search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvizha"

    • பிரம்ம கலசத்தில் அபிஷேகம் நடைபெற்றது.
    • 15 யானைகள் அணிவகுத்த முதல் ஸ்ரீவேலி தொடர்ந்து நடைபெற்றது.

    கொச்சி அருகே திருப்போனித்துராவில் ஸ்ரீ பூரணத்திரேசியன் கோவில் உள்ளது. இந்த கோவில் விருச்சிக உற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடி மரத்தில் ஆலய தந்திரி புலியனூர் நாராயணன் நம்பூதிரிப்பாடு சிறப்பு வழிபாடு செய்து கொடியேற்றினார். பின்னர் காலை பிரம்ம கலசத்தில் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 15 யானைகள் அணிவகுத்த முதல் ஸ்ரீவேலி தொடர்ந்து நடைபெற்றது. இதில் குடை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

    மேலும் படிங்காரே தட்டு மாளிகை அருகே நடைபெற்ற ஓட்டம் துள்ளல் நிகழ்ச்சியில் ஆராட்டுப்புழா பிரதீப், கலா மண்டலம் ராஜேஷ், பாலா கே.ஆர்.மணி மற்றும் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பேச்சியம்மன் சிலை புதுப்பிக்கப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியையொட்டி பரமேஸ்வரர், மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பெண்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர்.
    • அனைத்து கோவில்களிலும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திருச்செங்கோட்டில் பழமைவாய்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இதுதவிர மண்ணுக்குட்டை மாரியம்மன், தொண்டிக்கரடு மகா மாரியம்மன், சேலம் சாலை சாட்டை மாரியம்மன், நாமக்கல் சாலை சமயபுரத்து மாரியம்மன், 5 ரோடு அழகுமுத்து மாரியம்மன், சி.எச்.பி. காலனி மாரியம்மன் கோவில் என நகரை சுற்றி உள்ள 15 மாரியம்மன் கோவில்களிலும் கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி கம்பங்கள் நடப்பட்டன.

    தினமும் ஏராளமான பெண்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர். இதையடுத்து தீர்த்தகுடம் எடுத்தல், மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    திருவிழா நிறைவாக அனைத்து கோவில்களிலும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கம்பம் எடுக்கப்பட்டு தெற்கு ரத வீதியில் ஒன்றாக இணைந்து ஊர்வலமாக சென்று திருச்செங்கோடு- ஈரோடு ரோட்டில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் கம்பங்கள் விடப்பட்டன. கம்பங்களுக்கு முன்பு பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து சென்றனர். வழி நெடுகிலும் குவிந்திருந்த திரளான பக்தர்கள் கம்பங்களின் மீது உப்பு, மிளகு போட்டு அம்மனை வழிபட்டனர்.

    • கடலைக்காய் திருவிழா வரலாற்று சிறப்புமிக்கதாகும்.
    • 15 ஆண்டுக்கு பிறகு தெப்ப உற்சவமும் நடக்கிறது.
    • 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    பெங்களூரு பசவனகுடியில் தொட்ட கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் கடலைக்காய் திருவிழா வரலாற்று சிறப்புமிக்கதாகும். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடலைக்காய் திருவிழா தொடங்கி நடைபெறும். இந்த கடலைக்காய் திருவிழாவில் பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பிற மாவட்டங்கள், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் கடலைக்காயை விற்பனைக்காக கொண்டு வருவது உண்டு.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான கடலைக்காய் திருவிழா வருகிற 21-ந்தேதி தொடங்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகிற 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கடலைக்காய் திருவிழாவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடலைக்காய் வியாபாரிகள், உணவு பொருட்கள் உள்பட 2 ஆயிரம் கடைகள் திறக்கப்படலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பசவனகுடி தொட்ட கணபதி கோவிலில் நடைபெறும் இந்த கடலைக்காய் திருவிழாவின் போது கெம்பாபுதி ஏரியில் தெப்ப உற்சவமும் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. ஏரியில் தண்ணீர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 15 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறவில்லை.

    ஆனால் இந்த ஆண்டு பெங்களூருவில் பரவலாக நல்ல மழை பெய்திருந்தது. இதன் காரணமாக கெம்பாபுதி ஏரியும் நிரம்பி இருக்கிறது. இதையடுத்து, கடலைக்காய் திருவிழாவுடன் தெப்ப உற்சவம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருவதாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ரவி சுப்பிரமணியா தெரிவித்துள்ளார்.

