search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruparankundram Murugan Temple"

    • 2-ந்தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது.
    • பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதிகாப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணியளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளுதல் நடந்து வருகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 2-ந்தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள். கோவிலுக்குள் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் காலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இடைவிடாது சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கும்.

    அதன் பால் பெரிய சில்வர் தொட்டியில் விழும். பிறகு அங்கு இருந்து கோவில் வெளிப்புறமான சஷ்டி மண்டப வளாகம் வரை குழாய் வழியாக அபிஷேகம் கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விசாக கொறடு மண்டபத்தில் இருந்து சஷ்டி மண்டபம் வளாகம் வரை 100 அடி நீளத்திற்கு புதியதாக குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    பக்தர்கள் பாட்டில் மற்றும் பாத்திரங்கள் மூலம் அபிஷேக பால் பெற்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசாக கொறடு மண்டபத்தில் தற்காலிகமாக மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகிறது.

    • 2-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது.
    • 3-ந் தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் விசாக திருவிழா விசேஷமானதாகும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது அதில் 8 நாட்கள் வசந்த உற்சவமாகவும், ஒருநாள் விசாக விழாவாகவும், மற்றொருநாள் மொட்டையரசு உற்சவ விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான விசாக திருவிழா கடந்த 24-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா தொடர்ந்து வருகின்ற ஜூன் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. .திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன், சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் 9-வது நாளான வருகின்ற 2-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது.

    விசாக திருவிழா நாளில், தெய்வானை, வள்ளி சமேத சண்முகப்பெருமான் தன் இருப்பிடமான சண்முகர் சன்னதியை விட்டு கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். திருவிழா காலங்களில் உற்சவர் தன் சன்னதி இருப்பிடம் விட்டு இடம் பெயர்ந்து நகர் வீதி உலா வருவது இயல்பு. ஆனால் ஆண்டுக்கு ஒரே ஒரு முறை சண்முகப்பெருமான் தன் இருப்பிடத்தை விட்டு இடம்பெயருவது விசாக திருவிழாவில் மட்டுமே. இதை தனி சிறப்பாக போற்றுகிறார்கள். வருகின்ற 2-ந் தேதி விசாகத்தினத்தன்று தெய்வானை, வள்ளி சமேத சண்முகப்பெருமானுக்கு காலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இடைவிடாது குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது. இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தி சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகின்ற 3-ந் தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது. அன்று காலையில் மொட்டையரசு திடலுக்கு தங்கக் குதிரையில் செல்லும் தெய்வானை, பெருமான் பூப்பல்லக்கில் இருப்பிடம் திரும்புகிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • திருவிழா தொடர்ந்து 3-ந்தேதி வரை நடக்கிறது.
    • 3-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் விசாக திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதில் 8 நாட்கள் வசந்த உற்சவமாகவும், ஒருநாள் விசாக விழாவும், மற்றொரு நாள் மொட்டையரசு உற்சவமாகவும் கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டிற்கான விசாகத்திருவிழாவின் தொடக்கமாக நேற்று வசந்த உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 3-ந்தேதி வரை நடக்கிறது.

    திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தொட்டியில் தண்ணீர் நிரப்பபட்டு தயாராக இருந்த மேடையில் சுப்பிரமணியசுவாமி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதனையடுத்து அம்பாளுடன் சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீப தூபஆராதனையும் நடந்தது.

    வருகிற 1-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி வசந்த நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது அன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் இருந்து கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள விசாகொறடு மண்டபத்திற்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமான் எழுந்தருளுகிறார்.இதனையடுத்து சண்முகப்பெருமானுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது.

    இதுதவிர இளநீர் காவடி, பன்னீர்காவடி, புஷ்ப காவடி, பறவை காவடி உள்ளிட்ட விதவிதமான காவடிகள் எடுத்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 3-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • தினமும் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    • ரூ.1.25 கோடியில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தினமும் மதியம் 12 மணியளவில் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு என்று 125 பேரும், இந்த கோவிலின் துணை கோவிலான சொக்கநாதர் கோவிலுக்கு என்று 50 பேரும் என தினமும் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஒரு கூட்டு, ஒரு பொறியல், ரசம், மோர், சாம்பாருடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வெள்ளிக்கிழமைதோறும் வழக்கமான கூட்டு, பொறியலுடன் கூடுதலாக பாயாசம், வடையுடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    கோவில் நிர்வாகம் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்துடன் முதல்முறையாக கடந்த ஆண்டில் மார்கழி மாதம் முழுவதுமாக தினமும் ஒருவகை என்று காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும் சுமார் 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதேபோல அடுத்த ஆண்டில் கார்த்திகை, மார்கழி ஆகிய 2 மாதங்கள் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு காலை உணவு வழங்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்துசமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உத்தரவின்பேரில் இந்த கோவிலில் நாள் தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு தற்போது ரூ.1.25 கோடியில் தனி சமையல் அறை, சமையல் பாத்திரங்கள் மற்றும் பிரசாதம் வழங்க கூடிய திட்டப்பணிகள் தயாராகி வருகிறது.

    • நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்த குளமாக போற்றி பாதுகாத்து வந்தனர்.
    • லெட்சுமி தீர்த்தகுளம் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும், 66 மீட்டர் அகலமும் கொண்டது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும், 66 மீட்டர் அகலமும் கொண்ட லெட்சுமி தீர்த்தகுளம் அமைந்து உள்ளது.இந்த குளமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெய்வானை அம்பாளுக்காக உருவாக்கப்பட்டதாக செவிவழி செய்தி கூறுகிறது. ஒரு காலத்தில் இந்த குளம் வற்றாத புனித தீர்த்தக் குளமாக இருந்து வந்துள்ளது.

    குறிப்பாக தேமல், பருவு உள்ளவர்கள் இந்த லெட்சுமி தீர்த்தக்குளத்தில் உப்பு வாங்கி போட்டு நோயை குணமாக்கி வந்துள்ளனர். ஆகவே நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்த குளமாக போற்றி பாதுகாத்து வந்தனர்.

    இத்தகைய சிறப்பு பெற்ற லெட்சுமி தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர் சமீபத்தில் அடுத்தடுத்து 3 முறைக்கு மேல் இடிந்து விழுந்தது. இதனையொட்டி கோவில் நிர்வாகம் லெட்சுமி தீர்த்த குளத்தை சீரமைப்பது என்று முடிவு செய்தனர். அதன்படியே ரூ.6½ கோடியில் பழமை மாறாமல் அதிநவீன தொழில் நுட்பத்துடன் குளத்தின் 3 பக்கமும் கற்கள் கொண்டு சுற்றுச்சுவரும், மற்றொரு பக்கத்தில் கான்கிரீட்டிலான சுவரும் கட்டப்பட உள்ளது.

    மேலும் கோடைகாலத்திலும் வற்றாத நீர் நிலையாக தண்ணீர் தேங்குவதற்கு வசதியாக குளம் ஆழமாக தூர்வாரப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக இந்து சமய அறநிலையதுறை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டு பணிக்கான டெண்டர் விடப்பட்டு தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப அனுமதி கமிஷனரிடம் கோரப்பட்டுள்ளது. உரியஅனுமதி கிடைத்தவுடன் ஒரு சில வாரத்தில் லெட்சுமி தீர்த்த குளம் தூர்வாரும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை இன்று முழுவதும் சாத்தப்பட்டிருந்தது.

    முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெரு விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை தினமும் தங்கமயில் வாகனம், வெள்ளி யானை, தங்க குதிரை, பச்சைக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவில் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று நடந்தது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுவாமி-அம்பாளுக்கு அதிகாலையில் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அதே சமயத்தில் மதுரையிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சிக்காக புறப்பாடாகி மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு முருகப்பெருமான் எதிர்கொண்டு வரவேற்றார். தொடர்ந்து சுவாமிகள் அமைக்கப்பட்டிருந்த பந்தல்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருக்கல்யாண வைபவத்தில் கோவிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடை பெற்றது. அதனை தொடர்ந்து கோவில் ஆறுகால் மண்டபத்தில் சொக்கநாதருடன் பிரியாவிடை-மீனாட்சி ஆகியோர் எழுந்தருளினர்.

    அங்கு திருமண கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். மேள தாளங்கள் முழங்க 12.30 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அப்போது முருகப் பெருமான் சார்பில் தெய்வானைக்கு மங்கள நாண் அணிவிக்கப்பட்டது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சாமி கும்பிட்டனர்.

    கோவில் சஷ்டி மண்ட பம், வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப் பட்டது.

    இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் மணக் கோலத்தில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். பின்னர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் விடை பெறுதல் நிகழ்ச்சி நடை பெற்று மதுரை கோவிலுக்கு புறப்பாடவார். பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (9-ந் தேதி) காலை 6 மணிக்கு நடைபெறு கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    சுந்தரேசுவரர்-மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்றதை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை இன்று முழுவதும் சாத்தப்பட்டிருந்தது.

