search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி நினைவு தினம்"

    • கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் பங்கேற்ற 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
    • கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், துயரும் அடைந்தேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் பங்கேற்ற 146-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் கருணாநிதி நினைவு அமைதி பேரணியில் மயங்கி விழுந்து கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், துயரும் அடைந்தேன்.

    மதுரவாயல் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரரான சண்முகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • காஞ்சிபுரத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
    • அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    காஞ்சிபுரம்:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு என அனைத்து பகுதிகளிலும் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    காஞ்சிபுரத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலை, பெரியார் தூண் அருகில் இருந்து சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதில் காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எழிலரசன் எம்.எல்.ஏ. , மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாவட்ட அலுவலகத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • இனம், மொழி, நாடு காக்க 95 வயது வரை உழைத்தீர்கள்.
    • நீங்கள் இருந்து செய்யவேண்டியதைத் தான் நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தாலாட்டில்

    கனிந்த இதயத்தோடு ஓய்வெடுக்கும் தலைவர் கலைஞரே!

    உங்களைக் காண ஆகஸ்ட் 7

    அதிகாலையில் அணி வகுத்து வருகிறோம்!

    உங்களுக்குச் சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன்...

    'உங்கள் கனவுகளை எல்லாம்

    நிறைவேற்றி வருகிறோம் தலைவரே!" -

    என்பதுதான் அந்த நல்ல செய்தி!

    நீங்கள் இருந்து செய்யவேண்டியதைத் தான்

    நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

    'பாதிச் சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன்;

    மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவான்' என்றார் காலம் வழங்கிய

    இரண்டாவது வள்ளுவன் எம் அண்ணா.

    95 வயது வரை நாளெல்லாம் உழைத்தீர்கள்.

    இனம் - மொழி - நாடு காக்க

    ஓய்வெடுக்காமல் உழைத்தீர்கள்.

    உங்கள் உழைப்பின் உருவக வடிவம் தான்

    இந்த நவீனத் தமிழ்நாடு.

    நீங்கள் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை

    இடையில் புகுந்த

    கொத்தடிமைக் கூட்டம் சிதைத்ததன் விளைவாக-

    தாழ்வுற்றது தமிழ்நாடு.

    தாழ்வுற்ற தமிழ்நாட்டை மீட்டெடுத்து

    மீண்டும் உங்கள் ஆட்சி காலத் தமிழ்நாடாக

    உருவாக்கி வளர்த்தெடுக்க

    எந்நாளும் உழைத்து வருகிறேன்.

    "ஸ்டாலின் என்றால் உழைப்பு ... உழைப்பு... உழைப்பு" என்றீர்கள்.

    அந்தக் கரகரக் குரல் தான்,

    கண்டிப்புக் குரலாக என்னை உழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

    "எனக்குப் பின்னால்,

    இனமானப் பேராசிரியருக்குப் பின்னால்

    யாரென்று கேட்டால்

    இங்கே அமர்ந்திருக்கும் ஸ்டாலின்" என்று

    எந்த நம்பிக்கை வைத்துச் சொன்னீர்களோ

    அந்த நம்பிக்கையைக் காக்கவே உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

    எட்டுக் கோடித் தமிழ் மக்களும் ஏதாவது

    ஒருவகையில் பயனடையும் திட்டத்தைத் தீட்டி

    திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை

    தித்திக்கும் மக்களாட்சி மாண்போடு நடத்தி வருகிறோம்.

    ஒற்றைக் கையெழுத்துப் போட்டால்

    அது கோடிக்கணக்கானவர்களை

    மகிழ்விக்கிறது.

    ஒரே ஒரு உத்தரவு

    லட்சக்கணக்கானவர்களை இரட்சிக்கிறது.

    தமிழ்நாடு தலைநிமிர்கிறது.

    இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்கிறது.

    உங்கள் கனவுகள் நிறைவேறும் காலமாக ஆகிவிட்டது,

    தலைவரே!

    நீங்கள் இருந்து செய்யவேண்டியதைத் தான்

    நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

    இதற்கு இடையில் -

    2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்

    எங்களை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    வழக்கமாய்

    ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தல் அல்ல இது.

    இந்தக் கட்சி ஆட்சியா?

    அந்தக் கட்சி ஆட்சியா?- என்பதற்கான விடையல்ல

    இந்தத் தேர்தல்.

    இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா?

    இருக்க முடியாதா?-என்பதற்கான தேர்தல் இது.

    நீங்கள் சொல்வீர்களே-

    'தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று

    இந்தியாவுக்காகக் குரல் எழுப்ப வேண்டும்' - என்று!

    அப்படித் தான் இந்தியா-வுக்கான குரலை எழுப்பத் தொடங்கி இருக்கிறோம்!

    அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு.

    இந்தியா-வுக்கான பாதை அமைத்ததும் தமிழ்நாடு.

