search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "theppa thiruvizha"

    • விநாயகர் சாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளினார்.
    • குளத்தில் மூன்றுமுறை தெப்பம் வளம் வந்து உற்சவம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முக்கிய விழாவாக 27-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 2-ந் தேதி தேரோட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது. அதையொட்டி விநாயகர் சாமிசிறப்பு அலங்காரத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளினார், சிறப்பு தீபாராதனையுடன் கோவில் தீர்த்த குளத்தில் மூன்றுமுறை தெப்பம் வளம் வந்து உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு விழா நடந்தது.
    • பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன் திருக்கண் சாத்தி வழிபாடு செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை யொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதில் அம்மன் தேர், சப்பரத்தேர், பிள்ளையார் தேர் என 3 தேர்தல் உலா வந்தன. 10-ம் திருவிழாவான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவில் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடந்தது.

    அதையொட்டி நேற்று இரவு 8 மணியளவில் சாமியும், அம்பாளும், பெருமாளும், இரு தட்டு வாகனத்தில் மேளதாளத்துடன் கோவிலில் இருந்து எழுந்தருளி தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர்.

    முன்னதாக தெப்பக்குளத்தை சுற்றி உள்ள அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு தெப்பக்குளம் ஜொலித்து கொண்டிருந்தது. ஜொலிக்கும் தெப்பக்குளத்தில் தெப்பம் 3 முறை உலா வந்தது. தெப்பம் மூன்று முறை உலா வரும்போது மரபு படி வடம் பிடித்து இழுப்பது வழக்கம். அதுபோல் தெப்பத்தின் முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேல தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழதெரு இளைஞர்களும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். 3-வது சுற்று திருவாவடுதுறை ஆதீனம் அருகே வந்த போது வாண வேடிக்கை நடத்தப்பட்டது. விழாவையொட்டி பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளில் தொப்பக்குளத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

    நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், திருவாவடுதுறை ஆதீன ஆய்வர் வீரநாதன், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா, துணைத்தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, தி.மு.க. வார்டு செயலாளர் அழகு தாமோதரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் செண்பகவல்லி, வள்ளியம்மாள், வீரபத்திரப்பிள்ளை, கதிரேசன், வசந்தி, நீலாவதி, சுரேஷ், தாணுமாலய பெருமாள், காசி, ஆனி எலிசபெத், கலைச்செல்வி, சுசீந்திரம் நடுத்தெரு ஊர்வகை டிரஸ்டி ரவீந்திரன், ம.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்டு தி.மு.க. செயலாளர் பீனிக்ஸ் கண்ணன், பொதுப்பணித்துறை அரசு ஒப்பந்ததாரர் மோகன்தாஸ், சுசீந்திரம் கோவில் குத்தகைதாரர்கள் மூர்த்தி, வடிவேல் முருகன், பக்த சங்கம் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாணுமாலய சாமியை தரிசனம் செய்தனர்.

    தெப்ப திருவிழா முடிந்த பிற்பாடு சாமி, அம்பாள், பெருமாள் மீண்டும் தட்டு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதிகளில் உலா வந்தன. அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன் திருக்கண் சாத்தி வழிபாடு செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு விழா நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • திருமால் மூம்மூர்த்திகளாய் காட்சி கொடுத்து அருள்பாலிக்கிறார்.
    • இத்திருத்தலம் மும்மூர்த்தி தலம் எனும் சிறப்பை பெற்றது.

    முத்திக்கொரு லோகம்பெரு மூவர்க்குயர் தேகம் சித்திக்கும் மெய்ஞ்ஞானம் அவர் சேமித்த நிதானம்பத்திக்குகெது மோகம்மது பாவித்திடு மேகம்சத்திக்கு அருள் அங்கு திகழ் தாணுச்சிவலிங்கம் தேவர்கள், முனிவர்கள், மூவேந்தர்கள் பணிந்து வணங்கி பெரும் பேறுபெற்ற தாணுமாலய பெருமானை கோவிலாக கொண்டது சுசீந்திரம் எனும் இத்திருத்தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றாலும் சிறப்பு பெற்று விளங்கும். சுசீந்திரத்தின் சிறப்பை ஸ்கந்த புராணம், பிரம்மாண்ட புராணம், கேரள சேத்திர மகாத்மியம், கன்னியாகுமரி ஸ்தலபுராணம், சுசீந்திரம் ஸ்தலபுராணம், சுசீந்தை பதிற்றுப் பத்தந்தாதி, சுசீந்தை மான்மியம் ஸ்தாணுஸ்தவம் போன்ற நூல்களால் அறிய முடிகிறது.

