search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனி திருமஞ்சனம்"

    • சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.
    • இன்று பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலாவுடன் ஆனி திருமஞ்சன விழா நிறைவு பெறுகிறது.

    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 6 மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த நாளில் தான், மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினசரி பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தினமும் காலை, மாலை சாமி வீதிஉலா நடைபெற்றது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

    தேர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நிலையை வந்தடைந்தது. பின்னர் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் ஊர்வலமாக கோவிலுக்குள் சென்று, ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    பின்னர், ஆனி திருமஞ்சன விழா நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. மதியம் 2 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 3 மணிக்கு கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    பின்னர், 3.45 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம், பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அதில் பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர் நடன பந்தலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் அளித்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் வல்லானே...!, நடராஜ பெருமானே...! சிவ, சிவ.. ஓம் நமசிவாய என்று விண்ணை முட்டும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர். இதையடுத்து மாலை 4 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழாமல் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியுடன் ஆனி திருமஞ்சன விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுடன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • ரிஷப தீர்த்தத்தில் நீராடல், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.

    மாமல்லபுரம்

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆனி மாத உத்திர திருமஞ்சன உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து நடராஜருக்கு அபிஷேகமும், பின்னர் வளாகத்தில் உள்ள ரிஷப தீர்த்தத்தில் நீராடல், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.

    நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுடன் மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள்.
    • நம்முடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுது ஆகும்.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் ருத்ராட்சை மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நேற்று ஆனி திருமஞ்சனம் என்பதால் ராேமசுவரம் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜர், சிவகாமி அம்மனை தரிசனம் செய்தனர்.

    திருஉத்திரகோசமங்கை திருத்தலத்தில் மங்களநாதர் மற்றும் மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் ஒரே கல்லினால் ஆன ஆடும் திருக்கோலத்தில் பச்சை மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் பாதுகாப்பு கருதி ஆண்டு முழுவதும் சந்தனம்பூசப்பட்டு ஆருத்ரா தரிசனத்தன்று பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்படும். இதுதவிர, ஆனி மாதத்தில் திருமஞ்சன திருவிழாவின்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

    பொதுவாக திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். நம்முடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுது ஆகும். இவ்வாறு தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமாகவும், காலைப்பொழுது மாசி மாதமாகவும், உச்சிக்காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவுப்பொழுது ஆவணி மாதமாகவும், அர்த்த சாமம் புரட்டாசி மாதம் என்றும் ஒவ்வொரு மாதங்களும் ஒவ்வொரு சிறப்பை பெற்றுள்ளன. அந்தவகையில் சந்தியா காலங்களாக விளங்கும் மார்கழியும், ஆனி மாதமும் தான் இறைவழிபாட்டிற்கு உகந்த மாதங்களாக கருதப்பட்டு வருகிறது. நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு 6 முறை விசேஷ அபிஷேக தினங்களாக கருதப்பட்டாலும், ஆனியும், மார்கழியும் சிறப்பு விசேஷ தினங்களாக கருதப்படுகிறது.

    இதன்படி திருஉத்தரகோசமங்கை கோவிலில் எழுந்தருளியுள்ள மரகத நடராஜருக்கு மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் சிறப்புக்குரிய நாட்களாக உள்ளன. ஆனி திருமஞ்சன தினமான நேற்று திருஉத்திரகோசமங்கை கோவிலில் அபூர்வ மரகத நடராஜர் சன்னதி முன்புறம் அமைந்துள்ள உற்சவ நடராஜருக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு பால், இளநீர், மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான மூலிகைகளை கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.

    உற்சவ நடராஜர் சந்தனகாப்பு அலங்காரத்தில் தாழம்பூ, வில்வமாலைகள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதன்பின்னர் நமசிவாய மந்திரங்கள் முழங்க உற்சவ மூர்த்தி வீதி உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன், செயல்அலுவலர் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • கலைகளைக் கற்று, உலகமெங்கும் புகழ்பெற விரும்புபவர்கள், வழிபட வேண்டிய தெய்வம் நடராஜர்.
    • நடராஜரை வழிபட சிறந்த மாதம், ஆனி மாதமாகும்.

    நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம் ஆனி மாதமாகும். நடராஜரை 'தில்லைக்கூத்தன்', 'ஆடலரசன்', 'கூத்தபிரான்' என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். கலைகளைக் கற்று, உலகமெங்கும் புகழ்பெற விரும்புபவர்கள், வழிபட வேண்டிய தெய்வம் நடராஜப் பெருமான். சிவாலயங்களில் சிவகாமியம்மன் உடனாய நடராஜப்பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருப்பார்.

