search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சச்சின் பைலட்"

    • சச்சின் பைலட் 2020-ம் ஆண்டு காங்கிரசுக்கு எதிராக கொடி பிடித்தவர்.
    • பைலட் காங்கிரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதில் அமித்ஷாவுக்கு தொடர்பு உள்ளது.

    புதுடெல்லி :

    ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், அங்கு முதல்-மந்திரியாக துடிக்கிற சச்சின் பைலட்டுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது.

    இந்த நிலையில், அசோக் கெலாட் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சச்சின் பைலட் 2020-ம் ஆண்டு காங்கிரசுக்கு எதிராக கொடி பிடித்தவர். எனது அரசை கவிழ்க்க முயன்றார். துரோகியான அவரை ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆக்க முடியாது.

    பைலட் காங்கிரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு உள்ளது. அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களை ஒரு மாதத்துக்கும் மேலாக குருகிராமில் ஒரு விடுதியில் தங்க வைத்தனர். மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்தார். பைலட் உள்ளிட்ட அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு உதவும் என கட்சித்தலைமை கருதினால், என்னை மாற்றட்டும். பைலட் தவிர்த்து 102 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் யாரை வேண்டுமானாலும் முதல்-மந்திரி ஆக்கட்டும். கட்சியின் தலைவர், தனது சொந்த கட்சியின் அரசை கவிழ்க்க முயற்சித்த உதாரணத்தை ஒருவரும் கண்டிருக்க முடியாது.

    இதுவரை அவர் எம்.எல்.ஏ.க்களிடம் மன்னிப்பு கேட்டதில்லை.

    அவர் மன்னிப்பு கேட்டிருந்தால், நான் (சோனியாவிடம்) மன்னிப்பு கேட்க வேண்டி வந்திருக்காது.

    கட்சித்தலைமை பைலட்டை முதல்-மந்திரியாக்க முடிவு எடுத்தால், என்ன செய்வீர்கள் என கேட்கிறீர்கள்.

    இது அனுமானத்தின் அடிப்படையிலானது. இது எப்படி நடக்கும்? அது நடக்காது.

    ராஜஸ்தானுக்கு காங்கிரஸ் தலைமை நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள்தான் உள்ளன.
    • கட்சியின் சட்ட திட்டங்களும், விதிகளும் எல்லோருக்கும் ஒன்றுதான்.

    ஜெய்ப்பூர் :

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக்கெலாட் போட்டியிட விரும்பினார். ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதால், அவர் கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், அங்கு முதல்-மந்திரியை மாற்றி விடலாம் என முடிவுக்கு வந்தது. குறிப்பாக நீண்ட காலமாக அந்தப் பதவி மீது கண் வைத்துள்ள சச்சின் பைலட்டை முதல்-மந்திரி ஆக்க முடிவு எடுத்தது. இதற்காக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய மேலிடம் மல்லிகார்ஜூன கார்கேயையும், அஜய் மக்கானையும் ராஜஸ்தான் அனுப்பியது.

    ஆனால் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க அசோக் கெலாட் முன்வரவில்லை. எனவே மேலிட முடிவுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதுடன், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் போட்டி கூட்டமும் நடத்தினர். இது கட்சி விரோத செயலுக்காக பார்க்கப்பட்டது.

    இதையொட்டி மந்திரிகள் சாந்தி தாரிவால், மகேஷ் ஜோஷி, ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் தர்மேந்திர ரத்தோர் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

    ஆனால் அசோக் கெலாட், சோனியா காந்தியை சந்தித்து பேசி தனது ஆதரவாளர்களின் செயல்களுக்கு தார்மீகப்பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டதுடன், காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார். இத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது என கருதப்பட்டது.

    ஆனால் அது நீறுபூத்த நெருப்பாக தொடர்கிறது.

    இந்த விவகாரத்தில் இப்போது சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி உள்ளார். காங்கிரஸ் தலைமையின் முடிவுக்கு எதிராக செயல்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    கட்சி விரோத நடவடிக்கைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள்தான் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் போன்று என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை விரைவாக எடுக்க வேண்டும்.

