search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiva Temples"

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலிலே அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலிலே அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. எண்ணற்ற சித்தர்கள், தங்கள் தவ வலிமையைப் பெருக்கிக் கொண்ட ஆற்றல் நிறைந்த இடமாக இது விளங்கு கிறது.

    இறைவன் அருள்புரியும் திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடவரைக் கோவிலாகும். குரு அம்சமான தத்தாத்ரேயர் அவதரித்த புண்ணிய ஸ்தலம் இதுவாகும்.

    சப்த ரிஷிகளில் முதன்மையானவராக விளங்குபவர், அத்ரி மகரிஷி. இவரது தர்மப் பத்தினியாக இருந்தவர் கற்புக்கரசி அனுசுயாதேவி. இவர் அத்ரி முனிவருடன் சேர்ந்து தவ வாழ்க்கை மேற்கொண்ட புனித யோக பூமிதான் திருமூர்த்தி மலை. பதஞ்சலி மகரிஷி, திருமந்திரத்தை அருளிய திருமூலர் மற்றும் குரு தத்தாத்ரேயர் ஆகியோர் அந்த தெய்வீகத் தம்பதியருக்குப் பிறந்த அவதாரப் புருஷர்கள் ஆவார்கள்.

    மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்ரி மகரிஷியின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவரது மனைவி அனுசுயாதேவியின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.

    ஒரு முறை அத்ரி மகரிஷி வெளியே சென்ற போது, மும்மூர்த்திகளும் அனுசுயாவை தேடி வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசுயாவை தன் கணவனை மனதால் நினைத்து, தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி, அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த தலமே திருமூர்த்தி மலை.

    இந்த மலையின் மீது ‘பஞ்சலிங்க அருவி’ என அழைக்கப்படும் அருவி ஒன்றும் உள்ளது. அங்கே மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. அத்ரி மகரிஷியும் அவரது மனைவி அனுசுயாவும் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்துள்ளார்கள். இன்னமும் அவர்கள் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபடுவதாக நம்பப்படுகிறது. மேலும் குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே ‘பஞ்சலிங்கம்’ என வழங்கப்படுகிறது.

    பழனியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில், உடுமலையில் இருந்து 20 கி.மீ தொலைவில் திருமூா்த்தி மலை அமைந்துள்ளது. உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திருவாரூர் கமலாம்பாள் சமேத வன்மீகிநாதர், தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ‘திருவாரூர் தேர் அழகு' என்பது சொல் வழக்கு. அதுபோல ‘பிறக்க முக்தி தரும் தலம்’ இது.
    1.4.2019 அன்று ஆழித் தேரோட்டம்

    திருவாரூர் கமலாம்பாள் சமேத வன்மீகிநாதர், தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ‘திருவாரூர் தேர் அழகு' என்பது சொல் வழக்கு. அதுபோல ‘பிறக்க முக்தி தரும் தலம்’ இது.

    சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தை, முதியவர் வடிவில் வந்து தடுத்தாட்கொண்டார் சிவபெருமான். பின்னர் திருவாரூரில் இருந்தபடி ஆலயங்கள் தோறும் சென்று திருமுறை திருப்பாட்டு பாடும் வரத்தை அளித்தார். தன்னுடைய தோழனாகவும் சுந்தரரை ஆக்கிக் கொண்டார். சுந்தரர் தினமும் தனது திருவாரூர் ஆலயத்திற்குச் சென்று தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார். அப்படி ஒரு முறை செல்லும் போது பரவை நாச்சியாரை கண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முன்வினை பயனாக அவர்களுக்குள் காதல் புகுந்தது. இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர். அதோடு இருவரும் சேர்ந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு தொண்டாற்றியும் வந்தனர்.

    இந்த நிலையில் பரவை நாச்சியார் திருவாரூரிலேயே தங்கிவிட, சுந்தரர் சிவாலய தரிசனத்திற்காக யாத்திரை மேற்கொண்டார். பல சிவாலயங்கள் சென்று ஈசனைப் பணிந்து பாடி, தான் வேண்டி யவற்றையும், தன் அன்பர்கள் வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார் சுந்தரர். தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவொற்றியூர் ஈசனை வழிபடுவதற்காக வந்தார். அங்கு சங்கிலி நாச்சியார், ஈசனுக்கு பூ கட்டி தொண்டாற்றிக் கொண்டிருந்தார்.

    சுந்தரர் திருவொற்றியூர் ஆலய தரிசனத்திற்காக வந்த போது, சங்கிலியிடம் காதல் வயப்பட்டார். தொடர்ந்து ஈசனிடம் சென்று, சங்கிலியிடம் தனக்காக சென்று பேசி, தனக்கும் சங்கிலிக்கும் மணம் செய்து வைக்கும்படி வேண்டினார்.

    ஈசனும் அதற்கு ஒப்புக்கொண்டு சங்கிலி நாச்சியாரிடம் சென்று, சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். உடனே சங்கிலியார், “சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணம் செய்து கொண்டிருக்கிறார். எனவே நான் எப்படி அவரை மணக்க முடியும்?” என்று ஈசனிடம் கேட்டார்.

    அதற்கு ஈசன், அவளை விட்டு சுந்தரர் பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித் தருவதாக கூறினார். இதையடுத்து சுந்தரரை மணக்க சங்கிலி நாச்சியார் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவொற்றியூரிலேயே தங்கியிருந்து சிவதொண்டு செய்து வந்தனர். சில காலம் சென்றது.

    திருவாரூரில் வசந்தவிழா விசேஷம் வந்தது. அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் சுந்தரருக்கு பிறந்தது. அதனால் சங்கிலி நாச்சியாருக்கு கொடுத்த வாக்கை மீறி, ஊர் எல்லையைத் தாண்டிச் சென்றார் சுந்தரர். வாக்குறுதியை மீறியதும் அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. அதன்பின் பல சிவத்தலங்களுக்குச் சென்று, பார்வை வேண்டிப் பதிகங்கள் பாடினார், சுந்தரர். அவர் மீது கொண்ட இரக்கத்தால், திருவெண்பாக்கம் என்ற தலத்தில் ஒரு ஊன்றுகோலை மட்டும் கொடுத்தார் ஈசன்.

    அதைப் பெற்றுக்கொண்டு, தன் அடியார்களின் உதவியுடன் பல சிவதலங்களை தரிசிக்கச் சென்றார், சுந்தரர். ஒரு கட்டத்தில் காஞ்சீபுரம் வந்து ஏகாம்பரநாதரை வணங்கினார். அங்கு ஏகாம்பரநாதரை உருகிப் பாடினார். இதில் மனம் மகிழ்ந்த ஈசன், சுந்தரருக்கு இடது கண் பார்வையை வழங்கினார். பின்னர் அங்கிருந்து இன்னும் சில சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்ட சுந்தரர், திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கு ஈசனிடம் மன்றாடி வலது கண் பார்வையையும் பெற்றார்.

