search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvizha"

    • அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
    • அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திண்டுக்கல் அருகே அகரத்தில் பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா 9-ந்தேதி இரவு சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள், புராண நாடகங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் அம்மனின் பண்டார பெட்டி மற்றும் உற்சவர் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மனின் கண் திறப்பு, நாளை மறுநாள் (திங்கள்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. பின்னர் அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் உலா வந்து, கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் இரவு 12 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு, அம்மன் அங்கிருந்து புஷ்ப விமானத்தில் புறப்பட்டு வான காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அப்போது வாணவேடிக்கை நடைபெறும். மறுநாள் மதியம் அம்மன் வான காட்சி மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி, சொருகு பட்டை சப்பரத்தில் பூஞ்சோலைக்கு வருவார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர். குடிநீர் மற்றும் சுகாதார பணிகளை அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால், துணைத்தலைவர் ஜெயபால், செயல் அலுவலர் ஈஸ்வரி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன், செயல் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 2 பேரூராட்சிகளின் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
    • வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருமங்கலம் தாலுகா வாகைகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் புரட்டாசி பொங்கல் சிலை எடுப்பு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் பக்தர்கள் தாங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அதை சிலையாக வடித்து தலையில் தூக்கியபடி ஊர்வலமாக வந்து கோவிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    இதற்காக ஆடிப்பெருக்கு முதல் வாகைகுளத்தில் உள்ள கண்மாயில் உள்ள களிமண்ணை கொண்டு சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.இந்நிலையில் வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிலைகளை சுமந்து செல்லும் சிலை எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிலை எடுப்பு திருவிழாவில் பக்தர்கள் தாங்கள் வேண்டியதை நிறைவேறியதால் வேண்டுதலுக்கு ஏற்ப சிலைகளை வடிவமைத்து தங்களது தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். குறிப்பாக தாங்கள் வேண்டிக்கொண்டு நிறைவேற்றிய ஆசிரியர், ராணுவவீரர், திருமணம் நடத்தல், டிராக்டர், வீடுகள், ஆடு, மாடுகள் மற்றும் அய்யனார், கருப்பசாமி தெய்வங்களின் சிலைகளை பக்தர்கள் சுமந்து வந்து கோவிலில் வழிபட்டனர்.

    • கும்பம் எடுத்து கோவிலை சுற்றி வந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து கோவிலை சுற்றி பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    கந்தம்பாளையம் அருகே உலகபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன், ஓங்காளி அம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதையடுத்து கும்பம் எடுத்து கோவிலை சுற்றி வந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்து சாமிகளுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து கோவிலை சுற்றி பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    விழாவில் நேற்று முன்தினம் இரவு ஒயிலாட்டம், வானவேடிக்கை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை டவுன்ஹால் அருகே உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்தி போடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இருந்து கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கி டவுன்ஹால் பகுதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலை வந்தடைந்தது.

    இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது.அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை காயம் பட்ட இடத்தில் வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை என்றனர்.

    பின்னர் அந்த ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலை வந்தடைந்த உடன் அம்மனுக்கு விசேஷ பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசமடைந்தனர்.

    • திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    திருப்பதி மாவட்டம் வெங்கடகிரியில் நேற்று போலேரம்மன் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, திருப்பதி தொகுதி எம்.பி. டாக்டர் குருமூர்த்தி உள்பட பலர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

    அப்போது சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பேசுகையில், அடுத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் திருப்பதி மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரி போலேரம்மன், சூலூர்பேட்டை செங்காளம்மன், திருப்பதியில் உள்ள தாதய்யகுண்டா கங்கையம்மன், கனுபூரில் உள்ள முத்தியாலம்மனுக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு சார்பில் சீர்வரிசை பொருட்களை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக, தெரிவித்தார்.

    • அம்மனுக்கும், பஞ்சபாண்டவர்களுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது.
    • தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.

    மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.

    மேலும் மகா பாரத சொற்பொழிவு, தெரு கூத்து உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக துரியோதனன் படுகள நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும், பஞ்சபாண்டவர்களுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    பின்னர் கடைவீதி பகுதியில் பிரம்மாண்டமான துரியோதனன் சிலை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து மாலையில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    • காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
    • 25 தலைமுறைகளுக்கும் மேலாக இந்த வழிபாடு நடந்து வருகிறது.

    சிவகங்கை 

    சிவகங்கை அருகே பையூர் பழமலை நகர் உள்ளது. இங்கு நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மதுரை வீரன், மீனாட்சி, முத்துமாரியம்மன் ஆகிய தெய்வங்களை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

    மேற்கண்ட தெய்வங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    முக்கிய விழாவான எருமை மாடுகளை பலியிட்டு, ரத்தத்தை குடிக்கும் விழா நடந்தது. இதையொட்டி காளி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதையடுத்து, திருவிழா திடலில் அமைக்கப்பட்டுள்ள குடிலில் 14 எருமை மாடுகளும், 124 ஆடுகளும் பலியிடப்பட்டன. அருள் வாக்கு கூறுபவர்கள் (சாமியாடிகள்) எருமை மாடுகளை பலியிட்டு ரத்தத்தை குடித்தனர்.

    பின்னர் காளி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இந்த விழாவை காண சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    இதுகுறித்து பழமலை நகரைச் சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், முன்னோர்களின் அறிவுறுத்தலின் படி சுமார் 25 தலைமுறைகளுக்கும் மேலாக இந்த வழிபாடு நடந்து வருகிறது. காளி உத்தரவுக்கு பின்னர் காப்புக் கட்டுதல் நிகழ்விலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு மாதம் விரதம் இருப்பார்கள்.விழாவில் பலி கொடுக்கப்படும் எருமை மாடு மற்றும் ஆட்டின் இறைச்சியை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தோர் வசிக்கும் பகுதிகளுக்கு பகிர்ந்து வழங்குவோம். காளி அசுரனை வதம் செய்யும் போது, தரையில் சிந்தும் அசுரனின் ரத்தம் மீண்டும் உயிர்த்தெழுந்ததால், அந்த ரத்தத்தை கீழே சிந்தாமல் காளி குடித்து விடுவதாக புராணம் கூறுகிறது.

