search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode Jail"

    • கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் ஆவணங்களை ஜான் தான் போலியாக தயாரித்து கொடுத்தார். இதன் அடிப்படையில் அவரிடம் மருத்துவ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    • போலி ஆவணம் தயாரிக்க எவ்வளவு பணம் கொடுத்தார்கள். அந்த பணத்தை யார் கொடுத்தது? மேலும் யாருக்காவது இது போன்று போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து உள்ளீர்களா? என அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கருமுட்டை மூலம் கிடைத்த பணத்தில் புரோக்கர் மாலதி கமிஷனாக 5000 ரூபாய் எடுத்துக் கொண்டு மீதி 20 ஆயிரம் ரூபாயை சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தையிடம் கொடுத்துள்ளார். இந்த பணம் மூலம் அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வாறு சிறுமியிடம் இருந்து மட்டும் 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவர்கள், ஊழியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மற்றும் உயர் மட்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு, சித்தோடு அருகே உள்ள ஆர்.என். புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக கழிப்பறையை கழுவும் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் சிறுமி டிசார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் அதே காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையிலும், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த ஜான் ஈரோடு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரக அலுவலர்கள் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இன்று ஒரு நாள் 4 பேரிடமும் சிறை விதிகளுக்கு உட்பட்டு விசாரித்துக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் மருத்துவக்குழுவினர் ஈரோட்டுக்கு வந்தனர். இன்று காலை 9 மணி அளவில் மருத்துவ குழுவினர் முதலில் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் டிரைவர் ஜானிடம் விசாரணை நடத்துவதற்காக வந்தனர். இரண்டு கார்களில் மருத்துவ குழுவினர் வந்து இறங்கினர்.

    பின்னர் மருத்துவக் குழுவினர் ஜானிடம் விசாரணையை தொடங்கினர். கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் ஆவணங்களை ஜான் தான் போலியாக தயாரித்து கொடுத்தார். இதன் அடிப்படையில் அவரிடம் மருத்துவ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். போலி ஆவணம் தயாரிக்க எவ்வளவு பணம் கொடுத்தார்கள். அந்த பணத்தை யார் கொடுத்தது? மேலும் யாருக்காவது இது போன்று போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து உள்ளீர்களா? என அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.

    ஜானிடம் விசாரணை முடித்துக் கொண்ட மருத்துவ குழுவினர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் உள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தையிடம் விசாரணை நடத்த சென்றனர். அவரிடம் விசாரணை முடித்துக் கொண்டு இன்று மாலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுமியின் தாய், புரோக்கர் மாலதி ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த விசாரணை முடிவில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ×