search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா
    X

    ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா

    • தேரோட்டம் 25-ந்தேதி நடக்கிறது.
    • ஆனித்திருமஞ்சன தரிசனம் 26-ந்தேதி நடக்கிறது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள், பக்தர்களுக்கு அருள்பாலித்தனா்.

    காலை 7 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட பசுக்கொடி, வேத மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக நடராஜர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது கொடிமரம் அருகே பஞ்சமூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்தநாயகி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    இதையடுத்து 8.25 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆனித்திருமஞ்சன விழா கொடியை உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் ஏற்றிவைத்து விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் தங்கம் மற்றும் வெள்ளி வாகனங்களில் வெளிபிரகாரத்திற்குள் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னா் இரவு கொடிமரம் முன்பு மத்தள பூஜைகள் நடந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

    இதில் பஞ்சமூர்த்திகள் 4 ரத வீதிகளிலும் வீதிஉலா வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தனா்.

    விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது. வருகிற 21-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது.

    இதையடுத்து ஆனித்திருமஞ்சன தரிசனம் 26-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடந்து, பிற்பகல் 2 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

    பின்னர் 27-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியும், 28-ந்தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் ஆனித்திருமஞ்சன திருவிழா முடிகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர், துணை செயலாளர் சிவசங்கர தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×