    மும்மூர்த்தி தலம்

    மகேந்திர கிரி மலையில் தவம் செய்து வந்த ஆக்கினேயன், பூர்ணானந்தகிரி, அமலானந்தன் போன்ற ரிஷிகள் தாணு நாத சாமியை வணங்கி, சாமியோடு இரண்டற கலந்தனர். தேரூரில் ஆலடி வீட்டில் பிறந்த அறம் வளர்த்தாள் எனும் நங்கை தாணுமாலய சாமி மீது கொண்ட அதீத பக்தியால் கி.பி.1444-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் நாளன்று தாணுலிங்கத்தில் ஐக்கியம் ஆனாள். அறம் வளர்த்தாள் சைவ சமயத்தில் ஓர் ஆண்டாளாக கொண்டாடப்படுகிறார்.

    தத்த சம்ஹிதையில் தத்தாத்திரேயரின் அவதார தலங்களில் 16-வது அவதார தலமாக சுசீந்திரம் விளங்குகிறது. அத்ரி முனிவரும் அவருடைய மனைவி அனுசுயா தேவியும் குழந்தை வரம் வேண்டி திருமாலை நோக்கி தவம் மேற்கொண்டனர். திருமால் மூம்மூர்த்திகளாய் காட்சி கொடுத்து அருள்பாலிக்கிறார். திருமாலின் அருள் பாலிப்பால் அத்ரி முனிவரின் கைகளில் இருந்து துர்வாசரும், கண்களில் இருந்து சோமனும், நெற்றி கண்ணில் இருந்து மூம் மூர்த்தியான தத்தாத்திரேயரும் அவதரிக்கின்றனர். இதன் காரணமாகவே இத்திருத்தலம் மும்மூர்த்தி தலம் எனும் சிறப்பை பெற்றது.

    தெப்பத்திருவிழா

    சிவராத்திரி நன்னாளுக்கு பிறகு வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த விழா காணும் தாணுநாத சாமிக்கு இந்த விழாவின் முடிவாக கொண்டு கொண்டாடப்படும் திருவிழாவே சித்திரை தெப்பத்திருவிழா ஆகும். இந்த திருவிழா பரணி நடசத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்தாம் நாளன்று தெப்பத்திருவிழாவில் நிறைவடைகிறது.

    இத்திருக் கோவிலின் தெப்பக்குளம் 4 ஏக்கர் பரப்பளவில் கம்பீரமான உயரத்தை கொண்ட நீராழி மண்டபத்தை நடுவில் கொண்டு விளங்குகிறது. இத்திருக்குளம் தந்த நதி என புராணங்களால் அழைக்கப்படும் பழையாற்றின் சோழன்திட்டை அணையில் இருந்து வரும் நீரால் நிரப்பப்படுகிறது.

    இத்திருக்குளம் கீழப்பேரூர், ஜெயசிம்ம நாட்டு இல்லத்து ஸ்ரீவீரராம வீரமார்த்தாண்ட குலசேகரப்பெருமாள் எனும் மன்னரால் ஆங்கில வருடம் 1471-ல் வைகாசி மாதம் 27-ம் நாள் வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி, பூசம் நாளில் பணி முடித்து இந்த திருக்குளத்தை தாணுமாலய சாமிக்கு சமர்ப்பித்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

    வீர மார்த்தாண்ட மன்னன் தன் மகனுக்கு கண்பார்வை கிடைக்க வேண்டி, தாணுநாதரிடம் வேண்டுதல் வைத்து அது நிறைவேறியதற்கு காணிக்கையாக பிரக்ஞ தீர்த்தம் எனும் இத்திருக்குளத்தை தாணுநாதருக்கு அர்ப்பணிப்பு செய்ததாக செவி வழிச் செய்தி மூலம் அறிய முடிகிறது.

