search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிரஞ்சீவி வரம்"

    • விபீஷணனுக்கு ராமன் `சிரஞ்சீவி’ வரம் அளித்தார்.
    • யாரேனும் ராமஜெயம் சொல்ல, அதை நான் காதுகுளிர கேட்க வேண்டும்.

    அனுமனுக்கு `சிரஞ்சீவி' வரம் அளித்தார் ராமன். அதேபோல ராவண வதத்திற்குப் பிறகு, இலங்கைக்கு அரசனான விபீஷணனுக்கு முடிசூட்டி வைத்த ராமன் அவனுக்கும் `சிரஞ்சீவி' வரம் அளித்தார். அப்போது ராமருக்கு ஒரு சந்தேகம் உண்டானது. `தான் மட்டும் தான் சிரஞ்சீவி' என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனுமன், தற்போது விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டதை நினைத்து வருந்துவானோ' என்று நினைத்த ராமர், அது பற்றி அனுமனிடம் கேட்கவும் செய்தார்.

    அதற்கு பதில் அளித்த அனுமன். `எங்கே நான் ஒருவன் மட்டுமே சிரஞ்சீவியாக இருந்து விடுவேனோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளையாக விபீஷணனையும் சிரஞ்சீவியாக்கி விட்டீர்கள். எனக்கு சந்தோஷம் தான் ராமா' என்று பணிவுடன் பதில் சொன்னார் அனுமன்.

    `அதெப்படி, உனக்கு சந்தோஷம்?' என்று ராமன் கேட்டார்.

    `நான் சிரஞ்சீவி என்றால் இந்த உலகம் முற்றிலும் அழிந்த பிறகும் நான் நிலைத்திருப்பேன் என்பதுதானே? நான் தனி ஒருவனாக இருந்தால், என் காதுகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடுமே. யாரேனும் ராமஜெயம் சொல்ல, அதை நான் காதுகுளிர கேட்க வேண்டும் என்ற என் ஆசை, நான் தனித்து நிற்கும் போது ஈடேறாது அல்லவா? தற்போது விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டதால் அவர் `ராம' நாமம் உச்சரித்துக் கொண்டே இருப்பார், நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். இந்தப் பேறு நான் தனிஆளாக இருந்தால் கிடைக்காதே" என்று பணிவுடன் சொன்னார், அனுமன்.

    ×