search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் உறுப்புகள் தானம்"

    • குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில் தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
    • தீபாஞ்சியின் மூளை 95 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தீப்பாஞ்சி (வயது40). ஐடிஐ படித்து முடித்து விட்டு பெயிண்டிங் தொழில் செய்து வந்தார்.

    கடந்த 15 ஆம் தேதி அன்று இவர் நல்லம்பள்ளியில், சேலம்-தருமபுரி சாலையில் ஒரு தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீபாஞ்சி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மூளை சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் உடல் உறுப்புகள் தானம் குறித்து தீப்பாஞ்சி குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் கூறிய போது அவரது சகோதரர் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில் தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உத்தரவின் பெயரில் மயக்கவியல் தலைமை மருத்துவர் முருகேசன் தலைமையில் மருத்துவ குழுவினர் மூளைச்சாவில் இறந்து போன தீப்பாஞ்சின் இருதயம், கணையம், கல்லீரல், கிட்னி ஆகிய நான்கு உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து சேலம், ஈரோடு, ஆகிய மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்தில் மரணம் அடைந்த தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மயக்கவியல் தலைமை மருத்துவர் முருகேசன் கூறும்போது:-

    விபத்தில் காயம் அடைந்த தீபாஞ்சியின் மூளை 95 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. மூளை செயல் இழந்து விட்டது. தொடர்ந்து செயற்கை வாசம் மூலமாக அவரது உடல் உறுப்புகள் இயங்கும் வகையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ள பல உயிர்களுக்கு மறுவாழ்வு கொடுத்ததாக இருக்கும் என்று இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்த ஆலோசனையை தீபாஞ்சியின் குடும்பத்தார் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு நாம் அனைவரும் நன்றி கூற வேண்டும். இறந்தவரின் உடலில் இருந்து பல உறுப்புகள் எடுக்கப்பட்டது. இந்த உடல் உறுப்புகளை பெறும் நபர்கள் நாளுக்கு நாள் உயிருக்கு போராடிக் கொண்ட நபர்கள்தான் அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்ததாக இருக்கும். மூளைச்சாவில் இறந்த தீபாஞ்சியின் மூலமாக இவர்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என தெரிவித்தார்.

    • உயிரிழந்த சிறுவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
    • மகனை இழந்து வாடும் தந்தை தண்டபாணி கண்ணீர் மல்க கூறும்போது குழந்தைகளை பெற்றோர் பத்திரமாகவும் அரவணைப்போடும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சென்னை சூளைமேடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் பிரசன்னா. 13 வயது சிறுவனான இவன் நேற்று மாலை தனது நண்பர்களோடு வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது எங்கிருந்தோ காற்றாடி ஒன்று பறந்து வந்தது. அதனை பார்த்ததும் பிரசன்னாவும் அவனது நண்பர்களும் காற்றாடியை பிடிக்க ஓடினார்கள். அப்போது காற்றாடி மாடி ஒன்றில் போய் விழுவது போல சென்றது. இதையடுத்து பிரசன்னாவும் மற்ற சிறுவர்களும் மாடியில் ஏறிச்சென்று காற்றாடியை எடுக்க ஓடினார்கள். மாடிகளில் ஏறிச்சென்று காற்றாடியை எடுப்பதற்காக பிரசன்னா அப்பகுதியில் 2- வது மாடிக்கு சென்றான்.

    அப்போது பக்கத்து மாடியில் பறந்து கொண்டிருந்த காற்றாடியை சிறுவன் பிரசன்னா எடுக்க முற்பட்டான். இதில் அவன் எதிர்பாராத விதமாக 2- வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் பலத்த காயம் அடைந்த பிரசன்னாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது பற்றி சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிரிழந்த சிறுவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதன்படி அவனது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.

    மகனை இழந்து வாடும் தந்தை தண்டபாணி கண்ணீர் மல்க கூறும்போது குழந்தைகளை பெற்றோர் பத்திரமாகவும் அரவணைப்போடும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற இழப்புகளை தவிர்க்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
    • மூளைச்சாவு அடைந்த சீனிவாசனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன.

