search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருட்பெருஞ்ஜோதி"

    • பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி அருட்பெருஞ் ஜோதியை தரிசனம் செய்து பாதுகாப்பாக திரும்பிச் செல்கின்றனர்.
    • ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தைப்பூசத் திருநாளன்று உலகம் முழுவதிலுமிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூருக்கு வருகை தந்து அருட்பெருஞ் ஜோதியை தரிசிக்க தன்னெழுச்சியாகக் கூடுவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதைக் கண்டு, வள்ளலாரின் பொதுமை நோக்கத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்ட வடலூர் பார்வதி புரம் பகுதி மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்த நிலம்தான் 100 ஏக்கர் வடலூர் பெரு வெளியாகும்.

    இவ்வளவு பெரிய நிலம் இருப்பதால்தான் தைப்பூசத் தன்று வடலூரில் கூடும் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி அருட்பெருஞ் ஜோதியை தரிசனம் செய்து பாதுகாப்பாக திரும்பிச் செல்கின்றனர்.

    தைப்பூசத் திருநாளில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் ஜோதி வழிபாட்டிற்காக கூடுகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அடுத்த நாள் அதிகாலை, 6-வது 'ஜோதி வழிபாட்டின்' போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். அதற்கு அடுத்த நாள் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் 'திரு அறைக் காட்சி நாள்' என்பதால், மேலும் பல லட்சம் பக்தர்கள் 'திரு அறை தரிசனம்' காண கூடுவார்கள்.

    இப்படி வருடத்தில் 4 முக்கிய நாட்களும் கடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டு மல்லாது, பிற மாவட்டங்கள், வெளி மாநிலம், வெளிநாடு என்று சன்மார்க்க அன்பர்கள் லட்சக்கணக்கில் ஒன்று கூடும் இடமாக வடலூர் பெருவெளி உள்ளது. இப்படி, விழாக் காலங்களில் கூடும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இப்படி லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் வடலூர் பெருவெளியில், சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கையகப்படுத்தி 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' கட்டுவதற்கு தி.மு.க. அரசு முனைந்துள்ளதை அறிந்து இப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' அரசு கட்டுவதில் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் வடலூர் பெரு வெளியில் இம்மையத்தை கட்டுவதால், ஜோதி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.

    இப்படி, இப்பெருவெளி நிலத்தை கையகப்படுத்தினால் 'மாத பூச வழிபாடும், தைப்பூச சிறப்பு வழிபாடும்' தடைபடும். தைப்பூசத் திரு நாளன்று பக்தர்கள் எந்த வித சிரமுமின்றி அருட்பெரும் ஜோதியை தரிசிக்க அப்பகுதி கிராம மக்கள் மனமுவந்து அளித்த நிலத்தை தி.மு.க. அரசு வேறொரு பணிக்காக கையகப்படுத்த நினைப்பது, நிலத்தை தானம் செய்த மக்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான பக்தர்களின் மனதையும் வேதனைப்படுத்தி உள்ளது.

    தி.மு.க. அரசு வடலூர் பெருவெளியில் 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டுவதை விடுத்து, வேறொரு இடத்தைத் தேர்வு செய்து இம்மையத்தைக் கட்ட இந்த அரசுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தும், அவர்களது வேண்டுகோளை தி.மு.க. அரசு புறக்கணித்து, வடலூர் பெருவெளியிலேயே சர்வதேச மையம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரி உள்ளதாகத் தெரிகிறது.

    'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலார், தைப்பூசத் திரு நாளில் அருட்பெருஞ் ஜோதியைக் காண வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி காத்திருப்பதற்கு பொது வெளியை ஏற்படுத்தினார். அந்த பொதுவெளியை, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை' வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×