    கட்சியின் சட்ட திட்டங்களும், விதிகளும் எல்லோருக்கும் ஒன்றுதான். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

    ஒரு நிகழ்ச்சியின்போது ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். இதை எளிதாக எடுத்துக்கொண்டு விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விவகாரத்தில் சச்சின் பைலட்டின் போர்க்கொடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    • காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து அசோக் கெலாட் பின்வாங்கினார்.
    • புதிய முதல்-மந்திரி விவகாரத்தில் சச்சின் பைலட் மீது அவர் மறைமுகமாக சாடியுள்ளார்.

    ஜெய்ப்பூர்

    ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். இதனால் ராஜஸ்தான் முதல்-மந்திரியாக தற்போதைய துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுமார் 90 பேர் பதவி விலக முடிவு செய்தனர். இதனால் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்படவே, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து அசோக் கெலாட் பின்வாங்கினார்.

    இந்த நிலையில் புதிய முதல்-மந்திரி விவகாரத்தில் சச்சின் பைலட் மீது அவர் மறைமுகமாக சாடியுள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'ஒரு முதல்-மந்திரி மாற்றப்படும்போது 80 முதல் 90 எம்.எல்.ஏ.க்கள் அணி மாற முன்வந்திருக்கின்றனர். அவர்கள் புதிய முதல்-மந்திரிக்கு எதிராக திரும்பியுள்ளனர். இது தவறு என நானும் நினைக்கவில்லை. ஆனால் ஒரு புதிய முதல்-மந்திரியின் பெயரை கேட்டதுமே எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ராஜஸ்தானில் இது முதல்முறை' என சச்சின் பைலட் பெயரை குறிப்பிடாமல் குற்றம் சாட்டினார்.

    மாநிலத்தில் முதல்-மந்திரி மாற்றம் நிகழுமா? என்ற கேள்விக்கு, 'அது குறித்து கட்சித்தலைமைதான் முடிவு எடுக்கும், நான் எனது பணிகளை செய்கிறேன்' என்று பதிலளித்தார்.

    • கெலாட் ராஜஸ்தான் முதல்வராக நீடிப்பது தொடர்பாக சோனியா காந்தியே முடிவு செய்வார்
    • ராஜஸ்தானில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சி மாறி மாறி வருவதாக அடிக்கடி விவாதிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப் போட்டி தலைதூக்கிய நிலையில், முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். டெல்லியில் இன்று சோனியா காந்தியை சந்தித்து பேசிய பின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கட்சியில் ஏற்பட்ட நெருக்கடிக்கு தார்மீக பொறுப்பேற்று இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார். மேலும், ராஜஸ்தான் முதல்வராக நீடிப்பதா, வேண்டாமா? என்பது தொடர்பாக சோனியா காந்தியே முடிவு செய்வார் என்றும் கூறினார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், அசோக் கெலாட்டின் போட்டியாளரான சச்சின் பைலட் இன்று டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பைலட், 2023 தேர்தல் வெற்றிக்கே முன்னுரிமை அளிப்பதாக கூறினார்.

    'ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சி மாறி மாறி வருவதாக அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. 2023ல் ராஜஸ்தானில் இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது என்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை. வெற்றியை நோக்கி நாங்கள் செயல்படுவோம், என்றார் சச்சின் பைலட்.

    • சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு
    • அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. இதையடுத்து முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின் பைலட் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள், போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

    2020-ம் ஆண்டு அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்களுடன் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை வழங்கக் கூடாது என கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பைலட் போர்க்கொடி தூக்கியபோது கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    இதற்கிடையே, 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று இரவில் சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சச்சின் பைலட்டை முதல்வராக்க கட்சித் தலைமை திட்டமிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. நிலைமையை உணர்ந்த மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட்டை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே இது பற்றி அசோக் கெலாட்டிடம் பேசி இருக்கிறார். ஆனால் அசோக் கெலாட், தன் கையில் எதுவும் இல்லை என்றும், எம்எல்ஏக்கள் தன் மீது உள்ள பாசத்தில் இப்படி செய்கிறார்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.

    இது ஒருபுறமிருக்க, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் மேலிடப் பார்வையாளர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய்மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் வந்திருந்தனர். அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் கூட்டத்தை நடத்துவதற்காக காத்திருந்தனர். சச்சின் பைல்ட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சென்றனர். கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் வராததால் கூட்டம் நடைபெறவில்லை. இதன்மூலம் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது.

    ×