search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்- தனியார் ஆஸ்பத்திரியில் நள்ளிரவு வரை மருத்துவ குழுவினர் விசாரணை
    X

    சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்- தனியார் ஆஸ்பத்திரியில் நள்ளிரவு வரை மருத்துவ குழுவினர் விசாரணை

    • ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
    • வளர்ப்புத் தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்தும், எந்தெந்த ஆஸ்பத்திரிகளில் தனது கருமுட்டை எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரத்தையும் சிறுமி விரிவாகக் கூறினார்.

    ஈரோடு:

    ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் அவரது தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த சூரம்பட்டி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஜான் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் இந்த சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் சென்னை மருத்துவ பணிகள் இயக்குனரகத்தின் துணை இயக்குனர் குருநாதன், இணை இயக்குனர் (சட்டம்) விசுவநாதன், ஈரோடு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, டாக்டர்கள் மலர்விழி, கதிரவன் உள்பட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    நேற்று மருத்துவ குழுவினர் ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்த மருத்துவக் குழுவிடம் கண்ணீர் மல்க கூறினார்.

    அதில் தனது வளர்ப்புத் தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்தும், எந்தெந்த ஆஸ்பத்திரிகளில் தனது கருமுட்டை எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரத்தையும் சிறுமி விரிவாகக் கூறினார்.சிறுமியின் வாக்குமூலத்தை மருத்துவக்குழுவினர் பதிவு செய்து கொண்டனர்.

    அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பி ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மதியம் 3 மணி அளவில் விசாரணைக்கு வந்தனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர், ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கருமுட்டை தானம் எடுக்கும் முன்பு அரசு குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? எந்த சான்றிதழ் அடிப்படையில் அந்த சிறுமியிடம் இருந்து கருமுட்டை தானம் எடுக்கப்பட்டது. அந்த சிறுமிக்கு திருமணம் ஆகி விட்டதை உறுதி செய்தீர்களா? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டனர். மேலும் அந்த சிறுமி தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

    3 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8 மணி வரை அதாவது 5 மணி நேரம் வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் விசாரணையை முடித்துக் கொண்டு வெளியேறினர். பெருந்துறைக்கு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணையை தொடங்கினர்.

    அங்கு 8.30 மணிக்கு விசாரணையை தொடங்கி அவர்கள் நள்ளிரவு 12.30 மணி வரை விசாரணையை மேற்கொண்டனர். அந்த மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் சரமாரியாக கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். பின்னர் அந்த சிறுமி தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மருத்துவ குழுவினர் 2-வது நாளாக சேலத்திற்கு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கருமுட்டை எடுத்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்கின்றனர். தொடர்ந்து இன்னும் 2 நாட்கள் அந்த மருத்துவ குழுவினர் பல்வேறு மருத்துவமனையில் சென்று விசாரணையை மேற்கொள்கின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

    இதுகுறித்து மருத்துவ பணிகள் இயக்குனரக இணை இயக்குனர் (சட்டம்) விஸ்வநாதன் கூறியதாவது:-

    இந்த விவகாரத்தில் ஈரோடு மட்டுமின்றி பிற ஊர்கள், மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது. ஏனெனில் அங்கும் கருமுட்டை விற்பனை நடந்துள்ளது.

    முழுமையாக விசாரித்த பின்னரே முழு விவரம் வெளியே தெரியவரும். சிறுமி தற்போது நல்ல நிலையில் உள்ளார். முழுமையான விசாரணை முடிந்த பிறகு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை நடந்து இருந்தால் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும். டாக்டர்கள் உடந்தையாக இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×