search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
    • 6-ந்தேதி சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    கடலூர்

    பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.

    உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், நாளை மறுநாள் (புதன்கிழமை) தங்க சூரிய பிறை வாகனத்திலும், 30- ந்தேதி் வெள்ளி பூதவாகனத்திலும், அடுத்த மாதம் ஜூலை 1-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா (தெருவடைச்சான்) உற்சவம், 2-ந் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3-ந் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதியும், அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 6-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பிறகு பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 7-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், துணை செயலாளர் சேதுஅப்பா செல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×