search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னாபிஷேகம்"

    • சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், 13½ அடி உயரமும் கொண்டது.
    • 2,500 கிலோ பச்சரிசியை 6 நீராவி அடுப்புகளில் சமைத்தனர்.

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் இந்த கோவில் கலைநயத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டது. போர் கைதிகள் மற்றும் வீரர்களை கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில் தற்கால பொறியியல் வல்லுனர்களுக்கு சவால்விடும் வகையில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த கோவில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் இந்து சமய அறநிலைய துறையினர் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகின்றனர். உலக புராதான சின்னங்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் யுனெஸ்கோ அமைப்பினர் இந்த கோவிலை புராதான சின்னமாக அறிவித்து உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற செய்து பெருமைபடுத்தியுள்ளனர்.

    மேலும் இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், 13½ அடி உயரமும் கொண்டு பிரமாண்டமாக காணப்படுகிறது. ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது என்ற சிறப்பும் உண்டு. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதனை காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் கடந்த 37 ஆண்டுகளாக செய்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக அன்னக்காப்பு அலங்காரம் அபிஷேகம் மட்டுமே செய்யப்பட்டது.

    இந்நிலையில் 38-வது ஆண்டாக நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இந்த கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ பச்சரிசியை 6 நீராவி அடுப்புகளில் சமைத்தனர். பின்னர் மாலை 5 மணி வரை அன்னாபிஷேக பணிகள் நடந்தன. இதில் சமைக்கப்பட்ட சாதத்தை நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் சுமந்து சென்று சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். பின்னர் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் ஐந்து முக மகாதீபாராதனை நடந்தது. லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுவது என்றும், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், தாசில்தார் துரை, உதவி ஆணையர் நாகராஜ், செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் இரவில் சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் இரவு 8 மணியளவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சாதம் போக மீதமுள்ள சாதம் அருகில் உள்ள ஜீவராசிகளுக்கும் மற்றும் குளங்களில் உள்ள மீன்களுக்கும் உணவாக அளிக்கப்பட்டது. விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பவுர்ணமி பூஜை கமிட்டி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது.

    உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அன்னாபிஷேக விழா நடத்தபடுகிறது. இந்த நாளில் சிவபெருமானை தரிசித்தால் ஈசனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் நேற்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

    துாத்துக்குடியில் பாகம்பிரியாள் அம்பாள் உடனுறை சங்கரராமேஸ்வர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழா விமரிசையாக நடக்கும்.

    அதுபோல் இந்த ஆண்டும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு கும்ப பூஜையும், 11மணிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.

    பின்னர் மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுவாமி அன்னாபிஷேக அலங்காரத்திலலும், அம்பாள் புஷ்ப அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இரவு பக்தர்களுக்கு அன்னாபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பவுர்ணமி பூஜை கமிட்டி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், பவுர்ணமி பூஜை கமிட்டி நெல்லையப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 500 கிலோ காய்கறி, இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சை பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். லிங்கம் 12 அடி உயரமும், 23 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையார் எனப்படும் பீடம் 13 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத்திருமேனியாக மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.

    பெருவுடையாருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு ஐப்பசி பவுர்ணமியையொட்டி நேற்று பக்தர்களால் 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கறிகள், இனிப்பு வகைகள், மலர்கள் வழங்கப்பட்டன.

    பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவு லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாதம், பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சாதம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாக போடப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை :

    ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று நவக்கிரகங்களில் 'சந்திரன்' தனது சாபம் முழுமையாக தீர்ந்து, 16 கலைகளுடன், பூமிக்கு அருகில் வந்து முழு பொலிவுடன் காட்சி அளிக்கும். முழுமையான ஒளியுடன் இருக்கும் அன்றைய நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக அரிசியை வடித்து சோறாக மாற்றி ஈசனுக்கு லிங்க திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் (அன்னாபிஷேகம்) செய்யப்படுகிறது.