    தெப்பத்திருவிழா அன்று தெப்பக்குளத்தின் கரைகள் தீபவிளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. மலர்களாலும், மாவிலை தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஊழி காலத்தில் உயிர்களை உய்விக்க வேண்டி தோணியில் வந்து உயிர்களை காத்தருளும் நம்பெருமான் தாணுநாதன், திருவேங்கடமுடையாரோடு எழுத்தருளி அருள் பாலிக்கிறார். கருணாமூர்த்தியான சிவனார், சீவன்களை பிறவி எனும் பெருங்கடலில் இருந்து உய்விக்க இத்திருக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி அருள் செய்கிறார்.

    -மு.செல்லப்பன் எம்.ஏ., எம்.எட்.

    ஆசிரியர் (ஓய்வு) சுசீந்திரம்.

    • 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 30-ந்தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. கோவிலில் உள்ள சித்திர சபை மண்டபத்தில் வைத்து நடராஜ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு 18 ஊர் பிடாகைகள், ஊர் தலைவர்கள், வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவபிரசாத், தெற்கு மண்மடம் ஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, துணை தலைவர் சுப்பிரமணியபிள்ளை, கவுன்சிலர்கள் வள்ளியம்மாள், சுரேஷ், நடுத்தெரு ஊர்வகை அறக்கட்டளை ரவீந்திரன் மற்றும் பக்த சங்க நிர்வாகிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு திருவிழாவுக்கான பத்திரிகைக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) மாலையில் கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுபடி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்று விழாவையொட்டி காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், 9 மணிக்கு மேல் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு தேவார இன்னிசை, 6.15 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு பக்தி பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை சாமி வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேகம், சமய சொற்பொழிவு, இரவு வாகனத்தில் வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் 9-ம் நாளான 29-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் திருத்தேர்வடம் தொட்டிலுக்கும் தேரோட்டம் நடக்கிறது. இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், சப்பர தேர் என மூன்று தேர்கள் உலா வருகின்றன. தேரோட்டத்தை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். மாலை 6 மணிக்கு சாமி மண்டகப்படிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருளல், இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தா வர்ண நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 30-ந்தேதி இரவு 8 மணிக்கு மேல் தெப்பத்திற்கு சாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. தெப்பக்குளத்தை சுற்றிலும் தெப்பம் 3 முறை வலம் வருகிறது. முதல் சுற்றினை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றினை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழதெரு இளைஞர்களும் வடம் பிடித்து இழுத்து வருவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு வைபவம் நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி தலைமையில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்த சங்க நிர்வாகிகளும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

    • 21-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 30-ந் தேதி தெப்பத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அது போல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா வருகிற 21-ந் தேதி காலை 9 மணிக்குமேல் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை யொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, போன்றவைகள் நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டமும், 30-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதற்கான கால்நாட்டு விழா நேற்று கோவிலில் நடைபெற்றது. தாணுமாலய சாமி சன்னதியின் அருகே உள்ள முருகன் சன்னதி முன்பு கால்நாட்டு விழா நடந்தது. அதைத்தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முகப்பில் பந்த கால் நடும் விழா நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் பரமேஸ்வரன் சர்மா, தெற்கு மண் மடம் ஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, நடுத்தெரு ஊர்வகை டிரஸ்டி ரவீந்திரன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

    • சுவாமி -அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
    • தெப்பத்தில் சுவாமி- அம்பாள் 9 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 11-ம் நாளான நேற்று நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் தெப்பத்திருவிழா நடந்தது.

    இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமி -அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு ரிஷப வாகனங்களில் பூவனநாதர்- செண்பகவல்லி அம்மன் திருவீதி உலா டி.பி.ஆர்.மணி, எம். கோபி குழுவினர் நாதஸ்வர இசையுடன் புறப்பட்டு, எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில் ரோடு, மெயின் ரோடு வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்து, பின்னர் தெப்பக்குளத்திற்கு வந்தடைந்தது.