    • மகாதேரோட்டம் 9-ந்தேதி நடக்கிறது.
    • தேர் தயார்படுத்தும் பணி நடந்துவருகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசல் முன்பு பெரிய தேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 40 டன் எடை கொண்ட இந்த தேரின் மேல்தளத்தில் கோவிலின் கருவறையில் 5 சன்னதிகள் இருப்பது போலவே திருமண கோலத்தில் முருகப்பெருமான் தெய்வானை, கற்பகவிநாயகர், துர்க்கை அம்பாள். சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய அழகிய மரசுதைகள் (சிற்பங்கள்) உள்ளன.

    திருவிளையாடல் புராண சிற்பங்கள், குதிரை, யாழி, யானை, மகரம் என்று 976 முதல் 1,036 சிற்பங்கள் உள்ளன.

    பங்குனி திருவிழாவையொட்டி தேரின் அடிபாகத்தில் இருபுறமும் இரும்பிலான உள் சக்கரம் பொருத்தப்பட்டு தேர் தயார்படுத்தும் பணி நடந்துவருகிறது.

    ஆகவே இந்த ஆண்டில் முதல் முறையாக உள் சக்கரத்துடன் தேர்வலம் வரபோகிறது. இரும்பிலான பெரிய சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக், இரும்பிலான பாதுகாப்பு சுதன உள்சக்கரங்கள் என்று காலத்திற்கு ஏற்ப படிப்படியாக தேர் அதிநவீனமாக உருவானாலும் தேரும், தேரின் சிற்பங்களும் பழமை மாறாதபடியே உள்ளது. இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழாவின் மகாதேரோட்டம் வருகின்ற 9-ந்தேதி நடக்கிறது. இதனையொட்டி வானம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய பஞ்சபூதங்களை மையப்படுத்தும் முகமாக 5 நிலையாக 46 அடி உயரத்தில் 21 அடி அகலமும், 21 அடி நீளமும் கொண்டு வண்ணமயமான அலங்கார துணிகளால் தேர் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்துவருகிறது.

    • 9-ந் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.
    • திருப்பரங்குன்றம் கோவிலின் தேரில் எண்ணற்ற அழகிய சிற்பங்கள் உள்ளன.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 9-ந் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி முகூர்த்த கால் ஊன்றப்பட்டு கோவில் வாசல் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய தேர் தயார்படுத்தும் பணி தொடங்கியது. 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் மகாதேர் வலம் வரும். லட்சக்கணக்கான பக்தர்கள் தேரினைவடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள். அரிச்சந்திர மகராஜா வழங்கியதாக செவிவழி செய்தி கூறும் இந்த தேரினை வடம்பிடித்து இழுப்பதற்கு கோவில் உருவான காலம் தொட்டு இன்றுவரை பாரம்பரிய பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகிறது.

    அதன்படி திருப்பரங்குன்றம் அருகே உள்ளபெருங்குடி, பரம்புபட்டி, வலையப்பட்டி, சம்பக்குளம், நிலையூர், கூத்தியார்குண்டு, தோப்பூர், வேடர் புளியங்குளம், தனக்கன்குளம், வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி ஆகிய கிராமங்களுக்கு சென்று தேரினை இழுப்பதற்காக கிராம மக்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அழைப்பு விடுவது நடைமுறையில் உள்ளது. அதன்படி வருகின்ற 2 -ந்தேதி கோவிலில் இருந்து கோவில் முதல் ஸ்தானிகரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான சுவாமிநாதன் தலைமையில் வைராவி, கணக்குப்பிள்ளை, நாட்டாண்மைகள், காவல்காரர்கள் ஆகியோர் அந்த கிராமங்களுக்கு நேரடியாக சென்று முக்கியஸ்தர்கள், நாட்டாண்மைகள் மற்றும் முதன்மைக்காரர்களை சந்தித்து வெற்றிலை, பாக்கு மற்றும் திருவிழா பத்திரிக்கை ஆகியவை தட்டில் வைத்து தேரினை இழுக்க வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம் கோவிலின் தேரில் எண்ணற்ற அழகிய சிற்பங்கள் உள்ளன. அதில் ஆறுமுகப்பெருமான் தனது திருக்கரத்தில் வேலுக்கு பதிலாக தராசு பிடித்து இருப்பது போன்று ஒரு சிற்பம் உள்ளது. இது நீதி, நேர்மை, நியாயத்தின் அடையாளமாக அமைந்து உள்ளதாகவும், இதனால் ்திருப்பரங்குன்றத்தை தராசுக்கார பூமி என்று அழைப்பதாகவும் கூறுகிறார்கள்.

    • 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும் திருவிழா நடைபெற்று வந்த போதிலும், இந்த கோவிலுக்கு உகந்த திருவிழாவாக பங்குனி பெருவிழா போற்றப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இந்த விழா அடுத்த (ஏப்ரல்) மாதம் 10-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது.

    திருவிழா முதல் நாளான இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உற்சவர்கள் முருகப்பெருமான், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது.

    நாளை (27- ந்தேதி) விநாயகர் திருநாளாக போற்றப்படுகிறது. அன்று இரவு 7 மணியளவில் விநாயகர் சப்பரம் வலம் வருதல் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் காலை 10 மணியளவில் தங்கப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் வலம் வருதல் நடக்கிறது. இதேபோல தினமும் இரவு 7 மணியளவில் விதவிதமான வாகனங்களில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி நகர உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அடுத்த (ஏப்ரல்) மாதம் 1-ந்தேதி கைப்பாரமும், 5-ந்தேதி பங்குனி உத்திரமும், 6-ந்தேதி சூரசம்கார லீலையும், 7-ந்தேதி பட்டாபிஷேகமும், 8-ந்தேதி திருக்கல்யாணமும், 9-ந்தேதி கிரிவலப் பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணைகமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 26-ந்தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • ஏப்ரல் 9-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற 26-ந்தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த (ஏப்ரல்) மாதம் 9-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. கோவில் வாசலில் இருந்து சுமார் 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் பெரியதேர் வலம் வரும்.லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்வார்கள்.

    தேரோட்டத்திற்கு முதல் நாள் மாலை 6 மணியில் இருந்து விடிய, விடிய கிரிவலத்தில் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். கிரிவலப்பாதை சுற்றிலுமாக பக்தர்களுக்கு ஏராளமானோர் தங்களது நேர்த்தியாக அன்னதானம் வழங்குவார்கள். .இதனையொட்டி கிரிவலப்பாதை சீராக இருக்க வேண்டும்.

    அவனியாபுரம் ரோடு சந்திப்பில் இருந்து கல்வெட்டு குகை கோவில் வரை சுமார் 1 கி.மீ. சுற்றளவு வயல்வெளி சார்ந்த ஒரு பகுதியில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் கண்சிமிட்டுகிறது. அதனால் குறிப்பிட்ட தூரம் இருள் சூழ்ந்துள்ளது. ஒரு சில மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. கிரிவலப் பாதையை சுற்றி உள்ள தொட்டிகளில் குடிதண்ணீர் நிரப்பப்படாத நிலையே இருந்து வருகிறது.

    தேரோடும் பகுதியான தென்பரங்குன்றத்தில் உள்ள நவீன கழிப்பறை பராமரிக்கப்படாத நிலையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் பவுர்ணமி தோறும் கிரிவலம் வரக்கூடிய பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பங்குனி பெருவிழாவின் மகா தேரோட்டத்திற்கு 2 வாரங்கள் உள்ள நிலையில் கிரிவலப்பாதை முழுமையாக சீரமைக்கப்படாத நிலை இருந்து வருகிறது.

    இதுகுறித்து பக்தர்கள் முருகன், மருது ஆகியோர் கூறும்போது, கிரிவலப்பாதையில் வயல் சார்ந்த பகுதியில் முட்செடிகள் முழுமையாக வெட்டுவதோடு கால்களில் நெருஞ்சி முட்கள் குத்தப்படாதபடி எந்திரம் மூலம் குறிப்பிட்ட தூரம் ரோட்டை சமப்படுத்தி செம்மண் பரப்பி பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து செல்ல வசதி செய்ய வேண்டும்.கடந்த ஆண்டில் விநாயகர் தேரில் சேதமடைந்த மின்கம்பம் சாய்ந்தது. ஆகவே சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.தென்பரங்குன்றத்தில் அதிநவீன கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.கிரிவலப் பாதை முழுவதுமாக தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் போர்க்காலநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    • மார்ச் 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • மார்ச் 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருவிழாவிற்காக தேதி குறித்த தேங்காய் தொடும் முகூர்த்தம் நடைபெற்றது. கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமை தாங்கினார். கோவில் உள்துறை சூப்பிரண்டு ரஞ்சனி, அலுவலக சூப்பிரண்டு சுமதி முன்னிலை வகித்தனர்.

    கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க அலுவலகத்திற்கு பூ, மாலை, தேங்காய், பழங்களுடன்கோவில் ஸ்தானிக சிவாச்சாரிகள் மு.சுவாமிநாதன், ராஜா என்ற சந்திரசேகர், சொக்கு சுப்பிரமணியம், சண்முகசுந்தரம், சிவானந்தம் ரமேஷ், செல்லப்பா ஆகியோர் சென்றனர். அங்கு பங்குனி பெருவிழாவிற்கான தேதி குறிக்ககூடிய தேங்காய் தொடும் முகூர்த்தம் நடந்தது.

    அதில் வருகின்ற மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி வரை 15 நாட்கள் திருவிழா நடத்துவது என்று பேசப்பட்டது. திருவிழாவையொட்டி மார்ச் மாதம் 26-ந்தேதி கொடியேற்றம், ஏப்ரல் மாதம் 7-ந் தேதி பட்டாபிஷேகம், 8-ந்தேதி திருக்கல்யாணம், 9-ந்தேதி தேரோட்டம் என்று நாட்கள் குறிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வாசல் முன்பு நிலைநிறுத்தப்பட்டுள்ள பெரிய தேர் தயார்படுத்தும் பொருட்டாக மூடப்பட்டுள்ள தேரின் ஒரு பகுதியை திறக்கப்பட்டு தேரில் உள்ள ஆறுமுகப் பெருமானுக்கு (தராசுகாரர்) தேர்தொடும் முகூர்த்தம் நடந்தது.

    • அனைத்து கட்டண டிக்கெட்டு விவரங்களும் ஸ்கேனிங் செய்யப்பட்டு வருகிறது.
    • கோவிலை பொறுத்தவரை 80 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதே சமயம் திருவிழா மற்றும் திருமண முகூர்த்தம் உள்ள முக்கிய நாட்களில் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆரம்ப காலகட்டத்தில் கைப்பட ரூ.50, ரூ.100 என்று எழுதி தனித்தனியாக டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து கையிலான எந்திரத்தை பயன்படுத்தி டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டது.

    அதன்பின்னர் நவீன முறையில் இந்துசமய அறநிலையத் துறையின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட தனி சாப்ட்வேரை பயன்படுத்தி கணினி மூலம் ஒரே டிக்கெட்டில் எத்தனை நபர் என்று குறிப்பிட்டு அதன்படி மொத்த ரூபாயை ஒப்பிட்டு ஒரே டிக்கெட்டாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டை பெற்ற பக்தர்கள் சிறப்பு தரிசனத்திற்கான வழியில் சென்று சிறப்பு தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவிலில் முதல்முறையாக புது நடைமுறையாக நேற்று முதல் சிறப்பு தரிசன டிக்கெட்டினை எந்திரத்தில் "கியூ ஆர் கோடு" ஸ்கேனிங் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் புதிய ஸ்கேன் மிஷன் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனத்திற்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களது டிக்கெட்டினை ஸ்கேனிங் செய்த பிறகே கோவிலின் கருவறைக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறும்போது, சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஸ்கேன் நடைமுறை மூலம் ஒரு நாளைக்கு எத்தனை பேர் சிறப்பு தரிசனம் செய்துள்ளனர், சிறப்பு தரிசனம் மூலம் கோவிலுக்கு வருமானம் எவ்வளவு? என்பது வெளிப்படையாக இந்துசமய அறநிலையதுறைக்கு உட்பட்ட இணையதளம் மூலம் உடனுக்குஉடன் தெரிந்துகொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர் கூறும்போது, சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்வதுபோலவே அர்ச்சனை டிக்கெட் உள்பட அனைத்து கட்டண டிக்கெட்டு விவரங்களும் ஸ்கேனிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த கோவிலை பொறுத்தவரை 80 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் 20 கேமராக்கள் இந்துசமய அலுவலகத்துடன் நேரடி பார்வைக்கு இணைக்கப்பட்டு கமிஷனரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தினமும் கோவிலுக்கு பக்தர்கள் வருகை, கூட்ட நெரிசல் உள்பட குறை, நிறைகளை கமிஷனர் நேரடியாக தெரிந்துகொள்கிறார். சிலசமயங்களில் கமிஷனர் உத்தரவு குறைகளை தவிர்ப்பதற்கு வாய்ப்பாக உள்ளது என்றார்.

    ×