    அதன்படி சென்னையில் உள்ள சிவாலயங்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவில், திருவேற்காடு வேதபுரீசுவரர் கோவில், எழும்பூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அர்த்தநாரீசுவரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவம். உணவு, இறைவனுக்கு சமமானது என்பதை உணர்த்துவதற்காகவே அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அதை புனிதமான பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
    • ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அரிய வழிபாடு இன்று நடக்கிறது.

    ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகவும் விசேஷமானது. அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது 5 பேருக்காவது அன்னதானம் செய்வது புண்ணியமாகும். ஸ்ரீஅன்னபூரணியை வணங்கி வர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுபாடின்றி கிடைக்கும்.

    அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது. ஜேவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். இதையே சோத்துக்குள்ளே சொக்க நாதர் என்பார்கள்.

    ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அரிய வழிபாடு இன்று நடக்கிறது. அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது சிறப்பானதாகும். சிவனின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். எனவே அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கோடி சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்.

    அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் பலன் நிச்சயம் உண்டு. லிங்கத்தின் மீது சாத்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேக தினமான இன்று சிவனை வணங்கினால் பஞ்சபூ தங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைப்பதோடு முக்தியும் பெறலாம். சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமி ஆகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது.

    அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அனைத்து சிவாலயங்களிலும் இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    • தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
    • கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும்.

    தஞ்சை பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    • லிங்க திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
    • இந்த ஆண்டு பவுர்ணமி அன்று சந்திரகிரகணம் வருகிறது.

    ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று நவக்கிரகங்களில் 'சந்திரன்' தனது சாபம் முழுமையாக தீர்ந்து, 16 கலைகளுடன், பூமிக்கு அருகில் வந்து முழு பொலிவுடன் காட்சி அளிக்கும். முழுமையான ஒளியுடன் இருக்கும் அன்றைய நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக அரிசியை வடித்து சோறாக மாற்றி ஈசனுக்கு லிங்க திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் (அன்னாபிஷேகம்) செய்யப்படுகிறது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு சந்திர கிரகணம் பவுர்ணமியில் வருவதால் கோவில்களில் நாளை (திங்கட்கிழமை) அன்னாபிஷேகம் கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி 7-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.53 மணிக்கு தொடங்கி வருகிற 8-ந் தேதி மாலை 4.59 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. பவுர்ணமியில் தான் அன்னாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது நியதி.

    ஆனால் இந்த ஆண்டு பவுர்ணமி அன்று சந்திரகிரகணம் வருகிறது. எனவே தமிழகத்தில் உள்ள சிவாலயங்களிலும், குறிப்பாக சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவில், திருவேற்காடு வேதபுரீசுவரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நாளை அன்னாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் நாளை மாலையில் அன்னாபிஷேக தரிசனம் செய்யலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னம், பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 8-ந்தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது.
    • 8-ந்தேதி அன்று சந்திர கிரகணமும் நிகழ்கிறது.

    திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் 8-ந்தேதி தெலுங்கு கார்த்திகை பவுர்ணமி உற்சவம் நடக்கிறது. அன்றே கோவிலில் அன்னாபிஷேகமும் நடக்கிறது. 8-ந்தேதி அன்று சந்திர கிரகணமும் நிகழ்கிறது. இதனால் 8-ந்தேதி காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணிநேரம் கபிலேஸ்வரர் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன.

    முன்னதாக 8-ந்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து அதிகாலை 3.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அபிஷேகம், அதிகாலை 3.30 மணியில் இருந்து அதிகாலை 5.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அன்னாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை பக்தர்களுக்கு அன்னலிங்க தரிசனம், காலை 7.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அன்னலிங்க உத்வாசனம் நடக்கிறது. அதன்பிறகு கோவில் சுத்தம் செய்யப்பட்டு காலை 8 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை ஏகாந்தமாக சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சந்திர கிரகணத்தால் 11 மணிநேரம் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன. இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை கோவில் சுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்பிறகு பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று சாமியை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். இரவு 8 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அபிஷேகம், இரவு 8.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை அலங்காரம், சஹஸ்ரநார்ச்சனை, நிவேதனம், தீபாராதனை, இரவு 10 மணியில் இருந்து இரவு 10.15 மணி வரை ஏகாந்த சேவை நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • நாளை நடக்கிறது
    • அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) சாமிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.