    இந்த நிலையில் சங்கிலி நாச்சியாரை சுந்தரர் திருமணம் செய்தது பற்றிய தகவல் அறிந்த பரவை நாச்சியார், சுந்தரரை தன்னுடைய மாளிகைக்குள் விட மறுத்தார். சிவனடியார்கள் பலரும் சுந்தரருக்காக சமாதானம் பேசிப் பார்த்தும் பலனில்லை. மனம் நொந்து போன சுந்தரர், நேராக திருவாரூர் ஆலயம் சென்று தியாகேசப் பெருமானை சரணடைந்தார். தனக்காக பரவையாரிடம் தூது செல்லும்படி வேண்டினார். அதன்படியே திருவாரூர் ஆலய சிவாச்சாரியார் வேடத்தில் சென்று, பரவையாரிடம் சமாதானம் பேசினார் சிவபெருமான். அதற்கும் பரவையார் மனம் இரங்கவில்லை.

    தூது சென்ற சிவபெருமானுக்காக இரவு நேரத்திலும் காத்துக் கொண்டிருந்தார் சுந்தரர். அங்குவந்த ஈசன், “சுந்தரா! பரவையிடம் சமாதானம் பேசிப் பார்த்தேன். அவள் உன்னை ஏற்க மறுக்கிறாள்” என்றார்.

    அதைக் கேட்ட சுந்தரர், “ஐயனே! தேவர்களைக் காக்க நஞ்சு உண்டீர்; மார்க்கண்டேயனை எமனிடம் இருந்து காத்தருளினீர். அப்படிப்பட்ட நீங்கள் உங்களை நம்பிய என்னை கைவிடலாமா? பரவையாரிடம் நான் மீண்டும் சேர நீங்கள்தான் வழி செய்ய வேண்டும்' எனக்கூறி ஈசனின் திருப்பாதங்களில் பணிந்தார்.

    அவரது பக்திக்கு இரங்கிய ஈசன், “சுந்தரா! உனக்காக இந்த நள்ளிரவிலும் மீண்டும் நாம் தூது செல்வோம். வருந்த வேண்டாம்” எனக்கூறினார். பின்னர் தன் சுய உருவத்துடனேயே பூத கணங்கள், தேவர்கள், முனிவர்கள் சூழ வீதியிலேயே நடந்து வந்து கொண்டிருந்தார். பரவை நாச்சியாரின் மாளிகை முன்புறம் திருக்கயிலைப் போல காட்சியளித்தது. சிவபெருமானைக் கண்ட பரவை நாச்சியார் ஓடி வந்து அவரது காலில் விழுந்து வணங்கி நின்றார்.

    ஈசன் பரவையாரிடம், “பரவையே! தோழன் என்ற உரிமையோடு சுந்தரன் எம்மை அனுப்பிய காரணத்தினால், மீண்டும் உன் முன் வந்தேன். உன்னுடைய இல்லத்திற்கு சுந்தரன் மீண்டும் வருதல் வேண்டும். அதுவே எம்முடைய விருப்பம்” என்றார்.

    “பெருமானே! தங்கள் திருவடி நோக திருவாரூர் வீதியில் நடந்து வந்ததைக் கண்ட பிறகும் நான் இசையாது இருப்பேனோ! நாங்கள் கூடி வாழ்கிறோம்” என்று கூறினார், பரவை நாச்சியார். அவருக்கு அருளாசி கூறிய சிவபெருமான், சுந்தரரிடம் சென்று, “சுந்தரா! நீ உடனே உன் பரவையிடம் செல்வாயாக” என்று கூறிவிட்டு கருவறைக்குள் சென்று மறைந்தார். முன்புபோல் சுந்தரரும் பரவையாரும் மீண்டும் ஒன்றிணைந்து சிவத்தொண்டுகள் புரியலாயினர்.

    இப்படி சுந்தரருக்காக நள்ளிரவில் தம் திருப்பாதம் நோக, திருவாரூர் வீதிகளில் தூது சென்ற திருவாரூர் வீதிகளில் தான், திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும். ஆழித்தேர் என்று சொல்லப்படும் திருவாரூர் தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடையும் கொண்டது. உடலில் தோன்றும் தோல் நோய், மரு போன்றவை மறைய ஆழித் தேரோட்டத்தின் போது மிளகு, உப்பு, பச்சரிசி, மஞ்சள் பொடி தூவி வழிபடுவார்கள். இப்படிச் செய்வதால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தேவாசிரியன் மண்டபம்

    திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தின் வெளிப் பிரகாரமான, பெரிய பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இது ‘தேவாசிரியன் மண்டபம்’ என அழைக்கப்படுகிறது. தியாகேசரை வணங்க வந்து கூடும் தேவாதி தேவர்கள், தமக்குரிய நேரம் வரும் வரை காத்திருக்கும் இடம் என்பதால் இந்தப் பெயர் வந்தது.

    செல்வத் தியாகர் ஆழித்தேர் விழா முடிந்து இந்த மண்டபத்தில் வந்துதான் மகாபிஷேகம் கண்டு, செங்கோல் செலுத்துவார். எனவே இந்த மண்டபத்தை ‘ராஜதானி மண்டபம்’ என்றும் அழைக்கிறார்கள். அந்த மண்டபத்தில் சிவனடியார்கள் வீற்றிருப்பார்கள்.

    திருவாரூர் ஆலய தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த தேவாசிரியன் மண்டபத்தை வலம் வந்து அங்கிருக்கும் அடியவர்களைப் பணிந்து வணங்கி அதன் பின்னரே, மூலவர் திருமூலட்டான நாதரையும், தியாகேசப் பெருமானையும் வழிபடுவது வழக்கம். சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் இருந்த காலங்களில் எல்லாம் தேவாசிரியன் மண்டபத்தை வலம் வந்து, அங்கிருக்கும் அடியவர்களை பணிந்து பின்னர் தம் தோழரான திருவாரூர் ஈசனை பணிவார்.

    அமைவிடம்

    கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 37 கிலோமீட்டர் தூரத்தில் திருவாரூர் அமைந்துள்ளது. 
    ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு நோய்களை நீக்கியருளும் தலமாக, திருக்கூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மகாதேவர் கோவில் உள்ளது.
    ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு நோய்களை நீக்கியருளும் தலமாக, திருக்கூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மகாதேவர் கோவில் உள்ளது. திருக்கூர் திருத்தலமானது, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் இருக்கிறது.

