருங்கேரிக்கு அருகில் விபாண்டகர் ஆச்ரமம் என்ற இடம் உள்ளது. ரிஷ்யசிருங்கர் விபாண்டக முனிவரின் குமாரர் ஆவார். ரிஷ்யசிருங்கரைத் தசரதன் அயோத்திக்கு அழைத்துச் சென்று, புத்ரகாமேஷ்டி யாகத்தை நடத்தினான். அவருடைய பெயரால் அழைக்கப்பட்ட தலம் சிருங்கேரி.

    வராகம் (பன்றி) போன்ற உருவமுள்ள ஒரு மலை உள்ளது. அதனை வராகமலை என்பர். அந்த மலையிலுள்ள ஒரு பாறையின் அடியிலிருந்து துங்கா, பத்ரா என்ற இரண்டு ஆறுகளும் உற்பத்தியாகின்றன. வராக அவதாரமெடுத்த திருமாலின் இரண்டு தெத்திப்பற்களே இரண்டு நதிகளாக ஓடுகின்றன என்பது ஐதீகம்.

    துங்காநதியை நாராயணனாகவும், பத்ராநதியைச் சங்கரனாகவும் கருதுகின்றனர். இரண்டும் ஒன்றாகக் கலந்த பிறகு உருவாகும் துங்கபத்ராநதி சங்கரநாராயண உருவம் அடைவதாக ஐதீகம். சம்பிரதாயமாக இந்த பீடத்தை தட்சிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் என்று அழைப்பர். (தட்சிணாம்னாய என்றால் தெற்கு திசையில் உள்ள என்று பொருள்).

    ஸ்ரீ சாரதா பீடத்திற்கு பிரதான வேதமாக யஜூர் வேதத்தை அறிவித்தார் ஸ்ரீ சங்கரர். கைலாசத்தில் இருந்தே தருவிக்கப் பெற்ற ஸ்ரீ சந்திரமவுலீஸ்வர ஸ்படிக லிங்கத்தையும், ஸ்ரீ ரத்தினகர்ப் கணபதி விக்கிரகத்தையும் மற்றும் மகாமேரு யந்த்ரத்தையும் பீடத்தின் நித்ய பூஜைக்கென ஸ்ரீ சங்கரர் அளித்தார். (இந்த அபூர்வ தெய்வீக விக்கிரகங்கள் 1200 வருடங்களுக்கும் மேலாக இன்றும் பீடத்தின் பூஜையில் இருந்து வருகின்றன.)

    ஸ்ரீ சாரதா பீடத்தின் நிர்வாகத்தை தமது முக்கிய சீடரும் சாட்சாத் நான்முக பிரம்ம தேவனின் அவதாரமாகவே கருதப்பட்டவருமான ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியாரிடம் ஸ்ரீ சங்கரர் ஒப்படைத்தார். ஸ்ரீ சுரேஸ்வரருக்குப் பின்பும் ஸ்ரீ சாரதா பீடம் நிலைத்தோங்கும் என்றும் வருங்காலத்தில் இந்த பீடத்தின் ஆசார்யர்களாக திகழ்பவர்கள் அனைவரும் நம்முடைய அம்சம் பொருந்தியவர்களாகவே இருப்பார்கள் என்றும் ஸ்ரீ சங்கரர் ஆசீர்வதித்தார்.

    அம்மகானது அருள்மொழிகளுக்கேற்ப வாழையடி வாழையாக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஜகத்குரு பரம்பரை தொடர்ந்து வருகிறது. ஸ்ரீ சுரேஸ்வரரைத் தொடர்ந்து இந்த மகா பீடத்தின் ஜகத்குருநாதராக பொறுப்பேற்று வரும் அனைவருமே பெரும் பண்டிதர்களாகவும் கருணாமூர்த்திகளாகவும் ஞான முனிவர்களாகவும் விளங்கி வருகின்றனர்.

    ஸ்ரீ ஆதிசங்கரரின் அருள் அம்சங்களாகவே விளங்கி வரும் இவர்களை ஸ்ரீ சங்கராசார்யா என்றே பக்தர்கள் அழைத்து பூஜித்து வருகின்றனர். இந்த இணையற்ற பரம்பரையில் 36-வது ஜகத்குருநாதராக தற்போது ஸ்ரீ பாரதி தீர்த்த சங்கராசார்ய மகா சுவாமிகள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றார்கள்.
    Next Story
    ×