    இதைமுன்னிட்டு காலையில் சாமிக்கு பாலாபிஷேகம், மாலையில் சாமிக்கு அன்னாபிஷேகம், அம்மனுக்கு காய்கறி அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. பின்னர் இரவு 8 மணி அளவில் அருகே உள்ள ஏரியில் அன்னம் கரைக்கப்படுகிறது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இதேபோல் கண்ணமங்கலம் அருள்மிகு ராமநாதீஸ்வரர் கோயிலிலும் நாளை அன்னாபிஷேகம், அம்மனுக்கு காதம்பரி அலங்காரம் செய்து தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து இரவு 8 மணி அளவில் நாகநதி ஆற்றில் அன்னம் கரைக்கப்படுகிறது. பக்தர்கள் அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.

    • அன்னாபிஷேக விழா 7-ந்தேதி நடைபெற உள்ளது.
    • 7-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும் ஒன்றாகும்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளின்படி ஐப்பசி மாத ஆவணி நட்சத்திர தினத்தன்று உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேக விழா நடக்கிறது. இந்த ஆண்டிற்கான அன்னாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    அதனால் அன்னாபிஷேகம் நடைபெறும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் வருகிற 7-ந் தேதி மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் பவுர்ணமி வருகிறது.. அன்றைய தினங்களில் அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும் 7 மற்றும் 8-ந் தேதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் பவுர்ணமி தினத்தன்று எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • உலகப்பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
    • வருகிற 7-ந் தேதி நடக்க உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதின் அடையாளமாக மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரசோழன் பிரகதீஸ்வரர் கோவிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டினார். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவிலில் ஒரே கல்லிலான நவக்கிரகம் மற்றும் சிவலிங்கம் உள்ளன.

    இந்த கோவில் உலகப்பிரசித்தி பெற்று புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு மத்திய அரசால் தொல்லியல்துறை பாதுகாப்புத்துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலில் சுமார் 60 அடி சுற்றளவும் 13.5 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லிலான சிவலிங்கத்திற்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இவ்வாறு அன்னாபிஷேகம் செய்யப்படும் போது 100 மூட்டை பச்சரிசியால் சாதம் சமைக்கப்பட்டு சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும். இவ்வாறு சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் தன்மையைக் கொண்டதாக கூறப்படுவது ஐதீகம். இதனால் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை ஒரே நேரத்தில் தரிசிப்பது கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகமாகும். எனவே இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று வருகிற 7-ந் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    • கருவறையில் அமைந்துஉள்ள சிவலிங்கம் குமரி மாவட்டத்தில் மிக உயரமான 5½ அடி சிலை ஆகும்.
    • மதியம் 12 மணிக்கு அலங்கார ஷோடஷ தீபாராதனையும் 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் உள்ள மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள சிவலிங்கம் குமரி மாவட்டத்தில் மிக உயரமான 5½ அடி சிலை ஆகும்.

    அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி யான வருகிற 8-ந்தேதி இந்த கோவிலில் உள்ள மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னா பிஷேக நடக்கிறது. இதை யொட்டி அன்று காலை 7 மணிக்கு அபிஷேகமும் 7.30 மணிக்கு தீபாராதனையும் 9.30 மணிக்கு சிறப்பு அபி ஷேகமும் நடக்கிறது.

    பின்னர் காலை 10.15 மணிக்கு மூலவரான குகநா தீஸ்வர ருக்கு 100 கிலோ அரிசியால் சமைக்கப் பட்ட அன்னத்தால் அன்னா பிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அலங்கார ஷோடஷ தீபாராதனையும் 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநா தீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    ×