    இதனைத் தொடர்ந்து சுவாமி- அம்பாள் கோவில் திருக்குளத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்கு எழுந்தருளினார்கள். நிகழ்ச்சிக்கு நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச் செல்வம், துணை தலைவர் எம்.செல்வராஜ் தலைமை தங்கினார்கள். சங்க செயலாளர் எஸ்.ஆர். ஜெயபாலன், பொருளாளர் டி.ஆர். சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா எஸ்.எம். மாரியப்பன் முன்னிலை வகித்தனர். காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல் நிலைபள்ளி பொருளாளர் ஏ.செல்வம் வரவேற்றார். தெப்பத் திருவிழாவை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

    தெப்பத்தில் சுவாமி- அம்பாள் 9 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். விழாவையொட்டி கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அன்னதானம் வழங்கப் பட்டது. மெயின் ரோடு காமராஜர்சிலை அருகில் நெல்லை எஸ்.ஆர். சந்திரன் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சிநடந்தது.

    • இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம்.
    • தவறவிடக் கூடாத விரத நாள் இது.

    'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் ஏகாதசி விரதமிருந்து, விஷ்ணுவின் அருள் பெறும் பேறு பெற்றார்கள். பொதுவாக, ஒவ்வொரு மாதத்துக்கும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அமாவாசைக்கு அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி (வளர்பிறை ஏகாதசி) என்றும்; பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி (தேய்பிறை ஏகாதசி) என்றும் பெயர்.

    இன்றைய சித்திரை மாத தேய்பிறை ஏகாதசிக்கு 'பாப மோசனிகா ஏகாதசி' என்று பெயர். பாவங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி என்ற பொருளில் இந்த ஏகாதசிக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம். தவறவிடக் கூடாத விரத நாள் இது. இந்த விரதத்தை, ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் கடைப்பிடிக்கலாம். மேலும், இந்த விரதமானது நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தும்.

    இன்று பாப மோசனிகா ஏகாதசியன்று விரதமிருந்து சாபம் நீங்கப் பெற்ற மஞ்சுகோஷை என்ற தேவகன்னியின் கதையை அறிந்துகொள்வோம்.

    சைத்ரதம் என்பது ஓர் அழகிய வனம். அங்கு முனிவர்கள் பலர் தனிக் குடில் அமைத்துத் தவம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது மஞ்சுகோஷை எனும் அழகிய தேவகன்னி வானுலகில் வலம் சென்றுகொண்டிருந்தபோது, சைத்ரதத்தின் வனப்பைக் கண்டு கீழே இறங்கினாள். அங்கு தவம் செய்துகொண்டிருந்தவர்களில் மேதாவி எனும் முனிவரைக் கண்டாள். அழகிய முகம், திரண்ட தோள், அடர்ந்த கூந்தல் ஆகியவற்றுடன் விழிகளை மூடித் தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைப் பார்த்ததுமே காதலில் விழுந்துவிட்டாள்.

    மஞ்சுகோஷை, தவம் செய்துகொண்டிருந்த மேதாவியைத் தனது இனிமையான குரலில் அழைத்தாள். யாழின் இசையையும் பழிக்கும்படி ஒலித்த அவளுடைய குரலில் மயங்கிய மேதாவி, மெள்ள விழிகளைத் திறந்தார். அவளுக்கு முன் நின்றுகொண்டிருந்த மஞ்சுகோஷையின் அழகிய வனப்பில், பார்த்ததுமே சொக்கிப்போனார். ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகையின் அழகில் மயங்கியபோது, மேதாவியைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன. மஞ்சுகோஷையின் பேரழகில் மனதைப் பறிகொடுத்தவர், தவம் செய்வதை விடுத்து, அவளுடன் சேர்ந்து தனது குடிலிலேயே வசிக்கத் தொடங்கினார். ஆண்டுகள் பல கடந்தன. தான் தேவருலகம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டபடியால், மேதாவியின் பாதங்களைப் பணிந்து வணங்கி, "தான் மேலுலகம் செல்ல வேண்டும். விடைகொடுங்கள் சுவாமி" என்று வேண்டினாள். ஆனால், அவளுடைய அழகிலும் அவளிடம் கொண்டிருந்த மோகத்திலும் சிக்குண்ட மேதாவி காலம் கடந்ததை உணராதவராய், "நீ இப்போதுதானே வந்தாய், அதற்குள் என்ன அவசரம்? இன்னும் சிறிது காலம் என்னுடன் இருந்துவிட்டுப் போ" என்று தெரிவித்தார் .

    மீண்டும் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். மேலும் பல ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் அவளுடைய மடியில் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டிருந்தபோதுதான் ஞானோதயம் ஏற்பட்டது மேதாவிக்கு. ஓடிச்சென்று, சந்தியாவந்தனம் செய்துகொண்டு வந்தார். மஞ்சுகோஷைக்கு எதுவும் புரியவில்லை. அவள், "இத்தனை ஆண்டுகளாக எதையும் கடைப்பிடிக்காத தாங்கள் இப்போது அவசரமாகச் சந்தியாவந்தனம் செய்கிறீர்களே" என்று வினவியபோதுதான் மேதாவிக்குப் புரிந்தது.

    தனது தவம் கலைந்தமைக்கும் இத்தனை ஆண்டுகளாகச் சுயநினைவை இழந்து வாழ்ந்தமைக்கும் காரணம் மஞ்சுகோஷைதான் என்று நினைத்த மேதாவி, "உன் அழகிய உருவம் மறைந்து பேயாக மாறுவாயாக..." என்று கோபத்தில் சபித்துவிட்டார். அதன் பிறகு, இதில் தனது தவறும் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், "சித்திரை மாதம் தேய்பிறை சர்வ ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் உனது சாபம் விலகும்" என்று அருள்புரிந்தார்.

    மஞ்சுகோஷையும் தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவற்றைப் பாப மோசனிகா ஏகாதசியன்று விரதமிருந்து போக்கி, சுய உருவத்தை அடைந்தாள். தவற்றினால் தனது தவ வலிமையை இழந்துவிட்டதைத் தன் தந்தையிடம் கூறி வருத்தப்பட்டார் மேதாவி. அவருடைய தந்தையும், இதே பாப மோசனிகா ஏகாதசி விரதத்தின் பெருமையைக் கூறி அதையே உபாயமாகத் தெரிவித்தார். மேதாவியும் அந்த விரதத்தை மேற்கொண்டு தனது தவ வலிமையை மீண்டும் பெற்றார்.

    நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது இந்த ஏகாதசி விரதம்.

    ஏகாதசி விரதத்துக்கு பாவங்களைப் போக்கும் சக்தி எப்படியுண்டோ, அதே மாதிரி எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் சக்தியும் உண்டு. அசுவமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று கூறுகின்றன புராணங்கள்.

    ஏகாதசி விரதமிருப்பவர்கள் முதல் நாளான தசமியன்று ஒரு பொழுது மட்டுமே உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதமிருந்து நாராயண நாமத்தைப் பாடியபடி, பெருமாளுக்குத் துளசி மாலையிட்டு வழிபட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்துக்குள் நீராடி துளசி தீர்த்தத்தை அருந்த வேண்டும். அதன் பிறகு 'பாரணை' என்னும் பல்வகை காய்கறிகளுடன்கூடிய உணவை உண்ண வேண்டும். உணவில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இருப்பது அவசியம். பெருமாளுக்கு நைவேத்யம் செய்து அதை ஒரு ஏழைக்குத் தானம் செய்த பிறகு உணவு உட்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி நன்மை ஏற்படும் என்பது ஐதிகம்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.... https://www.maalaimalar.com/devotional

    • இன்று தீர்த்தவாரியுடன் தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்

    தென்கயிலாயம் என்று போற்றப்படும், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி தெப்பத்திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக மதியம் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை 6.15 மணிக்கு சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மலைக்கோட்டை உள்வீதி, சின்னக்கடை வீதி, என்.எஸ்.பி.ரோடு வழியாக தெப்பக்குளத்தை வந்தடைந்தனர்.

    பின்னர், தெப்பக்குளத்தில் பனை ஓலைகள் கொண்டு சுமார் 40 அடி உயரத்தில் தயார் நிலையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 7.40 மணிக்கு எழுந்தருளினர். பின்னர் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தை 5 முறை வலம் வந்தனர். அதை தொடர்ந்து தெப்பக்குளத்தின் நடுபகுதியில் உள்ள நீராழி மண்டபத்தில் சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். பின்னர் இரவு 11.45 மணிக்கு மேல் தெப்பத்தில் இருந்து சுவாமி-அம்பாள் வெளியே வந்தனர். அதைத்தொடர்ந்து நந்தி கோவில் தெரு, ஆண்டாள் வீதி, சறுக்குப் பாறை வழியாக இரவு 12.30 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் மீண்டும் கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அதே தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியுடன் தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது.