    மழையின் காரணமாக பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா, ராமநகர் மாவட்டம் கனகபுரா, மாகடி, சிக்பள்ளாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலைக்காய் விளைச்சலும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடலைக்காய் திருவிழாவில் அதிகம் பங்கேற்க வாய்ப்புள்ளது. கடலைக்காய் திருவிழா 21-ந் தேதி தொடங்கினாலும், அதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பாகவே பசவனகுடியில் உள்ள நடைபாதைகளில் வியாபாரிகள் கடலைக்காய் விற்பனையை தொடங்கி விடுவார்கள்.

    இதனால் பசவனகுடி தொட்ட கணபதி கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளது.

    • திருக்கல்யாணம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
    • தேர்திருவிழா 16-ந்தேதி நடக்கிறது.

    மயிலாடுதுறையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் துலா உற்சவம் 10 நாட்கள் நடப்பது வழக்கம்.

    காவிரி நதியை மையப்படுத்தி நடக்கும் முக்கிய உற்சவமான துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு துலா உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பட்டாச்சாரியார்கள் கருடக்கொடியை ஏற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 15-ந் தேதியும்(செவ்வாய்க்கிழமை), தேர்திருவிழா 16-ந் தேதியும்(புதன்கிழமை), கடைமுக தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள்.

    • அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தலும் நடைபெற்றது.
    • பொங்கல், மாவிளக்கு படைத்தல், அன்னதானம் நடந்தது.

    பரமத்தியில் உள்ள சேத்துக்கால் மாரியம்மன் கோவிலில் திருவிழா கடந்த 16-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சேத்துக்கால் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. 28-ந் தேதி இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    31-ந் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தலும் நடைபெற்றது. பின்னர் மாலை பொங்கல், மாவிளக்கு படைத்தல், அன்னதானம் மற்றும் வண்டி வேடிக்கை நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை சேத்துக்கால் மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வருதல் மற்றும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி சேத்துக்கால் மாரியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • இன்று வண்டி வேடிக்கை நடக்கிறது.
    • நாளை இரவு மாரியம்மன் சாமி புஷ்ப பள்ளக்கில் பவனி வருதல் நடக்கிறது.

    ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தகோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடந்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி ஊர்வலம் சென்றது.

    கடந்த 31-ந் தேதி பக்தர்கள் கோவிலை சுற்றி பூவோடு எடுத்து வந்தனர். தொடர்ந்து நேற்றுமுன்தினம் அம்மை அழைத்தல் நடந்தது. பின்னர் காலை முதல் இரவு வரை நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதையடுத்து நேற்று அதிகாலையில் தீமிதி விழா நடந்தது.

    விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிவித்தும், கையில் வேப்பிலையுடனும் தீ மிதித்தனர். சில பெண்கள் வேண்டுதலை நிறைவேற்ற குழந்தையுடன் தீ மிதித்தனர். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி நேற்று மாலையில் மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) வண்டி வேடிக்கை நடக்கிறது. பின்னர் நாளை (சனிக்கிழமை) இரவு மாரியம்மன் சாமி வர்ண விளக்கு ஜோடனை மற்றும் வாண வேடிக்கையுடன் புஷ்ப பள்ளக்கில் பவனி வருதல், சத்தாபரணம் நடக்கிறது. ராசிபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • 4-ந் தேதி கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 5-ந்தேதி மஞ்சள் நீராடல் நடக்கிறது.

    ராசிபுரம் அருகே அத்திப்பலகானூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் திருவிழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் பூவோடு பற்ற வைத்தல் நடந்தது. நேற்று காலையில் பக்தர்கள் கோவிலை சுற்றி பூவோடு எடுத்து வந்தனர்.

    அப்போது கோவில் பூசாரி பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கினார். இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாட்டையடி வாங்கினர். இதையடுத்து இன்று (புதன் கிழமை) அம்மை அழைத்தல் நடக்கிறது. மாலையில் பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (வியாழக்கிழமை) வண்டி வேடிக்கை, எருதாட்டம் நடைபெறுகிறது. அதையடுத்து 4-ந் தேதி கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி மஞ்சள் நீராடலும் நடக்கிறது.

