search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆனி திருமஞ்சன விழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X

    ஆனி திருமஞ்சன விழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    • இன்று மதியம் 2 மணிக்கு பஞ்ச மூர்த்தி தீர்த்தவாரி நடக்கிறது.
    • நாளை (7-ந்தேதி) முத்துப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.

    பூலோக கைலாயமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடந்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்று முதல் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. அப்போது கைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் நிலையை வந்தடைந்ததும் அங்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய சாமிகள் ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனைக்கு பிறகு மஹா அபிஷேகம், சொர்ணா பிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற்றது.

    சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா இன்று (புதன்கிழமை) நடந்தது.

    இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.

    இன்று மதியம் 2 மணிக்கு பஞ்ச மூர்த்தி தீர்த்தவாரி நடக்கிறது. 3 மணி முதல் 4 மணிக்குள் சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்துக்கு புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் 3 முறை முன்னுக்குப்பின்னும் சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆனி திருமஞ்சன தரிசன காட்சி அருள்பாலிப்பார்கள்.

    அதனை தொடர்ந்து சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறுகிறது. நாளை (7-ந் தேதி) முத்துப்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.

    ஆனி திருமஞ்சனத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்தனர். இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கோவிலில் சிவனடியார்கள் தேவாரமும், திருவாசகமும் பாடியபடி இருந்தனர்.

    இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள் கொண்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சிதம்பரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஆங்காங்கே பக்தர்களுக்கு அய்யப்ப சேவா சங்கம், தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

    Next Story
    ×