    தெப்பத் திருவிழாவையொட்டி தெப்ப குளத்தை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தெப்பக் குளத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டன.

    • ராமநவமி விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • தெப்போற்சவம் 3-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) ராமநவமி விழா தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி இன்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமச்சந்திரமூர்த்திக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 3 மணிக்கு ராமநவமி ஆஸ்தானம், இரவு 7.00 மணிக்கு ராமர், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை முத்து மாலைகள் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் இருந்து கோவிலுக்கு யானை மீது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சீதா-ராமர் திருக்கல்யாணம் நடக்கிறது.

    நாளை மறுநாள் ஏப்ரல் 1-ந்தேதி காலை 8 மணிக்கு திருப்பதியில் உள்ள நரசிம்ம தீர்த்தத்தில் இருந்து கோவில் வரை மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க தீர்த்தம் எடுத்து வரப்பட்டு ராமருக்கு சதுர்தஷ கலச திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ராமருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து தங்கத்3-ந்தேதி திருச்சி வாகனத்தில் சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    இந்த கோவிலில் தெப்போற்சவம் வருகிற 3-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி அங்குள்ள ராமச்சந்திர புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை உற்சவர்கள் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    • ஒவ்வொரு நாளும் ஒரு வாகனங்களில் வீதிஉலா நடைபெறும்.
    • 4-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனாய தாயுமானவசுவாமி கோவிலுக்கு சென்று மனமுருகி சிவனை வழிபட்டால் சுகப்பிரசவத்தில் குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக தாயுமான சுவாமி சன்னதியில் உள்ள தங்ககொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்கிட ரிஷபக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி சுவாமி, அம்பாள் முறையே கற்பகவிருட்ச வாகனம், பூதவாகனம், வெள்ளி ரிஷப வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனங்கள் என ஒவ்வொரு நாளும் ஒரு வாகனங்களில் புறப்பாடு செய்யப்பட்டு வீதிஉலா நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி இரவு நடைபெறுகிறது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். தொடர்ந்து 4-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்று இரவு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • தெப்பத்திருவிழா 3-ந்தேதி நடைபெறும்.
    • 4-ந்தேதி தீர்த்தவாரியும், கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் உத்திரத்திற்கு முந்தைய நாளில் தெப்பத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 27-ந்தேதி முதல் காலை 8 மணிக்கு பல்லக்கு புறப்பாடும், மாலை 7 மணிக்கு (முறையே ஒவ்வொரு நாளும்) சுவாமி கற்பகவிருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வலம் வருகின்றனர்.

    28-ந்தேதி சுவாமி பூதவாகனம், அம்பாள் கமல வாகனம். 29-ந்தேதி சுவாமி கைலாசபர்வதம் வாகனம், அம்பாள் அன்னவாகனம். 30-ந்தேதி சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனம். 31-ந்தேதி சுவாமி யானை வாகனம், அம்பாள் கண்ணாடி பல்லக்கு. 1-ந்தேதி சுவாமி நந்திகேஸ்வரர் வாகனம், அம்பாள் சிம்ம வாகனம். 2-ந்தேதி சுவாமி தங்க குதிரை வாகனம், அம்பாள்கண்ணாடி பல்லக்கு ஆகிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் புறப்பாடு செய்யப்பட்டு வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வருகிற 3-ந்தேதி இரவு நடைபெறும். அன்று காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் தெப்பத்திற்கு செல்ல புறப்பாடு செய்யப்படும். மாலை 7 மணிக்கு தெப்பக்குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். தொடர்ந்து 4-ந்தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு சேர்த்தி சேவை புறப்பாடும், இரவு 10 மணிக்கு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • இன்று மாலை தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார்.
    • திருமஞ்சனம் நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. நேற்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைந்தார். மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை அலங்காரம் அமுது செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவில் தெப்பத்தில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நாச்சியார் தெப்ப உற்சவம் கண்டருளினார்.

    இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து, இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேர்ந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். அங்கு திருமஞ்சனம் நடக்கிறது. பின்னர் இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு பந்தக்காட்சியுடன் வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    ×