    கோவை:

    விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 25). இவர் கோவையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தபோது அவினாசிசாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகே விபத்து ஏற்பட்டது.

    இதில் பலத்த காயமடைந்த சீனிவாசனுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கு கடந்த 9-ந் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையறிந்த சீனிவாசனின் பெற்றோர் இளமுருகன், கனகவல்லி ஆகியோர் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த சீனிவாசனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன.

    இதில் கல்லீரல், ஒரு சிறுநீரகம், இதயம், ஒரு சிறுநீரகம், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், நுரையீரல் சென்னையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மருத்துவர்கள் ஆலோசனைப்படி உறவினர்கள் சம்மதம் வழங்கினர்
    • கண்ணமங்கலத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதுப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா, தனது மகள்கள் லத்திகா (13),கோபிகா (10) ஆகியோர் படிப்புக்காக திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட சத்யா சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சத்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.இதனால் அவரது உடல் உறுப்புகளை மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர்.

    அவரது சத்யாவின் உடல் கண்ணமங்கலம் கொண்டு வந்து நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

    • விபத்தில் மூளைச்சாவு அடைந்தார்
    • கல்லீரல், கிட்னி வேலூர் சி.எம்சி. ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்டது

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஆர்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 39) ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை போளூர் ஆரணி ரோட்டில் உள்ள எட்டி வாடி அருகே பைக்கில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் சரவணன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சரவணனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.

    அவருடைய இதயம் ஒரு கிட்னி சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும்.கல்லீரல், ஒரு கிட்னி, ஆகியவை வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

    சரவணனுக்கு ரேகா என்ற மனைவியும் ஹயந்திகா என்ற மகளும், துஷ்யந்த் என்ற மகனும் உள்ளனர்.

    • நாகராஜ் ஜவுளிக்கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.
    • இறந்தவர்களின் உடலில் இருந்து தோல் தானத்தின் மூலம் தோல் எடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையம் நடூரை சேர்ந்தவர் வீரசாமி. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களது மகன் நாகராஜ்(31). இவர் ஜவுளிக்கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.

    இதனிடையே இவர் தீராத வயிற்று வலியால் அவதியுற்று வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நாகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் இறந்தை கண்டு கதறி அழுதனர்.

    இதையடுத்து நாகராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

    அப்போது உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். சோதனையில் உடலில் தோல், கண் ஆகியவையின் செல்கள் உயிருடன் இருந்ததை பார்த்தனர். இதையடுத்து நாகராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கண் மற்றும் தோலினை தானமாக வழங்க முடியுமா என கேட்டனர்.

    அதற்கு நாகராஜின் தாயாரும் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து நாகராஜின் கண், தோல் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.

    மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரி தொடங்கி 138 ஆண்டுகளில் இதுதான் முதன் முறையாக இறந்தவரின் உடலில் இருந்து கண், தோல் அறுவை சிசிச்சை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து டாக்டர் ஜெயராமன் கூறுகையில், இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் தோல் தீ மற்றும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவர்களுக்கு பொறுத்தப்படும். எச்.ஐ,வி மற்றும் டி.பி நோயினால் பாதிக்கப்படுவர்கள் தோல் தானம் செய்ய முடியாது. மாவட்டத்தில் மற்ற மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலில் இருந்து தோல் தானத்தின் மூலம் தோல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் இது முதன்முறை என தெரிவித்தார்.

    • சிவலிங்கம் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள், இதய வால்வு ஆகிய உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு தமிழக அரசு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை ஆணையத்திடம் வழங்கப்பட்டது.
    • உடல் உறுப்புகளை தானம் செய்த சிவலிங்கத்தின் உடலுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் பாலாஜி மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்தனர்.

    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் (42). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி வீரம்மாள் என்ற மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சிவலிங்கம் செல்லும்போது ஆரம்பாக்கம் அருகில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு எளாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

    அதனைத்தொடர்ந்து அவரது உறவினர்களின் முழு சம்மதத்துடன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதற்கான ஏற்பாடுகளை மருத்துவ குழுவினர் செய்தனர்.