    அந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எருமை மாட்டை அசுரனாக பாவித்து பலியிட்டு வருகிறோம் என்றார்.

    • கடந்த 2 ஆண்டுகளாக இந்த குலதெய்வ திருவிழா நடைபெறவில்லை
    • இந்த விழாவில் 4 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் டவுன் பகுதியில் ஸ்ரீ பைட் பள்ளி பிரதான குலதெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகைக்கு பிறகு முதல் செவ்வாய்க்கிழமை இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக இந்த குலதெய்வ திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி பிரமாண்ட குலதெய்வ திருவிழா நடைபெற உள்ளது. இது ஆந்திராவில் வடகடலோர பகுதியில் முக்கிய நாட்டுப்புற விழா என அழைக்கப்படுகிறது.

    இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ மானோற்சவம் அக்டோபர் 11-ந்தேதி நடக்கிறது. அப்போது 55 அடி கம்பத்தின் உச்சியில் பூசாரி அமர்ந்து ராஜ உடையில் கோட்டையை சுற்றி வந்து பக்தர்களை ஆசீர்வதிப்பார்.

    மேலும் கம்பத்தின் முனையில் தொங்கியபடி பூசாரி சிறப்பு ஆசிர்வாதம் வழங்குவார். இந்த விழாவில் ஆந்திரா அண்டை மாநிலங்களான ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.

    இந்த ஆண்டு விழாவிற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை விஜய நகர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த திருவிழாவிற்காக ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மேலும் தரிசன டிக்கெட்டுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டுப்புற குலதெய்வ திருவிழாவில் ரூ. 100 முதல் 300 வரை தரிசன டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • 20 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடந்தது குறிப்பிடத்தக்கது.
    • தினமும் அம்மன் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் வடக்கு கிராமத்தில் வீரகாளியம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 14-ந் தேதி காலை அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் காப்பு கட்டுதல், பந்தல்கால் நடுதல், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

    கடந்த 22-ந் தேதி பால்குடம், அலகு காவடி எடுத்தல், இசை நிகழ்ச்சி, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. அன்று மாலை சக்தி கரகம், அம்மன் சிலைகள் காவிரி கரைக்கு புறப்படுதல், இரவு காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு அம்மன் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    23-ந் தேதி காலை அம்மன் வீதியுலாவும், மாலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து 24-ந் தேதி விடையாற்றி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், விழா குழுவினர், மகளிர் குழுவினர் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்த கோவிலில் 3 நாட்கள் தேரோட்டம் நடந்தது.
    • தேரை பக்தர்கள் தோளில் தூக்கிக்கொண்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

    திருவாரூரை அடுத்த தப்பளாம்புலியூர் கிராமத்தில் குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆவணி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 16-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

    சக்கரம் இல்லாத சுமார் 20 அடி உயரம் உள்ள இந்த தேரை 2 வாரைகள் என பெரிய பல்லக்கு கம்புகள் மீது கட்டி பக்தர்கள் தோளிலும், தலையிலும் தூக்கிக்கொண்டு இடமும், வலமுமாக அசைத்தபடி வீதி, வீதியாக கொண்டு செல்வர். ஒரு சில இடங்களில் பாரம் தாங்காமல் பக்கவாட்டில் தேர் சாய்ந்து விடும்.

    அப்போது தேரில் உள்ள அம்மனும், பூசாரியும் சாய்ந்து விழுவதும், பின்னர் பூசாரி எழுந்து அம்மனை நேராக வைத்தவுடன் மீண்டும் பக்தர்கள் தூக்கி செல்வதும் இந்த தேரோட்டத்தின் சிறப்பு ஆகும். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் தேரோட்டம் நடந்தது. வாரைகளின் மீது 20 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட தேரை பக்தர்கள் தோளில் தூக்கிக்கொண்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

    பின்னர் தேர் நிலையை அடைந்தது.இந்த வினோத தேர் திருவிழாவில் தப்பளாம்புலியூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    • இரவில் முத்துப்பல்லக்கில் சாமிகளின் வீதியுலா நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு மீனவ கிராமத்தில் மகாகாளியம்மன், விநாயகர், ஊத்துக்காட்டு மாரியம்மன், மகாசக்தி கங்கையம்மன், கங்காதீஸ்வரர், பாலமுருகன் கோவில்கள் உள்ளன.

    இந்த கோவிலில் செடல் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு காளியம்மன் கடற்கரைக்கு சென்று ஜலம் திரட்டி வந்து பக்தர்கள் செடல் குத்துதல், சாகைவார்த்தல் ஆகியவை விமரிசையாக நடந்தது.

    இரவில் முத்துப்பல்லக்கில் சாமிகளின் வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பனித்திட்டு கிராம பஞ்சாயத்து தலைவர் அஞ்சாபுலி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • பலர் பொங்கலிட்டும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    திருவண்ணாமலை அருகே உள்ள செ.அகரம் கிராமத்தில் சந்தியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர் ஒருவர் கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து வடைகளை எடுத்து அம்மனுக்கு படையலிடும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் ஆட்டின் வயிற்றை அறுத்து குட்டிகளை வெளியே எடுத்து அம்மனுக்கு படையலிட்டனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பலர் பொங்கலிட்டும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    ×