    முயலகனை வதம் செய்த கோலத்தோடு அருளும் இந்த நடராஜர் தரிசனத்தை நாம் ஆலயங்கள் செல்லும் போதெல்லாம் கண்டு தரிசிக்க வேண்டும். நடராஜரை வழிபட சிறந்த மாதம், ஆனி மாதமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் அன்று, நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெறும். அப்போது நடராஜரை வழிபட்டால் நலம் யாவும் இல்லம் வந்து சேரும்.

    நாம் ஓடி ஆடி சம்பாதிக்கும் இந்த வாழ்க்கை, மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு அமைய, ஆனி மாத நடராஜர் வழிபாடு வழிகாட்டுகிறது. மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம், ஆனி மாதமாகும். மிதுனம், நவக் கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாகக் கருதப்படுகிறார். எனவே மாணவா்கள் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற, இந்த ஆனி மாதத்தில் நடைபெறும் நடராஜர் திருவிழாவில் கலந்துகொள்ளலாம்.

    சிவராத்திரியன்று இரவு முழுவதும் விழித்திருந்து, சிவாலயங்களுக்குச் சென்று சிவபுராணம் பாடி ஈசனை வழிபடுவோம். ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தைக் கண்டுகளிப்பவர்கள், பகல் முழுவதும் விரதமிருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் காண்பதோடு, நடராஜர் சன்னிதியில் சிவபுராணமும் பாட வேண்டும். 'திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவன் முன்பாக திருவாசகம் பாடினால், அவர் கரிசனத்தோடு நமக்கு அருள் செய்வார்.

    நாம் வாழ்வாங்கு வாழ, வாழ்வை வெல்ல, வெற்றிகளைக் குவிக்க, சிவன் திருவடியை போற்றி வணங்க வேண்டும் என்கிறார், மாணிக்கவாசகர். அல்லல் பிறவியறுப்பவனை, சொல்லற்கு அரியானை, தில்லையுள் கூத்தானை, தென்பாண்டி நாட்டானை ஆனி உத்திரத்தன்று வழிபட்டால் தேனினும் இனிய வாழ்க்கை அமையும். மனிதப் பிறவி எடுத்ததன் பயனே, இறைவனுடைய அழகைக் காண்பதற்காகத்தான். அந்த இறைவன் தரிசனம் தரும் ஆனி திருமஞ்சன நாளில் (6-7-2022) நாம் உள்ளன்போடு வழிபட்டு, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.

    • நடராஜர் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி திருமஞ்சன விழா நடராஜருக்கு உகந்த நாள் ஆகும். திருமஞ்சனம் என்றால் மங்கள நீராட்டு. சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமஞ்சனம் விழா என்றே அழைக்கப்படுகிறது. சிவ பெருமானின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுகிறது.

    அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்த பின்னரும், ஆனி மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். வெப்பத்தில் தகிக்கும் நடராஜர் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சிவ பெருமானின் அனைத்து தலங்களிலும் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    அதன்படி புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைதொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கும் மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், விபூதி, தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், திருவரங்குளம் அரங்குளநாதர்கோவில் உள்ளிட்ட சிவன் கோவிலில் நடராஜருக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆவுடையார்கோவில் வடநகர் ஆதிகைலாசநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் நடராஜர் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நடராஜர், சிவகாமி சுந்தரிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டுச் சென்றனர்.

    கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணியளவில் யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சிவகாமி அம்மாள் நடராஜருக்கு பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், மகாதீப ஆராதனையும் நடந்தது.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது மேலும் கோபி அருகே உள்ள பாரியூர் அமர பணீஸ்வரர் கோவிலிலும் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. சிவகாமி அம்பாள் நடராஜருக்கு பல்வேறு அபிஷேகங்களும் நடைபெற்றன. அங்கும் அன்னதானம் நடந்தது. கோபி, பாரியூர், வெள்ளாளபாளையம், நாய்க்கன் காடு, மொடச்சூர், கொளப்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டுச் சென்றனர்.

    கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி நடராஜர், சிவகாமி சுந்தரிக்கு பால், தயிர், இளநீர், எலுமிச்சம்பழம், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மகா தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் சாமியும், அம்பாளும் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்கள். பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்திருந்தார்கள். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • இன்று மதியம் 2 மணிக்கு பஞ்ச மூர்த்தி தீர்த்தவாரி நடக்கிறது.
    • நாளை (7-ந்தேதி) முத்துப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.

