search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Renovation"

    • 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.
    • நந்தி மண்டபத்தில் உள்ள தூண்கள் புதுப்பொலிவுடன் பிரகாசமாக காட்சி அளித்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. தனி சன்னதியில் அமைந்துள்ள இந்த நடராஜரை தரிசிக்க திருவாதிரை ஆருத்ரா அன்று ஒரு நாள் மட்டுமே சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் திரு உத்தரகோசமங்கை கோவிலில் உள்ள பழமையான நந்தி மண்டப பிரகாரத்தில் திருப்பணிகள் செய்யும்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நந்தி மண்டபத்தை சுற்றி உள்ள கருங்கற்களினால் ஆன தூண்களில் இருந்த பாசிகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு பழமை மாறாமல் இருக்க சுண்ணாம்புக்கல், கடுக்காய், கருப்பட்டி உள்ளிட்டவைகளை கொண்டு அரைக்கப்பட்ட கலவையை வைத்து மண்டபத்தின் பிரகாரத்தில் உள்ள தூண்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 4 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நந்தி மண்டபத்தின் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இறுதி கட்டத்தை எட்டி திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளதால் நந்தி மண்டபத்தில் உள்ள தூண்கள் புதுப்பொலிவுடன் பிரகாசமாக காட்சி அளித்து வருகிறது. இதை கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர்.

    அடுத்த கட்டமாக சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கருங்கற்களினால் ஆன தூண்களில் திருப்பணிகள் செய்யும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திருப்பணிகள் அனைத்தும் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் மேற்பார்வை மற்றும் ஆலோசனைப்படி நடைபெற்று வருகிறது.

    • காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
    • இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தெற்கு வாயிலில் உள்ள பெரிய ராஜ கோபுரமானது கி.பி.1509-ம் ஆண்டு விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது ராஜகோபுரங்கள் புனரமைக்கப்பட்டது. 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகமானது 16 ஆண்டுகள் ஆகியும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திட ரூ.22 கோடி வரை ஒதுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    பழம்பெருமை வாய்ந்த இந்த கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக புனரமைப்பு பணி மேற்கொள்ள கோவில் செயல் அலுவலர் வேதமூர்த்தி முன்னிலையில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    குறிப்பாக கோவிலில் உள்ள பழமையான பல அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய, கற்சிலைகள், கற்தூண்களை ஆய்வு செய்த அதிகாரிகள் பழமை மாறாமல் புனரமைப்பு பணி மேற்கொள்வதற்க்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்தனர். குறிப்பாக தமிழக அரசு மேலும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து மேற்கு ராஜகோபுரம் மட்டுமல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள இரட்டை திரு மாளிகை புனரமைப்பு பணிகளையும் மீண்டும் மேற்கொண்டு எதிர் வரும் கும்பாபிஷேகத்தில் இருந்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உற்சவர் சிலையையே, மூலவர் சிலையாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
    • சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேக பணிகள் தொடங்க உள்ளது

    பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் மூலவர் சிலை சேதமடைந்துள்ளது.

    இதனால் உற்சவர் சிலையையே, மூலவர் சிலையாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இந்த கோவிலில் ஐம்பொன் சிலைகளும், கோவில் சுவர்களில் பழங்கால கல்வெட்டுகளும் உள்ளன. பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கோவிலை அளவீடு செய்யும் பணி நடந்தது.

    இதைத்தொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக ஆயத்த பணிகளை கோவில் செயல் அலுவலர் கனகலட்சுமி, இந்துசமய அறநிலைத்துறை உதவிபொறியாளர் சந்தானமாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ரத்தினவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேக பணிகள் தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

    • ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.
    • 2006-ம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பூந்தமல்லி, திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். முன்னதாக கோயில் மூலவர் உற்சவர் மற்றும் பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னதி தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றது.

    புனரமைப்பு பணிகள் தொடங்கப்படுவதையொட்டி சிறப்பு யாகங்களும் ஹோமங்களும் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். 2006ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018ஆம் ஆண்டு ஆகம முறைப்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும்.

    கொரோனா காலம் என்பதால் நடைபெறவில்லை. பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் தற்போது பாலாலயம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, திருக்கோவில் பிரகாரத்தை அகலப்படுத்துவது, கோவில் மண்டபம், ராஜகோபுரம், கருங்கல்லால் புனரமைப்பது என ரூ.18 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளது.

    சுமார் இரண்டு ஆண்டு காலம் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிசேக விழா நடத்தப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி, முன்னாள் அறங்காவலர் லயன். டி.ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது பல்வேறு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் எனகூறப்பட்டது.

    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 400 ஆண்டுகளுக்கு பின்னர் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி, மீயூரல் ஓவியங்கள் சீரமைக்கும் பணி, மடப்பள்ளி சீரமைப்பு ஆகியன நடந்து வருகிறது. கோவில் வெளிப்பிரகார பாதையில் போடப்பட்டிருந்த கற்கள் வழுக்கும் தன்மையுடன் இருந்ததால், அவற்றை சாதாரண கல்லாக மாற்றும் பணி நடந்து வருகிறது. தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது பல்வேறு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் எனகூறப்பட்டது. அதன்படி பெரும்பாலான பூஜைகள் நிறைவடைந்து விட்டது.

    பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. கோவில் கருவறையின் மேல்பகுதி விமானம் சுத்தப்படுத்தி அதன் மீது வர்ணம் பூசும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வருகிற 29-ந் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்குகிறது. 30-ந் தேதி பாலாலயத்தில் பூஜையில் இருக்கும் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவறைக்கு 7 ஆண்டுகளுக்கு பின்னர் எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறும். ஜூலை மாதம் 6-ந் தேதி காலை 6 மணி முதல் 6.50-க் குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். 9-ந் தேதி தங்கக்கொடிமர பிரதிஷ்டை நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    திருவட்டார் பஸ்நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலை குண்டு குழிகளுடன், இருபுறமும் புதர்கள் மண்டி மோசமான நிலையில் உள்ளது. அதுபோல் திருவட்டார் சந்தை அருகே ஈனாச்சி அம்மன் கோவிலில் இருந்து ஆதிகேசவப்பெருமாள் கோவில் வரையுள்ள அணுகு சாலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மடாவீதியின் அகலம் குறுகிய அளவில் உள்ளதால் தேரில் வீதியுலா வருவதில் சிரமம் உள்ளது.
    • மாடவீதியை விரிவாக்கம் செய்ய இந்து அறநிலைத்துறை முடிவு செய்து உள்ளது.

    திருத்தணியில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இதில் பூக்கடை, தேங்காய் விற்பனை கடை, சிற்றுண்டி கடை, தேனீர் கடை, குளிர்பான கடைகள் உள்பட பல கடைகள் நடத்தி வருகின்றனர்.

    மலைக்கோவில் மேல் உள்ள மாடவீதியில் கோவில் நிர்வாகம் சார்பில் மலர் அங்காடி, விற்பனை நிலையம், தேங்காய் கடை, குளிர்பான கடை ஆகியவை ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் வரும் வருவாய் கோவில் கணக்கில் சேமித்து வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் மலைக்கோவில் மாடவீதியில் உள்ள ஐந்து கடைகள் கடந்த 1-ந் தேதி நடைப்பெற்ற இந்த ஆண்டிற்கான கோவில் பொது ஏலத்திற்கு அறிவிக்கவில்லை. இதுக்குறித்து கோவில் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, திருத்தணி முருகன் மலைக்கோவில் பக்தர்களின் நலனுக்காவும், நிர்வாக வசதிக்காவும் மலைமேல் பெருந்திட்ட வளாகம் அமைக்கபட உள்ளது.

    மடாவீதியின் அகலம் குறுகிய அளவில் உள்ளதால் தேரில் வீதியுலா வருவதில் சிரமம் உள்ளது. எனவே மாடவீதியை விரிவாக்கம் செய்ய இந்து அறநிலைத்துறை முடிவு செய்து உள்ளது. இது குறித்து திட்ட அறிக்கைகளை தயார் செய்து இந்து அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபருக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் ஆணையரிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் நடைப்பெறும் எனவும் தெரிவித்தார்.

    • மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது.
    • மீனாட்சி அம்மன் கோவிலில் 154 திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதால் மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டபத்தையும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இந்த திருப்பணிகளை ஆய்வு செய்வதற்காக மாநில அளவிலான வல்லுனர்கள் குழுவினர் நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். இந்த குழுவில் கண்காணிப்பு தொல்லியலாளர் மூர்த்திஸ்வரி, ஒய்வு பெற்ற தொல்லியல் நிபுணர்கள் சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி, என்ஜினீயர் முத்துசாமி, ராஜாபட்டர், கோவிந்தராஜபட்டர், இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல ஸ்தபதி ஜெயராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இவர்கள் 2-வது நாளாக நேற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது கோவில் துணை கமிஷனர் அருணாசலம், மீனாட்சி கோவில் என்ஜினீயர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர் நாராயணன் உள்பட பலர் உடனிருந்தனர். அதை தொடர்ந்து வல்லுனர் குழுவினர் கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் கோவில் உதவி கமிஷனர் செல்வி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆய்வுக்கு பின்னர் வல்லுனர்கள் குழுவினர் கூறியதாவது, மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்து அதனை அரசுக்கு அறிக்கை சமர்பிக்க வந்துள்ளோம். மீனாட்சி அம்மன் கோவிலில் 154 திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஒப்புதலை நாங்கள் வழங்கிய உடன் விரைவில் திருப்பணிகள் தொடங்கும்.

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி தற்போது நடந்து வருகிறது. ஆகம விதிப்படி பழமை மாறாமல் திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் உள்ள அன்னதான கூடத்தை மாற்றி அங்கு சுவாமியின் வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோ பூஜை, கஜ பூஜை செய்து திருப்பணியை தொடங்கி வைத்தார்.
    மயிலாடுதுறையில் தேவாரப்பாடல் பெற்ற மயூரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது. பல்வேறு சிறப்பு பெற்ற மயூரநாதர் கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

    அதனை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோ பூஜை, கஜ பூஜை செய்து திருப்பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் கோவில் கொடிமரத்து மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது.

    தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் மங்கல வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமி, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலின் ஈசானிய மூலையில் திருப்பணிக்கான பூஜைகள் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனம் அடிக்கல் நாட்டினார்.

    இதில் திருவாவடுதுறை ஆதீன அம்பலவாண தம்பிரான், அருணாச்சல தம்பிரான், வேலப்ப தம்பிரான், ராமலிங்க சுவாமிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், வக்கீல் ராஜேந்திரன், டாக்டர்கள் ராஜசேகர், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பணி தொடக்க நிகழ்ச்சி பூஜைகளை சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் திருமாறன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்களுக்கும் ரூ.13 லட்சத்தில் தேர்தளம் அமைக்கப்பட உள்ளது.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்களுக்கும் ரூ.13 லட்சத்தில் தேர்தளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணியாக தேரின் கூரை மாற்றம் செய்யப்பட்டது.

    மேலும் தளம் அமைப்பதற்காக சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர்களை கோவில் பணியாளர்கள் இணை ஆணையர் ஞானசேகர், பொறியாளர் ராஜ்குமார் மேற்பார்வையில் அகற்றினர். பின்னர் விரைவில் தேர் தளம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்தார்.
    குடியாத்தத்தில் தாழ்வான பகுதியில் உள்ள கோவிலை உயர்த்துவதற்காக 500 ஜாக்கிகள் பொருத்தப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் தாழையாத்தம் பஜார் வரதராஜ தெருவில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டியபடி மற்றொரு கோவில் உள்ளது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தற்போது தரைமட்டத்திற்கும் கீழே சென்றுவிட்டதால் மழைகாலங்களில் கோவிலுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் ஆகமவிதிகள் படி கோவிலை சீரமைக்க முடிவு செய்தனர்.

    அதன்படி, 16 அடி அகலமும், 37 அடி நீளமும் உள்ள இந்த கோவிலை பக்கவாட்டில் 1½ அடி நகர்த்தியும், 5 அடி உயர்த்தியும், 13 அடி பின்நோக்கியும் நகர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்த பணியில் அரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவிலை இடிக்காமல் நகர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை மேற்பார்வையிட்டு வரும் சென்னை ராமநாதகுருக்கள் கூறியதாவது:-

    கடந்த மே மாதம் கோவிலை நகர்த்துவது தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதற்காக பாலாலயம் பூஜை செய்யப்பட்டு, மூலவர் கோவில் பின்புறம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அரியானா கட்டுமான நிறுவனத்தினர் 500-க்கும் அதிகமான ஜாக்கிகளை கோவிலுக்கு கீழ்பகுதியில் அமைத்து கடந்த 4 மாதமாக முதல் கட்ட பணிகளை முடித்தனர். இதில் 15 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    முதல் கட்டமாக பக்கவாட்டில் 1½ அடி கோவில் நகர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோவிலை பின்நோக்கி நகர்த்தும் பணிகள் தொடங்கி உள்ளது. தினமும் 2 அடி முதல் 3 அடி வரை பின்நோக்கி நகர்த்தப்பட்டு 13 அடி தள்ளியபிறகு ஒவ்வொரு அடியாக உயர்த்தப்பட்டு 5 அடி வரை உயர்த்தப்படும். சுமார் 45 நாட்களில் இப்பணிகள் நிறைவடையும். அதன் பின்னர் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×