search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருமுட்டை வியாபாரம்"

    • மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை சார்பில் சம்மந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் 9 முறை கருமுட்டை எடுத்ததாகவும் இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    சென்னை:

    ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக ஈரோடு, சேலத்தில் உள்ள சுதா ஆஸ்பத்திரி, பெருந்துறை, ஓசூரில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட 4 ஆஸ்பத்திரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

    மேலும் இந்த ஆஸ்பத்திரிகளில் செயல்படும் ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கவும், ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு மருத்துவ குழுவினர் சீல் வைத்தனர். மேலும் பெருந்துறையில் உள்ள மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.

    இதை எதிர்த்து சுதா ஆஸ்பத்திரி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை உடனடியாக அகற்ற உத்தரவிட்டும், மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும் உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை சார்பில் சம்மந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் 9 முறை கருமுட்டை எடுத்ததாகவும் இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    • இளம்பெண்ணை முதலில் ஐஸ்வர்யா நன்றாக கவனித்துக்கொண்டுள்ளார்.
    • ஐஸ்வர்யாயின் கணவர் பெயர் சூரஜ் ஜெனிஸ் கண்ணா. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    திருவொற்றியூர்:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

    இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் சென்னையிலும் பட்டதாரி பெண்ணிடம் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 4-வது பிளாக் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். பட்டதாரி பெண்ணான இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து கணவர் தாக்கியதில் இளம்பெண் காயம் அடைந்தார். இதுபற்றி எண்ணூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணைக்கு பின்னர் இளம்பெண்ணின் கணவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இதன் பின்னர் கணவருடன் வாழ பிடிக்காத இளம்பெண் திருவொற்றியூர் என்.டி.குப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது தோழியான ஐஸ்வர்யாவின் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

    முதலில் இளம்பெண்ணை, ஐஸ்வர்யா நன்றாக கவனித்துக்கொண்டுள்ளார். ஐஸ்வர்யாயின் கணவர் பெயர் சூரஜ் ஜெனிஸ் கண்ணா. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் சூரஜ் ஜெனிஸ் கண்ணாவும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து இளம்பெண்ணின் உடலில் இருந்து கருமுட்டையை எடுத்து சட்ட விரோதமாக விற்பனை செய்ய திட்டமிட்டனர்.

    இதையடுத்து பெண் புரோக்கர் ஒருவர் மூலமாக தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து இளம்பெண்ணின் கருமுட்டையை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    அவரது ஆலோசனையின் பேரில் இளம்பெண்ணை தாம்பரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பயந்து போன இளம்பெண் இதுபற்றி பிரிந்து சென்ற தனது கணவரிடம் போன் செய்து கூறியுள்ளார். அவர் நீ வீட்டுக்கு வா பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து தோழி ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு சென்று சொல்லி விட்டு வந்து விடுகிறேன் என கூறி இளம்பெண் அங்கு சென்றுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யாவும், அவரது கணவரான ஜெனிஸ் கண்ணாவும் சேர்ந்து இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக தாக்கியதுடன் அடித்து உதைத்தும் துன்புறுத்தி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இங்கு இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்து கொண்ட இளம்பெண் அங்கிருந்து தப்பிச்சென்று திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கருமுட்டை விற்பனை தொடர்பாக தாம்பரம் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்றும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    பெண் புரோக்கர் யார்? என்பதை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம் தனியார் ஆஸ்பத்திரி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    • சிறுமியிடம் இருந்து மட்டும் 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது.
    • மேலும் சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கருமுட்டை மூலம் கிடைத்த பணத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை ஆகியோர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

    சிறுமியிடம் இருந்து மட்டும் 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, டாக்டர்கள் ஊழியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மற்றும் உயர்மட்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.

    பாதிக்கப்பட்ட சிறுமி சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரிடம் தனித்தனியாக மருத்துவப் பணிகள் குழு டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறையில் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இன்று தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் உறுப்பினர்கள் மல்லிகா, துரைராஜ், சரண்யா ஜெயக்குமார், முரளிகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கருமுட்டை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி, சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார், மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் கருமுட்டை விவகாரம் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் இது தொடர்புடைய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரம் குறித்தும் கேட்டறிந்தனர்.

    • கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் ஆவணங்களை ஜான் தான் போலியாக தயாரித்து கொடுத்தார். இதன் அடிப்படையில் அவரிடம் மருத்துவ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    • போலி ஆவணம் தயாரிக்க எவ்வளவு பணம் கொடுத்தார்கள். அந்த பணத்தை யார் கொடுத்தது? மேலும் யாருக்காவது இது போன்று போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து உள்ளீர்களா? என அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கருமுட்டை மூலம் கிடைத்த பணத்தில் புரோக்கர் மாலதி கமிஷனாக 5000 ரூபாய் எடுத்துக் கொண்டு மீதி 20 ஆயிரம் ரூபாயை சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தையிடம் கொடுத்துள்ளார். இந்த பணம் மூலம் அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வாறு சிறுமியிடம் இருந்து மட்டும் 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவர்கள், ஊழியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மற்றும் உயர் மட்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு, சித்தோடு அருகே உள்ள ஆர்.என். புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக கழிப்பறையை கழுவும் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் சிறுமி டிசார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் அதே காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையிலும், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த ஜான் ஈரோடு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரக அலுவலர்கள் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இன்று ஒரு நாள் 4 பேரிடமும் சிறை விதிகளுக்கு உட்பட்டு விசாரித்துக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் மருத்துவக்குழுவினர் ஈரோட்டுக்கு வந்தனர். இன்று காலை 9 மணி அளவில் மருத்துவ குழுவினர் முதலில் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் டிரைவர் ஜானிடம் விசாரணை நடத்துவதற்காக வந்தனர். இரண்டு கார்களில் மருத்துவ குழுவினர் வந்து இறங்கினர்.

    பின்னர் மருத்துவக் குழுவினர் ஜானிடம் விசாரணையை தொடங்கினர். கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் ஆவணங்களை ஜான் தான் போலியாக தயாரித்து கொடுத்தார். இதன் அடிப்படையில் அவரிடம் மருத்துவ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். போலி ஆவணம் தயாரிக்க எவ்வளவு பணம் கொடுத்தார்கள். அந்த பணத்தை யார் கொடுத்தது? மேலும் யாருக்காவது இது போன்று போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து உள்ளீர்களா? என அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.

    ஜானிடம் விசாரணை முடித்துக் கொண்ட மருத்துவ குழுவினர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் உள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தையிடம் விசாரணை நடத்த சென்றனர். அவரிடம் விசாரணை முடித்துக் கொண்டு இன்று மாலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுமியின் தாய், புரோக்கர் மாலதி ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த விசாரணை முடிவில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    • வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை எடுக்கப்பட்டதாலும் கடந்த சில நாட்களாக சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் வளர்ப்பு தந்தை அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்த ஜான் உள்பட 4 பேரை ஈரோடு சூரம்பட்டி போலீசார் போக்சோ உள்பட 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    தொடர்ந்து சிறுமியின் கருமுட்டை பெற்ற ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள், நிர்வாகிகளிடம் ஈரோடு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி விசாரணை நடத்தினார்.

    இதேபோல் உயர்மட்ட மருத்துவ குழுவினரும் தனியார் மருத்துவமனைகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி அவர்களிடமும் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்போது ஈரோடு ஆர்.என். புதூர் அருகே உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கருமுட்டை எடுக்கப்பட்டதாலும் கடந்த சில நாட்களாக சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    காப்பகத்தில் அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மேலும் இதுகுறித்து சிறுமி காப்பக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இறுதியில் சிறுமிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எதுவும் அவரது வயிற்றில் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

    காப்பகத்தில் இருந்த சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்டு உள்ளார். ஆனால் தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதால் அவரை தொடர்ந்து காப்பகத்தில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனால் சிறுமி மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என தகவல் வெளியானது.

    இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-

    தற்போது சிறுமி நலமாக உள்ளார். அவருக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அவருக்கு சில கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

    இன்று மீண்டும் சிறுமிக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. அது முடிந்ததும் இன்று மதியம் அல்லது மாலைக்குள் சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் காப்பத்துக்கு அழைத்து செல்லப்படுவார் என்றனர். சிறுமி சிறிதளவே அமிலத்தை குடித்ததால் உயிர் தப்பினார்.