    தல வரலாறு :

    மாடு மேய்க்கும் பணியைச் செய்து கொண்டிருந்த ஒருவன், அந்த ஊரில் இருந்த நம்பூதிரி ஒருவரின் மாடுகளைத் தினமும் காலையில் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வதும், மேய்ச்சலுக்குப் பின்பு மாலையில் அவைகளைத் திரும்பக் கொண்டு வந்து ஒப்படைப்பதுமாக இருந்தான்.

    ஒருநாள், அவன் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற மாடுகளில், ஒரு பசு மட்டும் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். அந்தப் பசு அங்கிருந்த மலைப் பகுதிக்கு வழி தவறிச் சென்றிருக்கும் என்று நினைத்த அந்தப் பணியாளன், மலைப்பகுதிக்குச் சென்றான். அந்த மலைப்பகுதியில் ஒரு குகை காணப்பட்டது. அந்த குகைக்குள் சென்ற பணியாளன், அங்கு பசு இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தான்.

    பசு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்த பணியாளன், அந்த பசுவை மலையில் இருந்து கீழே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, அதன் அருகே சென்றான். அப்போது பசு மாயமாக மறைந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தான். அதே சமயம் பசு நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் இருந்தது. என்ன ஏதென்று அறியாமல் விழிபிதுங்கிய பணியாளன், ஓட்டமும், நடையுமாக மலையை விட்டு இறங்கினான். பின்னர் தான் மலை அடிவாரத்தில் மேய்ச்சலுக்காக விட்டுச் சென்றிருந்த மற்ற மாடுகளை ஓட்டிக்கொண்டு ஊருக்குள் திரும்பிச் சென்றான்.

    அங்கு மாடுகளின் உரிமையாளரான நம்பூதிரியிடம், பசு காணாமல் போனதில் இருந்து, மலையின் மேல் பகுதியில் அது மறைந்து, சிவலிங்கம் தோன்றியவரை சொல்லி முடித்தான். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நம்பூதிரி, தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு, பணியாளன் குறிப்பிட்ட அந்த மலைப் பகுதிக்குச் சென்றார்.

    மாடு மேய்ப்பவன் தெரிவித்தபடி, மலைக்குகையில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். சுயம்பு வடிவில் தோன்றியிருந்த அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கினர். அப்போது நம் பூதிரியின் மனக்கண்ணில், இங்குள்ள சுயம்பு லிங்கம், அக்னி தேவனால் வணங்கப்பட்டது என்பதும், இந்த லிங்கம், பஞ்சபூதங்களில் அக்னி வடிவிலானது என்பதும் தோன்றி மறைந்தது. இதையடுத்து அந்த அக்னி லிங்கத்திற்கு, நம்பூதிரி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தொடர்ந்து சில காலங்களில் கோவிலுக்கு தேவையான கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டார். திருப்பணிகளுக்குப் பிறகு இந்த ஆலயம் பொதுமக்கள் அனைவரும் வந்து வழிபட்டுச் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது என்பதாக கோவில் தல வரலாறு சொல்லப்படுகிறது.

    ஆலய அமைப்பு :


    உயரமான மலைப்பகுதியில், 30 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டு இயற்கையாக அமைந்த குகைப் பகுதியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. குகையின் தெற்கு திசையில், கடைசிப் பகுதியில் வடக்கு நோக்கிய கருவறையில், கிழக்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்திருக்கிறது. இதனால், இக்கோவிலில் வழிபடும் பக்தர்கள், சிவலிங்கத்தின் வலதுபுறத்தை மட்டுமே பார்வையிட்டு வழிபட முடியும். இங்கிருக்கும் இறைவன் ‘திருக்கூர் மகாதேவர்’ என்றழைக்கப் பெறுகிறார்.

    ஆலயத்தின் உட்புறத் தோற்றம்

    இறைவன் சன்னிதிக்கு மேற்குச் சுவரில் கணபதி சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தின் வளாகத்தில் சாஸ்தா, அந்திமகாகாளன், பத்திரகாளி, பகவதி, சாமுண்டி உள்ளிட்ட தெய்வங்களும் வழிபாட்டிற்காக இடம் பெற்றிருக்கின்றன. கிழக்குப் பகுதியில் துவாரபாலகர்கள் இருக்கின்றனர். முகப்பு மண்டபத்தில் வைஷ்ணவ சைதன்ய மரபிலான சாலக்கிராமம் இடம் பெற்றிருக்கிறது.

    மலைப்பாறையின் மேல் பசுமையாக இருக்கும் குளம் ஒன்றும் அமைந்திருக்கிறது. 1966-ம் ஆண்டில் இருந்து கேரள மாநிலத் தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இக்கோவில் இருந்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    வழிபாடுகள் :

    சிவராத்திரி, நவராத்திரி, திருவாதிரை, பிரதோஷ நாட்கள் மற்றும் சிவபெருமானுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் 16 கற்தூண்களுடன் அமைக்கப்பெற்றிருக்கும் நமஸ்கார மண்டபத்தில் நவராத்திரி விழாவின் போது, சரஸ்வதி வழிபாடு மற்றும் சாக்கியார் கூத்து போன்றவை நடத்தப்பெறுகின்றன.

    இக்குகைக் கோவிலில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு மாலை நேர பூஜையின் போது, சிவலிங்கத்திற்கு 108 வில்வ இலைகள் சமர்ப்பிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.

    கயிறு வழிபாடு :

    சுவாசக் கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய் பாதிப்புடையவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, கயிறு வழிபாடு செய்து இறைவனை வழிபட்டு நலம் பெறலாம் என்கின்றனர். சுவாச நோய்ப் பாதிப்புடையவர்கள் சிலர் இங்கிருக்கும் இறைவன் உயரத்துக்குச் சமமாகத் தாம்புக்கயிறு வாங்கிக் கொடுத்து வழிபடுகின்றனர். சிலர், அவர்களது எடைக்குச் சமமான தாம்புக்கயிறைத் துலாபாரம் போன்று எடை போட்டு வழங்கி இறைவனை வழிபட்டுத் தங்கள் சுவாச நோய் நீங்க வேண்டிக் கொள்கின்றனர். கயிறு வழிபாட்டில் பெறப்படும் கயிறுகள் அனைத்தும் கோவில் மண்டபத்தில் தொங்கவிடப் படுகின்றன.

