search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனி திருமஞ்சனம்"

    • சிவபெருமானை மட்டுமே அபிஷேகப் பிரியர் என அழைக்கிறோம்.
    • நடராஜ பெருமானுக்கு மாட்டுக் கொம்பால் பாலாபிஷேகம் செய்யப்படும்.

    அனைத்துத் தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்வது சிறப்பானது என்றாலும், சிவபெருமானை மட்டுமே அபிஷேகப் பிரியர் என அழைக்கிறோம். சிவபெருமான் அக்னி சொரூபமானவர் என்பதால் பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் அவர் மனம் குளிர்ந்து நாம் வேண்டும் வரங்களை அளித்திடுவார் என்பது நம்பிக்கை. நடராஜருக்கு வருடத்தில் ஆறுமுறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். இந்த ஆறு அபிஷேகங்களும் மகா அபிஷேகங்கள் எனப்படுகின்றன.

    சித்திரை ஓணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, ஆருத்ரா அபிஷேகம் என்ற ஆறு அபிஷேகங்களில் ஆருத்ரா அபிஷேகம் என்பது ஆருத்ரா தரிசனம் மற்றும் மாசி சதுர்த்தசி என்று நடத்தப்படும். இவை ஆறுமே மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

    சிவனுக்கு சங்கில் நிரப்பப்பட்ட தீர்த்தத்தை கொண்டு சங்காபிஷேகம் செய்யப்படுவதை போல் நடராஜ பெருமானுக்கு மாட்டுக்கொம்பால் பாலாபிஷேகம் செய்யப்படும். நடராஜருக்கு நடக்கும் அபிஷேகங்களில் இந்த அபிஷேகம் மிகவும் விசேஷமானதாகும். இன்று நடராஜருக்கு மாசி சதுர்த்தசி அபிசேகம்.

     சாதாரண அபிஷேகத்திலிருந்து மகா அபிஷேகம் அளவில் மாறுபட்டது. பிரமாண்டமானது. மகா அபிஷேகத்துக்கு சுமார் 50,000 லிட்டர் திரவியங்கள் பயன்படுத்தப்படும். மகா அபிஷேகத்தின்போது தீர்த்தம் மட்டுமன்றி பால், சந்தனம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர் எனப் பலவித அபிஷேகப் பொருள்களும் வழக்கத்தைவிட அதிக அளவில் அபிஷேகம் நடத்தப்படும்.

    சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் `திருச்சிற்றம்பலம்' 'எதிர் அம்பலம்' என்று ஓர் இடம் இருக்கிறது. இதை 'கனக சபை' என்று அழைப்பார்கள். அங்குதான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் கனகசபையில் நடைபெறும், இந்த அபிஷேகத்தை தரிசித்தால் பிறவிப்பிணி நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் நம் துன்பங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள்.

    மாசி சதுர்த்தசியை ஒட்டி சிவாலயங்களில் நடைபெறும் மகா அபிஷேகத்தை தரிசனம் செய்து நம் துன்பங்கள் நீங்கப் பெறுவோம்.

    • நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
    • வழி நெடுகிலும் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சிவாலயங்களில் எழுந்தருளியுள்ள நடராஜருக்கு குறிப்பிட்ட மாதத்தில் வரும் நாளில் நடைபெறும் பூஜைகள் சிறப்புக்குரியவை. அந்த வகையில் ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரையில் அருணோதய கால பூஜையும், மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜையும், சித்திரை திருவோணத்தில் மதிய பூஜையும், ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜையும், ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியில் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. அதேபோல் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது. ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரத்துடன் ஆனி திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் எழுந்தருளி உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா நேற்று நடைபெற்றது. அதையொட்டி நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.

    நேற்று காலை நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

    இதையடுத்து காலை 9.15 மணியளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பினர்.பின்னர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து பக்தர்கள் மத்தியில் ஆடியபடி வந்த நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் கோவிலின் 5-ம் பிரகாரம் வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு மாட வீதியில் உலா வந்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள்.
    • நடராஜருக்கு வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

    ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள். திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. சிவன் கோவில்களில் முதன்மையான கோவிலான சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமஞ்சனம் என்றே அழைக்கப்படுகிறது.

    சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து, விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. நடராஜர் கோவிலில் நிகழும் ஆனி திருமஞ்சனம் நிகழ்வையும், தேரோட்டத்தையும் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிவார்கள்.

    நடராஜருக்கு வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழா.

    பங்குனியைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான விழாவாக, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றப்படுகிறது. சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழா, 10 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசியில் அக்னி நட்சத்திர தருணம் எல்லாம் முடிந்து, வெப்பத்தில் தகிக்கும் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    ஆண்டாண்டு காலமாக, ஆனியில் நடைபெறும் திருமஞ்சனத் திருவிழாவைத் தொடக்கி வைத்தவர் யார் தெரியுமா? யோக சூத்திரத்தை நமக்கு அருளிய பதஞ்சலி மகரிஷி. சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் உணர்த்துகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இதேபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் கொண்டது. இந்த 2 பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் தரிசிப்பதாக ஐதீகம்.

    • சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
    • நாளை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது.

    பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்ற நிலையில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடை பெற்றது.

    தேரோட்டம் முடிந்து சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இன்று (திங்கட்கிழமை)அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி, நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சியும், பஞ்சமூர்த்தி வீதிஉலா நடந்தது.

    பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி முன்னுக்குப் பின்னுமாய் 3 முறை நடனமாடி பக்தர்களுக்கு ஆனித்திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.

    திருமஞ்சன தரிசனத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    பின்னர் ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. நாளை (27-ந் தேதி)பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. இத்துடன் ஆனி திருமஞ்சன உற்சவம் முடிவடைகிறது.

    உற்சவ ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் சிவசங்கர தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சிதம்பரம் நகராட்சி சார்பில் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தூய்மை பணி மற்றும் குடிநீர் வழங்கல் பணியை நகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • திருமஞ்சனம் என்பது தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் நிகழ்வாகும்.
    • நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும்.

    சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனித் திருமஞ்சன விழா மிகவும் பிரபலமானதாகும். நடராஜப் பெருமான் வருடத்தில் ஆனி - மார்கழி மாதத்தில் மட்டுமே வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆனி உத்திரமே, ஆடல் வல்லானுக்கான விழாவாக ஆனித் திருமஞ்சனம் என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த ஆனி மாதம் பல சிறப்புகளை தன்னுள் அடக்கியுள்ளது.

    அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்தாலும், ஆனியில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், இந்த வெப்ப அலையில் தாக்கத்திலிருந்து நடராஜப் பெருமானைக் குளிர்விப்பிதற்காக, ஆனித் திருமஞ்சன விழா நடைபெறுகிறது. பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என இன்னும் பல 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு ஆனித் திருமஞ்சனம் செய்கின்றனர்.

    நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம், காலைப் பகுதி மாசி மாதம், உச்சிக் காலம் சித்திரை மாதம், மாலைப் பகுதி ஆனி மாதம், இரவுப் பகுதி ஆவணி மாதம், அர்த்த சாமம் புரட்டாசி மாதம் என்று கணக்கிடப் பட்டுள்ளது. சந்தியா காலங்களான ஆனி - மார்கழியே இறை வழிபாட்டுக்கு உகந்த மாதங்களாகக் கொள்ளப்படுகின்றன.

    சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களையும் உணர்த்துகிறது. வலது கையில் உள்ள உடுக்கை படைத்தலையும், உயர்த்திய வலது கரம் காத்தலையும், இடது கரம் அழித்தலையும், ஊன்றிய பாதம் மறைத்தலையும், மற்றொரு தூக்கிய நிலையில் உள்ள கால் அருளலையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

    ஆனி உத்திர நாளில்தான் சிவபெருமான், நமக்கெல்லாம் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் உபதேசம் செய்தார். இந்த ஆனித் திருமஞ்சன நாளின் வைகறைப் பொழுதில் உபதேசக் காட்சி விழா நடத்தப்படுகிறது.

    இன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நடராஜரை வழிபாடு செய்தால் விருப்பங்கள் நிறைவேறும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை மட்டும் உண்டும் உபவாசம் இருக்கலாம். விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள்.

    தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், செல்வ வளமும் கூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.

    விரதம் இருந்து நடராஜப் பெருமான் ஆனித் திருமஞ்சன தரிசனம் கண்டால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும், தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைப்பதாகவும், கன்னியருக்கு நல்ல இடத்தில் திருமணம் அமைவதாகவும் நம்பப்படுகிறது.

    • ஆனி மாதம், இறைவழி பாட்டிற்கு உகந்த மாதம்.
    • ஆனிதிருமஞ்சனம் முக்கியமான திருவிழா வாகும்.

    கடலூர்:

    தேவர்களின் சந்தியா காலமாக விளங்கும் ஆனி மாதம், இறைவழி பாட்டிற்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் உத்திர நட்சத்திர நாளில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதுவே ஆனித்திருமஞ்சனம் என்று போற்றப்படும். இந்த ஆனித்திருமஞ்சனம் திருவதிகை வீரட்டா னேசுவரர் கோவிலில் இன்று மாலை நடக்கிறது. திருவதிகை வீரட்டானேசு வரர் கோவில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில்ஆகும்.

    அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இங்கு நடராஜர், சிவகாமசுந்தரி சாமிக்கு ஆண்டுக்கு 6 அபிஷேகம் நடக்கிறது. இதில் ஆனிதிருமஞ்சனம் முக்கியமான திருவிழா வாகும். விழாவையொட்டி இன்று மாலை உற்சவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சாமிக்கு 11 வகையான மூலிகை திரவியங்களில் மகா அபிஷேகம் நடக்கிறது. பின்னர் உற்சவர் நடராஜர், சிவகாம சுந்தரியுடன் மாடவீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், உற்சவதாரர், சிவ தொண்டர்கள், கோவில் குருக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • நாளை தேர் வீதி புறப்பாடு நடக்கிறது.
    • 26-ந்தேதி மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    சென்னை சூளை, ஏ.பி. ரோட்டில் அமைந்துள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில் வருகிற 26-ந்தேதி (திங்கட் கிழமை) ஆனித் திருமஞ்சன மகோற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணிக்கு ஆனி தரிசனம் மற்றும் ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது.

    முன்னதாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மகா தீபஆராதனையும், 8 மணிக்கு தேர் வீதி புறப்பாடும் நடக்கிறது. 26-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    • தேரோட்டம் 25-ந்தேதி நடக்கிறது.
    • ஆனித்திருமஞ்சன தரிசனம் 26-ந்தேதி நடக்கிறது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள், பக்தர்களுக்கு அருள்பாலித்தனா்.

    காலை 7 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட பசுக்கொடி, வேத மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக நடராஜர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது கொடிமரம் அருகே பஞ்சமூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்தநாயகி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    இதையடுத்து 8.25 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆனித்திருமஞ்சன விழா கொடியை உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் ஏற்றிவைத்து விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் தங்கம் மற்றும் வெள்ளி வாகனங்களில் வெளிபிரகாரத்திற்குள் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னா் இரவு கொடிமரம் முன்பு மத்தள பூஜைகள் நடந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

    இதில் பஞ்சமூர்த்திகள் 4 ரத வீதிகளிலும் வீதிஉலா வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தனா்.

    விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது. வருகிற 21-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது.

    இதையடுத்து ஆனித்திருமஞ்சன தரிசனம் 26-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடந்து, பிற்பகல் 2 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

    பின்னர் 27-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியும், 28-ந்தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் ஆனித்திருமஞ்சன திருவிழா முடிகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர், துணை செயலாளர் சிவசங்கர தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • 25-ந்தேதி தேர் திருவிழா நடக்கிறது.
    • ஆனி திருமஞ்சனம் 26-ந் தேதி நடைபெற உள்ளது.

    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த 2 விழாக்களின் போது மூலவர் நடராஜர் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இதனால் இந்த இரு விழாக்களும் தனி சிறப்பு பெறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நாளை மறுநாள்(சனிக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினசரி காலை, மாலையில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது.

    விழாவில் 5-வது நாளான வருகிற 21-ந் தேதி தெருவடைச்சான் உற்சவம் நடை பெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கும், ஆனி திருமஞ்சனம் வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது. 28-ந் தேதி(புதன்கிழமை) இரவு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கீழ சன்னதி முகப்பு வாசல் பகுதியில் பந்தல் போடும் பணிகள் முடிந்து கோவில் அலங்கார பணிகள் நடைபெற்று வருகிறது.

    • பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது.
    • ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம்.

    ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.

    மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன் போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    வரலாறு:

    முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோவிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புனரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.

    இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி. 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

    ஸ்தல விருட்சம்:

    ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.

    தல வரலாறு:

    பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவறால் பார்வதியை பூலோகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார்.

    பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.

    சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்தபோது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.

    விழாக்கள்:

    இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக்கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

    கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    எப்படி செல்வது:

    1) காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

    2) காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன.

    3) அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.

    • முத்து, புஷ்ப பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 5-ந்தேதியும், 6-ந்தேதி ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு புஷ்ப பல்லக்கில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதையொட்டி கீழவீதியில் நள்ளிரவு 12 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட முத்து, புஷ்ப பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர்.

    தொடர்ந்து சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் முத்து, புஷ்ப பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வீதிஉலா நிகழ்ச்சி முடிந்தவுடன் பஞ்சமூர்த்திகள் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தேவ சபையை சென்றடைந்தது. இ்த்துடன் ஆனித்திருமஞ்சன விழா நிறைவடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

    • ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது.
    • நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

    ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரையில் அருணோதய கால பூஜை, மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜை, சித்திரை திருவோணத்தில் மதியம் பூஜை, ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை, ஆவணி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை ஆகியவை மிகவும் விஷேசமானது. அதன்படி சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும்

    ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது. ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரத்துடன் ஆனி திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் எழுந்தருளி உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

    அதையொட்டி நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சிறப்பு ஆராதனை நடந்தது.

    தொடர்ந்து நேற்று காலை நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 9.15 மணியளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். பின்னர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் மத்தியில் ஆடியபடி வந்த நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் கோவிலின் 5-ம் பிரகாரம் வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு மாட வீதியில் உலா வந்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    ×