    • சிறுமியிடம் கருமுட்டை எடுத்த திருப்பதி, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது.
    • சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, ஆதார் அடையாள அட்டை திருத்தி கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் மருத்துவ துறை இணை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினரும் சிறுமி மற்றும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.

    இதுதவிர சிறுமியிடம் கருமுட்டை எடுத்த திருப்பதி, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் இது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கொடுமை என்னவென்றால் கன்னி தன்மையுடன் இருப்பவர்களின் கருமுட்டை பயன்பெறாது என்பதால் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருமுட்டையை எடுத்துள்ள செயல் கொடூரமான செயல் ஆகும்.

    இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைகளின் தவறு நிரூபிக்கப்பட்டால் தயவு தாட்சனையின்றி அந்த மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இது சம்பந்தமாக சென்னை மருத்துவதுறை இணை இயக்குனரகத்தின் மருத்துவகுழு விசாரணை நடத்தியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மகப்பேறு மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    ஈரோட்டில் தொடர்ந்து கருமுட்டையை தானமாக கொடுத்து வந்த ஒரு பெண் தனது மகளையும் கருமுட்டை கொடுக்க வைத்துள்ளார். இதில் சிறுமியின் கருமுட்டை வலுவில்லை என்று கூறி சிறுமியின் வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளளனர்.

    பொதுவாகவே ஒரு குழந்தை பிறக்கும்போதே ஆயிரக்கணக்கான கருமுட்டையுடன் பிறக்கும். அது பூப்பெய்தும்போதுதான் கருமுட்டை வளர்ச்சி அடைகிறது. பொதுவாகவே கர்ப்பப்பையின் இரண்டு பக்கங்களிலும் மாதத்திற்கு ஒரு கருமுட்டை உருவாகும். ஒரு மாதம் இடதுபக்கம் கருமுட்டை உருவானால் அடுத்த மாதம் வலது பக்கம் கருமுட்டை உருவாகும். இந்த கருமுட்டைகளை விந்தணுக்கள் துளைக்கும்போது கர்ப்பம் உருவாகிறது.

    எனவே கருமுட்டை வளர்ச்சி என்பது வேறு. பாலியல் தொல்லை என்பது வேறு. இதை தெரியாமலேயே சிறுமியின் கருமுட்டை வலுவில்லை என்று கூறி அவரது வளர்ப்பு தந்தை சிறுமியை பலமுறை கற்பழித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோட்டில் உள்ள 2 தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவர்களை நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள்.
    • நேற்றும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, இடைத்தரகர் மாலதி, சிறுமியின் பெயர், வயதை மாற்றி போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் 12 வயதில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 8 முறை கருமுட்டையை விற்பனை செய்ததும், ஒவ்வொரு முறையும் விற்பனை செய்யும் போதும் ரூ.25 ஆயிரம் மருத்துவமனையிலிருந்து பெற்றோர் பணம் பெற்றதும் தெரியவந்தது.

    ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் உள்ளிட்ட மருத்துவமனைகள் மட்டுமல்லாது ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள கருவூட்டல் மையங்களில் சிகிச்சை பெற்று வந்த பெண்களுக்காக ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

    ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ குழுவினர் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் மருத்துவமனைகளில் நேரடியாக சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

    அடுத்ததாக திருப்பதி, திருவனந்தபுரம் மருத்துவமனைகளிலும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக திருப்பதி, திருவனந்தபுரம் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு, விதிமீறல் உள்ளிட்டவை குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் உள்ள 2 தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவர்களை நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள். நேற்றும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    கரு முட்டை விற்பனை தொடர்பாக ஏற்கனவே மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில சந்தேகங்கள் தொடர்பாக 2-வது கட்டமாக நேற்று முன்தினம் முதல் விசாரணை நடத்தி வருகிறோம்.

    சிறுமி என்பது தெரிந்தே கருமுட்டை எடுக்கப்பட்டதா? அல்லது போலி ஆதார் அட்டையை நம்பி அதன் அடிப்படையில் கருமுட்டை எடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. சில ஆவணங்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து கேட்டு பெற்று அதன்படி விசாரணை நடத்தப்பட்டது என்றனர்.