    சிறுவர்களுக்குச் சுவாசக் கோளாறுகள் இருப்பின் கருக ஹோமம் அல்லது இறைவனுக்குப் பின்னால் எண்ணெய் விளக்கு இடுதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், திருச்சூர் நகரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் திருக்கூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல திருச்சூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் என்னும் பாடல்பெற்ற ஸ்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் என்னும் பாடல்பெற்ற ஸ்தலம். நால்வரால் பாடல்பெற்ற இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இங்கு “நடராஜப்பெருமான்“ ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.

    முன்பு இக்கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம்.அப்போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும் . . .அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம். இதைப் பார்த்த ஒருவன் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்தவர்தான் நமது பட்டீஸ்வரர்.

    கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்தவர் இவர். இவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த நிலை, . . .மார்பில் பாம்பின் பூணூல், தலையில் அழகழகாய் சடைக் கொத்துக்கள், சடைகளுக்கு அரணாய் இருப்பதுபோல் கங்கை, அன்னமும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள்,

    இவைகளோடு பட்டீஸ்வரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப் படுகின்றன.இதையெல்லாம் பார்த்த மக்கள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க ளைச் சொறிந்து கொண்டிருக் கின்றன. ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத் தன்ற கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்னன் திப்பு சுல்தான்.

    இந்தக் கோயில் அதிசயங்களை எல்லாம் பார்க்க வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்தை இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். ஆம் இறைவன் குடியிருக்கும் சிவலிங்கம் அடிக்கடி அசையும் என்று, இதை நம்பாமல் சிவலிங்கத்தின் மீது கைவைத்துப் பார்த்திருக்கிறான் மன்னன் திப்பு சுல்தான் அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கினறன. நெருப்பின்மீது கைகள் வைப்பதுபோல் உணர்ந்து துடித்திருக்கிறான்.

    கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத் திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.

    கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான்.

    இவனைப்போன்றே ஹதர் அலியும் நிலங்களை மானியங்களாக தந்திருப்பதாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன.இக்கோயிலின் ஸ்தல விருட்சம் அரச மரமாகும்.

    இங்குள்ள அம்மனின் பெயர் பச்சை நாயகியாகும்.பச்சை நிறமாகிய மரகதக் கல்லில் அன்னை எழில் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறாள்.அன்னையின் அன்புமுகத்தைப்பார்த்து கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள். இவளின் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. அதன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன. அற்புதமாக கலை நுட்பத்துடன் காண்போர் வியக்கும் வண்ணம் சிங்கத்தின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள். இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோயிலின் வட பக்கம் உள்ள பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன. சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல, தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெருமையால் நமது நெஞ்சு நிமிர்கின்றது.

    நால்வரில் ஒருவராகிய சுந்தரர், இங்குள்ள பட்டீஸ் வர்ரை“ வணங்க வர வேண்டும் என்று நினைக்கிறாராம். எப்போதுமே சுந்தரரிடம்“ ஒரு நல்ல குணம் உண்டு.எந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார்.ஏன் என்றால், இவர் இறைவனின் தோழன் அல்லவா! இறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம். செல்வ செழிப்போடு இருந்த ஈசனுக்கே ஒருமுறை பணம் தட்டுப்பாடாம். சுந்தரர் வந்தால், பணம் கேட்பானே என்ன செய்வது என்று யோசித்த பட்டீஸ்வரர் சுந்தரரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நிலத்தில் நாற்று நடும் கூலித் தொழிலாளியாய், “பச்சையம் மனுடன் சேர்ந்து நாற்று நடும்போது சுந்தரர் பார்த்து விடுகின்றார். அதை பார்த்த சுந்தரர் பாட்டு பாடவைத்து மகிழ்ந்துள்ளார்.

    பேரூரில் இறைவனும் இறைவியும் நாற்று நட்ட வரலாற்றை இன்றும் இவ்வூர் மக்கள் ஆணி மாதத்தில்வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று உற்சாகமாய் கொண்டாடி மகிழ்கின்றார்கள். 
    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் வழியில் உள்ளது வாரணபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருச்சிக்கு அருகே உள்ள தலம் திருவானைக்காவல். இங்கு சிவபெருமான் வெண் நாவல் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது நாவல் மரத்தின் இலைகள் காய்ந்து சருகுகளாய் அவர் மேல் விழுந்தன.

    இதைக் கண்ட சிலந்தி ஒன்று பதறியது. ‘சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா?’ என்று எண்ணிய சிலந்தி, அதை தடுக்க முயற்சி செய்தது. சிவபெருமானின் தலைக்கு மேல் தன் எச்சிலால் பந்தல் போல் வலை பின்னி, காய்ந்த இலைகள் அவர் மேல் விழாமல் தடுத்தது.

    அங்கு யானை ஒன்று தினந்தோறும் காவிரி நீரை தன் துதிக்கையில் சுமந்து வந்து இறைவனை நீராட்டி வந்தது. சிலந்தி வலையைக் கண்ட யானைக்கு கோபம் வந்தது. வெகுண்ட அந்த யானை அந்த வலையை அறுத்து எறிந்தது. மீண்டும் மீண்டும் சிலந்தி வலை அமைக்க, யானை கோபங்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வலையை அறுத்து எறிந்தது.

    கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் நீரால் யானை வழிபடும் போது அதன் துதிக்கையினுள் புகுந்து கடித்தது. வலி தாங்காத யானை, துதிக்கையை தரையில் வேகமாக அடிக்க சிலந்தி இறந்தது; யானையும் இறந்தது. இருவரையும் ஆட்கொண்டார் இறைவன்.

    இறைவன் அருளால் அந்த சிலந்தி மறுபிறவியில் சோழ மன்னராகிய சுபதேவருக்கும் கமலாவதிக்கும் மகனாகத் தோன்றியது. அந்த மகனே கோச்செங்கட் சோழன். இந்த மன்னன் தன் முற்பிறவியின் நினைவால் யானைகள் புக முடியாத யானைகள் தீங்கு செய்ய முடியாத மாடக் கோவில்களை கட்ட முடிவு செய்தான். யானை ஏற முடியாத கட்டுமலை போன்ற அமைப்புடைய உயரமான மாடக் கோவில்களை அமைத்தான். இத்திருப்பணி ‘யானை ஏறாதத் திருப்பணி’ என்று பெயர் பெற்றது. இந்தச் சோழன் 70-க்கும் மேற்பட்ட மாடக் கோவில்களைக் கட்டினான். தான் முற்பிறவியில் வழிபட்ட திருவானைக் கோவில் ஆலயத்தை முதலில் கட்டினான்.

    இந்த மன்னன் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்று தான் பனமங்கலத்தில் உள்ள வாரணபுரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவன் வாரணபுரீஸ்வரர். இறைவி வடிவாம்பிகை. அன்னையின் இன்னொரு பெயர் வடிவுடையம்மன். கீழ்திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் இறைவனை தரிசிக்க, 12 படிகள் ஏறி வலது புறம் திரும்ப வேண்டும். அங்கு மகா மண்டபம் அடுத்த கருவறையில் கிழக்கு நோக்கி, வாரணபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

    சுயம்புவான இந்த மூலவர் திருமேனி 3½ அடி அளவு ஆவுடையாரின் மேல் பகுதியில் பக்தர்கள் வழிபடும் வகையிலும், பூமிக்கு அடியில் 13 அடியும் உள்ளதாக சொல்லப்படுகிறது. சுமார் 19½ அடி உயர இறைவனின் இந்த திருமேனி, உளிபடாதது ஆகும். ருத்திராட்சத்தின் மேற்பரப்பு மேடும் பள்ளமாய் இருப்பது போல் இறைவனின் முழு மேனி அமைப்பு காணப்படுகிறது.

    சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பு இறைவனுக்கு இங்கு மிகவும் விசேஷமான நாளாகும். அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை இறைவனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அரிசி மாவு, திரவியப் பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி மற்றும் பழங்கள் என 21 வகை அபிஷேகங்கள் செய்யப்படும். இந்த அபிஷேக நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, கடன் நிவர்த்தி ஆகும் என்பதும், தொழிலில் அபிவிருத்தி உண்டாகும் என்பதும் நம்பிக்கை.

    இந்த ஆலயத்தில் கற்பூரம் ஏற்றுவது கிடையாது. தீபாரதனை மட்டுமே. இங்கு சிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும். மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, மாத சிவராத்திரிகளில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனை செய்யப்படுகிறது.



    இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் மேற்கில் கணபதி, வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர், வடக்கில் சண்டிகேஸ்வரர், வட கிழக்கில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் காலபைரவர் சன்னிதி காணப்படுகின்றன.

    இறைவனின் சன்னிதிக்கு இடது புறம் அன்னை வடிவுடையம்மன் தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கி நிற்க, கீழ் இருகரங்கள் அபய வரத முத்திரை காட்டுகின்றன. நவராத்திரியின் போது தினமும் அன்னையை வித விதமாக அலங்கரிப்பார்கள்.

    ஆடி மற்றும் தை மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடிப் பூரம் அன்று அன்னையை வளையல்களால் அலங்கரிப்பார்கள். பின் அந்த வளையல்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அன்றைய தினம் முளை கட்டிய பாசிப்பயிறை அம்மன் மடியில் கட்டி, பின் அதை பிள்ளைப் பேறு வேண்டுபவர்களுக்கும், திருமணம் கைகூட வரம் கேட்கும் பெண்களுக்கும் பிரசாதமாகத் தருகின்றனர்.

    பங்குனி உத்திரம் அன்று பால் காவடி, அலகு காவடி சுமந்து வரும் பக்தர்கள், அக்னி பிரவேசம் செய்து முருகனை வேண்டுகின்றனர். மறுநாள் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் வீதியுலா வருவார். இங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஹோமம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு எதிரிகள் பயம் விலகும்.

    ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். இங்கு மணிவிழா, சதாபிஷேகம் போன்றவை செய்யப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயத்தில், தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    பித்ரு தோஷ பூஜை :

    இந்த ஆலயத்தில் அனைத்து திங்கட் கிழமைகளிலும் இறைவனுக்கு பித்ரு தோஷ நிவர்த்தி ஆராதனை நடைபெறுகிறது. ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், நீராடி ஈர உடையுடன் இந்த பூஜையில் கொள்வதுடன், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின் ஈர உடையை தானம் செய்து விட்டு, புது உடை அணிந்து கொள்ள அவர்கள் தோஷம் விலகும் என்பது ஐதீகம். இந்த பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்பவர்கள், தட்டில் பூ, பழம், தேங்காய், திரிநூல், எண்ணெய், பச்சரிசி, வெல்லம், கருப்பு எள் ஆகியவற்றை வைக்க வேண்டியது அவசியம். பித்ரு தோஷ பூஜை செய்தவர்கள், வீடு திரும்பியதும், வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும்.

    அமைவிடம் :

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் பனமங்கலம் உள்ளது.
    புராண காலத்தில் சூரிய பகவானுக்கு, காலவ முனிவரின் முயற்சியால் எழுப்பப்பட்ட ஆலயம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த ஆலயம் கும்பகோணம்-மயிலாடுதுறை மாற்று சாலையில் உள்ள சூரியநாராயணர் கோவில் ஆகும்.
    சூரியனின் ஒளியாலேயே உயிர்கள் வாழ்கின்றன என்பதால் சூரிய வழிபாடு, உலகளாவிய ஒன்றாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆறுவித சமய வழிபாட்டில் சூரியனை கடவுளாக வழிபடுவதற்கு ‘சவுரம்’ என்று பெயர். இந்தியாவில் சூரிய வழிபாடு ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு முறையில் செய்யப்பட்டு வருகிறது.

    சூரியனை உலக முதல்வனாக ‘ஆதித்ய ஹிருதயம்’ நூல் கூறுகிறது. இது ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது. இதைத்தவிர மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் ஆகியவையும் சூரிய வழிபாட்டைப் பற்றி விவரிக்கின்றன. சூரியன் காலையில் ரிக் வேதமாகவும், நண்பகலில் யஜுர் வேதமாகவும், மாலை நேரத்தில் சாம வேதமாகவும் திகழ்வதாக ‘சூரிய அஷ்டகம்’ சொல்கிறது.

    காசியபர்- அதிதி தம்பதியருக்கு பிறந்த பன்னிரண்டு மக்களும் ‘பன்னிரு சூரியர்கள்’ எனப்பட்டனர். அதிதியின் பிள்ளைகள் என்பதால் ‘ஆதித்தியர்’ என்றும் அழைக்கப்பட்டனர். இந்த பன்னிருவர்களில் முதல்வனான விசுவான் தான், இப்போது உலகை பிரகாசிக்கச் செய்யும் சூரியன் என்று மற்றொரு புராண வரலாறு கூறுகிறது.

    உலகெங்கும் சூரியனுக்கு பல ஆலயங்கள் இருந்தாலும், புராண காலத்தில் சூரிய பகவானுக்கு, காலவ முனிவரின் முயற்சியால் எழுப்பப்பட்ட ஆலயம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த ஆலயம் கும்பகோணம்-மயிலாடுதுறை மாற்று சாலையில் உள்ள சூரியநாராயணர் கோவில் ஆகும். சிறிய ஆலயம், நவக்கிரகங்களை மட்டுமே தெய்வங்களாகக் கொண்ட கோவில், சூரியனை மூலவராகக் கொண்ட திருத்தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது. தனது இரு தேவியருடன் சூரியன் நடுநாயகமாக வீற்றிருக்க, மற்ற எட்டு நவக்கிரகங்களும் எட்டு திசைகளில் இருந்து அருள்பாலிக்கிறார்கள்.

    காலவ முனிவரை, ஒரு இளம் துறவி சந்தித்தார். அவரிடம் தன் எதிர்காலத்தைக் கேட்டறிந்தார். பின்னர் “அனைவரின் எதிர்காலத்தையும் சொல்லும் நீங்கள், உங்களின் எதிர்காலத்தை எப்போதாவது கணித்ததுண்டா?” என்று கேட்டார்.

    திடுக்கிட்ட காலவ முனிவர், “நீ யார்?” என்று கேட்க, வந்தவர் “நான் காலதேவன்” என்று கூறி மறைந்தார். இதனால் தன்னுடைய எதிர்காலத்தை ஆராய்ந்தார் காலவ முனிவர். அதில் முன்வினைப் பயனால், அவருக்கு தொழுநோய் வரும் என்பது தெரிந்தது.

    இதையடுத்து முன்வினைப்பயனை தருகின்ற நவக்கிரகங்களை காலவ முனிவர் சரணடைந்தார். விந்தியமலையில் பஞ்சாக்னி வளர்த்து, நவக்கிரகங்களை நோக்கி தவம் செய்தார். நவக்கிரகங்களும் அவரின் முன்பாக தோன்றின. காலவ முனிவர் கேட்ட, தொழுநோய் பீடிக்காத வரத்தையும் அளித்தனர்.

    இதையறிந்த பிம்மன், நவக்கிரகங்களை வரவழைத்தார். “சிவபெருமானின் ஆணைப்படியும், காலதேவனின் துணை கொண்டும், அனைத்து ஜீவராசிகளுக்கும், அவரவர் செய்த வினைகளின் பயனை அளிக்கவே நீங்கள் என்னால் படைக்கப்பட்டீர்கள். உங்களுக்கு தனித்து இயங்கும் சுதந்திரம் இல்லை. அப்படியிருக்கையில் காலவ முனிவருக்கு நீங்கள் வரம் அருளியது தவறு. எனவே நீங்கள் அனைவரும் பூலோகத்தில் பிறந்து, காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்படவேண்டிய கால அளவு வரை, அதே நோயால் துன்பப்படுவீர்கள்” என்று கூறினார்.

    அதைக் கேட்டு வருந்திய நவக்கிரகங்களும் பிரம்மனை பணிந்து, விமோசனம் அருள வேண்டி நின்றன. உடனே பிரம்மன், “காவிரி ஆற்றின் வடகரையில் உள்ள அர்க்க(எருக்கு)வனமான திருமங்கலக்குடி சென்று, கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைத் தொடங்கி பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை வரை, 78 நாட்கள் தவம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் உதயத்துக்கு முன் எழுந்து, காவிரியில் நீராடி பிராணநாதரையும் மங்கலநாயகியையும் வழிபட வேண்டும். அன்றைய தினம் ஏழு நாழிகைக்குள் ஒரு எருக்கு இலையை எடுத்து, அதில் பிடி அளவு தயிர் அன்னம் வைத்து உண்ண வேண்டும். மற்ற நாட்களில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்” என்றார்.

    பிரம்மதேவன் சொன்னபடி, அகத்தியரின் வழிகாட்டு தலில், நவக்கிரகங்கள், இறைவன்- இறைவியோடு, விநாயகர் சிலை ஒன்றையும் நிறுவி அந்த வழிபாட்டைச் செய்தனர். 78 நாட்கள் முடிவில் சிவபெருமான் அவர்கள் முன்பாக தோன்றி, “இன்றோடு உங்களின் நோய் முழுவதுமாக குணமடையும். நீங்கள் தவம் இருந்த இடத்தில் உங்களுக்கு தனி ஆலயம் உருவாகும். அங்கு வந்து உங்களை வழிபடுபவர்களுக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்யும் வரத்தை தந்தோம்” என்று அருளினார்.

    நவக்கிரகங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர், ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் ‘கோள்வினை தீர்த்த விநாயகர்’ என்ற பெயரில் அருள்கிறார். தென்னகத்திலேயே சூரியனுக்கென்று தனிக் கோவில் அமைந்த தலம் இது. கருவறை உள்ளே உஷாதேவி மற்றும் சாயாதேவியுடன் சிவசூரிய பெருமானாக நின்ற கோலத்தில் சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். அங்கிருந்தே குரு பகவானையும தரிசிக்கும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. தவிர தென்மேற்கில் சனீஸ்வரன், தெற்கில் புதன், தென்கிழக்கில் அங்காரகன், கிழக்கில் சந்திரன், வடகிழக்கில் கேது, வடக்கில் சுக்ரன், வடமேற்கில் ராகு எழுந்தருளியுள்ளனர்.

    திருவாவடுதுறை ஆதினத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ்வாலயம், தினமும் காலை 6 மணியில் இருந்து பகல் 1மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் மாற்று மார்க்க சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-கும்பகோணம் வழியில் செல்வோர் ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் வடக்கில் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள சில சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றப்படும் கோவில் இதுவாகும். இந்த ஆலயத்தில் உள்ள சில சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    வில்லுடன் பெருமாள்

    பொதுவாக அனைத்து வைணவ தலங்களிலும் பெருமாள் தன்னுடைய கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியபடி தான் காட்சி தருவார். ஆனால் சாரங்கபாணி ஆலயத்தில் உள்ள இறைவன், தன்னுடைய கரங்களில் ‘சார்ங்கம்’ என்னும் வில்லை வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர், உற்சவர் இருவருமே கையில் வில் வைத்திருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும். சார்ங்கம் என்ற வில்லை வைத்திருப்பதாலேயே, இத்தல இறைவன் சாரங்கபாணி என்று அழைக்கப்படுகிறார்.

    நாலாயிர திவ்ய பிரபந்தம்


    திருமாலைப் பற்றி, 12 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த பாடல்களே ‘நாலயிர திவ்ய பிரபந்தம்’ என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அந்த நூல் கிடைக்க வழி செய்தவர் இத்தல பெருமாள் ஆவார். நாதமுனி என்பவர் இத்தல இறைவனை தரிசிக்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை “ஓராயிரத்துள் இப்பத்தும்” என்று சொல்லி பாடினர். அதைக் கேட்டு, “இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா?” என்று வியந்த நாதமுனி, மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் நாதமுனியின் கனவில் தோன்றிய பெருமாள், “ஆழ்வார்திருநகரி சென்று, நம்மாழ்வாரை வணங்கினால் மீதி பாடல்கள் கிடைக்கும்” என்றார். ஆனால் வந்த இடத்தில் ஆயிரம் பாடல்களுக்கு பதிலாக நாலாயிரம் பாடல்கள் கிடைத்தன. அந்த தொகுப்பு தான் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்னும் நூல்.

    சொர்க்கவாசல் இல்லை

    திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 ஆலயங்களில் பெரும்பாலானவற்றில் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால் சாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்கவாசல் இல்லை. இத்தல இறைவன், நேராக வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்தார். எனவே இத்தல இறைவனை வணங்கினாலே முக்தி கிடைத்து விடும் என்பதால், தனியாக சொர்க்கவாசல் இல்லை என்று காரணம் கூறப்படுகிறது. தை முதல் ஆனி மாதம் வரை உத்ராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயண வாசல் வழியாகவும் இறைவனை தரிசிக்க செல்ல வேண்டும். இரண்டில் ஏதாவது ஒரு வாசல் தான் திறந்திருக்கும்.

    பக்தனுக்கு திதி கொடுத்த பரந்தாமன்


    இத்தல சாரங்கபாணியின் மீது அதீத பக்தி கொண்டவர், லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர். இந்த ஆலயத்தின் கோபுரத்தை கட்டியவர் இவர்தான். தன்னுடைய இறுதி காலம் வரை இறைவனுக்கு சேவை செய்தார். ஆனால் அவருக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு தீபாவளி நாளில் லட்சுமி நாராயணசாமி, இறைவனடி சேர்ந்தார். இறந்த பெற்றோருக்கு பிள்ளைகள் திதி கொடுக்காவிட்டால், அவர்கள் நரகத்திற்கு செல்ல நேரிடும். எனவே தன்னுடைய பக்தனுக்கு, தானே மகனாக இருந்து திதி கொடுத்தார் சாரங்கபாணி என்று தல வரலாறு சொல்கிறது. தீபாவளியன்று உச்சி காலத்தில் தன் பக்தருக்கு சாரங்கபாணி திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால் இதனை பார்ப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    வீட்டோடு மாப்பிள்ளை

    இந்த தலம் கோமளவல்லி தாயாரின் பிறந்த வீடு ஆகும். அவரை திருமணம் செய்து கொண்ட திருமால், இங்கு வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக சுவாமி சன்னிதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இந்த ஆலயத்தில் கோமளவல்லி தாயார் சன்னிதியின் முன்பாக நடத்துகின்றனர். அதன்பிறகே சுவாமி சன்னிதியில் கோ பூஜை நடைபெறும். தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்பது பொதுவான விதி இருப்பதால், அதற்கு ஏற்றால்போல் தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, இறைவனின் சன்னிதிக்கு செல்லும் வகையில் ஆலய வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது.

    பாதாள சீனிவாசன்

    இத்தல இறைவியான கோமளவல்லி தாயாரை திருமணம் செய்வதற்காக, பூலோகம் வந்தார் திருமால். தாயாரிடம் விளையாட நினைத்து, பூமிக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டார். எங்கு தேடியும் திருமாலைக் காணாததால், தாயார் கலக்கம் அடைந்தார். கொஞ்ச நேர கண்ணாமூச்சி விளையாட்டுக்குப் பிறகு, அவர் முன்பு தோன்றிய பெருமாள், தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம் ‘பாதாள சீனிவாசர் சன்னிதி’ என்ற பெயரில் இந்த ஆலயத்தில் இருக்கிறது. அதே போல் திருமணத்திற்கு பிறகு, மேடான பகுதியில் நின்ற சீனிவாசர், ‘மேட்டு சீனிவாசர்’ என்ற பெயரில் தாயாருடன் தனிச் சன்னிதியில் அருள்கிறார். ஒவ்வொருவரின் வாழ்வும் இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெறும் என்ற தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக சொல்கிறார்கள்.

    உத்தான சயனம்

    பெருமாள் படுத்தபடி இருக்கும் ‘சயனம்’ என்னும் நிலைக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. அதில் ஒரு சயனம் ‘உத்தான சயனம்’ ஆகும். சாரங்கபாணி ஆலயத்திற்கு வந்த திருமழிசை ஆழ்வார், இத்தல இறைவனை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர் “நடந்து திரிந்ததால் கால்கள் வலிக்கிறது என்பதற்காகவா, பள்ளிகொண்டிருக்கிறாய்?” என்ற பொருளில் பாடினார். அதைக் கேட்ட பெருமாள் எழ முயன்றார். உடனே திருமழிசை ஆழ்வார், “அப்படியே காட்சி தா” என்று கேட்க, இறைவனும் அப்படியே அருளினார். படுத்தபடி சற்றே தலையைத் தூக்கி எழ முயலும் கோலத்தில் இங்கு இறைவன் அருள்கிறார். இந்த கோலத்திற்கு `உத்தான சயனம்’ என்று பெயர்.
    இந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் அவற்றில் பாடல்பெற்ற சிவஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. அவற்றுள் சிறப்பு மிக்க சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    இந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில் பாடல்பெற்ற சிவஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் கொண்டவை. இவற்றில் பல கோவில்கள் சுயம்பு லிங்கங்களை மூலவராக கொண்டது என்பது சிறப்புக்குரியது. சிறப்பு மிக்க சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்


    காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் முதல் தலமான இந்த ஆலயத்தில் காமாட்சி அம்மன் பூசித்த மணல், லிங்கமே மூலவராக இருக்கிறது. அன்னையின் தவத்தை சோதிக்க விரும்பிய இறைவன், மணல் லிங்கம் செய்து வழிபட்டு வந்த இடத்தில் வெள்ளத்தை உருவாக்கினார். வெள்ளத்தில் லிங்கம் அடித்துச் சென்று விடாமல் இருக்க அம்மன், லிங்கத்தை இரு கைகளாலும் தழுவிக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இப்போதும் இந்த லிங்கத்தில் அன்னை இறுக தழுவிய கைத் தடம் இருப்பதைக் காணலாம். இங்குள்ள ஒற்றை மாமரம் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தில் இருந்து நான்கு வகையாக (வேதங்கள்) சுவை கொண்ட கனிகள் கிடைக்கின்றன.