    இது இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது.

    சுயமரியாதை-

    சமூகநீதி-

    சமதர்மம் -

    மொழி, இன உரிமை -

    மாநில சுயாட்சி -

    கூட்டாட்சி இந்தியா-என்ற உங்களது விரிந்த கனவுகளை

    இந்தியா முழுமைக்கும் அகலமாக விரித்துள்ளோம்.

    தி.மு.க. மாநிலக் கட்சி தான்!

    அனைத்து மாநிலங்களுக்கும்

    உரிமையைப் பெற்றுத் தரும் கட்சியாக

    இருக்க வேண்டும் என்ற

    உங்களது அந்தக் கனவும் நிறைவேறப் போகும் காலம்..

    வரும் காலம்!

    உங்கள் நூற்றாண்டு-

    நீங்கள் உருவாக்கிய

    நவீனத் தமிழ்நாட்டை

    நீங்களே ஆள்கிறீர்கள்.

    நீங்களே வாழ்கிறீர்கள்.

    நீங்களே வழிநடத்துகிறீர்கள்.

    உங்கள் வழி நடக்கும்

    எங்கள் வெற்றிக்கு வாழ்த்துங்கள்!

    வென்று வந்து காலடியில் அதனை வைக்கின்றோம் தலைவரே!

    - அன்புடன் மு.க.ஸ்டாலின்

    இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

    • ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.
    • மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு, புதுச்சேரியில் அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சென்னையில் அவரது நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி சென்னையில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியும் இன்று நடைபெற்றது.

    அண்ணசாலை ஓமந்தூரர் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதை தொடர்ந்து அவரது தலைமையில் அங்கிருந்து அமைதி பேரணி புறப்பட்டது. இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைதி பேரணியில் நடந்து சென்றனர்.

    இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்.பி., மு.க.தமிழரசு, ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தன்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிவசங்கர், பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, கீதா ஜீவன் உள்ளிட்ட அமைச்சர்கள்,

    எம்.எல்.ஏ.க்கள் ஜெ.கருணாநிதி, பல்லாவரம் இ.கருணாநிதி, தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, எழிலன், பரந்தாமன், இனிகோ இருதயராஜ், எஸ்.ஆர்.ராஜா, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், கிருஷ்ணசாமி, தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, மாவட்டச் செயலாளர்கள் நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், கவிஞர் காசி முத்து மாணிக்கம், பகுதிச் செயாளர்கள் மதன் மோகன், கே.ஏழுமலை, பல்லாவரம் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் வே.கருணாநிதி, ஏ.கே.கருணாகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், நித்யா, வழக்கறிஞர் ராஜாராமன், படப்பை மனோகரன், திருநீர்மலை ஜெயக்குமார், பாலவாக்கம் விசுவநாதன், சேப்பாக்கம் பகுதி பொருளாளர் வி.பி.சிதம்பரம், பாபா சுரேஷ் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

    இந்த பேரணி மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு சென்றடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினை டத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

    இதன் பிறகு அண்ணா நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது.
    • பேரணியில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றுள்ளனர்.

    ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற உள்ளது. அமைதி பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர். பேரணியில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 1 கி.மீ. தூரம் அமைதி பேரணியாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.

    • அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கி கொண்டவர் கருணாநிதி.
    • மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, திரைக்கதை வசன கர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, தமிழகத்தின் 5 முறை முதலமைச்சராக, உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், அண்ணாவோடு தி.மு.க.வில் தொடர்ந்து பணியாற்றி அவரது மறைவுக்கு பின்னர் தி.மு.க.வின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கி கொண்டவர் கருணாநிதி.

    அவரின் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள் உள்பட கட்சியின் முன்னணியினர் கலந்துகொள்ளும் அமைதி பேரணி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்படும்.

    பின்னர் மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.

    அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், இந்நாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக செயலாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.வின் அனைத்து அணியினரும் கருணாநிதியின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
    • திமுக தொண்டர்கள் பலர் கருப்பு சட்டை அணிந்துக் கொண்டு அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

    தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இதைதொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியும் தொடங்கியது. இந்த பேரணியில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களாக கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திமுக தொண்டர்கள் பலர் கருப்பு சட்டை அணிந்துக் கொண்டு அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

    ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கிய அமைதி பேரணி மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, மெரினாவில் உள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    • கருணாநிதி நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை.
    • வாலாஜா சாலை, மெரினா பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதி ஊர்வலம் நடத்துகிறது.

    ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கும் அமைதி ஊர்வலம் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைகிறது. இந்த ஊர்வலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் பங்கேற்க உள்ளனர்.

    மேலும், ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதேபோல், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளார்.

    ஊர்வலம் நடைபெற இருப்பதால், வாலாஜா சாலை, மெரினா பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ×