search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students suffer"

    • திட்டக்குடி பகுதியில் மழை அரசு பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதியடைகின்றனர்.
    • காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வளாகத்தில் கடந்து செல்ல முடியாமல் தண்ணீரில் நடந்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2தினங்களாக மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் சுமாரான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநத்தம், திட்டக்குடி, வாகையூர் ,இடைச்செருவாய், கீழ்ச்செருவாய் ,ஆவி னங்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 12 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் திட்டக்குடி பஸ் நிலையம் மற்றும் சாலைகளில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. மேலும் ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அதிக அளவில் மழை நீர் தேங்கி நின்றதால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வளாகத்தில் கடந்து செல்ல முடியாமல் தண்ணீரில் நடந்து சென்றனர். எனவே பள்ளி நிர்வாகம் இனி மழைக்காலம் என்பதால் மழைநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    • திண்டுக்கல்லில் இருந்து ஜம்புளியம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிபட்டி, வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை வழியாக மணியகாரன்பட்டிக்கு காலை 7 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.
    • கடந்த ஒரு மாதமாக பஸ் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் கட்டணம் செலுத்தி திண்டுக்கல் வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லில் இருந்து ஜம்புளியம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிபட்டி, வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை வழியாக மணியகாரன்பட்டிக்கு காலை 7 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதேபஸ் மாலை 5 மணிக்கு இந்த வழித்தடத்தில் இயக்கப்படும். இதன்மூலம் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், மாலையில் வீட்டிற்கு திரும்பவும் சிரமம் இன்றி பயணித்து வந்தனர்.

    கடந்த ஒரு மாதமாக இந்த பஸ் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டது. வி.டி.பட்டியில் ஆரம்பபள்ளி மட்டுமே உள்ளது. சிலுவத்தூரில் உயர்நிலைப்பள்ளியும், கம்பிளியம்பட்டியில் மேல்நிலைபள்ளியும் செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளிக்கு வருவதற்கு மாணவர்கள் இந்த அரசு பஸ்சையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பஸ் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் கட்டணம் செலுத்தி திண்டுக்கல் வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்டோவில் கட்டணம் செலுத்தி பயணம் செய்யமுடியாத பல மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர்.

    இதனால் அவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு வழக்கம்போல் இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கவேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து பாடம் பயிலும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்
    • வெயில் நேரத்தில் உள்ளே புழுக்கம் தாங்காமல் மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆளப்பிறந்தான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள

    இப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாண, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும், 4 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும் என 2 கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழைய கட்டிடம் எனக்கூறி 4 முதல் 8-ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்கு கல்வி பயின்று வந்த 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 1 முதல் 3-ம் வகுப்பிற்கான கட்டிடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனால் சிறிய கட்டிடத்திற்குள் 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இறுக்கமான சூழ்நிலையில் கல்வி கற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இது தொடர்பாக பெற்றோர்கள், பொதுமக்கள் தெரிவிக்கையில், பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கிருந்த பிள்ளைகள் 3-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சி

    றிய கட்டிடம் ஆகையால் இறுக்கமான சூழ்நிலையில் பிள்ளைகள் படித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாது ஒரே கட்டிடத்திற்குள் 90 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

    இதனால் மாணவர்களுக்கு ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். மேலும் வெயில் நேரத்தில் உள்ளே புழுக்கம் தாங்காமல் மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது.

    மதிய உணவு வேளையில் சாப்பிடக்கூட இடம் இல்லாமல் வெட்ட வெளியில், வெயிலில் உட்கார்ந்து பிள்ளைகள் சாப்பிடுவதைக் கண்டால் மனம் வேதனை அடைகிறது.

    தற்போது கொரொனா பரவும் சூழலில் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுகின்ற நிலையில் இங்கு மட்டும் நெருக்கடியில் பாடம் நடத்தப்படுகிறது. பள்ளிக் கூடத்தை சுற்றி இருந்த சுற்றுச்சுவர்கள் இடிந்து கீழே விழுந்ததால், முள்கம்பிகளை கொண்டு தற்காலிகமாக வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வேலி வழியாக கிராமத்திலிருக்கின்ற நாய்கள் முழுவதும் பிள்ளைகள் சாப்பிடும்போது உள்ளே நுழைந்துவிடுகிறது. எனவே பிள்ளைகளை இங்கு படிக்க வைக்கவே அச்சமாக உள்ளது என்று வேதனை தெரிவித்தனர். நிலைமை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

    எனவே தமிழக முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு முன்பிருந்தது போல் புதிதாக ஒரு கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டித்தர கேட்டுக்கொண்டனர்.

    • அரசு, உதவிபெறும், சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவிகள் கல்வி ஊக்கதொகை பயன்பெறலாம்.
    • சர்வர் கோளாறு காரணமாக விண்ணப்பிக்க முடியாமல் மாணவிகள் தவிக்கின்றனர்.

    திருப்பூர் :

    தொழில்நுட்ப கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகளுக்கு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை திட் டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்படும்.

    இதன்கீழ்அரசு பள்ளிகளில் நகராட்சி, மாநகராட்சி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள், கள்ளர் மீட்பு பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் மற்றும் அரசு துறைகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து தற்போது அரசு, உதவிபெறும், சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவிகள் பயன்பெறலாம்.

    இத்திட்டத்தை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 30ந் தேதிக்குள் தகுதியான மாணவர்கள் தங்கள் விவரங்களை உள்ளீடு செய்ய அறிவுத்தப்பட்டுள்ளது.இதற்கென பிரத்யேக மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சர்வர் கோளாறு காரணமாக பாதியில் இணையதளம் முடங்கிவிடுதால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

    திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் எழிலி கூறுகையில், அரசு கலை கல்லூரியை பொருத்தவரை அரசு பள்ளி மாணவிகளே அதிகம் சேர்கின்றனர். வகுப்பில் 85 சதவீதம் பேர் இதற்கு தகுதிபெறுவர். இளநிலை பயிலும் மாணவிகளிடமிருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசு பள்ளி விவரங்கள் கேட்கப்படும்.சர்வர் பிரச்சினையால் பாதியிலேயே இணையதளம் முடங்கிவிடுகிறது. நாளொன்றுக்கு 5 சதவீதம் பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடிகிறது. கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்

    சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், மாணவிகள், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்கள் அவசியம் தேவை. பொறுப்பாசிரியர்கள் இதனை உள்ளீடு செய்ய வேண்டும். துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.மாணவிகளின் செல்போனிற்கு ஓ.டி.பி., அனுப்பப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவிகள் தேர்வு நடைபெற்றாலும் தேர்வு முடிந்த பிறகு இந்த விவரங்களை உள்ளீடு செய்கின்றனர். இணைய வசதி உள்ள மாணவிகள் தாங்களாகவே தங்களது செல்போன் அல்லது கணினி வாயிலாக பதிவேற்றம் செய்யலாம் என்றார்.

    • தியாகதுருகம் அருகே குண்டும் குழியுமான சாலையால் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.
    • தார் சாலை சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இருந்து புக்கிரவாரி செல்லும் சாலை உள்ளது.இந்த தார் சாலை சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்நிலையில் இந்த தார்சாலை தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் உடையார்பாளையம், உச்சி மணக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எஸ்.ஒகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் சாலை வழியாக சைக்கிளில் வரும்பொழுது அவ்வப்போது கீழே விழுகிறது.

    மேலும் இந்தப் பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் விளைபொருட்களை விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் புக்கிரவாரி ரயில் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அங்கிருந்து தலைவாசல் காய்கறி சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இவ்வாறு விவசாயிகள் விளை பொருளை இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லும் போது ஜல்லிகள் பெயர்ந்து போன குண்டும், குழியுமான சாலையில் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதால் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவித்தனர். #sterliteprotest
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருவதை தவிர்ப்பதற்காக தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களிலும் இணையதள சேவையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் இணையதள சேவை முடக்கப்பட்டது. இதனால் வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பொதுமக்களால் தகவல்களை பரிமாற முடியவில்லை.



    தற்போது என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இணையதளம் மூலமாகவே மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டதால், மாணவர்களால் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

    அண்ணா பல்கலைக்கழகம் நெல்லை மண்டல அலுவலகம், நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு சேவை மையங்கள், தனியார் இண்டர்நெட் மையங்களிலும் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பெயர் மாற்றம், ஆதார் அட்டை இணைப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ரெயில் டிக்கெட், பத்திரப்பதிவு ஆகியவைகளும் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும், வங்கிகளின் பணப்பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வங்கிகளுக்கு வந்தவர்கள் காசோலை, வரைவோலை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #sterliteprotest

    ×