search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தெப்பக்குளத்தின் சிறப்பு
    X

    தெப்பக்குளமும், நீராழி மண்டபமும்.

    சுசீந்திரம் தெப்பக்குளத்தின் சிறப்பு

    • திருமால் மூம்மூர்த்திகளாய் காட்சி கொடுத்து அருள்பாலிக்கிறார்.
    • இத்திருத்தலம் மும்மூர்த்தி தலம் எனும் சிறப்பை பெற்றது.

    முத்திக்கொரு லோகம்பெரு மூவர்க்குயர் தேகம் சித்திக்கும் மெய்ஞ்ஞானம் அவர் சேமித்த நிதானம்பத்திக்குகெது மோகம்மது பாவித்திடு மேகம்சத்திக்கு அருள் அங்கு திகழ் தாணுச்சிவலிங்கம் தேவர்கள், முனிவர்கள், மூவேந்தர்கள் பணிந்து வணங்கி பெரும் பேறுபெற்ற தாணுமாலய பெருமானை கோவிலாக கொண்டது சுசீந்திரம் எனும் இத்திருத்தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றாலும் சிறப்பு பெற்று விளங்கும். சுசீந்திரத்தின் சிறப்பை ஸ்கந்த புராணம், பிரம்மாண்ட புராணம், கேரள சேத்திர மகாத்மியம், கன்னியாகுமரி ஸ்தலபுராணம், சுசீந்திரம் ஸ்தலபுராணம், சுசீந்தை பதிற்றுப் பத்தந்தாதி, சுசீந்தை மான்மியம் ஸ்தாணுஸ்தவம் போன்ற நூல்களால் அறிய முடிகிறது.

    மும்மூர்த்தி தலம்

    மகேந்திர கிரி மலையில் தவம் செய்து வந்த ஆக்கினேயன், பூர்ணானந்தகிரி, அமலானந்தன் போன்ற ரிஷிகள் தாணு நாத சாமியை வணங்கி, சாமியோடு இரண்டற கலந்தனர். தேரூரில் ஆலடி வீட்டில் பிறந்த அறம் வளர்த்தாள் எனும் நங்கை தாணுமாலய சாமி மீது கொண்ட அதீத பக்தியால் கி.பி.1444-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் நாளன்று தாணுலிங்கத்தில் ஐக்கியம் ஆனாள். அறம் வளர்த்தாள் சைவ சமயத்தில் ஓர் ஆண்டாளாக கொண்டாடப்படுகிறார்.

    தத்த சம்ஹிதையில் தத்தாத்திரேயரின் அவதார தலங்களில் 16-வது அவதார தலமாக சுசீந்திரம் விளங்குகிறது. அத்ரி முனிவரும் அவருடைய மனைவி அனுசுயா தேவியும் குழந்தை வரம் வேண்டி திருமாலை நோக்கி தவம் மேற்கொண்டனர். திருமால் மூம்மூர்த்திகளாய் காட்சி கொடுத்து அருள்பாலிக்கிறார். திருமாலின் அருள் பாலிப்பால் அத்ரி முனிவரின் கைகளில் இருந்து துர்வாசரும், கண்களில் இருந்து சோமனும், நெற்றி கண்ணில் இருந்து மூம் மூர்த்தியான தத்தாத்திரேயரும் அவதரிக்கின்றனர். இதன் காரணமாகவே இத்திருத்தலம் மும்மூர்த்தி தலம் எனும் சிறப்பை பெற்றது.

    தெப்பத்திருவிழா

    சிவராத்திரி நன்னாளுக்கு பிறகு வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த விழா காணும் தாணுநாத சாமிக்கு இந்த விழாவின் முடிவாக கொண்டு கொண்டாடப்படும் திருவிழாவே சித்திரை தெப்பத்திருவிழா ஆகும். இந்த திருவிழா பரணி நடசத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்தாம் நாளன்று தெப்பத்திருவிழாவில் நிறைவடைகிறது.

    இத்திருக் கோவிலின் தெப்பக்குளம் 4 ஏக்கர் பரப்பளவில் கம்பீரமான உயரத்தை கொண்ட நீராழி மண்டபத்தை நடுவில் கொண்டு விளங்குகிறது. இத்திருக்குளம் தந்த நதி என புராணங்களால் அழைக்கப்படும் பழையாற்றின் சோழன்திட்டை அணையில் இருந்து வரும் நீரால் நிரப்பப்படுகிறது.

    இத்திருக்குளம் கீழப்பேரூர், ஜெயசிம்ம நாட்டு இல்லத்து ஸ்ரீவீரராம வீரமார்த்தாண்ட குலசேகரப்பெருமாள் எனும் மன்னரால் ஆங்கில வருடம் 1471-ல் வைகாசி மாதம் 27-ம் நாள் வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி, பூசம் நாளில் பணி முடித்து இந்த திருக்குளத்தை தாணுமாலய சாமிக்கு சமர்ப்பித்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

    வீர மார்த்தாண்ட மன்னன் தன் மகனுக்கு கண்பார்வை கிடைக்க வேண்டி, தாணுநாதரிடம் வேண்டுதல் வைத்து அது நிறைவேறியதற்கு காணிக்கையாக பிரக்ஞ தீர்த்தம் எனும் இத்திருக்குளத்தை தாணுநாதருக்கு அர்ப்பணிப்பு செய்ததாக செவி வழிச் செய்தி மூலம் அறிய முடிகிறது.

    தெப்பத்திருவிழா அன்று தெப்பக்குளத்தின் கரைகள் தீபவிளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. மலர்களாலும், மாவிலை தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஊழி காலத்தில் உயிர்களை உய்விக்க வேண்டி தோணியில் வந்து உயிர்களை காத்தருளும் நம்பெருமான் தாணுநாதன், திருவேங்கடமுடையாரோடு எழுத்தருளி அருள் பாலிக்கிறார். கருணாமூர்த்தியான சிவனார், சீவன்களை பிறவி எனும் பெருங்கடலில் இருந்து உய்விக்க இத்திருக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி அருள் செய்கிறார்.

    -மு.செல்லப்பன் எம்.ஏ., எம்.எட்.

    ஆசிரியர் (ஓய்வு) சுசீந்திரம்.

    Next Story
    ×