    • நாளை வெற்றிவேலனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
    • 3-ந்தேதி முருகன் ஊர்வலமாக ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு 37-வது ஆண்டு ஆராட்டு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு வெற்றிவேலனுக்கு அலங்காரம், 6 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பரமார்த்தலிங்கபுரம் சீதாலட்சுமி பொன்னுசாமி, காமராஜர் நகர் தாமரைசெல்வி வேல்முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைக்கிறார்கள். தொடர்நது 6.30 மணிக்கு நடைபெறும் சமய உரை நிகழ்ச்சிக்கு கவிஞர் ஈஸ்வரன் தலைமை தாங்குகிறார். இதில், தாணு மூர்த்தி, கவிஞர் ராஜன் ஆகியோர் "கந்தன் கருணை" என்ற தலைப்பில் உரை ஆற்றுகின்றனர். நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு வெற்றிவேலனுக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடக்கிறது.

    3-ந்தேதி தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முருகன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி ஊர்வலமானது பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு அருகில் அமைந்துள்ள பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் தளத்தை சென்றடைகிறது.

    அங்கு உள்ள நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாயில் இரவு 7 மணிக்கு முருகனுக்கு ஆராட்டு, அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், வான வேடிக்கை, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து சமய கருத்தரங்கு நடக்கிறது. கருத்தரங்குக்கு மயூரி சீதாராமன் தலைமை தாங்கிகிறார். அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் "வள்ளி தெய்வானை திருமணம்" என்ற தலைப்பிலும், ரேணுகா ராமச்சந்திரன் "கந்தபுராணம் ஆராட்டு" என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். பின்னர் இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை திருவிழா முடிந்து 30-வது நாளில் வெற்றிவேல் முருகனுக்கு ஆராட்டு விழா நடப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான ஏற்பாடுகளை மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் முருகன் ஆராட்டு விழா கமிட்டி பொறுப்பாளர்கள் பொன்னுசாமி, வேல்முருகன், குமாரசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் செம்பொன் அரங்கர் பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. இதனையடுத்து பெருமாள் பரமபத நாதன் அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதனைத் தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இந்த கோவில் திருவிழா நவம்பர் 2-ந்தேதி, 3-ந் தேதி நடக்கிறது.
    • 3-ந்தேதி இரவு 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

    கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் பழமையான பல்லி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா அடுத்த மாதம் 2-ந் தேதி (புதன்கிழமை), 3-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக நேற்று முன்தினம் கோவிலில் பூச்சாட்டப்பட்டது.

    அடுத்த மாதம் 1-ந் தேதி பகல் 3 மணி அளவில் பக்தர்கள் கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து வருகிறார்கள். இரவு 7 மணி அளவில் அலங்கார பூஜையும், 9 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.

    இதேபோல் மறுநாள் 2-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜையும், பொங்கல் வைத்தலும், காலை 5 மணிக்கு தண்டனிடுதலும், 6 மணிக்கு கிடாய் வெட்டுதலும் நடைபெறுகிறது. 3-ந்தேதி இரவு 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 4-ந் தேதி பகல் 12 மணிக்கு மறுபூஜையும் நடைபெறுகிறது.

    30-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்துகொள்ளும் இந்த விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் வி.கே.துரைசாமி, வி.எம்.செங்கோட்டையன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர்.
    • வழிநெடுக அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினார்கள்.

    சோழவந்தான்அருகே தேனூர் சுந்தரவள்ளிஅம்மன்கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்தது. சுந்தர வள்ளி அம்மன் சிறிய கோவிலில் இருந்து பெரிய கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர்.

    மறுநாள் காலை அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி ஏழு கரககாரர்கள் முன்னிலையில் சக்தி கிரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் வீதிஉலா நடைபெற்றது. வழிநெடுக அம்மனுக்கு பூஜைகள் செய்து அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினார்கள். பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக சேத்தாண்டி வேஷம் மற்றும் கரும்புள்ளி செம்புலி குத்தி அம்மன் உடன் வந்தனர்.

    அன்று இரவு அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி விடிய, விடிய பவனி வந்து அதிகாலை கோவிலை அடைந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    ×