search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகர சாலைகள்"

    • மதுரையில் மழை பெய்தால் சகதிக்காடாகும் மாநகர சாலைகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்



    செல்லூர் 60 அடி ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த 2 வார காலமாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 11-ந்தேதி நகரில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஏற்கனவே மதுரை நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக மேலும் சாலைகள் மோசமாகி தண்ணீர் தேங்கியும், சகதிகளாக மாறியும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

    இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர். மதுரையில் சாலைகளில் திடீர் திடீரென உருவாகியுள்ள புதிய பள்ளங்களால் விபத்துகளும் ஏற்படுகிறது. பெண்கள், குடும்பத்துடன் செல்வோர் அடிக்கடி சாலைகளில் பள்ளத்தில் விழுந்து சிக்குவதை காண முடிகிறது. மதுரை நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் சாலை வசதி சரியாக இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

    சிறிது நேரம் கனமழை பெய்தாலே மதுரையின் மையப் பகுதிகளான பெரியார் பஸ் நிலையம், மாசி வீதிகள், மீனாட்சி அம்மன் கோவில் சுற்றியுள்ள பகுதிகள். மேல வெளி வீதி, விளக்குத்தூண், வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, அவனியாபுரம், காமராஜர் சாலை, மாட்டுத்தாவணி- ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இந்த தண்ணீர் மறுநாள் காலை வரை வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    அண்மையில் தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாசி வீதிகள், விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலைகள் போடப்பட்டன. ஆனால் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவசரகதியில் பணிகள் நடைபெற்றதால் தற்போது மழை நீர் வடியாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு மழை பெய்தால் கூட முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது.

    தொடர்மழை காரணமாக குலமங்கம் ரோடு, செல்லூர் 60 அடி ரோடு, காளவாசல்-தேனி பிரதானசாலை, புதுராமநாதபுரம் ரோடு, மேலமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்கள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

    அந்த வழிகளில் செல்லும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பயந்தபடியே வாகனத்தில் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. மழைநீர் வடியாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. மழைக்காலங்களில் சரியாக குப்பைகள் அள்ளப்படாததாலும் பல இடங்களில் துர்நாற்றம் வீசியபடி இருக்கிறது. இதனால் தண்ணீர் தேங்காத வகையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×