    சிவலிங்கம் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள், இதய வால்வு ஆகிய உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு தமிழக அரசு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை ஆணையத்திடம் வழங்கப்பட்டது.

    அந்த ஆணையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நோயாளிகளுக்கு சிவலிங்கத்தின் உடல் உறுப்புகள் உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் பொருத்தப்படும். அவரது உடல் உறுப்புகள் மூலம் 6 பேருக்கு மறு வாழ்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    முன்னதாக உடல் உறுப்புகளை தானம் செய்த சிவலிங்கத்தின் உடலுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் பாலாஜி மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்தனர்.

    • மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
    • 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜாமணி. இவர்களுடைய மகன் கார்த்தி (வயது 24). இவர் திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 20-ந் தேதி இரவு திருவள்ளூரில் இருந்து வந்தவாசி நோக்கி தனது நண்பர் செந்தில் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து, அவரது பெற்றோர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது இதயம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் மியாட் மருத்துவமனை மூலம் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை முடித்து பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    மகனை விபத்தில் இழந்து தவித்தாலும் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் தொடர்ந்து கார்த்தி உயிரோடு இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக கூறி கதறி அழுதது காண்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    • விபத்தில் மரணமடைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
    • கடந்த 10-ந்தேதி மூளைச்சாவு அடைந்தார்

    பெரம்பலூர்:

    திருச்சி புத்தூர் பாத்திமா தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 65). இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாவட்ட குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிற்சங்க தலைவர், ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து வந்தார்.கடந்த மாதம் 30-ந்தேதி மகேந்திரன் தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழக்குடிகாடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு திருமாந்துறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த ஷேர் ஆட்டோ மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து கடந்த 10-ந்தேதி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில், மகேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதில் அவரது கண்கள், இருதயம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்படுகிறது. மேற்கண்ட விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • கடந்த 23-ந்தேதி பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு விவசாயி படுகாயம் அடைந்தார்.
    • விவசாயியை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரகாசத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி புதுவசூர் பேங்க் நகரை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 66) விவசாயி.

    இவர் கடந்த 23-ந்தேதி அந்த பகுதியில் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரகாசத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்‌.

    இன்று காலை அவரது கிட்னி சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும், கண்கள் வேலூர் சி.எம்.சி.க்கும் தானமாக வழங்கப்பட்டது.

    பிரகாசத்திற்கு கலா என்ற மனைவி பாலாஜி, ராஜசேகரன் என்ற மகன்கள் உள்ளனர்.

    • விபத்தில் மூளைச்சாவு அடைந்த கம்பம் மாணவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டது.
    • சாலைவிதிகளை முறையாக பின்பற்றி சென்றால் விபத்துகளை தவிர்ப்பதோடு உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் ஆதிசக்திவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தரசு. ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகன் சக்திகுமார்(19). உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற சக்திகுமார் விபத்தில் சிக்கினார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் மாணவரின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

    அதன்படி சக்திகுமாரின் இதயம், நுரையீரல் ஆகியவை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரிக்கும், மற்ெறாரு சிறுநீரகம் கோவை கே.எம்.சி.ஏ ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் ஸ்டைலாக வருவதையும், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் பைக்ரேஸ் போன்ற சாகசங்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. நண்பர்களுடன் ஒன்றாக செல்லும்போது ஆபத்தை உணராமல் அதிவேகத்தில் செல்வதால் விபத்தில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர்.

    ெபற்றோர்களும் தங்கள் குழந்தைக்கு நேரும் ஆபத்தை உணராமல் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் காலத்திலேயே விதவிதமான மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்து விடுகின்றனர். எனவே இதுபோன்ற மாணவர்கள் சாலைவிதிகளை முறையாக பின்பற்றி சென்றால் விபத்துகளை தவிர்ப்பதோடு உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம்.

    ×