    • சிறுமி வாக்குமூலம் படி ஆந்திரா, கேரளா மாநிலங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
    • கருமுட்டை விற்பனை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நிறைவடைந்தும் அதன் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியுடன் வசித்து வந்த பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    பின்னர் அந்த பெண்ணிற்கு பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து வசித்து வந்தார். இந்நிலையில் அந்தப் பெண் கருமுட்டை கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

    அப்போது அவருக்கு கருமுட்டையை கமிஷன் அடிப்படையில் கொடுக்கும் புரோக்கர் மாலதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது மாலதி உங்களது மகள் மூலமும் கருமுட்டையை கொடுத்து நிறைய சம்பாதிக்கலாம் என்று அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

    இதையடுத்து அந்த சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தையான பெயிண்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். கருமுட்டையை ஆஸ்பத்திரிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்து உள்ளார். இதற்காக அந்த சிறுமியின் வயதை அதிகரித்து காட்டுவதற்காக போலி ஆதார் அட்டை தயாரித்து கருமுட்டையை அந்த சிறுமியிடம் இருந்து எடுத்துள்ளனர்.

    போலி ஆவணத்தை ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான் (25) என்பவர் தயாரித்துக் கொடுத்துள்ளார். ஈரோடு, சேலம், ஓசூர் உள்பட பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் அந்த சிறுமியை அவரது தாய் மற்றும் வளர்ப்புத் தந்தை அழைத்துக் கொண்டு 8 முறை கருமுட்டை எடுத்துள்ளனர். ஒவ்வொரு முறை அந்த சிறுமி கருமுட்டை கொடுத்தவுடன் அந்த சிறுமியின் தாய்க்கு ரூ.20 ஆயிரமும், புரோக்கர் மாலதிக்கு ரூ. 5 ஆயிரம் கமிஷனாக ஆஸ்பத்திரி சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த பணத்தை கொண்டு சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். தொடர்ந்து கருமுட்டை கொடுத்ததால் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் வளர்ப்புத் தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால் சிறுமி அவர்களிடமிருந்து தப்பித்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

    உறவினர்களிடம் நடந்த விஷயத்தை கூறி கதறி சிறுமி அழுது உள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதன் பிறகே இந்த விவகாரம் வெளியுலகத்துக்கு தெரிய வந்தது.

    16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் ஏற்கனவே போக்சோ உள்பட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினார்.

    இந்த சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் சென்னையில் உள்ள மருத்துவ பணிகள் இயக்குனரகத்தின் துணை இயக்குனர் குருநாதன், இணை இயக்குனர் (சட்டம்) விசுவநாதன், ஈரோடு மருத்துவ பணிகள் துணை இயக்குனர் கோமதி, மகப்பேறு டாக்டர்கள் மலர்விழி, கதிரவன் உள்பட 6 பேர் கொண்ட குழுவினர் ஈரோட்டுக்கு வந்தனர்.

    மருத்துவ குழு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மருத்துவக் குழுவிடம் கண்ணீர் மல்க கூறினார்.

    முதலில் அந்த சிறுமி என்ன கூறினார் என்ற தகவல் வெளிவரவில்லை. தற்போது அந்த சிறுமி மருத்துவக் குழுவிடம் கூறிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் தனது தாய் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக தனது வளர்ப்புத் தந்தை உடன் சேர்ந்து தனக்கு பல வகையில் தொல்லை கொடுத்துள்ளார்.

    குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக கருமுட்டை விற்பனைக்காக வளர்ப்பு தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருவனந்தபுரம், திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் 8 முறை தன்னிடமிருந்து கருமுட்டை எடுக்கப்பட்டதாகவும், கருமுட்டை எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்டது என்ற விவரத்தையும் அந்த சிறுமி கூறி அழுதுள்ளார்.

    சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட மருத்துவக்குழு விசாரணையை தீவிரப்படுத்தியது.

    பின்னர் மருத்துவ குழு ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. மருத்துவ குழுவினர் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர், ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கருமுட்டை தானம் எடுக்கும் முன்பு அரசு குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? எந்த சான்றிதழ் அடிப்படையில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப்பட்டது. அந்த சிறுமிக்கு திருமணம் ஆகி விட்டதை உறுதி செய்தீர்களா? உட்பட பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்டனர்.