    பூலோக கைலாயமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடந்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்று முதல் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. அப்போது கைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் நிலையை வந்தடைந்ததும் அங்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய சாமிகள் ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனைக்கு பிறகு மஹா அபிஷேகம், சொர்ணா பிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற்றது.

    சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா இன்று (புதன்கிழமை) நடந்தது.

    இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.

    இன்று மதியம் 2 மணிக்கு பஞ்ச மூர்த்தி தீர்த்தவாரி நடக்கிறது. 3 மணி முதல் 4 மணிக்குள் சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்துக்கு புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் 3 முறை முன்னுக்குப்பின்னும் சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆனி திருமஞ்சன தரிசன காட்சி அருள்பாலிப்பார்கள்.

    அதனை தொடர்ந்து சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறுகிறது. நாளை (7-ந் தேதி) முத்துப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.

    ஆனி திருமஞ்சனத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்தனர். இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கோவிலில் சிவனடியார்கள் தேவாரமும், திருவாசகமும் பாடியபடி இருந்தனர்.

    இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள் கொண்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சிதம்பரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஆங்காங்கே பக்தர்களுக்கு அய்யப்ப சேவா சங்கம், தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

    • ஆனித்திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள்.
    • தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும்.

    சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் ஒன்று, நடராஜர் வடிவம். உலகை தன் உள்ளங்கால் பிடியில் சுழல வைக்கும் தத்துவத்தை உணர்த்தும் ஒப்பற்ற உருவமாக நடராஜர் வழிபடப்பட்டு வருகிறார். இந்த நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம், சித்திரை திருவோணம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்கள் என‌ வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந்தவை. இவ்விரண்டு விழாக்களும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பிரம்மோற்சவமாக மொத்தம் 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    'திருமஞ்சனம்' என்ற சொல்லுக்கு 'புனித நீராட்டல்' என்று பொருள். ஆனி திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் ஆராதனையைக் குறிக்கும். ஆனி மாத கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த ஆனி திருமஞ்சன விழா தொடங்குகிறது.

    இன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நடராஜரை வழிபாடு செய்தால் விருப்பங்கள் நிறைவேறும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை மட்டும் உண்டும் உபவாசம் இருக்கலாம்.

    விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், செல்வ வளமும் கூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.

    • சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
    • தேரோட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    சிதம்பரம் :

    பூலோக கைலாயமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடந்து வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆனி திருமஞ்சன விழா நடை பெறவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நடத்த கோவில் பொது தீட்சிதர்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம் கடந்த 27-ந்தேதி தொடங்கியது.

    அன்றைய தினத்தில் இருந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது. கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணியளவில் சித்சபையில் இருந்து சிவகாம சுந்தரி, நடராஜ மூர்த்தி சாமிகள் புறப்பட்டனர்.

    அதன் பின்னர் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனியே புறப்பட்டன. 5 சாமிகளும் தேர் நிற்கும் இடமான கீழரத வீதிக்கு புறப்பாடு ஆகி வந்தனர். அங்கு தனித்தனித் தேரில் எழுந்தருளினர். 9 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. கைலாய வாத்தியம் முழங்க பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேர் தெற்கு ரதவீதி, மேல ரதவீதி. வடக்கு ரதவீதி வழியாக கீழ ரதவீதிக்கு இன்று மாலை தேர் நிலையை வந்தடையும். அங்கு சிறப்பு தீபாராதனை காட்டப்படும். அதன்பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய சாமிகள் ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அங்கு தீபாராதனைக்கு பிறகு மஹா அபிஷேகம், சொர்ணாபிஷேகம், லட்சார்ச்சணை நடைபெறும்.

    சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெறும்.

    அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும், 2 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது.

    தேரோட்டத்தையொட்டி போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிதம்பரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
    • 5-ந்தேதி வெள்ளி படிச்சட்டம் வாகனத்தில் மாணிக்கவாசகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆத்மநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, மாணிக்கவாசகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழா நாட்களில் காலை, மாலை இருவேளையும் மாணிக்கவாசகர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். அதன்படி நேற்று 7-ம் நாள் திருவிழா நடைபெற்றது. இதையடுத்து காலை பிட்டு நேர்பட மண்சுமந்த பேரருள் காட்சியும், மாலை 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.

