search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகதி"

    • குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று திடீர் என்று சகதியில் சிக்கிக் கொண்டது.
    • சுமார் 2 மணி நேரம் போராடி கயிற்றின் மூலம் கட்டி மீட்டனர்.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே நாடான்குளம் பகுதியில் பன்ணிகுண்டு குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் கால்நடைகள் அடிக்கடி இறங்குவது வழக்கம். சம்பவத்தன்று குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று திடீர் என்று சகதியில் சிக்கிக் கொண்டது. அதில் இருந்து வெளியே வரமுடியாமல் அந்த பசு, பல மணி நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். உடனே இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் குளத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சகதியில் சிக்கிய அந்த பசுமாட்டை தீயணைக்கும் படை வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி கயிற்றின் மூலம் கட்டி மீட்டனர்.

    • மதுரையில் மழை பெய்தால் சகதிக்காடாகும் மாநகர சாலைகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்



    செல்லூர் 60 அடி ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த 2 வார காலமாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 11-ந்தேதி நகரில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஏற்கனவே மதுரை நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக மேலும் சாலைகள் மோசமாகி தண்ணீர் தேங்கியும், சகதிகளாக மாறியும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

    இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர். மதுரையில் சாலைகளில் திடீர் திடீரென உருவாகியுள்ள புதிய பள்ளங்களால் விபத்துகளும் ஏற்படுகிறது. பெண்கள், குடும்பத்துடன் செல்வோர் அடிக்கடி சாலைகளில் பள்ளத்தில் விழுந்து சிக்குவதை காண முடிகிறது. மதுரை நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் சாலை வசதி சரியாக இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

    சிறிது நேரம் கனமழை பெய்தாலே மதுரையின் மையப் பகுதிகளான பெரியார் பஸ் நிலையம், மாசி வீதிகள், மீனாட்சி அம்மன் கோவில் சுற்றியுள்ள பகுதிகள். மேல வெளி வீதி, விளக்குத்தூண், வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, அவனியாபுரம், காமராஜர் சாலை, மாட்டுத்தாவணி- ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இந்த தண்ணீர் மறுநாள் காலை வரை வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    அண்மையில் தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாசி வீதிகள், விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலைகள் போடப்பட்டன. ஆனால் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவசரகதியில் பணிகள் நடைபெற்றதால் தற்போது மழை நீர் வடியாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு மழை பெய்தால் கூட முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது.

    தொடர்மழை காரணமாக குலமங்கம் ரோடு, செல்லூர் 60 அடி ரோடு, காளவாசல்-தேனி பிரதானசாலை, புதுராமநாதபுரம் ரோடு, மேலமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்கள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

    அந்த வழிகளில் செல்லும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பயந்தபடியே வாகனத்தில் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. மழைநீர் வடியாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. மழைக்காலங்களில் சரியாக குப்பைகள் அள்ளப்படாததாலும் பல இடங்களில் துர்நாற்றம் வீசியபடி இருக்கிறது. இதனால் தண்ணீர் தேங்காத வகையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • புளியம்பட்டி தெருவில் சேரும் சகதியுமாக சாலைகளில் காட்சியளிக்கிறது.
    • பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

    சாம்பவர்வடகரை:

    சாம்பார்வடகரை 2-வது வார்டு புளியம்பட்டி தெருவில் உள்ள பொதுமக்கள் சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரில் புளியம்பட்டி தெருவில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ள கழிவு நீர்களும் வாறுகால் வசதி பயனளிக்காமல் சேரும் சகதியுமாக சாலைகளில் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லாததால் பொதுமக்கள் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

    • தற்காலிக சந்தை சேறும், சகதியுமாக உள்ளது.
    • காமராஜா் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இன்று முதல் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 17.50 கோடி மதிப்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 304 கடைகளும், 170 இரு சக்கர வாகனங்கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 20 லாரிகள் நிறுத்தவும் இட வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக இப்பணி நடைபெற்றதையொட்டி, புதுக்கோட்டை சாலையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. தொடா் மழை காரணமாக தற்காலிக சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டதால், காமராஜா் சந்தையைத் திறக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

    இந்நிலையில், காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூா் காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. மழைக்காலமாக இருப்பதால், தற்காலிக சந்தை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, காமராஜா் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இன்று முதல் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்தச் சந்தையில் வியாபாரம் செய்ய ஏற்கெனவே மாநகராட்சி நிா்வாகத்திடம் அதற்கான முன்வைப்புத் தொகை செலுத்திய வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் முறைப்படி இந்தச் மார்க்கெட்டை காணொலி மூலம் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவா் மேத்தா, மாநகராட்சி செயற் பொறியாளா் ஜெகதீசன், உதவி பொறியாளா்கள் காா்த்தி, ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • சாலை வழியே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
    • இறந்தவர்கள் உடலை தூக்கிக் கொண்டு இச்சாலையில் செல்ல முடியாமல், சில நேரங்களில் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கீழக்–கரையிருப்பு-புறாக்கிராமம் இடையே மண் சாலை அமைந்துள்ளது. கீழக்–கரையிருப்பு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் அன்றாடம் இச்சாலை வழியேதான் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சாலை முழுவதுமாக சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலை வழியே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.மழைக்காலங்களில் இச்சாலை வழியே செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இக்கிரா–மத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய உடலை தூக்கிக் கொண்டு சேறும் சகதியுமான இச்சாலையில் செல்ல முடியாமலும், சில நேரங்களில் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.

    5 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமாகி கிடக்கும் இச்சாலையை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுத்தும் இதுவரை சீரமைத்து தரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன் இந்த சாலையை சீரமைத்துத்தர அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×