    மேலும் அந்த சிறுமி தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இந்நிலையில் நேற்று 2-வது நாளாக இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் மருத்துவ குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மற்றும் ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது 2018ஆம் ஆண்டு முதல் எத்தனை பேருக்கு செயற்கை கருவூட்டல் நடந்தது என்பதை கண்டறிய அதன் ஆவணங்களை ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட மருத்துவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆவணங்கள் அடிப்படையில் கருமுட்டை எடுக்கப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இணை இயக்குனர் விஸ்வநாதன் கூறியதாவது:-

    கருமுட்டை விற்பனை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நிறைவடைந்தும் அதன் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்படும். விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறுமி வாக்குமூலம் படி ஆந்திரா, கேரளா மாநிலங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்க செய்த சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோர் 4 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்களில் 4 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் மருத்துவ குழுவின் முழு விசாரணை முடிந்த பிறகு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
    • வளர்ப்புத் தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்தும், எந்தெந்த ஆஸ்பத்திரிகளில் தனது கருமுட்டை எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரத்தையும் சிறுமி விரிவாகக் கூறினார்.

    ஈரோடு:

    ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் அவரது தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த சூரம்பட்டி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஜான் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் இந்த சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் சென்னை மருத்துவ பணிகள் இயக்குனரகத்தின் துணை இயக்குனர் குருநாதன், இணை இயக்குனர் (சட்டம்) விசுவநாதன், ஈரோடு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, டாக்டர்கள் மலர்விழி, கதிரவன் உள்பட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    நேற்று மருத்துவ குழுவினர் ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்த மருத்துவக் குழுவிடம் கண்ணீர் மல்க கூறினார்.

    அதில் தனது வளர்ப்புத் தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்தும், எந்தெந்த ஆஸ்பத்திரிகளில் தனது கருமுட்டை எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரத்தையும் சிறுமி விரிவாகக் கூறினார்.சிறுமியின் வாக்குமூலத்தை மருத்துவக்குழுவினர் பதிவு செய்து கொண்டனர்.

    அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பி ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மதியம் 3 மணி அளவில் விசாரணைக்கு வந்தனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர், ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கருமுட்டை தானம் எடுக்கும் முன்பு அரசு குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? எந்த சான்றிதழ் அடிப்படையில் அந்த சிறுமியிடம் இருந்து கருமுட்டை தானம் எடுக்கப்பட்டது. அந்த சிறுமிக்கு திருமணம் ஆகி விட்டதை உறுதி செய்தீர்களா? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டனர். மேலும் அந்த சிறுமி தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

    3 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8 மணி வரை அதாவது 5 மணி நேரம் வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் விசாரணையை முடித்துக் கொண்டு வெளியேறினர். பெருந்துறைக்கு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணையை தொடங்கினர்.

    அங்கு 8.30 மணிக்கு விசாரணையை தொடங்கி அவர்கள் நள்ளிரவு 12.30 மணி வரை விசாரணையை மேற்கொண்டனர். அந்த மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் சரமாரியாக கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். பின்னர் அந்த சிறுமி தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மருத்துவ குழுவினர் 2-வது நாளாக சேலத்திற்கு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கருமுட்டை எடுத்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்கின்றனர். தொடர்ந்து இன்னும் 2 நாட்கள் அந்த மருத்துவ குழுவினர் பல்வேறு மருத்துவமனையில் சென்று விசாரணையை மேற்கொள்கின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

    இதுகுறித்து மருத்துவ பணிகள் இயக்குனரக இணை இயக்குனர் (சட்டம்) விஸ்வநாதன் கூறியதாவது:-

    இந்த விவகாரத்தில் ஈரோடு மட்டுமின்றி பிற ஊர்கள், மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது. ஏனெனில் அங்கும் கருமுட்டை விற்பனை நடந்துள்ளது.

    முழுமையாக விசாரித்த பின்னரே முழு விவரம் வெளியே தெரியவரும். சிறுமி தற்போது நல்ல நிலையில் உள்ளார். முழுமையான விசாரணை முடிந்த பிறகு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை நடந்து இருந்தால் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும். டாக்டர்கள் உடந்தையாக இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×