search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவகங்கை அருகே குல தெய்வங்களுக்கு எருமை மாடுகளை பலிகொடுத்த பக்தர்கள்
    X
    பலி கொடுப்பற்காக எருமை மாட்டை அழைத்து வரும் பக்தர்கள்.

    சிவகங்கை அருகே குல தெய்வங்களுக்கு எருமை மாடுகளை பலிகொடுத்த பக்தர்கள்

    • காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
    • 25 தலைமுறைகளுக்கும் மேலாக இந்த வழிபாடு நடந்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே பையூர் பழமலை நகர் உள்ளது. இங்கு நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மதுரை வீரன், மீனாட்சி, முத்துமாரியம்மன் ஆகிய தெய்வங்களை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

    மேற்கண்ட தெய்வங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    முக்கிய விழாவான எருமை மாடுகளை பலியிட்டு, ரத்தத்தை குடிக்கும் விழா நடந்தது. இதையொட்டி காளி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதையடுத்து, திருவிழா திடலில் அமைக்கப்பட்டுள்ள குடிலில் 14 எருமை மாடுகளும், 124 ஆடுகளும் பலியிடப்பட்டன. அருள் வாக்கு கூறுபவர்கள் (சாமியாடிகள்) எருமை மாடுகளை பலியிட்டு ரத்தத்தை குடித்தனர்.

    பின்னர் காளி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இந்த விழாவை காண சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    இதுகுறித்து பழமலை நகரைச் சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், முன்னோர்களின் அறிவுறுத்தலின் படி சுமார் 25 தலைமுறைகளுக்கும் மேலாக இந்த வழிபாடு நடந்து வருகிறது. காளி உத்தரவுக்கு பின்னர் காப்புக் கட்டுதல் நிகழ்விலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு மாதம் விரதம் இருப்பார்கள்.விழாவில் பலி கொடுக்கப்படும் எருமை மாடு மற்றும் ஆட்டின் இறைச்சியை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தோர் வசிக்கும் பகுதிகளுக்கு பகிர்ந்து வழங்குவோம். காளி அசுரனை வதம் செய்யும் போது, தரையில் சிந்தும் அசுரனின் ரத்தம் மீண்டும் உயிர்த்தெழுந்ததால், அந்த ரத்தத்தை கீழே சிந்தாமல் காளி குடித்து விடுவதாக புராணம் கூறுகிறது.

    அந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எருமை மாட்டை அசுரனாக பாவித்து பலியிட்டு வருகிறோம் என்றார்.

    Next Story
    ×