    இதையொட்டி 108 சங்குகள் மற்றும் குடங்களில் நீர் நிரப்பி வேத மந்திரங்கள் கூறி மாணிக்கவாசகருக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் குடங்களில் உள்ள புனித நீரையும், 108 சங்குகளில் உள்ள புனித நீரையும் ஊற்றி அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

    இன்று (சனிக்கிழமை) காலை வெள்ளி படிச்சட்டம் வாகனத்தில் எல்லாம் வல்ல சித்தர் பெருமான் காட்சியும், மாலை திருவாசகத்திற்கு பொருள் உரைத்த காட்சியும், இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் மதுரை பெருநன் மாநகர் தன்னில் குதிரை சேவகன் காட்சியும் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் மாணிக்கவாசகர் வலம் வருவார்.

    இரவு வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் நடராஜர் அலங்காரத்திலும், 4-ந்தேதி காலை பிச்சாடனர் அலங்கார காட்சியும், பஞ்சப்பிரகார சேவையும் நடக்கிறது. 5-ந்தேதி வெள்ளி படிச்சட்டம் வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் மாணிக்கவாசகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • புகழ்பெற விரும்புபவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் நடராஜர்.
    • ஆனி திருமஞ்சன நாளில் (6-7-2022) உள்ளன்போடு வழிபட்டு, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.

    நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம் ஆனி மாதமாகும். நடராஜரை 'தில்லைக்கூத்தன்', 'ஆடலரசன்', 'கூத்தபிரான்' என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். கலைகளைக் கற்று, உலகமெங்கும் புகழ்பெற விரும்புபவர்கள், வழிபட வேண்டிய தெய்வம் நடராஜப் பெருமான். சிவாலயங்களில் சிவகாமியம்மன் உடனாய நடராஜப்பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருப்பார்.

    முயலகனை வதம் செய்த கோலத்தோடு அருளும் இந்த நடராஜர் தரிசனத்தை நாம் ஆலயங்கள் செல்லும் போதெல்லாம் கண்டு தரிசிக்க வேண்டும். நடராஜரை வழிபட சிறந்த மாதம், ஆனி மாதமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் அன்று, நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெறும். அப்போது நடராஜரை வழிபட்டால் நலம் யாவும் இல்லம் வந்து சேரும்.

    நாம் ஓடி ஆடி சம்பாதிக்கும் இந்த வாழ்க்கை, மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு அமைய, ஆனி மாத நடராஜர் வழிபாடு வழிகாட்டுகிறது. மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம், ஆனி மாதமாகும். மிதுனம், நவக் கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாகக் கருதப்படுகிறார். எனவே மாணவா்கள் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற, இந்த ஆனி மாதத்தில் நடைபெறும் நடராஜர் திருவிழாவில் கலந்துகொள்ளலாம்.

    சிவராத்திரியன்று இரவு முழுவதும் விழித்திருந்து, சிவாலயங்களுக்குச் சென்று சிவபுராணம் பாடி ஈசனை வழிபடுவோம். ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தைக் கண்டுகளிப்பவர்கள், பகல் முழுவதும் விரதமிருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் காண்பதோடு, நடராஜர் சன்னிதியில் சிவபுராணமும் பாட வேண்டும். 'திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்பது பழமொழி.

    அந்த அடிப்படையில் நாம் இறைவன் முன்பாக திருவாசகம் பாடினால், அவர் கரிசனத்தோடு நமக்கு அருள் செய்வார். நாம் வாழ்வாங்கு வாழ, வாழ்வை வெல்ல, வெற்றிகளைக் குவிக்க, சிவன் திருவடியை போற்றி வணங்க வேண்டும் என்கிறார், மாணிக்கவாசகர். அல்லல் பிறவியறுப்பவனை, சொல்லற்கு அரியானை, தில்லையுள் கூத்தானை, தென்பாண்டி நாட்டானை ஆனி உத்திரத்தன்று வழிபட்டால் தேனினும் இனிய வாழ்க்கை அமையும். மனிதப் பிறவி எடுத்ததன் பயனே, இறைவனுடைய அழகைக் காண்பதற்காகத்தான். அந்த இறைவன் தரிசனம் தரும் ஆனி திருமஞ்சன நாளில் (6-7-2022) நாம் உள்ளன்போடு வழிபட்டு, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.

    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
    • 6-ந்தேதி சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    கடலூர்

    பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.

    உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், நாளை மறுநாள் (புதன்கிழமை) தங்க சூரிய பிறை வாகனத்திலும், 30- ந்தேதி் வெள்ளி பூதவாகனத்திலும், அடுத்த மாதம் ஜூலை 1-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா (தெருவடைச்சான்) உற்சவம், 2-ந் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3-ந் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதியும், அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 6-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பிறகு பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 7-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், துணை செயலாளர் சேதுஅப்பா செல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்து வருகிறார்கள்.

    ×