    பாஸ்கரேஸ்வரர் கோவில்

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருக்கிறது பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில். சிவபெருமானின் சன்னிதிக்கு எதிரில் நின்று சூரிய பகவான் தரிசனம் செய்யும் கோலத்தை, இந்த ஆலயத்தைத் தவிர வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள். இந்த ஆலயம் பிதுர் தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்கள், சிம்ம லக்னம், சிம்ம ராசி, சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள், வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இங்குள்ள சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் நீண்டநாள் நோய் நீங்குமாம். இந்த ஆலயத்தில் சஷ்டி பூர்த்தி செய்பவர்களின் ஆயுள் நீடிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

    புஷ்பவனேஸ்வரர் ஆலயம்

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது, புஷ்பவனேஸ்வரர் கோவில். இத்தல இறைவன் புஷ்பவனேஸ்வரர், புவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். காசி நகரை விடவும், 16 மடங்கு புண்ணியம் தரும் தலமாக இது போற்றப்படுகிறது. இங்குள்ள வைகை ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து, மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவருக்கு எதிராக உள்ள நந்தி சற்று விலகியிருப்பது தனிச் சிறப்பாகும். திருமணத் தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, இத்தல இறைவனை வழிபடலாம். சரியாக பேச்சு வராதவர்களுக்காகவும், கலைகளில் சிறந்து விளங்கவும், ஆயுள் விருத்திக்காகவும் இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    சதுரகிரி மலைக்கோவில்

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோவில் தான், சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியில் இருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. பழனி மலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும், நவபாஷண முருகனின் சிலையை, சதுரகிரி மலையில் தங்கியிருந்த காலத்தில் தான் போகர் சித்தர் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இந்த மலை சித்தர்கள் பலரும் உலவும் புண்ணிய பூமியாக திகழ்கிறது. இங்குள்ள மலை அருவி நீரும், மூலிகைகளும் நோய்களை தீர்க்கவல்ல அருமருந்துகள்.

    கும்பேஸ்வரர் திருத்தலம்


    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது கும்பேஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், கீழே பருத்தும், மேல செல்லச் செல்ல ஊசி போன்ற வடிவிலும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் கல் நாதஸ்வரம் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா இங்கு நடைபெறும் விழாக்களில் பிரசித்திப் பெற்றதாகும். புதியதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், குபேர வாழ்வு வேண்டுபவர்கள், இத்தலத்தில் அருள்பாலிக்கும் மங்களநாயகி அம்மனுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும்.

    சோசமேஸ்வரர் திருக்கோவில்

    கும்பகோணத்தில் இருந்து உடையாளூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் கீழ்ப்பழையறை என்ற ஊர் இருக்கிறது. இங்கு சோமகலாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோழ மன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கிய திருத்தலம் இதுவாகும். வடதளியில் மற்றொரு மதத்தவரால் மறைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை, அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், உண்ணா நோன்பிருந்து மீட்ட சிறப்புக்குரிய திருத்தலம். மங்கையர்கரசியார், அமர்நீதி நாயனார் ஆகியோர் சிவனடியார்களுக்கு அருள்பணி புரிந்த தலம் இது. இந்த ஆலய இறைவனை, சோமன் என்று அழைக்கப்படும் சந்திரனும், குரு பகவானும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்.

    திருமேனிநாதர் ஆலயம்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ளது திருமேனிநாதர் திருக்கோவில். இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் அருள்வதால், இந்த ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொள்வது சிறப்புக்குரிய விஷயமாகும். மேலும் திருமண வரம் கிடைக்கவும் இத்தல இறைவனை வழிபடலாம். பிரளய காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தை தடுத்த இடம். இங்கு சிவபெருமானே, ‘கயிலாயத்தை விட சிறந்த இடம் இது’ என்று கருதி அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவராத்திரி அன்று வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட்டால், அனைத்து தலங்களிலும் உள்ள சிவபெருமானை ஆயிரம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

    சுவேதாரண்யேஸ்வரர் கோவில்


    நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் காசிக்கு நிகரான தலங்கள் ஆறு இருப்பதாகவும், அதில் ஒன்று இந்த ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் 1008 நடனங்களையும் ஆடிய திருத்தலம் இது என்பதால், ‘ஆதி சிதம்பரம்’ என்றும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. சிவபெருமானின் 64 வடிவங்களில் 43-வது வடிவம் அகோரமூர்த்தியாகும். இந்த ஆலயத்தின் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. 21 தலைமுறைக்கான சாபத்தை நீக்கும் வல்லமை இத்தல இறைவனுக்கு உண்டு. இங்குள்ள புதன் பகவானை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும்.

    இந்தியாவில் தென்பகுதியில் இருந்து வடபகுதி வரையில் அமைந்திருக்கும் எட்டு சிவாலயங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது ஆச்சரியத்திலும், ஆச்சரியமாக இருக்கிறது.
    இந்தியாவில் தென்பகுதியில் இருந்து வடபகுதி வரையில் அமைந்திருக்கும் எட்டு சிவாலயங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது ஆச்சரியத்திலும், ஆச்சரியமாக இருக்கிறது.

    கேதார்நாத் பனிலிங்க ஆலயம், காளஹஸ்தி வாயுலிங்க ஆலயம், காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயம், கலேஸ்வரம் முக்தீஸ்வரா ஆலயம்.இவை அனைத்தும் வடகோடி இமயமலை முதல் தென்கோடி ராமேஸ்வரம் வரை ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோவில்கள்.

    இது உண்மையில் எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைந்தது என்பதை அந்த இறைவன் ஒருவரே அறிவார். இவை அனைத்தும் 79டிகிரி தீர்க்க ரேகையிலேயே அமைந்துள்ளன.

    இந்த கோவில்களில் உள்ள இடைவெளி பல மாநிலங்களை கடந்து, பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரங்கள் எப்படி துல்லியமாக அமைந்தது என்பது ஆச்சரியமான விஷயம் தான்.

    1. கேதார்நாத் 79.0669 டிகிரி

    2. காளஹஸ்தி 79.7037 டிகிரி

    3. காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் 79.7036 டிகிரி

    4. திருவானைக்காவல் 79.0747 டிகிரி

    5. திருவண்ணாமலை 78.7108 டிகிரி

    6. சிதம்பரம் நடராஜர் 79.6954 டிகிரி

    7. ராமேஸ்வரம் 79.3129 டிகிரி

    8. காலேஸ்வரம் 79.9067 டிகிரி 
    ×