search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பாக கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
    X

    சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பாக கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

    • ஈரோட்டில் உள்ள 2 தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவர்களை நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள்.
    • நேற்றும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, இடைத்தரகர் மாலதி, சிறுமியின் பெயர், வயதை மாற்றி போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் 12 வயதில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 8 முறை கருமுட்டையை விற்பனை செய்ததும், ஒவ்வொரு முறையும் விற்பனை செய்யும் போதும் ரூ.25 ஆயிரம் மருத்துவமனையிலிருந்து பெற்றோர் பணம் பெற்றதும் தெரியவந்தது.

    ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் உள்ளிட்ட மருத்துவமனைகள் மட்டுமல்லாது ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள கருவூட்டல் மையங்களில் சிகிச்சை பெற்று வந்த பெண்களுக்காக ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

    ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ குழுவினர் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் மருத்துவமனைகளில் நேரடியாக சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

    அடுத்ததாக திருப்பதி, திருவனந்தபுரம் மருத்துவமனைகளிலும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக திருப்பதி, திருவனந்தபுரம் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு, விதிமீறல் உள்ளிட்டவை குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் உள்ள 2 தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவர்களை நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள். நேற்றும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    கரு முட்டை விற்பனை தொடர்பாக ஏற்கனவே மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில சந்தேகங்கள் தொடர்பாக 2-வது கட்டமாக நேற்று முன்தினம் முதல் விசாரணை நடத்தி வருகிறோம்.

    சிறுமி என்பது தெரிந்தே கருமுட்டை எடுக்கப்பட்டதா? அல்லது போலி ஆதார் அட்டையை நம்பி அதன் அடிப்படையில் கருமுட்டை எடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. சில ஆவணங்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து கேட்டு பெற்று அதன்படி விசாரணை நடத்தப்பட்டது என்றனர்.

    Next Story
    ×